Wednesday, September 29, 2010

படித்துறை

சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு செய்யும் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜைத் தொடர்ந்து நடிகர் ஆர்யாவும் தயாரிப்பாளராகியுள்ளார். அவரது 'தி ஷோ பீப்பிள்' நிறுவனம் தயாரிக்கும் படம் 'படித்துறை'. படத்திற்கு கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் சுகா. இவர் பாலுமகேந்திராவிடம் இணை இயக்குநராகப் பல படங்களில் பணியாற்றியவர். முழுப் படப்பிடிப்பையும் முடித்துவிட்ட திருப்தியில் 'படித்துறை'யைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் சுகா. "பெரும்பாலான தமிழ்ப்படங்களின் கதை, கதாநாயகன் என்கிற ஒரு நபரின் வாழ்க்கையை மட்டுமே சுற்றி வரும். காதல், பாசம், துயரம், கோபம், வன்மம் என பல்வேறு உணர்ச்சிகள் மனிதனை வெவ்வேறு சமயங்களில் ஆட்கொள்கின்றன. இந்த உணர்ச்சிகளை மாறுபட்ட கதாபாத்திரங்கள் எப்படி எதிர்கொள்கின்றன என்பது தான் கதை. விளம்பரங்களில் மாடலிங் செய்யும் சென்னையை சேர்ந்த அபிராம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். 'சித்து ப்ளஸ் டூ' பட நாயகி சாந்தினி தான் கதாநாயகி. மேலும் இவர்களுடன் அழகம்பெருமாள், ஹேமா ஸ்ரீகாந்த், அப்புக்குட்டி ஆகியோரும் நடிக்கின்றனர். படத்தின் மிகப்பெரிய பலம் இசையமைப்பாளர் இளையராஜா. படித்துறை என்பது நம் வாழ்வின் ஏற்ற இறக்கத்துக்கான குறியீடு என்பதை இந்தப்படம் சொல்லும்" என்கிறார் சுகா. தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய தேர் எனப்படும் நெல்லையப்பர் - காந்திமதி கோயில் தேர்த்திருவிழாவில் முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் 'தேரோடும் வீதியிலே....' என்ற பாடலை எழுதியுள்ளார். ஜெயஸ்ரீயும், சுதா ரகுநாதனும் முதன்முறையாக இணைந்து அந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள். தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கணியன் கூத்து இசை இந்தப் படத்தில் பேசப்படும் என்கிறது படக்குழு. இசை: இளையராஜா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: சுகா, தயாரிப்பு: ஆர்யா, ஒளிப்பதிவு: கோபி ஜெகதீஸ்வரன், எடிட்டிங்: சுரேஷ் அர்ஸ், பாடல்கள்: நா.முத்துக்குமார், பழனிபாரதி, நாஞ்சில்நாடன் மற்றும் எஸ்.இராமகிருஷ்ணன்.

No comments:

Post a Comment