ஹரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் 'உள்ளமெல்லாம் தள்ளாடுதே'. இப்படத்தில் கதையின் நாயகியாக சுஹாசினி நடிக்க, அவருடன் 'வேகம்' அர்ச்சனா, சிவாஜி ராஜா, ஆர்த்தி, கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசை: சுனில் காஷ்யப். பாடல்கள்: கீர்த்தியா, பிறைசூடன். இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை கிரண் எழுத, நாகேந்திரகுமார் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். இவர், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் குறித்து இயக்குநர் நாகேந்திரகுமார் கூறியது: "தாய்-மகள் உறவை ஒரு வரையறுக்க முடியாத கோணத்தில் உருவாக்கி, இயக்கியிருக்கிறேன். இதில் அம்மாவாக சுஹாசினியும், மகளாக அர்ச்சனாவும் நடித்திருக்கிறார்கள். இளம் வயதிலேயே விதவையாகி விடும் ஒரு தாய், பல போராட்டங்களுக்கு இடையே தன்னுடைய மகளை வளர்க்கிறார். பருவ வயதில் மகள் காதல் வயப்பட, அவளுடைய காதலுக்குப் பச்சைக்கொடி காட்டுகிறார் தாய். இந்நிலையில் மகள், மேல் படிப்பிற்காக வெளிநாட்டுக்குச் செல்கிறாள். மகள் இல்லாத சூழ்நிலையில் தனிமையில் வாழும் தாய், மன இறுக்கத்துக்கு ஆளாகிறார். இதனைத் தொடர்ந்து அவரின் வாழ்க்கை என்னவானது? என்பதையே உணர்வுப்பூர்வமாக திரையில் சொல்லியிருக்கிறேன். சுஹாசினியின் யதார்த்தமான நடிப்பிற்கு விருது நிச்சயம் உண்டு என எதிர்பார்க்கலாம். விரைவில் படத்தைத் திரையிட வேலைகள் நடைபெற்று வருகின்றன" என்றார். இப்படம் தெலுங்கில் 'மாத்ரு தேவோ பவா' என்ற பெயரிலும் வெளியாகிறது.
No comments:
Post a Comment