Saturday, October 30, 2010

சேரனின் சத்தமில்லாத சந்திப்பு!

சசி, பாலாவின் மாறுபட்ட எண்ணங்கள்

ரீமா சென்னின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

விஜய்யின் பார்வையில் தமிழ் சினிமா!

பாத் திரைப்பட விழாவில் எந்திரன்!

த்ரிஷாவுக்கு எதிரான தமன்னாவின் கொள்கை!

தாய்க்குப் பெயர் சூட்டிய தனயன்

தாய்க்குப் பெயர் சூட்டிய தனயன்
Perarignar Anna - Tamil Poltics News Article திராவிட இயக்கத்திற்கு இயற்கையே எதிரியாக இருந்து மூன்று அரசியல் பின்னடைவுகளை ஏற்படுத்திவிட்டது. ஆம். இயற்கை தமிழர்களின் அரசியல் வாழ்வுரிமையை, விடுதலை உணர்வை - இராஜரிகத்தைத் தட்டிப்பறித்துவிட்டது. அது தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்ட மாபெரும் தீமை என்றே நாம் கருதுகின்றோம். (1) இலண்டனில் 1919-ஆம் ஆண்டு டாக்டர் டி.எம். நாயருக்கு ஏற்பட்டுவிட்ட அகால மரணம்.
(2) 1940-ஆம் ஆண்டு சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் சென்ற விமானம் விபத்திற்கு உள்ளாகி ஏற்பட்ட அவரது மரணம்.
(3) 1969-ஆம் ஆண்டு நிகழ்ந்த அறிஞர் அண்ணாவின் மரணம்.
இம்மூன்று மரணங்கள் தமிழர்களின் அரசியல் வாழ்வுரிமைக்கு, விடுதலை உணர்வுக்கு ஏற்பட்ட மாபெரும் அரசியல் பின்னடைவுகள் ஆகும்.
அறிஞர் அண்ணாவுக்கு நூற்றாண்டு தொடங்கிவிட்ட இந்த நேரத்தில் திராவிட இயக்கத்திற்கு ஏற்பட்டுவிட்ட அரசியல் பின்னடைவை எண்ணிப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. ஆகவே ஏற்பட்டுவிட்ட அத்துன்ப நிகழ்வுகளிலிருந்து - அம்மூவரில் ஒருவரான அண்ணாவைப் பற்றிய எண்ணங்களை அவரது நூற்றாண்டு விழாத் தொடக்கத்தின்போது இக்கட்டுரையின் மூலம் சில நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.
பெரியார் நீண்டகாலம் வாழ்ந்தாரே அப்படி இருக்கும்போது "அந்த மூன்று மரணங்கள்" மட்டும் திராவிட இயக்கத்திற்குப் பின்னடைவு ஆகுமா? என்று இக்கட்டுரையைப் படிக்கின்றவர்களுக்குத் தோன்றலாம். மூவரில் முதலாமவர் பெரியார் பொதுவாழ்க்கைக்கு - காங்கிரசுக்கு வந்த காலகட்டத்தில் மரணத்தைத் தழுவிக்கொண்டவர். மீதமுள்ள இருவர் பெரியார் பொதுவாழ்வில் ஒளிர்ந்த நாள்களில் இருந்து மறைந்தவர்கள். எப்படியாயினும் பெரியார் சட்டமன்றத்திற்கு வெளியே இருந்து மக்கள் மன்றத்திலே பணியாற்றியவர். சட்டமன்றத்திற்குச் செல்ல விரும்பாதவர். தம் கொள்கைகளை நிறைவேற்றுபவர்களைச் சட்டமன்றத்திற்கு வெளியே இருந்து ஆதரிப்பவர். ஆகையினாலே இதில் பெரியாரை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியவில்லை. அரசியல் நிலையில் "உள்ளே" சென்று சிலவற்றைச் செய்ய வேண்டிய கடமையை, திராவிட இயக்கத்துக்காரர்களே செய்ய வேண்டும். அந்த நிலையை - செயல்பாட்டை இந்த மூவரின் மரணங்கள் தடுத்து நிறுத்திவிட்டன; பின்னடைவை ஏற்படுத்திவிட்டன என்றே நாம் சொல்ல வருகின்றோம்.
தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றிப் புகழ்பாடாத அரசியல் இயக்கங்களோ தனிமனிதர்களோ இருக்கமாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர் ஏற்றுக்கொண்ட கொள்கைகளும் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாயின.
அறிஞர் அண்ணா காங்கிரசில் இருந்ததில்லை. அவர் தம்மை நீதிக்கட்சிக்காரராகவும் சுயமரியாதை இயக்க வீரராகவும் வெளிப்படுத்திக் கொண்டார். அவருக்கென்று பெரிய குலப்பெருமை எதுவுமில்லை. தம்மை நெசவாளர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொள்வதில் அவர் பெருமையும் பெருமிதமும் அடைந்தார். அதனால்தான் போலும் திருப்பூரில் 1934-இல் நடைபெற்ற செங்குந்தர் 2-ஆவது வாலிபர் மாநாட்டில்தான் அவர் பொதுவாழ்க்கைக்கு அறிமுகமானார். அங்கேதான் அவர் பெரியார் அவர்களை முதன்முதலில் சந்தித்தார்.
ஆங்கிலத்திலும், தமிழிலும் மாபெரும் பேச்சாளராகத் திகழ்ந்த அறிஞர் அண்ணா அவர்கள் திருப்பூர்ச் செங்குந்தர் வாலிபர் மாநாட்டில் தமது பேச்சை எழுதிவைத்துப் படித்தார். அறிஞர் அண்ணாவின் பொது வாழ்க்கை -அரசியல் வாழ்க்கை 1934-இல் தொடங்கி 1969-இன் தொடக்கத்திலேயே முடிந்துவிட்டது. சுமார் 35 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கையில் அறிஞர் அண்ணா தமிழகத்து அரசியலை மாற்றிக்காட்டினார். "போரில் பெரிது புரட்சி" என்பர். அத்தகைய புரட்சியைத் தமது நாவன்மையாலும் எழுத்துத் திறமையாலும் ஜனநாயகத்தின் மூலம் செய்துகாட்டியவர் அறிஞர் அண்ணா!
நீதிக்கட்சியின் கடைசிக் காலகட்டத்தில்தான் அறிஞர் அண்ணா அக்கட்சியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். பெரியார் கட்சியின் தலைவர் அறிஞர் அண்ணா நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர். எப்போது? கட்சி 1937 தேர்தலில் தோற்ற பிறகு! இக்கட்சி தோற்கும் என்று தெரிந்து அதன் தலைவர்களுள் பலர் காணாமல் போயிருந்தனர். ஒரு சிலர் காங்கிரசு கட்சிக்கு மாறியிருந்தனர். இன்னும் சிலர் காங்கிரசுடன் இரகசிய உறவு வைத்துக்கொண்டிருந்தனர். ஒரு சிலர் அரசியல் துறவறம் பூண்டனர்.
பெரியாரும் அறிஞர் அண்ணாவும் தோற்றக் கட்சியைத் தூக்கிப் பிடிப்பானேன்?
நீதிக்கட்சி பார்ப்பனர் அல்லாதாரின் அரசியல் உரிமையை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட கட்சி. அதன் முழக்கப்படி 17 ஆண்டுகளில் அரசியல் பார்ப்பனர்களை நீதிக்கட்சி அப்புறப்படுத்தித்தான் இருந்தது. அதுவே பார்ப்பனர் அல்லாதாரின் முழுவெற்றி என்று சொல்லிவிட முடியாது. பார்ப்பனர் அல்லாதாருக்காக நீதிக்கட்சி அதன் ஆட்சியின்போது பல சாதனைகளை நிகழ்த்திக்காட்டியிருந்தது. இது பார்ப்பனர் அல்லாதாரின் அரசியல் பயணத்தின் தொடக்கமாக இருந்தது.
சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுவது போல நீதிக்கட்சி எதற்காகத் தோன்றியதோ - அந்தப் பணி முடிந்துவிட்டது. ஆகவே நீதிக் கட்சி தோற்றுப் போனது என்பது அதன் வரலாற்றுப் பணி முடிந்துவிட்டது என்பதையே காட்டுகிறது என்று கூறுவர். அதனை ஒப்புக்கொள்ளுவதற்கு இல்லை.
நீதிக்கட்சி அதன் தொடக்கம் முதலே பார்ப்பனர் அல்லாதார் கட்சி என்றே பதிவாகி இருந்தது. நீதிக்கட்சி தேர்தலில் தோற்றிருந்த காலகட்டத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தோன்றி 12 ஆண்டுகள் ஆகியிருந்தன. நீதிக்கட்சி, அரசியலில் பார்ப்பனர் ஆதிக்கத்தை ஒழித்தது என்பது தற்காலிக வெற்றியைப் போன்றதுதான். இன்னும் நீண்ட தூர அரசியல் பயணம் எஞ்சியிருந்தது. நமது சமுதாய அமைப்பில் பார்ப்பனர்களுடைய ஆதிக்கம் என்பது "சநாதனமாக" (அழிவில்லாததாக) ஆகிவிட்ட ஒன்று. அத்தகைய ஒன்றை ஒழிப்பதற்காகச் சுயமரியாதை இயக்கம் உருவாயிற்று. அப்பெரும் பணியை ஏற்றிருந்த சுயமரியாதை இயக்கத்திற்கு நீதிக்கட்சி தேர்தலில் தோற்றபோது அந்தச் சுமையும் கூடுதலாயிற்று.
சுயமரியாதை இயக்கமும் பார்ப்பனர் அல்லாதார் கட்சியே. ஆதலால் பார்ப்பனர் அல்லாதாரின் இலட்சியங்களை, பிரச்சினைகளை அரசியல் அதிகாரத்தின் மூலம் திராவிட இயக்கமே சாதித்துக்கொள்ள வேண்டும் என எண்ணிப் பெரியாரும் அறிஞர் அண்ணாவும் நீதிக்கட்சியை ஆதரித்தனர். இந்நிலை குறித்து அண்ணா, தி.மு.க. உருவானதற்குப் பிறகு 5-2-1956 தேதியிட்ட "திராவிடநாடு" இதழில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
"நான், தம்பி! அப்போது ஜஸ்டிஸ் கட்சிக்குப் புகுத்தப்பட்ட புது இரத்தம் - இளவெட்டு - ஜஸ்டிஸ் கட்சி அந்தஸ்தை இழந்து வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு என்ற அளவிலே அங்குச் சீமான்களால் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். அந்த நிலை கிடைத்ததற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சிக்குச் சுயமரியாதை இயக்கம் துணை புரிந்தாக வேண்டிய கட்டாயம் பிறந்ததுதான்."
"துணை புரிந்தாக வேண்டிய கட்டாயம்" இயற்கையாக உருவாயிற்று. அதற்குக் கொள்கை அடிப்படையும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது என்று அறிஞர் அண்ணாவின் கூற்றிலிருந்து நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆகவேதான் நீதிக்கட்சியில் அறிஞர் அண்ணா அமைப்புச் செயலாளராகவும், உதவிப் பொதுச் செயலாளராகவும் பின்னர் பொதுச் செயலாளராகவும் ஆனார். நீதிக்கட்சியில் அவர் பொறுப்பேற்றது முதல் அதனை மக்கள் இயக்கமாக மாற்ற முயன்றார். சைமன் கமிஷனின் பரிந்துரையால் 1935-ஆம் ஆண்டு அரசியல் சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில்தான் 1937-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்று நீதிக்கட்சித் தோற்று காங்கிரஸ் வெற்றிபெற்றது. இராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமர் ஆனார்.
அவர் இந்தியை விருப்பப்பாடமாகப் பள்ளிகளில் புகுத்தினார். இதனால் முதல் இந்தி எதிர்ப்புப் போர் (1937-38) உருவாயிற்று. தேர்தலில் தோற்றிருந்த நீதிக்கட்சிக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டம் புத்துயிர் கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். நீதிக்கட்சியின் முக்கியத்தலைவர்கள் சிலருக்கு "இந்தி எதிர்ப்புப் போராட்டம்" நடத்துவது பிடிக்கவில்லை. ஆனால் நாட்டில் நிலைமை வேறாக இருந்ததை அத்தலைவர்களால் உணர முடியவில்லை.
19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழகத்தின் சிந்தனைப் போக்கில் பெரிய மாறுதல் ஏற்படத் தொடங்கி இருந்தது. அம்மாறுதலின் வீச்சுதான் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆகும். இம்முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாகத்தான் அறிஞர் அண்ணா முதன் முதலாக நான்கு மாதங்கள் சிறைத் தண்டனையைப் பெற்றார். போராட்டமோ, மறியலோ செய்ததனால் அறிஞர் அண்ணா கைதுசெய்யப்படவில்லை. சென்னை கதீட்ரல் சாலையில் இந்தியை எதிர்த்துப் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது நாட்டில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அண்ணா இந்தியை எதிர்த்துப் பேசியதை - அரசாங்கத்தைக் கைப்பற்றிட அவதூறாகப் பேசி வகுப்பு துவேஷத்தைத் தூண்டிவிட்டதாக அரசினரால் வழக்குத் தொடரப்பட்டு வழங்கப்பட்ட தண்டனைதான் - அந்த நான்கு மாதங்கள்!
அறிஞர் அண்ணா சென்னையிலுள்ள ஒய்எம்சிஏவிலும், காம்ரேட் லிட்டரரி பார்லிமெண்டரியிலும், சென்னைச் சுயமரியாதை சங்கத்திலும் அடிக்கடி பேசுவார். இவர் பேச்சைக் கேட்கப் பலர் வருவர். சென்னைச் சுயமரியாதைச் சங்கக் கூட்டம் தவிர்த்து மேலே உள்ள மற்ற இரண்டு அமைப்புகளிலும் இராஜாஜி, வழக்கறிஞர் வி.சி. கோபால் ரத்னம், டி.செங்கல்வராயன் போன்றோர் அடிக்கடி பங்கேற்பர். அக்கூட்டங்களில் நடக்கும் விவாதங்களில் கலந்துகொண்டு அறிஞர் அண்ணா உரையாற்றி இருக்கிறார்.
அறிஞர் அண்ணா மறைந்து அவருக்கு இரங்கல் கூட்டம் சென்னைக் கடற்கரையில் நடைபெற்றது. அப்போது இராஜாஜி. "When I was PrimeMinister of Undivided Madras Mr. Annadurai was a smart and small orator denying the God and religion . . ." என்று பேச்சைத் தொடங்கினார். 1937-ஆம் ஆண்டில் இராஜாஜிக்குக் கடவுளையும் மதத்தையும் எதிர்க்கிற ஒரு சிறிய, பேச்சாளராக அறிஞர் அண்ணா அறிமுகமாகி இருந்தார்.
புகழ்பெற்ற வழக்கறிஞர் வி.சி. கோபால் ரத்னம் (வி.சி. தேசிகாச்சாரியின் மகன்) பல வகையான புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் உள்ளவர். பம்மல் சம்பந்த முதலியாரின் சுகுண விலாச சபாவின் அங்கத்தினர். நாடக, சிறுகதை எழுத்தாளர். நகைச்சுவையாகப் பேசக்கூடியவர். (ஆங்கிலத்தில் 5 அடிகள் கொண்ட நகைச்சுவையோடு கூடிய லிமரிக்கு வகைப் பாடல்களை மேடைகளில் கூறுவாராம்.) அத்தகைய பேச்சாளரான கோபால் ரத்னம் கலந்துகொண்ட நிகழ்வுகளில் அறிஞர் அண்ணா பேசியிருக்கிறார்.
செங்கல்வராயன் அவர்களோடு பல மேடைகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். தொடக்கத்தில் - 1937-இல் சில மேடைகளிலேயே பங்கேற்று இருந்த அண்ணா துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்கு "சென்னைத் தோழர் சி. என். அண்ணாதுரை தலைமையில்" என்று விளம்பரப்படுத்தப்பட்டது. அம்மாநாட்டில் அண்ணா இந்தி மொழியின் தீமையைப் பற்றி - அது பள்ளிகளில் கட்டாயப் பாடம் ஆக்கப்படக் கூடாது என்பது பற்றிப் பேசினார். இப்பேச்சைக் கேட்டு மாபெரும் சுயமரியாதை இயக்கப் பேச்சாளரான பட்டுக்கோட்டை அழகர்சாமி மிகவும் வியந்து பாராட்டி இருக்கிறார். ஆக, அறிஞர் அண்ணாவின் தலைமை உரையும் சிறை வாழ்வும் சிறை சென்றதற்கான காரணமும் இந்தியாகத்தான் இருந்து இருக்கிறது.
நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டுத் திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் (1944) செய்யப்பட்டுவிட்டது. திராவிடர் கழகத்தையே அரசியல் கட்சியாக மாற்ற நினைத்தார் - அண்ணா. பெரியார்க்கு அதில் உடன்பாடு இல்லை. இதன் விரிவுதான் திமுக தோன்ற முழு முதற் காரணமாயிற்று.
நீதிக்கட்சிக் காலத்தில் கலை, இலக்கியம் பற்றி மக்களிடம் எடுத்துக் செல்லப்படவில்லை. இரட்டை ஆட்சிக்காலச் சட்டமன்றத்தில் தமிழ் இலக்கியப் பெருமையைப் பற்றி டாக்டர் நடேசனார் ஓரிருமுறை எடுத்துப் பேசி இருந்தார் அவ்வளவே!
சுயமரியாதை இயக்கக் காலத்தில் கலை, இலக்கிய விமர்சனம் கடுமையாக இருந்தது. நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கம் இணைந்து இயங்கத் தொடங்கியபோது இராமாயணமும் பெரிய புராணமும் மாபெரும் விவாதப் பொருளாக்கப்பட்டன. பெரியார்க்குத் துணையாக அறிஞர் அண்ணா இருந்தது பெரும்பலமாக இருந்தது. சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளையோடும் நாவலர் சோமசுந்தர பாரதியாரோடும் இராமாயணச் சொற்போர் அறிஞர் அண்ணா நிகழ்த்தும் அளவுக்கு அவ்விதிகாசத்தின் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இலக்கிய உலகில் இதனை எப்படிப் பார்த்தாலும் மக்களிடையே இவ்விவாதம் புதுமை கலந்த அச்சத்தைத் தோற்றுவித்தது. இன்னொரு முனையில் இளைஞர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது.
பெரியாரோடு இராமநாதன் இருந்தார். அழகிரி இருந்தார். (குத்தூசி) குருசாமி இருந்தார். ஜீவா இருந்தார். கைவல்யம் இருந்தார். கி.ஆ.பெ. விசுவநாதம் இருந்தார். கே.எம். பாலசுப்பிரமணியம் இருந்தார். கோவை அய்யாமுத்து இருந்தார். பாரதிதாசன் இருந்தார். இப்படிப் பலர் இருந்தனர். அறிஞர்கள் அநேகர் அவரோடு தொடர்பு வைத்து இருந்தனர். அதில் சிலர் அவரது "குடிஅரசு", "விடுதலை" மற்றும் இதர ஏடுகளிலும் எழுதினர். இவர்கள் எல்லாம் பெரியாரின் இயக்கத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முயன்றனரே தவிர வெற்றிபெற முடியவில்லை. ஆனால் அறிஞர் அண்ணா வெற்றி பெற்றார். அறிஞர் அண்ணா கல்லூரி நாள்களிலேயே எழுதத் தொடங்கினார். இருந்தாலும் விடுதலையில் அவர் எழுதத் தொடங்கியதற்குப் பிறகுதான் அவரது கருத்தின் ""பரிமாணம்" உலகுக்குத் தெரிந்தது.
"விடுதலை"யில் எழுதுவதற்கு முன்பாக அவர் மேயர் பாசுதேவ் நடத்திய "பாலபாரதி"யிலும், காஞ்சி மணி மொழியார் நடத்திய "நவயுக"த்திலும் எழுதியிருந்தார். "ஆனந்தவிகட"னில் அவரது ஒரு சிறுகதையும் வெளியாகி இருந்தது. இவையெல்லாம் அவர் எழுத்தின் முழுப் பரிமாணத்தை வெளியில் கொணர அடிப்படையாய் அமைந்தன.
ஆங்கில உரைநடையைப் போல அவரது உரைநடை அமைந்து இருந்தது. எழுதுவது போலவே அவர் மேடையில் பேசினார். பேச்சில் ஒரு "சங்கீத லயம்" இருந்தது. அவர் படித்ததையெல்லாம் பேசுவதில்லை. தேவையானதை மட்டுமே பேசுவார். இன்னும் பேசமாட்டாரா என்று எண்ணுகிறபோது அவர் பேச்சை முடித்து விடுவார்.
அவர் தொடங்கி நடத்திய வார ஏடுகளான "திராவிடநாடு" இதழிலும், "காஞ்சி" இதழிலும் கட்சியினரோடு தொடர்புகொள்ள "தம்பிக்குக் கடிதம்" எழுதினார். இப்படி எழுதப்பட்ட மொத்த மடல்களின் எண்ணிக்கை 290. இம்மடல்களிலிருந்து அவரது இயல்பை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. அம்மடல்களில் அவர் தெரிவிக்கிறார். அடைப்பில் இருப்பது. அவர் எழுதிய தம்பிக்கு மடலின் கால வரிசைப்படுத்தப்பட்ட எண்கள்.
கேட்போர் மனம் குளிரப் பேசுவதில்லை (168); பொருத்தமற்றதை, முறையற்றதை எழுதும் பழக்கம் இல்லை (178); சுடு மொழி கூறும் பழக்கம் இல்லை (65); விரைவாக மன வேதனையை நீக்கிக் கொள்ளும் இயல்பு இல்லை (201); உருட்டி மிரட்டிப் பேசுவதில்லை (255); சொந்த விருப்பு வெறுப்பு அதிக அளவில் இல்லை (283); பதில் கூறிக் காலத்தை வீணாக்கிக் கொள்வதில்லை (86); சுறுசுறுப்புடன் ஓயாது உழைப்பது இல்லை (1); நாள், நேரம்/காலம் பற்றிய நினைவு இருப்பது இல்லை (182). இப்படிப்பட்ட இயல்பைப் பெற்றிருந்ததை அவரே எழுதி உள்ளார்.
அறிஞர் அண்ணா நாடகங்கள் எழுதினார். அவை திராவிட இயக்கக் கொள்கைகளை விளக்கப் பயன்பட்டன. அவர் எழுதிய நாடகங்களுள் "சிவாஜி கண்ட இந்து ராஜ்ய"மும், "நீதி தேவன் மயக்க"மும் சிறந்த கொள்கை நாடகங்கள். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் வரலாற்றுக் கற்பனையாகும். நீதிதேவன் மயக்கத்தில் புராணப் பாத்திரங்கள் தாமாக வந்து தம் தமது அவலத்தைப் பேசுவது போல அமைந்த உத்தி அதுவரை இல்லாதது. இதன் பிறகுதான் புராணப் பாத்திரங்கள் விமர்சனப் பாங்கில் பேசுகிற உரையாடல்கள் நாடகத்தில், திரைப்படத்தில் இடம்பெற்றன. அறிஞர் அண்ணா எழுத்தின் அனைத்து வடிவங்களிலும் எழுதினார். கவிதை, சிறுகதை, குறுநாவல், நெடுங்கதை, நாடகங்கள், திரைக்கதை, உரையாடல்கள் என இப்படி எழுதிய அவர், வணிக நோக்கத்தோடு எதனையும் எழுதவில்லை. அவர் எழுத்துக்கள் அனைத்தும் கொள்கை சார்ந்தே இருந்தன.
அறிஞர் அண்ணாவைப் பின்பற்றி பலர் எழுதினர். ஏடுகளை நடத்தினர். நீதிக்கட்சிக் காலத்திலோ, சுயமரியாதை இயக்கக் காலத்திலோ, திராவிடர் கழகமாக மாற்றம் பெற்றபோதோ பெரிய எண்ணிக்கையில் ஏடுகள் வெளிவந்தது இல்லை. தி.மு.க. உருவானதற்குப் பிறகு முந்நூற்றுக்கும் மேற்பட்ட ஏடுகள் வெளிவந்தன. அத்தனை ஏடுகளும் விற்றுத் தீர்ந்தன. சில ஏடுகளில் "திமுக வார ஏடு" என்றே போடப்பட்டு வந்தன. அந்த அளவுக்கு அண்ணா கட்சியினர்க்குச் சுதந்திரம் வழங்கினார்.
திரைப்படத் துறையில் "வேலை தமக்கு ஒன்று (இருக்க) வேண்டும்" எனக் கருதி சென்றவர் அல்ல அண்ணா! "திரைப்படத் தொடர்பு மூலமாக ஏதேனும் நல்லறிவுப் பிரச்சாரம் செய்ய வழி கிடைக்குமா" என்ற ஆவல் காரணமாகவே தாம் திரைப்படத் துறைக்குச் சென்றதாக அவரே குறிப்பிட்டு இருக்கிறார். நாடகம் மற்றும் திரைப்படத் துறைக்குத் திராவிட இயக்கத்தினருள் முதன் முதலில் அடியெடுத்து வைத்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்தான்!
அறிஞர் அண்ணாவின் நாடகம் மற்றும் திரைப்படத்துறை நுழைவு மக்களை ஈர்க்கும் விதமாக அமைந்து இருந்தது. இத்துறையிலும் அவரைப் பின்பற்றி அநேகர் எழுதினர். சில பட அதிபர்களுக்கு அறிஞர் அண்ணா திரைக்கதையின் அமைப்பை திருத்தம் செய்து தந்து இருக்கிறார். அதற்காகத் தமது பெயரைத் திரைப்படத்தில் போட வேண்டியதில்லை என்றும் அவர் கேட்டுக்கொண்டது உண்டு. உதயணன் கதையை ஒரு கம்பெனியார் 1945-இல் திரைப்படம் ஆக்க முனைந்தபோது நடிகமணி டி.வி. நாராயணசாமியை கதாநாயகனாகப் போட்டால் கதை உரையாடல் அமைத்துத் தருகிறேன் என்று அண்ணா கேட்க, அதற்கு அந்நிறுவனத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை. அண்ணாவும் அதற்குக் கவலைப்படவில்லை. இது அண்ணாவுக்குக் கிடைத்த முதல் திரைப்பட வாய்ப்பு; இருந்தாலும் அதைப் பற்றி அவர் ஒன்றும் கவலைப்படவில்லை.
"தாய்க்குப் பின் தாரம்" படம் எடுப்பதற்கு முன் தேவர் காஞ்சிபுரம் சென்று அறிஞர் அண்ணாவிடம் திரைப்படம் எடுப்பதற்குக் கதை ஒன்று கேட்டார். அப்போது அவர், "என்னிடம் நாய், குதிரை, மாடு, புலி, சிங்கம் போன்ற விலங்குகள் இருக்கின்றன. இதை வைத்து ஒரு கதை இருந்தால் நல்லது" என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அண்ணா, "நான் எழுதியுள்ள கதைகள் என்று சில இருக்கின்றன. அவை தங்களுக்கு ஏற்றதா என்று பாருங்கள். நீங்கள் வைத்துள்ளவைகளுக்கு என்னால் எழுதித் தர முடியாது. என்னிடமுள்ளவைகளை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறினார். தேவர் வெறுங்கையோடு சென்னைக்குத் திரும்பினார்.
அவர் ஈடுபாடு கொண்ட அத்தனை துறைகளிலும் அவரைப் பின்பற்றியவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள். அதற்காகப் பெருமையும் பெருமிதமும் அடைந்தார்கள்.
அறிஞர் அண்ணாவின் பேச்சை, எழுத்தை சுவைத்த கட்சிக்காரர்கள் - அதிகம் படிக்காதவர்கள் - மூன்றாவது, நான்காவது வகுப்புப் படித்த திமுக துணை மன்ற நிர்வாகிகூட அல்ல; அதன் உறுப்பினர் மேடையில் தெளிவாகப் பேசினார் அரசியல் பேசினார் அலசினார். சொற்பயிற்சியைப் பெற்றார். இரவுப் பள்ளிக்குச் சென்று அறிவை வளர்த்துக்கொண்டார். ஆதி மனுவிலிருந்து பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை வரை தி.மு.க. துணை மன்ற உறுப்பினர் படித்தார் மார்க்சை, லாஸ்கியை தெரிந்துகொண்டார். எழுத்தின் அத்தனை வடிவங்களையும் அவர் புரிந்துகொண்டு பேசினார். கட்சி உறுப்பினர் எந்தச் சமூக விவாதத்திற்கும் எதனையும் எதிர்கொள்வதற்கும் ஆயத்தமாக இருந்தார். இதற்கெல்லாம் காரணம் அறிஞர் அண்ணாவின் பேச்சு, எழுத்து, அவரது எளிமை காரணமாக இருந்தது.
அறிஞர் அண்ணா ஏதுமில்லாதவர்களின் பிரதிநிதியாக இருந்தார். அவர்களை அண்ணா "தெருவோரத்து மக்கள்" என்று அடையாளங் காட்டினார். தம்மையும், கட்சிக்காரர்களையும் "சாமான்யர்கள்" என்று மக்களிடையே அறிமுகப்படுத்திக் கொண்டார். உண்மையில் "அவர்கள்" சாமான்யர்களே! தொண்டை மண்டலப் பகுதிகளில் (சென்னை, செங்கற்பட்டு, வடஆர்க்காடு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி) வாழும் பாமரனின் பாதிப்பு அவரது உடை, உணவு, பழக்க வழக்கங்கள் மற்றும் பேச்சுகளில் இருந்தன. இது சாதாரண மக்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனால் அறிஞர் அண்ணாவின் மீது ஒரு நம்பிக்கை தமிழக மக்களுக்குப் பிறந்தது.
திமுக தோற்றுவிக்கப்பட்டவுடன் அதனை அவர் உடனடியாகத் தேர்தலில் ஈடுபடுத்தவில்லை. கட்சியை - அமைப்பை அவர் வளர்த்தமுறை, அதற்கான சட்டத்திட்டங்கள் ஏற்படுத்தியது எல்லாம்தான் இன்றைய தினமும் அக்கட்சித் தாக்குப்பிடிப்பதற்குக் காரணமாகும். இப்போது திமுகவில் 13-ஆவது முறையாக அமைப்புத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திமுகவில் சார்பு மன்றங்கள், துணை மன்றங்கள், படிப்பகங்கள் அதன் மேல் அமைப்புகளாக இயங்கிய ஊர்க்கிளை, உட்கிளை, வட்டக்கிளை, பேரூர்க்கிளை, நகரக்கிளை, பகுதிக்கிளை, மாவட்டம், தலைமை என அமைப்பு முறைகள் தேர்தல்கள் நிர்வாகிகளின் தேர்தல், ஒவ்வொரு அமைப்புக்கும் உட்குழுக்கள் என அமைக்கப்பட்ட விதம் சிறப்பானவை. கம்யூனிஸ்டுக் கட்சியைப் போல திமுகவுக்கு அறிஞர் அண்ணா "தலைவர்" பொறுப்பை ஏற்படுத்தவில்லை. அங்கே பொதுச் செயலாளரே எல்லா அதிகாரமுடையவராக இருந்தார்.
கீழ் அமைப்புத் தீர்மானங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. கீழ் அமைப்புகளில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்துவைக்கக் குழுக்களோ அல்லது அதிகாரம் பெற்ற ஒருவரோ பிணக்குகளை விசாரணைசெய்தார். அவரது பரிந்துரைகள் தலைமைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அறிஞர் அண்ணா கழகத்தை ஜனநாயக நெறியில் முழுக்க முழுக்கக் கொண்டுசெலுத்தினார். ஜனநாயகத்தை அவர் அரசை நடத்துகிற முறை மட்டுமன்றி; அது ஒரு வாழ்க்கை நெறி என்று கூறினார்.
திமுகவினர் பொதுக்கூட்டம் முதல் மாநாடுகள்வரை நடத்துவதற்கு அறிஞர் அண்ணா காரணமாக இருந்தார். காங்கிரஸ், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், கம்யூனிஸ்டுக் கட்சியினர் என அனைவரும் மாநாடுகள் நடத்தினர். என்றாலும் திமுகவினர் "கலையம்சம்" உடைய மாநாடுகளை நடத்துவதற்கு அறிஞர் அண்ணாவே காரணம் என்றால், அது மிகையல்ல. பொதுவாக இருவர் சந்திப்பைக்கூட "மாநாடு" என்று அழைக்கலாம். ஆனால், திமுகவினர் மாநாடு நடத்த தொடங்கியதற்குப் பிறகு மிகப் பெரிய அளவில் மக்கள் கூட்டமுள்ள நிகழ்வினைத்தான் "மாநாடு" என்று கூற வேண்டும் என்கிற புதுப்பொருள் நாட்டில் ஏற்படலாயிற்று.
முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் (1937-38) "தனிநாடு" கோரிக்கையை முன்நிறுத்தியது. அப்போதைய சென்னை மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுகின்றவர்களும் பேசுகிற நிலப்பகுதிகளும் ஒன்றாக இருந்ததால் முதலில் தனித் தமிழ்நாடு எனக் கோரப்பட்டு - பின்னர் அக்கோரிக்கையே "திராவிட நாடு திராவிடருக்கே" எனும் தனிநாடு கோரிக்கையாக விரிவாக்கப்பட்டது. பெரியாரின் திராவிடர் கழகமும், அறிஞர் அண்ணாவின் திமுகவும் இத்தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தின.
அறிஞர் அண்ணாவின் அரசியல் செல்வாக்கு மக்களிடையே வளர்ச்சி பெறலாயிற்று. 1949-இல் அறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக உடனடியாகத் தேர்தலில் போட்டியிடவில்லை. அறிஞர் அண்ணா அவசரப்படவில்லை. தனிநாடு கோரிக்கையை முன்வைத்து 1957 முதல் திமுக தேர்தலில் போட்டியிட்டு 15 இடங்களை வென்றது. 1962 தேர்தலில் திமுக சார்பாக 50 பேர் வெற்றி பெற்றனர். ஆளுங் காங்கிரஸ் நீண்ட உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டது. திமுகவை ஒழிக்கப் பிரிவினைத் தடைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.
திமுகவைத் தடைசெய்துவிடுவார்கள் என்கிற பேச்சு தமிழகத்தில் மிகப் பலமாக உலா வந்தது. இத் தருணத்தில் அறிஞர் அண்ணா மக்கள் உரிமைக் கழகம் எனும் துணை அமைப்பை கே.நாராயணசாமி முதலியார் தலைமையில் தோற்றுவித்தார். இவ்வமைப்பை அண்ணா இறுதி வரை பயன்படுத்தவில்லை. தடைச்சட்டத்தை கழகம் அதன் சட்டத் திட்டத்தை திருத்திக்கொண்டதன் மூலம் பிரச்சினையை எதிர் கொண்டதால் அவ்வமைப்பை பயன்படுத்தவில்லை. இந்தத் தந்திரத்தை அண்ணா செய்யவில்லை என்றால் திமுகழகம் தடை செய்யப்பட்டு இருக்கும். தமிழ்நாடு அரசியல் களத்தில் திமுக இருந்திருக்காது.
கட்சியின் விதியை எப்படியெல்லாம் திருத்தினால் "கழகத்தைக் காப்பாற்ற முடியும்" என்பதில் அண்ணா கருத்தாக இருந்தார். எம்.கே.நம்பியார் போன்ற வழக்கறிஞர்களோடு கலந்துரையாடி வர இரா.செழியனை அண்ணா அனுப்பிவைத்தார். மொத்தத்தில் கழகம் காப்பாற்றப்பட்டுவிட்டது.
அறிஞர் அண்ணாவின் தலைமையில் உள்ள கழகத்தை மத்திய அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை அண்ணாவோ சாதுர்யமாக "நாங்கள் பிரிவினையை கைவிட்டுவிட்டோம். பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன" என்றார்.
எந்தச் சூழ்நிலையிலும் அவரது உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்க அவர் தவறியதில்லை. பிரிவினைக் கொள்கையை அவர் கைவிட்டதற்குப் பிறகும் தமிழனின் தனித்தன்மையை அவர் நிலைநாட்டத் தவறியதே இல்லை.
"தமிழன் யாருக்கும் தாழாமல் - யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் - எவராலும் சுரண்டப்படாமல், யாருக்கும் எசமானனாக இல்லாமல் - உலகில் எவர்க்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாயக் கொள்கை."
"தமிழ் என்ற தொன்மையானதொரு மொழிக்குச் சொந்தக்காரன் நான் என்பதை என்னால் மறக்க முடியாது. என்னுடைய முன்னோர்கள் எந்த மொழியில் பேசினார்களோ, என்னுடைய கவிஞர்கள் எந்த மொழியில் காவியங்களையும் தத்துவங்களையும் வழங்கினார்களோ; வற்றாத அறிவுச் சுரங்கங்களாக விளங்கிய இலக்கண, இலக்கியங்களை எந்த மொழியில் நாங்கள் பெற்றிருக்கிறோமோ, அந்தத் தமிழ் மொழி மைய அரசின் ஆட்சி மொழியாக ஆகும் நாள்வரையில் நான் ஓயமாட்டேன்."
மேலே உள்ள அவரது பேச்சிலிருந்து நாம் எடுத்துக் காட்டியுள்ள இரண்டு மேற்கோள்கள் அவரது கொள்கை உரத்தைக் காட்டுகின்றன.
திமுகவுக்குப் பலம் பெருகியது; மக்கள் செல்வாக்கு கூடியது. அறிஞர் அண்ணா என்றால் 1966-இல் இல்லஸ்டிரேடட் வீக்லியில் அண்ணாவின் பேட்டியின்போது அந்த ஏடு வழங்கிய முன்னுரையில், "எங்கெங்கு எல்லாம் உலகப் பந்தில் தமிழர்ககள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பார்" என்று குறிப்பிட்டதுபோல 1962 தேர்தலுக்குப் பிறகு நிலைமை வளர்ந்து இருந்தது. அதே நேரத்தில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் மக்களிடையே செல்வாக்கு இழந்து வந்தது. ஒரு பக்கம் மத்திய அரசின் சட்டத்திலிருந்து திமுக மீண்டு எழுச்சியுற்ற நேரத்தில், மறுபக்கம் காமராசர் தமது கே-பிளான் மூலம் தமிழகக் காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து வெளியேறியதையும் வரலாறு மறப்பதற்கில்லை.
இப்படித் திமுகவின் எழுச்சி - சாதாரண மக்களிடையே அவ்வமைப்புக்கு ஏற்பட்டிருந்த மரியாதை என மிக அதிகமாக இருந்தது. சென்னை மாநகரத்தின் அனைத்துக் குடிசைப் பகுதிகளிலும் திமுக கொடியில்லாத இடத்தைப் பார்க்க முடியாது. தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் வாகனத்தில் சென்றால் தேநீர் விடுதிகள், அழகு நிலையங்கள், சலவையகங்கள் எல்லாம் திமுகவின் ஆதிக்கத்தில் இருந்தன. சாலையோரத்து மரங்களில் எல்லாம் தமிழ் மக்களின் இதயமாய்த் திமுக கொடி எங்கும் பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கிவிட்டது.
ஈ.வெ.கி.சம்பத் அடிப்படைக் கொள்கை சம்பந்தமான பிரச்சினையைக் கிளப்பித் திமுகவிலிருந்து 1961 ஏப்ரலில் விலகினார். அப்போது வெளிவந்துகொண்டிருந்த "மெயில்" ஏடு ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டது. அதில், திமுக என்கிற கொழுத்த மாடு இரண்டாகப் பிளக்கப்படுகிறது. முன் பகுதியைச் சம்பத் பிடித்துச் செல்கிறார். பின்பகுதியில் அம்மாடு போடும் சாணத்தை ஒரு கூடையில் ஏந்தி வருகிறார் - அண்ணா! "மெயில்" அண்ணாவை அந்த அளவுக்குக் கேலிசெய்தது. ஆனால், சம்பத் எழுப்பிய பிரச்சினைகளுள் உண்மைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அண்ணாவின் செல்லாக்குக்கு முன் அவை எடுபடவில்லை.
சம்பத் விலகலுக்குப் பின்னும் திமுகவில் அண்ணாவுக்கு எதிராகச் சிலர் சலசலப்புக் காட்டி வந்தனர். அவர்கள் தமிழ்வாணனின் "கல்கண்டு" வார இதழின் மூலமாக அந்த எண்ணங்களை - அவர்களது உள்ளக் கிடக்கைகளை வெளியிட்டனர். அந்தக் "கல்கண்டு" இதழ்களில் வெளியான தலைப்புகளைப் பாருங்கள். அடைப்பில் "கல்கண்டு" இதழின் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. திமுகவில் பிளவு (23.7.1964), அண்ணாவுக்கு அடுத்தவர் நாஞ்சில் மனோகரன் (15.10.1964), அண்ணா சொல்லியும் கேட்கவில்லை (3.9.1964), அண்ணா பெரியாராகிறார் (24.6.1965), எம்.ஜி.ஆரின் புகழ் அண்ணாவுக்கு இல்லை; எம்ஜிஆரை யாரும் எதுவும் செய்துவிட முடியாது (3.7.1965), அண்ணா யார்? எனும் தொடர் கட்டுரை (22.7.1965 இலிருந்து 15.10.1965 தேதியிட்ட "கல்கண்டு" இதழ்கள்) என அண்ணாவுக்கு எதிராக கருத்துகள் வெளிவந்தன. இப்படிப் பல நிகழ்வுகள் நடந்துகொண்டேயிருந்தன. இவையெல்லாம் அறிஞர் அண்ணாவின் செல்வாக்கைக் குறைக்கவே இல்லை. மாறாக அவை வளரவே துணை நின்றன. காங்கிரசுக்கு மாற்று திமுகதான் எனும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.
அறிஞர் அண்ணா புத்தகங்ளை மிக வேகமாகப் படிக்கக் கூடியவர். அவரது மரண படுக்கையில்கூட "மாஸ்டர் கிரிஸ்டியன்" எனும் ஆங்கில நாவலைப் படித்துக்கொண்டிருந்தவர். அப்படிப்பட்ட படிப்பார்வம் உள்ளவர். இப்புத்தகத்தினுடைய தமிழ் மொழி பெயர்ப்பை - "புரட்சித்துறவி" எனும் தலைப்பிட்டு குமுதம் ஏடு - அண்ணா மரணமடைந்த சில நாள்களுக்குப் பிறகு வெளியிட்டது.
அந்த ஆர்வம் பொழுதுபோக்கு அல்ல. எந்த நிலையிலும் சிந்தனையை வளப்படுத்திக் கொள்ளுவது; மேலும் சிந்திப்பது, எழுதுவது, பேசுவது - இது அவரது இயல்பு; இவை எதற்காக? தமிழக மக்களுக்காக! "எனக்கென்று நீங்கள் கிடைத்தீர்கள் உங்களுக்கென்று நான் கிடைத்தேன். யார் என்ன பேசினாலும் இந்தப் பிணைப்பை எவர் என்ன செய்ய முடியும்?" எனக் கூறிக் கழகத்தினரையும் தமிழர்களுள் அவரை விரும்புகின்றவர்களையும் பாசக் கயிற்றால் அவர் கட்டிப்பிணைத்தார்.
ஏதுமில்லாதவர்களை முன்னேற்றுவதும் தமது மொழி, இனத்திற்கு தனி அடையாளம் காண்பதுவே அவரது அரசியல் குறிக்கோளாக இருந்தது. தமது குறிக்கோளுக்குக் கட்சியையும், நாட்டையும் அங்குலம் அங்குலமாக அவர் நகர்த்தி வந்தார். இறுதியில் தமிழக ஆட்சியை மக்கள் அவரிடம் தந்தனர். மக்களின் அந்த முடிவை அவர் எதிர்பார்க்கவில்லை. திமுக வெற்றிச் செய்தி வானொலியில் அறிவிக்கத் தொடங்கினார்கள். 80 சட்டமன்ற உறுப்பினர்கள்வரை வெற்றி பெற்ற செய்தி வானொலியில் அறிவிக்கப்பட்டபோது மிக மகிழ்ச்சியாக இருந்தார். வெற்றிலை, சீவலை அடிக்கடிப் போட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 90 சட்டமன்ற உறுப்பினர்கள் வரை திமுக சார்பில் வெற்றிபெற்று அதற்கு மேலும் வெற்றி அறிவிப்புகள் தொடர்ந்தபோது அவர் முகம் வாட்டமுறத் தொடங்கியது. மகிழ்ச்சிக்குப் பதிலாக வாட்டம். உடனடியாக - அவர் ஏனோ தனிமையை விரும்பினார். எல்லாரையும் போய் விடும்படி - கீழே சென்று இருக்கும்படி கோரினார். இப்படி ஏன் நடந்துகொண்டார்? யோசித்துப் பாருங்கள்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றியின் எண்ணிக்கை 110-ஐக் கடக்கிறபோது பிரபல நாளேட்டின் அதிபர் அண்ணாவால் தாங்க முடியாத ஆளுயர மாலையை அணிவிக்கச் செய்து அவர் காலில் விழுந்தார். அவரும் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அண்ணாவோ அந்த இடத்தைவிட்டுச் சில அடிகள் உடனடியாக ஓடி நகர்ந்துகொண்டார். இப்படிப்பட்ட "ஆபத்துகளிலிருந்து" இனி மீள முடியாது என அவர் உணர்ந்துகொண்டார்.
அமைச்சரவை அமைக்கிற கட்டம் வந்தது. அண்ணா அமைச்சரவையை அவர் வீட்டிலிருந்து அமைக்காமல் நண்பர் ஒருவர் வீட்டில் அமர்ந்து பட்டியலைத் தயார் செய்தார். ஒரு தலைவர் "முக்கிய" இலாகாவை விரும்பினார். அதற்காக இரு தலைவர்கள் அண்ணாவைச் சந்தித்தனர். அவருக்கு "அந்த" இலாகா தர வேண்டும் எனத் தந்திகள் குவிந்தன. தந்திகள் ஒரு மூட்டை அளவுக்கு இருந்தது. மூட்டையை அண்ணாவிடம் காண்பித்தனர். 30, 40 தந்திகளை எடுத்துப் பார்த்தார் அண்ணா. அவை ஒரே மாதிரியான வாசகங்களைக் கொண்டிருந்தன. அதைப் பார்த்துப் புன்னகைத்தார். இன்னொரு தலைவருடைய மனைவி தன் கணவர் அமைச்சராக்கப்படவில்லை என்பதற்காக அண்ணாவைச் சபித்தார். இப்படி எத்தனையோ காட்சிகள் நிகழ்ந்தன. அமைச்சர் பட்டியல் இறுதியாக்கப்பட்டதற்குப் பிறகு இரா. செழியனிடம் அதனைக் கொடுத்து அனுப்பி எம்.ஆர். இராதா சுடப்பட்டதால் மருத்துவமனையில் இருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரிடம் காண்பிக்கச் செய்தார். 9 பேர் கொண்ட கச்சிதமான அமைச்சரவை 1967 மார்ச் 6-ஆம் தேதி அண்ணாவின் தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்டது. 1937-இல் நீதிக்கட்சி காங்கிரசால் வீழ்த்தப்பட்டு இராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமர் ஆனார். 1967-இல் திமுக, அதே இராஜாஜியை தனது கூட்டணியில் சேர்த்துக்கொண்டு காங்கிரசை வீழ்த்திக் காட்டியது. ஆம் அறிஞர் அண்ணா கணக்கை நேர்செய்தார். அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வராக 23 மாதங்கள்தான் இருந்தார்.
அறிஞர் அண்ணா தமது ஆட்சிக் காலத்தில் மூன்று சாதனைகளைச் செய்து காட்டினார்.
தமிழ்நாடு எனத் தாயகத்திற்குப் பெயர் சூட்டினார்.
இரு மொழிக் கொள்கையைச் சட்டமாக்கினார்.
சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி ஆகும் விதத்தில் சட்டத் திருத்தம் செய்தார்.
இவற்றில் முதன்மையானது நமது நாட்டிற்குச் சென்னை மாகாணம் - சென்னை ராஜ்ஜியம் - மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்த பெயரைத் "தமிழ்நாடு" என அறிஞர் அண்ணா பெயர் மாற்றம் செய்த சாதனை மிகுந்த "உள்ளீடு" நிறைந்த சாதனையாகும். அறிஞர் அண்ணாவின் இச்சாதனையை ஆங்கிலக் கவிதை எழுதிய ஒருவர் "ஜிலீமீ ளளீஸ“ ஸ்லீலீ ஸ“ணீனீமீபீ லீவீள னீனீவலீமீக்கீ" என்று எழுதிச் சிறப்பித்தார்.
மகனுக்குத் தாய்தான் பெயர் சூட்டுவாள். ஆனால், இங்கோ தாய்க்கு மகன் பெயர் சூட்டிய வரலாற்று நிகழ்வு நடந்தேறியது.
அறிஞர் அண்ணா 15.09.1909-இல் பிறந்தார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சென்னை அடையாறு மருத்துவமனையில். 3-02-1969-ஆம் தேதி (இரவு) 12-22 மணிக்கு மரணமடைந்தார்.
"ஐந்தடி இரண்டு அங்குலம் உயரம் இருக்கும். சம்புஷ்டியான சரீரம்; அறிவு தீட்சண்யத்தை வெளிப்படுத்தும் அகன்ற நெற்றி; ஆழ்ந்த சிந்தனையில் மிதக்கும் பெரிய கண்கள் ஆட்களைக் கவரும் எடுப்பான மூக்கு. மீசை சரியாகக்கூட அரும்பவில்லை" என அறிஞர் அண்ணாவைத் தொடக்கக் கால மேடைகளில் பார்த்த எழுத்தாளர் நாரண துரைக்கண்ணனாரின் வர்ணனை இது! ஆனால், அண்ணா 59 ஆண்டுகள் 4 மாதங்கள் 11 நாள்தான் உயிர் வாழ்ந்தார்.
திராவிடர் கழகத்தை அரசியல் கட்சியாக்க நினைத்த அண்ணா - இறுதியில் திமுகவைத் தோற்றுவித்து ஆட்சியில் அமரச் செய்தார். திமுக அமைச்சரவையைப் பெரியார்க்குக் காணிக்கையாக்கினார். திராவிட இயக்கத்தின் அரசியல் கல்வியைக் கற்றுத் தெளிந்து, விரிவாக்கி, நெறிப்படுத்தி அவற்றைச் சாதனையாக்கிக் காட்டுவதன் தொடக்கத்தை அறிஞர் அண்ணா அவர்களே முதன் முதலில் செய்தார்.
அறிஞர் அண்ணாவை இயற்கை 10, 15 ஆண்டுகள் உயிர் வாழ அனுமதித்து இருக்குமானால், தமிழ்நாட்டின் நிலை அவர் காலத்தில் மேலும் உயர்ந்திருக்கும். தமிழின மேம்பாட்டை உலகம் அவர் காலத்திலேயே அறிந்திருக்கும். அவர் மரணமடைந்த அன்று இரவு முதல் அவர் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வுவரையான காட்சிகள் எம் மனத்திரையில் ஓடிக்கொண்டே இருக்கின்றன. சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் என்பது அன்று உண்மையாயிற்று. அத்தகைய காட்சி - நிகழ்வு யார்க்கும் இனி அமையாது.
எல்லாத் தட்டு மக்களும் அறிஞர் அண்ணாவிடம் நிரம்ப எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் அவரது உயிரை இயற்கை தட்டிப் பறித்துச் சென்றுவிட்டது. தமிழகமே கண்ணீர் விட்டு அழுதது. ஏடுகள் தலையங்கங்கள் தீட்டின. கவிஞர்கள் இரங்கல் கவிதைகளை இயற்றினர். எல்லாவற்றிலும் ஏக்கமே தெரிந்தது. இதோ ஒரு கவிதையைப் பாருங்கள்.
மேகம் கருகருத்து
மின்னல் எழக்கண்டே
தாகம் தணியமழை
சாய்க்கும் என்று காத்திருந்தேன்
நெஞ்சம் வறண்டதுவே,
தென்மேகம் தீய்ந்ததுவே!
இக்கவிதை சாலை இளந்திரையன் இயற்றியது. இப்படித்தான் ஒவ்வொருவரின் இரங்கற் கவிதையிலும் ஏக்கப் பெருமூச்சு எரிமூச்சாகி இருந்தது. எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகி தெரிந்தன.
"எதனையும் நேர ஒழுங்குபடி செய்யாதவர், எதிலும் திட்டவட்டமான விரைந்து முடிவு எடுக்காதவர், சட்டத்திற்கு அஞ்சித் தமது அடிப்படைக் கொள்கையையே கைவிட்டவர்" - என அறிஞர் அண்ணாவின் அரசியல் எதிரிகள் அவரை விமர்சிப்பர். ஆனால், நிலைமை என்ன? அவரது அரசியல் நடவடிக்கைகளைச் சற்று ஆழமாகக் கவனிக்க வேண்டும். அப்போதுதான் அவர் வெற்றியாளரா இல்லையா என்பது தெரியவரும்.
திராவிட இயக்க அரசியல் சித்தாந்தத்திற்கு வடிவம் கொடுக்கத் தொடங்கிய அந்த மாமேதைக்கு - முதல் மனிதர்க்கு நூற்றாண்டு விழாத் தொடங்கிவிட்டது. அவரது பன்முக ஆற்றல்களை இந்த ஆண்டு முழுவதும் வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
அந்த அறிஞரின் சிந்தனைகளைத் தமிழர்களின் இதயத்தில் பதித்து முன்னேறுவோமாக!

பழங்குடிகள் அன்றும் இன்றும்

வனங்களில் இயற்கையின் குழந்தைகளான பழங்குடிகள் தங்களின் சகோதரர்களாக, முன்னோர்களாக, தெய்வங்களாக, மண்ணையும், மரங்களையும், நீரையும், விலங்குகளையும் வழிபட்டனர். பழங்குடிகளின் வாழ்க்கைத் தேவைகளை வனங்களே நிறைவு செய்தன. அவர்களின் தேவைகளும் மிகக் குறைவு. எளிய வாழ்கை முறை. இயற்கையை சிதைக்காமல், இணைந்து வாழ்ந்தனர். சிதைப்பது குற்றம் எனக் கருதினர். ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு
வனத்திற்குள் சுதந்திரமாக சுற்றித் திரிந்து, காய்களை, கனிகளை, கிழங்குகளை உணவாகக் கொண்டனர். தேவைக்கு சிறு விலங்குகளை வேட்டையாடினர். வேட்டையின் போது சினையாக உள்ள விலங்குகளை வேட்டையாட மாட்டார்கள். இனப்பெருக்க காலத்தில் வேட்டைக்கு செல்வதை தவிர்த்தார்கள். வேட்டையை அந்த கிராமமே பகிர்ந்து கொள்வர். இது அவர்களின் சிறந்த பண்புக்கு எடுத்துக்காட்டு.
தங்களது உணவுத் தேவைக்கு அளவான இடத்தில் விவசாயம் செய்தனர். கலப்புப் பயிர் விவசாயம் செய்தனர். மண்ணின் வளத்திற்கு ஏற்ப இடம் பெயர்ந்து விவசாயம் செய்தனர். 10, 15 குடும்பங்களைக் கொண்ட ஒரு இனக்குழு ஒரு கிராமமாக இருந்தது. விவசாயத்திற்காக கிராமமே இடம் பெயர்வது, எளிமையானது. சிறிய வீடுகள், அதே சமயம் தட்பவெப்பநிலைக்கு ஏற்புடையது. தங்களுக்கென தனி மொழி, நீதி, நிர்வாகம், உறவு, எல்லைகளைக் கொண்ட வாழ்க்கை முறை. வனம், நிலம், தனி நபர்களின் உடைமையாக இல்லாமல் வளங்கள் அனைத்தும் சமூக உடமையாகக் கொண்டு வாழ்ந்தனர்.
ஆங்கிலேயர்களின் காலத்தில்
வனங்களிலுள்ளள கனிமங்களை எடுக்க மரங்களை வெட்டினர் ஆங்கிலேயர். வனங்களைச் சிதைத்துக் கொள்ளை அடித்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக வனத்தைக் காக்கும் போராட்டத்தை பழங்குடிகள் நடத்தினர். பழங்குடிகளை ஒடுக்கி, வனத்தின் வளத்தை வசப்படுத்த, பழங்குடிகளின் பாரம்பரிய உரிமையை பறிக்கிற வனக் கொள்ளைகளை, சட்டங்களை ஆங்கிலேய அரசு, 1882லிருந்து கொண்டு வந்தது.
பாதுகாக்கப்பட்ட காடுகள், ஒதுக்கப்பட்ட காடுகள் என்று அரசு எல்லை நிர்ணயித்து, அந்த பகுதிக்குள் பழங்குடிமக்கள் செல்லவே தடைபோட்டது. வேட்டையாட, விவசாயம் செய்ய, கால்நடைகள் மேய்க்க, சிறு வனப்பொருட்களை பயன்படுத்த உரிமை மறுக்கப்பட்டது. மீறினால் அபராதம், சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
வனம் பாதுகாப்பிற்கென வனத்துறை அதிகாரிகள் தங்க, ஆங்கிலேய அதிகாரிகள் ஓய்வெடுக்க வசதியான இல்லங்கள் வனப்பகுதியில் கட்டப்பட்டன. வன விலங்குகளை வேட்டையாடுவது ஆங்கிலேயர்களுக்கு பொழுதுபோக்கு.
கிராமக்காடுகள் என ஒதுக்கப்பட்ட நிலங்களில் பட்டா வழங்கப்பட்டது. தங்களுக்கென தனித்தனியாக சொத்துக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையற்ற பழங்குடிகளின் உயர்ந்த பண்புகள் வசதி படைத்த பழங்குடி அல்லாதவர்களுக்கு வசதியானது. அதிகாரிகளின் துணையோடு பழங்குடி அல்லாதார் மலை நிலங்களுக்குப் பட்டா பெற்றனர்.
காப்பி, தேயிலை போன்ற பணப்பயிர் பயிரிட பல்லாயிரம் ஏக்கர் மலை நிலங்கள் ஆங்கிலேயருக்கும், அவர்களுக்குத் துணை நின்ற பணம் படைத்தவர்களுக்கும் தாரை வார்க்கப்ட்டது. நிலத்தை இழந்த பழங்குடிகள் தேயிலைத் தோட்டக் கூலிகளாயினர்.
ரயில் பாதை போட, கப்பல் கட்ட, இங்கிலாந்தில் வீடு கட்ட ஓங்கி வளர்ந்த மரங்கள் வெட்டி எடுத்துச் சென்றனர் சமவெளியினர். மின்சாரம், பாசனம் பெற ஆங்கிலேயர்கள் மலை ஆறுகளின் குறுக்கே பாபநாசம், முல்லை பெரியாறு அணை கட்டினர். அதனால் அங்கிருந்த பழங்குடிகள் வெளியேற்றப்பட்டனர்.
நிலம், வன உரிமை பறிக்கப்பட்ட பழங்குடிகளின் மேம்பாட்டிற்காக ஆங்கிலேய அரசு எந்தத் திட்டமும் கொண்டு வரவில்லை.
சுதந்திரத்திற்கு பிறகு
ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த வனச்சட்டங்களை சுதந்திர இந்தியாவில் மேலும் கடுமையாக்கி வனப்பாதுகாப்பு, வன விலங்கு பாதுகாப்பு சட்டங்களை தமிழக அரசும், இந்திய அரசும் கொண்டு வந்தன.
வேட்டையாடும் உரிமை முற்றாக பறிக்கப்பட்டு வன வெளியேற்றம் தொடர்ந்தது. வன விலங்கு சரணாலயம், தேசிய பூங்காக்கள் ஆகியவற்றிற்கு எல்லை வகுக்கப்பட்டு அப்பகுதியில் வாழ்ந்த பழங்குடிகள் வெளியேற்றப்பட்டனர். காகித ஆலைகளுக்கு வனத்திலுள்ள மரங்கள் வெட்டப்பட்ட. ஆலைகளின் தேவைகளுக்காக மரங்கள் வளர்க்க வனப்பகுதி ஒதுக்கப்பட்டது.
கனிமங்கள், கருப்புக்கல் போன்றவை எடுக்கவும் மரங்கள் வெட்டவும் தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சந்தன மரக் கிடங்குகள் உருவாக்கப்பட்டு பல கோடி மதிப்பு மிக்க சந்தன மரங்கள் வனத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டன.
வனத்தில் விளைகின்ற நெல்லி, கடுக்காய், பூச்சுக்காய், சீமார் புல் போன்ற சிறு வனப்பொருட்கள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டன. வன வளம் அரசிற்கு வருவாய் ஈட்டித் தரும் பகுதியாகவே மாற்றப்பட்டது.
பாசன அணை, மின்சார அணை, தேயிலை, காப்பி தோட்டங்கள், நிலக்கரி, எண்ணை, இரும்பு, கருங்கற்கள், தைல, ரப்பர் மரங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், ஆலைகள், அரசு தனியார் ஓய்வில்லங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற அரசு மற்றும் தனியார் வளர்ச்சித் திட்டங்களுக்காக தொன்று தொட்டு வனங்களில் வாழ்ந்த பழங்குடிகளை வெளியேற்றியது அரசு. ஆனால் அவர்களுக்கு வழங்கிய மாற்று இடமோ பொட்டல் காடுகளாக இருந்தன. பழங்குடிகள் இதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளானார்கள். தண்ணீரிலிருந்து மீனைப் பிடித்து தரையில் போட்டதைப் போல் அவர்களது வாழ்க்கைச் சூழல் முற்றாக சிதைந்தது. பல்லாயிரம் வருடங்கள் சேமிக்கப்பட்ட அவர்களது அறிவுத் தொகுப்பு, கலாச்சாரம், மனித குலத்துக்கு பயனின்றி போனது. வனம் அழிவிற்கு உள்ளானது.
வனமும், நிலமும், கால்நடைகளையும் இழந்து பரதேசிகளாகப் பழங்குடிகள் மாற்றப்பட்டனர். வனம் அன்னியமானது. வனத்துறையின் ஆதிக்கத்தின் தயவில்தான் வாழும்நிலை உருவாக்கப்பட்டுவிட்டது.
வீடு கட்ட மூங்கில் வெட்டினாலும், கலப்பைக்கு மரம் வெட்டினாலும், சமையலுக்கு காய்ந்த சுள்ளிகள் பொறுக்கினாலும் வனத்துறைக்கு கப்பம் கட்ட வேண்டும். கால்நடைகள் மேய்க்க வரி கட்ட வேண்டும். வனத்துறையின் எடுபிடிகளாக, பண்ணை அடிமை போல் பயந்து வாழும் நிலையே இன்று நிலவுகிறது.
கடுமையான சட்டங்கள், ஆயுதங்கள், தொலைநோக்கிகள், வாகனங்கள், கம்பியில்லா பேசி, அலுவலகங்கள், வனவர் முதல் தலைமை வனப் பாதுகாவலர் வரை பல்லாயிரம் பேர் பல கோடி மாத ஊதியம். இன்னபிற ஏற்பாடுகள் இருந்தும் வனத்தின் பரப்பு சுதந்திரத்தின் போது இருந்ததை விட மூன்று மடங்கு குறைந்து தமிழக மொத்தப் பரப்பில் 10மூத்திற்கும் கீழ் சென்றுவிட்டதற்கு என்ன காரணம்? தண்ணீர் உற்பத்தி செய்கின்ற மிகப் பெரிய தொழிற்சாலையான வனம், புயல் மழையை நம்பியே தண்ணீரைத் தருகிறது.
வனத்துறையின் தயவோடு, வெளிச்சத்திற்கு வராத வீரப்பன்கள் மரக்கடத்தலையும், வன விலங்கு வேட்டையையும் தொடர்கிறார்கள்.
அப்போது சந்தன கடத்தல் வீரப்பன் நடமாட்டம் ஈரோடு, தருமபுரி காடுகளோடு நின்றது. சேலம்-ஏற்காடு, கல்வராயன் மலை, நாமக்கல்-கொல்லிமலை, விழுப்புரம்-சேர்வராயன் மலை, வேலூர்-ஜவ்வாது, ஏலகிரி மலை போன்ற மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கோவை, நீலகிரி, பழனி, கொடைக்கானல், குமரி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணாமல் போன சந்தனம், தேக்கு, ஈட்டி மரங்களைக் கடத்தியவர்கள் யார்? பழங்குடிகளா? இதற்கு விடை கண்டால் மட்டுமே வனத்தைக் காக்க முடியும்.
எந்த இடத்தில் என்ன மரம் வளரும், எந்தப் பருவத்தில் விதைகள் முளைக்கும், விலங்குகளின் கணம், மரத்திருடர்களின் நடமாட்டம் பற்றி முழுமையாக அறிந்த பழங்குடிகளை புறக்கணித்து, அவர்களை வனத்திலிருந்து அன்னியமாக்கியதே வனப்பரப்பு குறையக் காரணமாகியது. பழங்குடிகளை ஈடுபடுத்தா வன வளர்ப்புத் திட்டங்கள் வெற்றி பெறா.
வனம் காக்க பழங்குடிகள் காக்கப்பட வேண்டும்
பழங்குடிகளுக்கான எளிய பாடத்திட்டம், வனம் சார்ந்த கல்வி, ஆரம்ப பள்ளி வரை அவரவர் தாய்மொழியில் கல்வி, விடுதியில் அவர்களது உணவு, குடும்பத்தினருக்கு உதவும் வகையில் பள்ளி நேரம், விடுமுறை, நடுநிலைப் பள்ளி வரை தனித்த பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும்.
நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்க வேண்டும். இழந்த நிலங்களை மீட்க வேண்டும். மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் போல் தமிழகத்திலும் நிலங்கள் கை மாறுவதை தடுக்கும் சட்டம் கொண்டு வர வேண்டும். வனத்தின் மீதான உரிமை, வனம் தங்களது என்ற உணர்வு மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். வன வளர்ச்சி, பாதுகாப்புப் பணியில் பழங்குடிகளை நியமனம் செய்ய வேண்டும். ரேசன் கடைகளில் ராகி, கம்பு, பருப்பு, துணி வழங்க வேண்டும். சரிவிகித உணவு இன்றி ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை, பெண்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இப்படி இவர்களை காக்கத் தவறினால் வனம் அழியும். தூய காற்றுக்கும், மழைக்கும், தண்ணீருக்கும் தட்டுப்பாடு மேலும், மேலும் அதிகரிக்கும்.
பழங்குடிகளின் பாரம்பரிய அறிவு பதிவு செய்யப்பட வேண்டும். இவர்களை ஆராய, காத்திட, பழங்குடிப் பல்கலைக்கழகம் அவசியம்.
உலகமயச் சூழலில் மலை நிலங்கள் வீட்டுமனைகளாக, சுற்றுலா தலங்களாக மாற்றப்படுகின்றன. இயற்கை சுற்றுலாவிற்கும் திறந்து விடப்படுகிறது. தண்ணீர் குடிக்கும் பணப்பயிர் விவசாயம், ஆழ்குழாய் கிணறுகள், புதிய வேளாண்முறைகள் போன்றவை, ஓடைகளை வற்ற வைத்துவிட்டன. வன வலங்குகள் கோடையில் தண்ணீருக்கு அலைகின்றன.
பழங்குடிகளின் தற்சார்பு வாழ்க்கை முறை சிதைந்து நுகர்வு கலாச்சாரத்தால் சாலையோரம் நின்று வாகனங்களில் வருவோரை பிச்சை கேட்கும் குரங்குகள் போல் மாற்றப்படும் பழங்குடிகளைப் பாதுகாப்பது மிக மிக அவசியம்.
இவர்களுக்கென அமைப்பு, இவர்களுக்கான அமைப்பு அவசியம்.

இலங்கையின் இறுதிப் பசி...

கிளிநொச்சி தொடங்கி முல்லைத்தீவின் எல்லை வரை கிட்டத்தட்ட விடுதலைப் புலிகளின் முக்கால்வாசி ஏரியாக்களை தங்கள் வசமாக்கி விட்டது சிங்கள அரசு. தமிழர் பகுதிகள் மீது நடக்கும் அடுத்தடுத்த தாக்குதல்களைக் கண்டித்து, உலகவாழ் தமிழர்கள் கண்டனக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளும் இலங்கையின் போர்வெறியைக் கண்டிக்கின்றன. ஆனால், இதற்கெல்லாம் கொஞ்சமும் செவிசாய்க்காத சிங்கள அரசோ, 4-ம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டங்களை நடத்தி முடித்த பிறகு, போர் நடவடிக்கைகளைக் குரூரமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறதாம். அதற்காக ராஜபக்ஷே எடுக்கப் போகும் அதிரடித் திட்டங்கள் குறித்து குலை நடுங்கச் சொல்கிறார்கள், இலங்கையின் தமிழ் எம்.பி-க்கள் பலரும். இலங்கையில் எமர்ஜென்ஸி!
"பன்னாட்டு ராணுவ உதவிகளுடன் சிங்கள அரசு தீவிரமான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வல்லிப்புனம், சுதந்திராபுரம், மூங்கிலாறு, உடையார்கட்டு உள்ளிட்ட தமிழர்வாழ் பகுதிகளில் பீரங்கித் தாக்கு தல்களை நடத்தி தமிழர்களை உயிர்பயத்தோடு ஓட வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும், புலிகளைப் பூண்டோடு அழிக்க தமிழர்வாழ் பகுதிகள் இடைஞ்சலாக இருப்பதால், ராணுவத்தின் கோபம், குரூரமாகி விட்டது. எனவே, தமிழர்களைக் கொத்துக்கொத்தாக வீழ்த்தத் திட்டம் வகுத்து விட்டது. இஸ்ரேல், சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு போர்களில் பயன்படுத்தக் கூடாத ஆயுதங்களை எல்லாம் கொண்டுவந்து குவித்திருக்கிறது.
இதற்கிடையில் ராணுவ அதிகாரிகளை அழைத்து, அடுத்தகட்டத் தாக்குதல் திட்டங்கள் குறித்துப் பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே பேசியிருக்கிறார். திடீரென எமர்ஜென்ஸியை அறிவித்து... எஞ்சியிருக்கும் மீடியாக்கள், தூதரகங்களை எல்லாம் முற்றிலுமாக வெளியேற்றிவிட்டு, உலகத்தின் பார்வையே படாதபடி இலங்கைத் தீவை இருண்ட கண்டமாக்கி... கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் கோத்தபய ராஜபக்ஷே. அதற்கான ஆரம்பமாகத்தான், "நார்வே, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்களை இழுத்து மூட வேண்டியிருக்கும்" என அவர் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். முக்கியச் செய்தி சேனல்களை மிரட்டும்படியான அறிக்கையையும் வெளியிட்டார்.
அதோடு மட்டுமல்லாமல், "முல்லைத்தீவில் தற்போது தங்கி இருக்கும் தமிழர்கள், புலிகளிடத்தில் பயிற்சி பெற்றவர்கள். அவர்களைப் பொதுமக்களாகக் கருத முடியாது. அதனால், இனியும் எங்களின் தாக்குதல்களைத் தாமதப்படுத்த மாட்டோம்" எனக் கொக்கரித்திருக்கிறார். எமர்ஜென்ஸி அறிவித்து, ஒரு வார காலத்துக்குள் முல்லைத்தீவை மண்ணோடு மண்ணாக்க வேண்டும் என்பதுதான் தற்போது கோத்தபய வைத்திருக்கும் இறுதித் திட்டம். உலகின் பார்வைக்கே தெரியாமல் அப்பாவி மக்களைக் கொன்றுமுடித்துவிட்டு, புலிகள் மீது எல்லா பழியையும் போட்டுவிட சிங்கள ராணுவத் தரப்பு தயாராக இருக்கிறது!" என அச்சத்தோடு சொல்கிறார்கள், தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி-க்கள்.
திட்டம் வகுப்பதே "ரா"?!
இலங்கையின் எமர்ஜென்ஸி திட்டம் குறித்துத் தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்களிடம் பேசினோம். "இப்போதே அங்கு அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸிதான். இதற்கெல்லாம் முக்கியக் காரணகர்த்தா இந்தியாதான். இலங்கைக்கு வெளிப்படையாக ஆயுத உதவிகளை வழங்கி வரும் இந்திய அரசு, முக்கியமான ராணுவ அதிகாரிகள் மூலமாக புலிகளை அழிக்கும் வியூகங்களையும் வழங்கி வருகிறது. அதிநுட்பமான தாக்குதலை நடத்தக்கூடிய மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள், சிங்கள ராணுவத்தோடு கைகோத்திருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சி முடிய இன்னும் சில மாதங்களே இருப்பதால், அதற்குள் புலிகளுக்கு முடிவு கட்டிவிட நினைக்கிறது சிங்கள அரசு. இதன் பின்னணியில் இந்திய உளவு அமைப்பான "ரா"வின் பங்களிப்பு நிறைய இருக்கிறது. அடுத்தடுத்த திட்டங்களை இலங்கைக்கு வகுத்துக்கொடுப்பதே "ரா" அமைப்புதானோ என்கிற சந்தேகமும் எங்களுக்கு இருக்கிறது..." என்கிறார்கள், இங்கிருக்கும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் சிலர்.
காங்கிரஸ் கைங்கரியங்கள்!
விடுதலைப்புலிகளை வீழ்த்துவதில் சிங்கள அரசைக் காட்டிலும், காங்கிரஸ் கட்சித் தலைவியான சோனியா காந்தி தீவிரமாக இருக்கிறார் என புலிகளுக்கு ஆதரவான இணைய தளங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தீவிர புலி ஆதரவுப் பிரமுகர்கள் பேசுவது என்ன தெரியுமா?
"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் நளினியை, பிரியங்கா காந்தி சந்தித்தபோதே ஏதோ நடக்கிறது என்று நினைத்தோம். ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற நளினி, முருகன் ஆகியோரை மன்னித்ததன் மூலமாக தன்னை சாத்வீகப் பெண்மணியாகக் காட்டிக்கொண்டார் சோனியா. ஆனால் தன் கணவர், பிரபாகரனால் கொல்லப்பட்டது குறித்த அவருடைய ஆதங்கமும் கோபமும் கொஞ்சமும் குறையவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. உரிய தருணத்துக்காகக் காத்திருந்து பிரபாகரனை ஒழித்துக் கட்டுவதற்கான எல்லா உதவிகளையும் இந்தியா தற்போது அளிக்கிறது. இதுகுறித்து தனக்கு மிகநம்பகமான பிரணாப் முகர்ஜியையும், ராஜபக்ஷேவின் நண்பரான மணிசங்கர் ஐயரையும் கலந்து பேசியிருக்கிறது காங்கிரஸ் மேலிடம். அதன் பிறகுதான் "எதிரிக்கு எதிரி நண்பன்" என்பது போல புலிகளை ஒழிக்கத் துடிக்கும் ராஜபக்ஷேவுக்கு அனைத்து விதமான உதவிகளையும் இந்தியா வழங்குகிறது.
தமிழகத்தில் உள்ள பல கட்சித் தலைவர்கள் ஆவேசக் குரல் எழுப்பியும் அவற்றைச் சட்டையே செய்யாமல் ராடார்கள், டாங்கிகள் என இலங்கை அரசுக்கு உதவி வழங்கப்பட்டு வருவதன் பின்னணியை வேறு என்ன வென்று புரிந்துகொள்வது?" என்பதே இவர்களின் கேள்வியாக இருக்கிறது.
களத்தில் குதிக்கும் பி.ஜே.பி.!
இலங்கையில் எமர்ஜென்ஸி கொண்டுவரப் போவதாகக் கிளம்பி இருக்கும் செய்தி, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களை ஈழத்தின் பக்கமாகத் திருப்பி இருக்கிறது. இதுகுறித்துப் பேசும் தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சிலர், "இலங்கையில் எமர்ஜென்ஸியைக் கொண்டு வருவதன் மூலமாக தமிழினத்தைப் பூண்டோடு அழிக்கப் பார்க்கிறது காங்கிரஸ் கட்சி. இன அழிப்புக்கு காங்கிரஸ் கைகொடுக்கும் போக்கை, எங்கள் கட்சி ஒருபோதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. "ராஜீவ் காந்தி கொலை குறித்து சி.பி.ஐ. மூலமாக விசாரணை நடத்தப்பட வேண்டும்" என ஜெயின் கமிஷன் ஏற்கெனவே உத்தரவு போட்டிருக்கிறது. அதனை விரைவாகச் செயல்படுத்தி, கொலைக் காரணம் குறித்து அறிந்திருக்கவேண்டிய காங்கிரஸ் அரசு, ஐந்தாண்டு காலமாக அமைதி காத்துவிட்டு, ஆட்சி முடிகிற தருணத்தில் ராஜீவ் படுகொலைக்கான பழிவாங்கலை சமயம் பார்த்து தற்போது நிறைவேற்றிக்கொள்ள முயல்கிறது.
இலங்கையில் யுத்தம் மிக மோசமான நிலையை எட்டியுள்ள சூழலில் எங்களின் தேசியத் தலைவர்களான அத்வானி, நரேந்திர மோடி ஆகியோர், இந்தியாவின் முக்கியமான சில மாநில முதல்வர்களை ஒன்றுகூட்டி இலங்கை நிலவரம் குறித்து விவாதிக்கும் யோசனையில் இருக்கிறார்கள். காங்கிரஸ் அரசின் கபட நாடகங்களை அம்பலமாக்குவதற்கு, இந்திய அளவிலான ஒரு கூட்டமைப்பை பி.ஜே.பி-யின் பெரிய தலைவர்கள் விரைவில் உருவாக்கப் போகிறார்கள்!" என்கிறார்கள்.
இதற்கிடையில், தங்களுக்கு ஆதரவு திரட்டும் நோக்கோடு வெளிநாடுகளில் பயணித்துக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்களை அவசர அவசரமாக இலங்கைக்குத் திரும்பி வரும்படி கேட்டுக்கொண்டிருக்கிறதாம் புலிகள் தரப்பு.
"பிரபாகரனை ஒப்படையுங்கள்"!
காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணிசங்கர் ஐயரிடம் கேட்டோம். "இலங்கையில் வாழும் தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும், அரசியல் உரிமைகளுக்காகவும் பெரிய அளவில் சிரத்தை எடுத்து ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தைக் கொண்டுவந்தார் ராஜீவ். அவர்களின் விடிவுக்கு காங்கிரஸ் துணை நின்ற அளவுக்கு வேறு எந்த அரசும் நின்றதில்லை. இப்போதும் அமைச்சர் பிரணாப் முகர்ஜி மூலமாக இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதபடி காங்கிரஸ் அரசுதானே கவனித்துக் கொண்டிருக்கிறது! இதில் தனிப்பட்ட கோபதாபத்தைக் காட்டவேண்டிய அவசியம் எங்களுக்கு எங்கிருந்து வந்தது? ராஜீவ் கொலைக்குக் காரணமான பிரபாகரனை இலங்கை அரசு பிடித்தால், உயிரோடு எங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றுதான் எங்கள் அரசு சொல்லி இருக்கிறதே தவிர, பிரபாகரனைப் பிடிக்கிற வேலையை சிங்கள அரசுக்கு உத்தரவாகப் போடவில்லை. நளினியை, பிரியங்கா காந்தி சந்தித்தது பற்றியோ, நளினியிடம் விசாரிக்கப்பட்ட விவரங்கள் குறித்தோ எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இலங்கையில் போர் தீவிரம் அடைந்திருப்பதற்கு பின்னால் இந்தியாவின் தூண்டுதல் கிடையவே கிடையாது என்பதை மட்டும் அடித்துச் சொல்ல முடியும்!" என ஆவேசப்பட்டார் அமைச்சர்.
எப்படி சமாளிப்பார்கள் புலிகள்?
எமர்ஜென்ஸி மூலம் ஏற்படப்போகும் கடுமையான இருட்டடிப்புகளைப் பற்றி உணர்ந்து வைத்திருக்கும் புலிகள் தரப்பு, உலகவாழ் தமிழர்களின் மூலமாக சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கவனத்தைத் திருப்பும் திட்டத்தில் இருக்கிறது. ஏற்கெனவே இலங்கையின் அராஜகங்களை கவனித்துக் கொண்டிருக்கும் ஐ.நா-வும் அமெரிக்காவும் தங்களின் விடிவுக்கு உதவுவார்கள் என்பது புலிகளின் நம்பிக்கை.
"எமர்ஜென்ஸி அபாயத்தைத் தடுக்க எல்லா விதங்களிலும் மெனக்கெடுகிறோம். அதையும் தாண்டி இலங்கையின் எமர்ஜென்ஸி திட்டம் அரங்கேற்றப்பட்டால், இழப்பு சிங்கள அரசாலும் ஜீரணித்துக்கொள்ள முடியாததாகத்தான் இருக்கும்..." என்கிறார்கள் புலிகள் தரப்பில்.

இந்திய அரசு அதிகாரம் ஆபத்தானது

இந்திய அரசு அதிகாரம் ஆபத்தானது
Indian Government - VIS Jeyabalan - Tamil Poltics News Article ஈழத்தின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளுள் ஒருவர், வ.ஐ.ச. ஜெயபாலன். பெருமளவு கவிதைகள், கொஞ்சம் சிறுகதை மற்றும் குறுநாவல்கள் எழுதியுள்ள ஜெயபாலன் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டு வருகிறார். தென்னாசியாவில் நாடுகளுக்கிடையேயான உறவுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்த அதன் புரிதலை விரிவாக நம்முடன் பகிர்ந்துகொண்டார். தீராநதி: இரண்டு ஆண்டுகளுக்கு முன் "தீராநதி"யில் வெளியான உங்கள் நேர்காணலில், "கடல்மார்க்கமாக இந்தியாவுக்குள் ஊடுருவ இந்தியாவின் எதிரிகள் திட்டமிடுகிறார்கள்" என குறிப்பிட்டிருந்தீர்கள். சமீபத்திய மும்பைத் தாக்குதல் உங்கள் அனுமானத்தை உறுதிப்படுத்தியுள்ளது. உங்களுக்குக் கிடைத்த எத்தகைய தகவல்களின் அடிப்படையில் இந்த அனுமானத்துக்கு வந்தீர்கள் எனக் கூறமுடியுமா?
வ.ஐ.ச. ஜெயபாலன்: பெரும்பான்மையான இலங்கைத் தமிழர்களைப் போலவே, என்னை நான் உலகத் தமிழர்களின் ஒரு அங்கத்தவனாகத்தான் உணர்கிறேன். ஆனபடியால் என்னுடைய அக்கறைகளும் ஈடுபாடும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் தென்னாசியப் பிராந்தியத்தைப் பற்றியே தொடர்ந்து இருந்து வருகிறது. என் அடிப்படைத் தேடலாக இது இருப்பதால், தென்னாசியா மற்றும் தென்னாசியப் பிராந்தியத்தில் மிகப் பெரிய வல்லரசான இந்தியா, என் இனமானத் தமிழர்கள் பற்றி நான் பயணம் செய்யும் பல்வேறு நாடுகளிலும் நான் சந்திக்கும் அறிஞர்கள் எத்தகைய கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். குறிப்பாக, இந்தியா மீதான என் ஈடுபாட்டுக்குக் காரணம், இந்திய அரசின் மேம்பட்ட செயல்பாடும் இந்தியாவின் பாதுகாப்பும், எங்களையும் உட்படுத்தி தென்னாசியாவைச் சேர்ந்த அனைவருக்கும் முக்கியத்துவம் தருவதும்தான். இந்தியாவின் பிரச்சினை தென்னாசிய நாடுகளின் பிரச்சினைதான். இந்தியாவின் எதிரிகள் கை ஓங்குவது இந்தியாவின் பிரச்சினை மட்டுமல்ல, எங்களுடைய பிரச்சினையும்கூடத்தான்.
நான் இலங்கையில் இருந்த காலங்களில் கொழும்பில் உள்ள பல்வேறு துறை அறிஞர்களுடனும், சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளுடனும், ராஜதந்திரிகளுடனும் பழகியிருக்கிறேன். நார்வேயில் சமாதான முயற்சியில் ஈடுபட்ட தூதுவர்களுடன் பேசியிருக்கிறேன். ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் போதெல்லாம், அங்குள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராஜதந்திரிகளைச் சந்திந்திருக்கிறேன். இவர்கள் எல்லோரின் மூலமாக எனக்குத் தெரிய வந்த தகவல்களைவிட முக்கியமானது, இலங்கை தமிழ்ப் பத்திரிகையாளரும் ராணுவ ஆய்வாளருமான எனது நண்பர் சிவராமன் என்னுடன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள். தென்னாசிய நாடுகளைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் உளவுத்துறையினருடன் நெருக்கமான பழக்கம் சிவராமனுக்கு இருந்தது. அவர்கள் மூலம் அவர் நிறைய தகவல்களைச் சேகரித்து வைத்திருந்தார். அவற்றையெல்லாம் வைத்து ஒரு புத்தகம் எழுதும் திட்டமும் அவருக்கு இருந்தது. இலங்கையில் இருந்தால் அது சாத்தியமில்லை என்பதால் ஜப்பானில் குடியேறிவிட்டு பிறகு எழுதுவேன் எனச் சொல்லிவந்தார். இந்நிலையில்தான் அவர் கடத்திக் கொல்லப்பட்டார். கருணா கோஷ்டியினர்தான் அவரைக் கொன்றார்கள் என்று சொல்லப்பட்டாலும், அவருக்குத் தெரிந்த பல்வேறு நாடுகளின் உளவுத்துறை ரகசியங்கள் வெளியாகக்கூடாது என்பதற்காகத்தான் அவர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது என் சந்தேகம். ஏனெனில், அவரது புத்தகம் வந்தால் பல அதிகாரிகளின் ரகசியத் தொடர்புகள் வெட்ட வெளிச்சமாகிவிடும் என்று அவரே என்னிடம் சொல்லி இருக்கிறார். இப்படி பல்வேறு வழிகளில் எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், உள்ளார்ந்த ஊடுருவல்களுக்கு வாய்ப்பான சூழல் இந்தியாவில் இருக்கிறது என்பது என் அனுமானம். 1992-இல் "சன்" தொலைக்காட்சியில் என் நேர்காணல் ஒலிபரப்பானது. அதில் நான் இது சம்பந்தமாக சில விஷயங்களை வலியுறுத்தி இருந்தேன். அதன்பிறகு "நந்தன்", ஞாநியின் "தீம்தரிகிட", "தீராநதி" ஆகிய பத்திரிகைகளிலும் ஆங்கில ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களிலும் இதனைக் குறிப்பிட்டிருக்கிறேன்.
கடைசியாக, "தீராநதி"க்கு அளித்த நேர்காணலில் இலங்கை கடற்படையில் சீனா, பாகிஸ்தான் போன்ற இந்தியாவின் எதிரி நாடுகளைச் சேர்ந்த உளவுப்பிரிவினர் ஊடுருவி இருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன். இலங்கைக் கடற்படைக்குள் ஐ.எஸ்.ஐ.யின் ஊடுருவல் பற்றி, காகம் கறுப்பு என்பதுபோல், கொழும்பில் எல்லோருக்கும் தெரியும். இலங்கையில் ஒரு கடற்படை வீரன் ராஜீவ்காந்தியைக் கொலைசெய்ய முயற்சித்ததை இதனுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்கலாம். ராமேஸ்வரம், நாகப்பட்டினம் கடல்பகுதியில் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் தூத்துக்குடி, கன்னியாகுமரி கடல்பகுதியில் பல ஆண்டுகளாக நடந்துவரும் கடத்தல்களில் ஐ.எஸ்.ஐ.யின் கை இருக்கிறது என்பதை கொழும்பில் நான் சந்தித்த ராஜதந்திரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தியக் கடற்கரை தொடந்து கண்காணிக்க முடியாத அளவுக்கு மிக நீளமானது. உண்மையில் கடற்கரையோரமாக வாழும் மீனவச் சமுதாயம்தான் இந்தியாவின் பாதுகாப்பு அரணாக இருக்கிறார்கள். மீனவர்களைத் தொடர்ந்து தாக்கி, இந்தியக் கடற்படை மற்றும் இந்திய அரசுக்கு எதிரான மனநிலையை அவர்கள் மத்தியில் உருவாக்குவதுதான் ஐ.எஸ்.ஐ.யின் நோக்கம். அது நிறைவேறினால் கடற்கரை வழியாக அவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவது சுலபமாகும் என நினைக்கிறார்கள். அதன் அடிப்படையில் கடல்மார்க்கமாக இந்தியாவுக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் திட்டமிடுகிறார்கள் என்று குறிப்பிட்டேன். என் தீராநதி நேர்காணலின் ஆங்கில மொழிபெயர்ப்பை டில்லியில் நான் சென்ற சில அலுவலகங்களில் பார்த்திருக்கிறேன். அவர்கள் என் வார்த்தைகளை கவனிக்கிறார்கள் என்பது உறுதிப்பட்ட பிறகு, இந்திய அதிகாரிகளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும் ஒவ்வொரு முறையும் இந்த விஷயங்களை அழுத்தமாகச் சொல்லிக்கொண்டு வருகிறேன். இப்பொழுது என் அனுமானம் உறுதியாகியுள்ளது.
தீராநதி: சமீபத்தில் தென் தமிழகக் கடற்கரை வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் வாய்ப்புள்ளது என்றும் கூறியிருக்கிறீர்கள்?
வ.ஐ.ச. ஜெயபாலன்: மும்பை பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் கடற்படை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது இந்திய அரசு. இந்நிலையில், கண்காணிப்புக் குறைவாக இருக்கும் தமிழகத்தின் தென்பகுதியான தூத்துக்குடி, கன்னியாகுமரி கடல்பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளது என்பது என் அனுமானம். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல், இந்தியாவுக்கு முன்னால் உள்ள முக்கிய அச்சுறுத்தல் பாகிஸ்தான் உளவுத்துறையின் தென்னாசிய செயல்பாடுகள்தான். நேபாளம், வாங்காள தேசம், இலங்கை போன்ற இந்தியாவின் அண்டை நாடுகளில் இருந்து பாகிஸ்தான் உளவுத்துறை செயல்பட்டு வருவது ரகசியம் இல்லை. இதற்கு சீனாவின் அணுசரணை உள்ளது என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள். இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யின் செயல்பாடுகள், பாகிஸ்தானில் இருந்து மட்டுமல்லாமல் நேபாளம், பங்களாதேஷ், இலங்கை என ஐ.எஸ்.ஐ. பரந்துள்ள இடங்களில் இருந்தும் திட்டமிடப்படுகிறது. காத்மாண்டு, டாக்காவில் உள்ள ஐ.எஸ்.ஐ.யின் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்திய உளவுத்துறை நிறுவனங்களே பலமுறை தெரிவித்துள்ளன. கொழும்பில் நடக்கும் ஐ.எஸ்.ஐ. செயல்பாடுகளை இந்தியா உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்திய உளவுத்துறைக்கு சந்தேகம் இருக்கிறது. பாகிஸ்தான் உளவுத்துறைத் தலைவரான பஷீர்வாலி முகமது இலங்கைக்கான தூதராக நியமிக்கப்பட்டது, இலங்கை அரசியல்வாதிகளுடனும் அதிகாரிகளுடனும் சாயங்காலங்களில் விருந்து சாப்பிடவும் தேநீர் குடிக்கவும் மட்டும் இல்லை.
இலங்கையில் ஐ.எஸ்.ஐ.யின் செயல்பாடுகளைப் பலப்படுத்தத்தான் என்பது அங்கே எல்லோருக்கும் தெரியும். 2006-ஆம் ஆண்டு பஷீர்வாலியைக் கொலை செய்யும் நோக்கத்துடன் கொழும்பில் மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இலங்கை ராணுவத்துக்கு பாகிஸ்தான் ஆயுத சப்ளை செய்துவருவதால் புலிகள்தான் அதைச் செய்தார்கள் என்று சொல்லப்பட்டாலும், இந்திய உளவுத்துறைதான் அதைச் செய்தது என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. கொழும்பில் பாகிஸ்தான் உளவுத்துறை பலப்படுவது இந்தியாவை சீர்குலைப்பதற்குத்தான். கொழும்பில் உள்ள ஐ.எஸ்.ஐ.தான், கொழும்பு தூத்துக்குடி - கன்னியாகுமரி முக்கோணக் கடல்பகுதி வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளது என்கிறேன். தமிழகத்தின் தென்பகுதியில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, கொழும்பு மூன்று ஊர்களுக்கும் இடைப்பட்ட முக்கோணப் பகுதி தொடங்கி கேரளாவின் மேற்குக் கடற்கரை வரை இலங்கையின் ஊடாக இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சி இருக்கிறது என்பதான சந்தர்ப்ப சாட்சிகள் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இது சம்பந்தமான சூசகமான தகவல்களை கொழும்பில் கேள்விப்படுகிறோம். கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கேரள சம்பந்தம் உள்ளது சாதாரணமான விஷயம் இல்லை. கோயம்புத்தூர் தாக்குதலுக்கான ஆள்கள் இலங்கை ஊடாக வந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை கொழும்பிலேயே என்னிடம் பலர் எழுப்பினார்கள். எனவே, இலங்கைக்குள் நடக்கும் ஐ.எஸ்.ஐ. செயல்பாடுகளையும், தென் தமிழகம் தொடங்கி கேரளாவில் மலைப்புறம் வரைக்குமான இந்தியாவின் தென் கடல்பகுதியிலும் கண்காணிப்பை இந்தியா தீவிரப்படுத்த வேண்டும்.
தீராநதி: தமிழகக் கடற்கரை வழியாக ஊடுருவுவது மட்டுமல்லாமல், தமிழகத்துக்கும் தீவிரவாதத் தாக்குதல் அபாயம் இருப்பதாக கருதுகிறீர்களா?
வ.ஐ.ச. ஜெயபாலன்: இந்தியாவின் பாதுகாப்பு குறித்த எல்லா ஆய்வுகளும் உலகமயமாதல் இந்தியாவில் எப்படிச் செயல்படுகிறது என்பது குறித்த ஆய்வாகவும் மாறிவிட்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும். உலகமயமாதலுக்குப் பிறகு இந்தியாவின் தென்மாநிலங்கள் நன்கு வளர்ச்சியடைந்துள்ள நிலையில், வடமாநிலங்கள் வளர்ச்சியடையவில்லை. பெரும் பகுதியும் பின்தங்கி இருக்கிற கடல் இல்லாத ஹிந்திப் பகுதி, பெருமளவு வளர்ச்சியடையாத வடகிழக்குப் பகுதி மற்றும் ஹிந்திப் பகுதிக்கு வடக்குப் பகுதி இந்த மூன்றும் சமீப கால வளர்ச்சியில் பின்தங்கியுள்ள பகுதிகள். திட்டமிட்டு தொழிற்சாலைகள், வளர்ச்சித் திட்டங்களை ஹிந்திப் பகுதிகளுக்கு நகர்த்திய டில்லியின் செயல்பாடு உலகமயமாதல் பின்னணியில் சாத்தியமில்லை என்பதால் இது வேகமாக நடந்துவிட்டது. இதனால், ஏற்கெனவே ஹிந்திப் பகுதியினர் கையில் இருந்து பறிபோகத் தொடங்கியிருந்த டெல்லி அதிகாரம் தென்மாநிலங்கள் கையில் வரத் தொடங்கியுள்ளது. ஆனால், மிச்சமீதியுடன் இன்றும் தொடர்ந்து அதிகார மையமாக வடக்குதான் இருக்கிறது என்பது வேறு விஷயம். இருந்தாலும் பொருளாதார ரீதியான அதிகார மையங்களாக மகாராஷ்டிராவும் அதற்குத் தெற்கே இருக்கிற ஹிந்தி அல்லாத பகுதிகளும் உருவாகி வருகின்றன. உலகமயமாதல் வளர்ச்சி அடைந்துள்ளதுடன், அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் மிக வேகமாக நெருக்கமாகிக் கொண்டிருப்பதும் இந்த கடல் ஓரமாக இருக்கும் ஹிந்தி அல்லாத தென் மாநிலங்கள்தான். எனவே, இந்தியாவின் எதிரிகளின் குறியாக எதிர்காலத்தில் இந்தப் பகுதிகள்தான் இருக்கும் என அனுமானிக்கலாம்.
உலகமயமாக்கலுக்குப் பிறகு தாய் மொழியும் ஆங்கிலமும் தெரிந்தால் போதும் அதுதான் வளர்ச்சிக்கும் நல்லது என்ற எண்ணம் எல்லோரிடமும் உருவாகிவிட்டது. ஹிந்திப் பகுதியிலும் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பின்தங்கி இருக்கிற ஹிந்திப் பகுதி முன்னேறாவிட்டால், அதனால் இந்திய ஒருமைப்பாட்டுக்கே எதிர்காலத்தில் சிக்கல்கள் உருவாகலாம். இப்பொழுதே மகாராஷ்டிராவில் பிகாரிகளுக்கு எதிராக நடக்கும் கிளர்ச்சிகள் கவனிக்க வேண்டியவை. அதை உலகமயமாக்கல் பின்னணியில் புரிந்துகொள்ளாமல் மரபார்ந்த புரிதலுடன் அணுகுவதுதான் இங்கு நடக்கிறது. அதனால் எந்த முன்னேற்றமும் நடக்கப்போவதில்லை. தமிழகம், கேரளா உள்பட பல தென் மாநிலங்களில் தொழிலாளிகளாக ஹிந்திப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இருப்பதைப் பார்க்கலாம். அப்படி உள்ளவர்களில் பலர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதையும் காணலாம். சட்டங்களால் இதனை நிவர்த்தி செய்ய இயலாது.
தீராநதி: உங்களுக்குத் தெரிந்திருக்கும் இந்தத் தகவல்கள், மிகப்பெரிய அமைப்பான உளவுத்துறைக்கும் இந்திய சமூக பொருளாதார ஆய்வாளர்கள் பார்வைக்கும் தப்பியிருக்கும் என்று நம்புகிறீர்களா?
வ.ஐ.ச. ஜெயபாலன்: நான் அப்படிக் கருதவில்லை. நிச்சயம் உளவுத்துறைக்கும் தெரிந்திருக்கும். ஆனால், உளவுத்துறையின் தகவல்களை செயல்படுத்துவதில் இந்திய அரசு மெத்தனம் காட்டுகிறது என்பதைத்தானே ஒவ்வொரு குண்டுவெடிப்பும் உறுதிப்படுத்துகிறது. உளவுத்துறையினர் கொடுக்கும் தகவல்களை பொறுப்புடன் ஆராய்ந்து, செயல்படுத்தக்கூடிய வாய்ப்புகள் இந்தியாவில் இல்லை என்பதுதான் கவனிக்க வேண்டியது. ஒவ்வொரு குண்டு வெடிப்புக்குப் பின்னரும் இதுபற்றி ஏற்கெனவே உளவுத்துறை தகவல் கொடுத்திருந்தும், அதிகாரிகள் அதைப் பொருட்படுத்தவில்லை என வரும் செய்திகள் இதற்கு சாட்சி.
இந்தியாவின் பலம் பத்திரிகை சுதந்திரத்திலும் உயர்நீதிமன்றத்தின் சுதந்திரமான செயல்பாடுகளிலும் தங்கியிருக்கிற இந்தியாவின் ஜனநாயகம்தான். பாராளுமன்றம் முழுமையாக செயல்படுவதன் அடிப்படையில் இந்த ஜனநாயகம் பலப்படாவிட்டால் அது இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் என்பதுதான் என்னுடைய கருத்து. ஆனால், பாராளுமன்ற ஜனநாயகம் பலப்படுவதற்கு மாற்றாக அது பலமிழக்கும் சூழல்தான் இங்கு நிலவி வருகிறது. துரதிருஷ்டவசமாக, மாநிலங்களைச் சேர்ந்த இயற்கையான தலைவர்கள் கட்சிகளில் முக்கியப் பதவிகளை வகிப்பதற்குப் பதிலாக, கட்சித் தலைவர்களால் நியமிக்கப்பட்ட மாநிலத் தலைவர்களால் நிர்வகிக்கப்படும் சூழ்நிலையில்தான் இன்று இந்தியாவின் பல தேசிய கட்சிகள் உள்ளன. காமராஜர் போன்ற மக்கள் மத்தியில் இருந்து உருவாகி வந்த இயற்கையான தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்டதில் இருந்து இந்தப் போக்கு தொடங்கியது. மாநிலக் கட்சிகள் வலுவடைய அடிப்படைக் காரணம், இந்தப் போக்குதான். மாநிலக் கட்சிகளும் மாவட்ட அளவில் இயற்கையாக உருவாகி வந்த தலைவர்களை புறக்கணிக்கும் போக்கால் இப்பொழுது சாதிக்கட்சிகள் வலுப்பெறத் தொடங்கியுள்ளன.
இயற்கையாக உருவாகும் தலைவர்களைப் புறக்கணித்து, தலைமையால் நியமிக்கப்படுபவர்களால் கட்சி வழிநடத்தப்படும் போக்கு மக்களின் அதிகாரத்தை ஒரு சிலர் கைப்பற்றி தங்கள் வசப்படுத்தும் சூழலாக மாறியிருக்கிறது. இந்தச் சூழல் வெளிநாட்டினர் கட்சிக்குள் ஊடுருவக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்பது என் அபிப்ராயம். அல்லது தலைவர்கள் வெளிநாடுகளுக்கு தங்கள் நாட்டை காட்டிக் கொடுப்பதற்கான வாய்ப்புகளை இது உருவாக்குகிறது. முதலில் கட்சிகளுக்குள் வரும் இந்தத் தன்மை, பிறகு அரசு மட்டத்திலும் தன் கைகளை விரிக்கும். இப்பொழுது இந்தியாவில் இதுதான் நடந்திருக்கிறது. பாராளுமன்ற அலுவல்கள் கட்சித் தலைவர்களின் வீடுகளில் நடக்கிற மாதிரியான சூழல் இதன் ஒரு கட்டம்தான். பாதுகாப்பு, வெளிவிவகாரம் போன்ற முக்கியத் துறைகளின் முடிவுகள் பாராளுமன்றத்துக்கு வெளியே உருவாகியிருக்கும் இந்த அதிகார மையங்களில் எடுக்கப்படும் சூழல் இந்தியாவில் உள்ளது. இதன் நீட்சியாக பாராளுமன்றத்துக்கு வெளியே கோப்புகளைக் கொண்டுசென்று அதிகாரிகள் செயல்படும் போக்கும் உள்ளது.
இந்தப் போக்கின் அதிகபட்ச ஆபத்து, பிரதமர் பாராளுமன்றத்துக்கு வெளியே இருக்கும் அந்த யாரோ ஒரு அதிகார மையத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுவதுதான். ஒரு நாட்டை பிரதமர் ஆளவில்லை என்றால் அந்த நாடு ஆபத்தில் இருக்கிறது என்றுதான் அர்த்தம். இந்தச் சூழலில் நாட்டுக்கும் நாட்டின் அரசியல் அமைப்புக்கும் பிரதமருக்கும் விசுவாசமான அதிகாரிகள் பலம் இழந்து, வெளியே இருக்கும் அதிகார மையத்துக்கு விசுவாசமான அதிகாரிகள்தான் பலம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். விசுவாசிகள் விலகி, எடுபிடிகள் கோலோச்சும் சூழலில் அரசியலுக்குள் ஊடுருவி இருக்கும் வெளிநாட்டினர் மூலமாக இந்தியாவை ஆட்டிப் படைக்கும் வாய்ப்புகள் எதிரிகளுக்கு கிடைக்கிறது. இதனை சுலபமாக இப்படி விளங்கிக்கொள்ளலாம்... ஈழத் தமிழர்கள் மீது அக்கறையும் கரிசனமும் கொண்ட தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளையும் மீறி இலங்கை அரசு தங்கள் விருப்பங்களை இந்தியாவில் சாதிக்க முடிவதற்கு, பாராளுமன்றத்துக்கு வெளியே அதிகாரம் இருக்கும் இந்தப் போக்கும், அதிகாரிகள் மட்டத்தில் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கும்தான் காரணம்.
இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, வங்காள தேசம், நேபாளம் ஆகிய நாடுகளை இந்தியாவுக்கு எதிராக மாற்றவேண்டும் என்னும் சீனாவின் விருப்பம் பாராளுமன்றத்துக்கு வெளியே செயல்படும் இந்த அதிகாரம் மூலமாக நிறைவேறத் தொடங்கியுள்ளது கண்கூடு. இது என் கண்டுபிடிப்பு மட்டுமல்ல... பாராளுமன்றத்துக்கு வெளியேயுள்ள அதிகார மையங்களுக்கு விசுவாசமாக செயல்பட்டு தங்களைப் பலப்படுத்திக் கொள்கிற அதிகாரிகள்தான் இந்தியாவின் இன்றைய பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணம் என்ற எண்ணம் நான் சந்தித்த பல ராஜதந்திரிகளுக்கும் இருக்கிறது. நான் வெளிநாடுகளில் சந்தித்த சில இந்தியர்களும் இந்த ஆபத்தை உணர்ந்திருக்கிறார்கள்.
உண்மையில் மும்பைத் தாக்குதலுக்காக நீங்கள் ஒருவரைக் குற்றம்சாட்ட வேண்டுமென்றால், அவர் பிரதமரைத் தன் கையில் வைத்திருப்பவராகத்தான் இருக்க முடியும். ஆனால், இங்கே என்ன நடக்கிறது? அவரை விட்டுவிட்டு, மத்திய உள்துறை அமைச்சர், மகாராஷ்டிர முதல்வர், மகாராஷ்டிர துணை முதல்வர் ஆகியோரை ராஜினாமா செய்யச்சொல்லி இருக்கிறார்கள். இத்தனைக்கும், உளவுத்துறை தகவல்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்திய பாதுகாப்பு ஆலோசகரின் ராஜினாமா நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இது இன்னும் கேலிக்கூத்தானது. பிரதமருக்கே அதிகாரம் இல்லாத ஒரு கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சராலும் மாநில முதல்வராலும் என்னதான் செய்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?
மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ஒரு இரவில் படகில் வந்து இறங்கியவர்கள்தான் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியாவுக்குள் ஏற்கெனவே ஊடுருவி செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் மூலம்தான் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவில் இருந்து செயல்படுகிறவர்கள் உதவி இல்லாமல் இவ்வளவு பெரிய தாக்குதலைத் திட்டமிடுவது சாத்தியமில்லை. இந்தியாவுக்குள் உள்ள தங்கள் தளங்கள் மேல் உளவுத்துறையின் கவனம் திரும்பாமல் இருக்கவும் உளவுத்துறையை பிழையாக வழிநடத்தவும் படகு நாடகத்தை அவர்கள் பயன்படுத்தி இருக்கலாம். உண்மையில் எத்தனை பேர் வந்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து மாறான தகவல்களை அதிகாரிகள் சொல்லிவந்ததை நீங்கள் கவனிக்க வேண்டும். மும்பைத் தாக்குதலை நடத்தியவர்களில் ஒரு பகுதியினர் தப்பிச் சென்றிருக்கிறார்கள் என்றுதான் நான் கணிக்கிறேன்.
மீண்டும் பிரதமருக்கும் பாராளுமன்றத்துக்கும் அதிகாரம் திரும்பும் போதுதான் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா வெற்றிபெற முடியும் என்பது என் நம்பிக்கை. அடுத்தகட்டமாக, தென்னாசியாவில் உள்ள தன் உண்மையான நண்பர்களை இந்தியா அடையாளம் காணவேண்டும்.
தீராநதி: இந்த வருடம் மாவீரர் தின உரையில், "இந்தியாவுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப விரும்புகிறோம்" என விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சொல்லியுள்ளார். அதை இதனுடன் பொருத்திப் பார்க்க இயலுமா?
வ.ஐ.ச. ஜெயபாலன்: நான் தொடக்க காலத்தில் இருந்தே, ஈழ விடுதலைப் போராட்டத்தில் என்னுடைய நிலைப்பாடாக வலியுறுத்தி வரும் விஷயம் இதுதான். இப்பொழுது புலிகள் இயக்கத்தினரும் இந்த முடிவுக்கு வந்துள்ளது மிகவும் வரவேற்க வேண்டிய மாற்றம். தென்னாசியாவில் இந்தியா மிகப் பெரிய நாடு என்பதுடன், நாங்களும் இந்தியர்களும் ஒரே கலாசாரத்தவர்கள். எங்களுடன் தொப்புள்கொடி உறவுடைய தமிழர்கள் இந்தியாவின் மிக முக்கியமான ஒரு அங்கத்தினராக இருக்கிறார்கள். தனித்தனியாக நின்று எங்களை நாங்கள் காப்பாற்றிக்கொள்ள முடியாது. ஒரு தொகுதியாக இணைந்து நின்றுதான் நாங்கள் எங்கள் வளங்களையும் வாய்ப்புகளையும் கலாசார எதிர்காலத்தையும் காப்பாற்ற முடியும். ஒருவருக்கொருவர் முரண்பட்டு நின்றால் நாம் எல்லோருமே அழிந்துவிடுவோம் என்பதுதான் என் நம்பிக்கை. எனவேதான், இரண்டு தரப்புமே தங்கள் பங்குத் தவறுகளையும் எதிர் தரப்பு தவறுகளையும் மறந்து மீண்டும் ஒன்றுபட வேண்டும் என்பதை நான் வலியுறுத்தி வருகிறேன். இந்தியா தன் உண்மையான எதிரிகளை விட்டுவிட்டு இலங்கைத் தமிழர்களை தங்கள் எதிரிகளாக எண்ணியிருக்கிறது. விரைவில் அது மாறும் என நம்புகிறேன்.
தீராநதி: இந்தியா - விடுதலைப்புலிகள் நட்புறவு மேம்படும் பட்சத்தில், ஏற்கெனவே இலங்கையில் காலூன்றி இருக்கும் சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் இலங்கை மேலும் நட்பை பலப்படுத்திக்கொள்ளாதா?
வ.ஐ.ச. ஜெயபாலன்: சீனா மிகவும் கச்சிதமாக செயல்படுகிறது. இந்தியாவைச் சுற்றி எல்லா நாடுகளிலும் சீனா காலூன்றி இருக்கிறது. பர்மாவிலும் பாகிஸ்தானிலும் கடற்படைத் தளமாக பயன்படுத்த வாய்ப்புள்ள துறைமுகங்கள் சீனாவுக்கு உள்ளது. இப்பொழுது இலங்கையிலும் அதுபோன்ற ஒரு துறைமுகத்தைக் கட்டி வருகிறது. இந்துமகாக் கடலிலும் சீனா பலமாகக் காலூன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் தைவான், கொரியா, வியட்நாம் போன்ற சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளிலோ; பசிபிக் சமுத்திரப் பகுதிகளிலோ இந்தியாவுக்கு ஒரு தளமும் இல்லை. இனிமேலும் ஒரு தளத்தைக் கட்டக்கூடிய வாய்ப்பும் இல்லை. இப்பொழுது எண்ணெய் ஆய்வு என்ற பெயரில் சேது சமுத்திரப் பகுதியிலும் சீனா காலூன்ற முயற்சிக்கிறது. இதற்கு இலங்கையும் ஆதரவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இந்தியா பற்றிய பயம் பல்லாண்டுகளாக உள்ளது. எனவேதான் சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் அது உறவைப் பலப்படுத்துகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, இந்தியாவின் முதல் எதிரி பாகிஸ்தான் இல்லை; சீனாதான் என்றே தோன்றுகிறது. இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தானை மட்டும் குற்றம்சாட்டிக் கொண்டிருக்காமல் சீனா பக்கமும் இந்தியா திரும்பவேண்டும். சீனா, தனது வல்லரசுத் திட்டத்தின் ஒரு கருவியாக ஐ.எஸ்.ஐ.யைப் பயன்படுத்துகிறது.
சீனா மட்டுமல்லாமல் அமெரிக்காவும் இஸ்ரேலும்கூட ஐ.எஸ்.ஐ.க்குள் ஊடுருவி இருக்கிறது. ஐ.எஸ்.ஐ.யின் இந்திய விரோத அமைப்பு என்பது ஒரு சர்வதேச அமைப்பு. ஐ.எஸ்.ஐ., பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளின் கைப்பாவையாகச் செயல்பட்டு ஒரு தன்னிச்சையான அமைப்பாக வளர்ந்துள்ளதும் பாகிஸ்தான் அரசையே அவர்கள் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதும்தான் இன்று இந்தியாவுக்கு முன்னுள்ள மிகப்பெரிய சவால். அமெரிக்காவும் இஸ்ரேலும் மும்பைத் தாக்குதலைப் பயன்படுத்தி, முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான போருக்கு இந்தியாவை கூலிப்படையாக மாற்ற முயற்சிக்கிறார்கள் என்பதை கே.சுப்பிரமணியன் போன்ற பல அறிஞர்கள் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கும் இந்தியா பலியாகிவிடக்கூடாது.

நமது பணி!

நமது பணி!
Its Our Decision - Tamil Poltics News Article இன அழிவைத் தடுக்குமாறு தமிழர்கள் பேரணிகள் நடத்த, ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு சொல்கின்றது உலகம். உருப்படியான அரசியல் தீர்வை கொண்டு வந்தால், ஆயுதங்களுக்கான தேவையே இருக்காது என்கின்றனர் விடுதலைப் புலிகள். போரும், இனப்படுகொலையும் தொடர்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கு இந்த முழு உலகமும் முனைப்புப்பெற்று நிற்கின்றது என்பது எம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த விடயம். ஆனால் தமக்கு எவ்வகையிலும் பயமுறுத்தலாக அமையாத ஒரு தேசிய இனத்தின் அரசியல் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு உரிய சகல அருகதைகளையும் பெற்ற ஒரு இயக்கத்தை அழிப்பதற்கு இந்த உலகம் வரிந்து கட்டிக்கொண்டு நிற்பது எதற்காக...?

சுருக்கமாகச் சொல்வதானால் உலகத்தைப் பொறுத்த வரை "இது ஒரு தவறான முன்னுதாரணம்".

"ஹல்க்" என்ற ஆங்கிலப் படத்தின் ஒரு காட்சியில் மிக நல்லவனாக இருந்த போதும், மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட சக்தி பெற்றவனாக வளர்ந்துவிட்ட தனது மகனை அழிக்க உலகம் ஏன் விடாப்பிடியாக முயற்சிக்கின்றது என்பதை தந்தை ஒரே வரியில் சொல்கிறார்: "He is unique; this world couldnt tolerate him" ("அவன் தனித்துவமானவன் இந்த உலகத்தால் அவனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை")

எமது கதையும் இதுதான்.

உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் பெரிதும் அறியப்படாத ஒரு மிகச் சிறிய மக்கள் இனத்திற்குள் இருந்து உருவாகிய ஒரு இயக்கம், உலக விடுதலைப் போராட்டங்கள் எல்லாவற்றுக்குமே ஒரு முன்னுதாரணமாக ஆகி, தனித்துவமாய் எழுந்து நிற்பதை இந்த உலகத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

உலகத்தைப் பொறுத்தவரை புலிகள் இயக்கம் தமக்கு நேரடி அச்சுறுத்தலாக இல்லாத போதிலும், புலிகளின் இந்த வளர்ச்சி தமது நலன்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ஒரு "தவறான முன்னுதாரணம்". எனவே, விடுதலைப் புலிகளை அழித்து விடுவதற்கு முடிவு செய்து விட்டார்கள்.

எமது பங்கிற்கு, வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாங்களும் விடுதலைப் புலிகள் தொடர்பாகப் பேசுவதனை தவிர்க்க முடிவெடுத்து விட்டோம்.
விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு மேற்குலகம் சொன்னதையிட்டோ, ஆயுதங்களைக் கைவிடுமாறு இந்தியா சொன்னதையிட்டோ அவற்றின் மீது எனக்கு அவ்வளவாகக் கோபம் வரவில்லை. மேற்குலகிடமும், இந்தியாவிடமும் வேறு எதனை நாம் எதிர்பார்க்க முடியும்...? கடந்த ஏழு வருடங்களாக படிப்படியாகத் தமது சுயரூபத்தைக் காட்டி எம்மைச் சீரழித்தது அவர்கள் தானே. இந்தியா எங்கள் தலைகள் மீது நிகழ்த்தும் திருவிளையாடல்கள் தொடர்பாக ஏற்கெனவே நான் சற்று எழுதிவிட்டதால், ஆயுதங்களை விடுதலைப் புலிகள் கைவிட வேண்டும் என சிதம்பரம் சொன்னதற்காக ஆச்சரியப்படவோ, அது தொடர்பாக இன்னும் எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்கவோ விரும்பவில்லை.

விடுதலைப் புலிகளை சரணடையுமாறு மேற்குலகம் சொன்னதையிட்டுத் தான் நாம் சற்று யோசிக்க வேண்டும். மேற்குலகம் அவ்வாறு சொன்னதையிட்டு தமிழர்களில் பெரும் பகுதியினருக்கு கோபம். ஆனால், அவ்வாறு கோபப்படுவதற்கு எமக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. நாம் உண்மையில் கோபப்பட வேண்டியது எம் மீதே தான்.

மேற்குலகின் போக்கிற்கு இடமளித்து விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாக வாய் திறந்து பேசுவதனை நாம் தான் இவ்வளவு காலமாகத் தவிர்த்து வந்தோம். தமிழீழத்தின் 80 வீதமான நிலத்தை விடுதலைப் புலிகள் ஆளுகை செய்த காலத்தில் வீதிகளில் இறங்கி, "விடுதலைப் புலிகள் தான் எம் அரசியல் பிரதிநிதிகள்" என்று நாம் முழங்கியிருக்க வேண்டும் "தமிழீழத் தனியரசுக்கான எமது போராட்டத்தை அங்கீகரியுங்கள்" என மேற்குலக அரசுகளை வற்புறுத்தியிருக்க வேண்டும்.

அதனை விடுத்து விட்டு, நாம் என்ன செய்தோம்...? விடுதலைப் புலிகளின் பெரும் இராணுவ வெற்றி ஒன்றிற்காக கடந்த இரண்டு வருடங்களாகக் காத்திருந்தோம். பெரும் போர் வெற்றியைப் படைத்து தமிழீழத்தை எடுத்து தங்கத் தாம்பாளத்தில் வைத்து விடுதலைப் புலிகள் எமக்குத் தருவார்கள் என்று நாம் பார்த்திருந்தோம். விடுதலைப் புலிகளை ஏதோ "பந்தயக் குதிரைகள்" போல கருதி நாம் கொடுத்த பணத்துக்கு எமக்காகப் போராடி விடுதலைப் புலிகள் நாட்டைப் பிடிக்க வேண்டும் என எதிர்பார்த்து, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகப் பேசுவதற்கு மறுத்தோம்.

இன்னொரு பக்கத்தில் இந்தப் பேராசையாலும், எதிர்பார்ப்பாலும் விடுதலைப் புலிகளின் போர் வெற்றி ஒன்று தொடர்பான அதீத நம்பிக்கையில் மயங்கி, வெறும் சில்லறை வேலைகளில் மினக்கெட்டோம். போராட்டத்திற்கு அடிப்படையான அரசியல் விவகாரங்களைப் பேசுவதை வேண்டும் என்றே தவிர்த்து விட்டும், விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளிப்படையாகப் பேசுவதில்லை என்ற முடிவையும் ஒரு "தந்திரோபாயமாக" எடுத்துவிட்டும், வெறும் "மனிதாபிமானப்" பிரச்சினைகளைப் பேசிக்கொண்டும் மேற்குலகில் போராட்டங்களை நடத்தினோம்.

விளைவு 2004 ஆம் ஆண்டில் சோனியா அம்மையார் அதிகாரத்தை எடுத்த பின், போரை நடத்தும் வேலையை இந்தியாவிடம் விட்டுவிட்ட மேற்குலகம், இப்போது தமிழர் சீரழிந்து பேரவலப்படும் போது நல்ல பிள்ளை வேடம் காட்டி தமிழர் மீது அன்பானவர்கள் போல நடித்து "மக்களைக் காப்பதற்காக" புலிகளைச் சரணடையச் சொல்கின்றது. தமிழரைச் சீரழிக்கும் வேலையை மேற்குலகிடம் இருந்து தாம் பொறுப்பெடுத்த இந்தியாவோ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால், தாம் தலையிட்டு "மக்களைக் காப்பதாக" வாக்குறுதிகள் வழங்குகின்றது.

விடுதலைப் புலிகளை ஆதரித்த நாங்களோ 80 வீதமான நிலத்தை ஆளுகை செய்து விடுதலைப் புலிகள் பலமான நிலையில் இருந்தபோது சும்மா இருந்துவிட்டு இப்போது, வெறும் 5 வீதமான நிலத்திற்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்ட பின்பு ஏமாற்றமடைந்து அவர்களைச் சரணடையச் சொன்னதற்காக மேற்குலகத்தின் மீது கோபப்படுவதில் அர்த்தம் எதுவுமில்லை.

எங்களில் இன்னொரு சாராரோ இவ்வளவு காலமும் விடுதலைப் புலிகள் தொடர்பாக புகழ் சொல்லிவிட்டு, இப்போது குறைகள் தேடி புறம் பேசவும் தொடங்கி விட்டார்கள். அது மட்டுமல்லாது அந்த "இன்னொரு சாரார்", விடுதலைப் புலிகளை எப்போதும் விமர்சித்தவர்களுடன் இப்போது சேர்ந்துகொண்டு விடுதலைப் புலிகளின் கதை இனி முடிந்தேவிட்டது என இப்போது நம்பவும், வெளிப்படையாகப் பேசவும் தொடங்கி விட்டார்கள்.

"ஐயோ! சிங்களவன் எம்மை இனப்படுகொலை செய்கின்றான்!" என்று கூவி இந்த உலகத்தின் முற்றத்தில் நாம் கதறி அழுதால் எம்மைக் காக்க எல்லோரும் ஓடோடி வருவார்கள் என்று நம்பவும், வெளிப்படையாகப் பேசவும் தொடங்கி விட்டார்கள். இதுவரை காலமும், "நேரம் வரும்போது" விடுதலைப் புலிகள் தொடர்பாக பேசலாம் என்று குற்றச்சாட்டுக்கள் சொல்லி வந்தவர்கள் இப்போது விடுதலைப் புலிகள் தொடர்பாக பேசாமலேயே தமிழரின் உரிமைகளைப் பெற்றுவிடலாம் என்று நம்பவும், வெளிப்படையாகப் பேசவும் தொடங்கி விட்டார்கள்.

ஐயா பராக் ஒபாமாவின் செல்வாக்கும், ஐக்கிய நாடுகள் சபை வைக்கும் பொது வாக்கெடுப்பும் (Referendum) தமிழருக்கு விடுதலையை வாங்கித் தந்துவிடும் என்று நம்பவும் வெளிப்படையாகப் பேசவும் தொடங்கி விட்டார்கள். ஆனால் எல்லாப் பழியையும் இவ்வாறாக வெளிநாட்டுத் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் மீது மட்டும் போட்டு விடவும் முடியாது.

வெளிநாட்டுத் தமிழ்ச் செயற்பாடுகளை உரிய முறையில் அரசியல் மயப்படுத்தும் தமது தலையாய கடமையில் இருந்து, விடுதலைப் புலிகளின் பரப்புரைச் செயற்பாடுகள் தவறிவிட்டன என்பதையும் இங்கே சொல்லியே ஆக வேண்டும்.
"நீங்கள் பணத்தை கொடுத்தால் போதும் ஊரில் எல்லாம் பார்த்துக்கொள்வார்கள்" என்று புலம் வாழ் தமிழர்களைப் பார்வையாளர்களாக வைத்திருந்தது தான் இந்தச் செயற்பாடுகளின் மைய ஓட்டமாக இருந்து வந்தது.
இந்தவிதமான அணுகுமுறை தான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அரசியல் முன்னெடுப்புக்கள் வெளிநாடுகளில் தேவையற்றவை என்ற எண்ணத்தையும், வெளிநாட்டுத் தமிழர்களின் வெளிப்படையான அரசியல் ஆதரவுகள் இல்லாமலேயே விடுதலைப் புலிகள் போரை வெல்வார்கள் என்ற நம்பிக்கையையும், ஊரில் புலிகள் வெற்றிவாகை சூடி இந்த உலகத்தின் போக்கையே தமிழர்க்குச் சார்பாக மாற்றுவார்கள் என்ற மாயயையும் புலம் வாழ் தமிழ் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உருவாக்கி, அவர்களை வெறுமனே அரசியலுக்கு அப்பாற்பட்ட "மனிதாபிமான" பிரச்சினைகளை மட்டும் பேச வைத்துவிட்டது.

உலகத் தமிழர் செயற்பாடுகளை நேர்த்தியாக ஒருங்கிணைத்து இராஜதந்திர மற்றும் அனைத்துலகப் பரப்புரைச் செயற்பாடுகளில் தெளிவான வழி நடத்தல்களை வழங்கி, இன்றைய "மனிதாபிமான"ப் பிரச்சினைகள் எல்லாம் அரசியலையே அடிப்படையாகக் கொண்டவை என்பதைப் புரிய வைத்து, அரசியலை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் புலம் வாழ் தமிழ் சமூகத்திற்குத் தெளிவுபடுத்தி, அனைத்துலக ரீதியில் எல்லா நாடுகளிலும் ஒரே குரலில் தமிழர்களுக்கு என்ன தேவை என்ற அடிப்படையான அரசியல் கோரிக்கையை, எல்லா வழிகளிலும் தெளிவாகச் சொல்ல வைத்து, தமிழ்த் தேசிய இனத்தின் அனைத்துலகக் குரலுக்கு ஒரு தேர்ந்த தலைமைத்துவத்தைக் கொடுக்கும் தம் பணியில் இருந்து விடுதலைப் புலிகளின் அனைத்துலகச் செயற்பாடுகள் இதுவரை தவறிவிட்டன. குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாதப் பட்டியலில் இடப்பட்ட நாடுகளில் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் பின்னான காலத்தில் ஏற்பட்ட அரசியல் தலைமைத்துவ வெற்றிடங்கள் சரிவர நிரப்பப்படாமல் விடப்பட்டு விட்டன.

விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் தமிழர்களின் அடிப்படையான அரசியல் போராட்டம் பற்றிய தர்க்க ரீதியான விஞ்ஞான பூர்வமான தெளிவு ஊட்டப்படாமல், வெறுமனே "போர் வெற்றி" தொடர்பான அதீத நம்பிக்கைகள் மட்டும் மக்களுக்கு ஊட்டப்பட்டதன் விளைவு தான், துணிந்து எவ்வித தயக்கமும் இன்றி விடுதலைப் புலிகளை சரணடையுமாறு இன்று மேற்குலகம் சொல்வதும், விடுதலைப் புலிகள் இல்லாமலேயே எமக்கு விடுதலை எடுத்து விடலாம் என்று ஒரு பகுதித் தமிழர்கள் நம்ப தொடங்கியிருப்பதும் ஆகும். இப்போது நாங்கள் இரண்டு விடயங்களில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். அந்தத் தெளிவு இல்லை என்றால் நாம் எடுக்கின்ற முயற்சிகள் எல்லாமே வீணாகிவிடும். அந்தத் தெளிவு இருந்துவிட்டாலோ குழப்பம் இல்லாமல் இலக்குகளை நிர்ணயித்துத் தமிழர்கள் முன்னேற முடியும்.

1) இன்று நடக்கின்ற போரை இந்த உலகில் யாருமே தடுத்து நிறுத்தப் போவதில்லை.

2) விடுதலைப் புலிகளின் பீரங்கியில் இருந்து கடைசிக் குண்டு வீசப்பட்ட பின்பு, தமிழர்கள் சொல்வதனை இந்த உலகில் யாருமே கேட்கப் போவதில்லை.

இன்று நடப்பது இது தான் சுருக்கமான, புரிந்து கொள்வதற்கு கடினமற்ற விடயம்:

விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்குலகத்தால் "பயங்கரவாத" இயக்கமாகப் பட்டியல் இடப்பட்டிருக்கின்றது. இந்த பட்டியல்களைச் சாட்டாக வைத்துக்கொண்டு, தான் நடத்தும் இன அழிப்புப் போரை சிறிலங்கா புலிப் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கின்றது. அதேவேளை, வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாம் போரை நிறுத்தி போருக்குள் சிக்குண்டுள்ள வன்னி மக்களைக் காக்குமாறு மேற்குலகத்திடம் வேண்டுகின்றோம். ஆனால், "பயங்கரவாத" இயக்கம் ஒன்றிற்கு எதிரான போரை நிறுத்தும் படி யாருமே சிறிலங்காவுக்குச் சொல்ல முடியாது.

அப்படியானால் போரை நிறுத்தி, வன்னி மக்களைக் காக்க என்ன தான் வழி...?

அதற்கு இருக்கும் ஒரே வழி ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும். புலிகள் சரணடைந்தவுடன் போரும் நிற்கும், வன்னி மக்களும் காப்பாற்றப்படுவார்கள், "நடக்கின்றது!" என்று நாம் கதறும் "இனப்படுகொலை"யும் நடக்காது.

இது தான் இன்றைய நிலை.

ஆனால் தமிழர்களின் அரசியலில் விடுதலைப் புலிகள் பலமிழந்து போன பின்பு எமது எதிர்காலம் என்ன என்பதே எம் முன்னால் இன்று உள்ள ஒரே கேள்வி. விடுதலைப் புலிகளை ஆதரிப்போர், வெறுப்போர், ஏற்றுக்கொண்டோர், நிராகரிப்போர் என யாராக இருந்தாலும் இன்று எமக்குத் தேவையானது விடுதலைப் புலிகள் தொடர்பான ஒரு ஆழமான புரிந்துணர்வு.

கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் எடுத்த முடிவுகள் எல்லாவற்றையும் சரியானவை என்று வாதிடுவது எனது நோக்கமல்ல.
அதே சமயம் தவிர்க்க முடியாத சூழல்களின் நிர்ப்பந்தம் காரணமாகவும், "தவறானவை" எனக் கருதப்படக்கூடிய சில நடவடிக்கைகளை முன்னைய காலங்களில் விடுதலைப் புலிகள் எடுத்திருந்தனர் என்பதையும் மறந்துவிட முடியாது. இப்போது நாம் செய்ய வேண்டியது விருப்பு வெறுப்புக்களை ஒர் ஓரத்தில் வைத்துவிட்டு யதார்த்தத்தைப் பார்க்க முனைவது.

பிரபாகரன் என்ற மனிதர் வாழ்கின்ற அதே சமகாலத்திலேயே நாமும் வாழ்வதால் அவர் தொடர்பான செய்திகளையும், அவரது படங்களையும் அடிக்கடி பார்ப்பதால் அந்த மனிதருக்கு உள்ளே இருக்கின்ற வரலாற்று நாயகனை நாங்கள் பார்க்கத் தவறுகின்றோம். சில விடயங்கள், நாம் வாழ்கின்ற அதே சமகாலத்திலேயே சாதாரண நாளாந்த நிகழ்வுகளாய் கட்டவிழ்ந்து செல்வதால் அந்த நிகழ்வுகளின் ஊடாக விரிந்து செல்கின்ற வரலாற்றின் பரிமாணங்களை நாங்கள் உணரத் தவறுகின்றோம்.

நிகழ்கால நிகழ்வுகளின் உடனடி விளைவுகளை வைத்து அவற்றுக்குத் தீர்ப்பளித்து, எதிர்கால வரலாறே அந்த நிகழ்வுகளின் தாக்கங்களைத் தீர்மானிக்கும் என்பதை உணரத் தவறுகின்றோம். ஆனால் இந்த உலகம் அவற்றைச் சரிவர உணர்ந்து கொண்டதால் தான், இன்று எம்மையும், எமது போராட்டத்தையும் மட்டுமல்லாமல், நாம் படைத்து வரும் தனித்துவமான இந்த வரலாற்றையும் கூட அழித்துவிட முனைப்போடு நிற்கின்றது.
விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழர் சரித்திரம் மட்டுமல்ல, இந்த உலக சரித்திரமே கண்டிராத ஓர் ஆச்சரிய உண்மை. அந்த இயக்கம் எங்கள் இனத்தில் பிறந்தது என்பதும், நாங்களே அதனை வளர்த்து எடுத்தோம் என்பதும் தமிழர்கள் ஒவ்வொருவருக்குமே பெருமை. ஓர் அரசு ஆகுவதற்கு முன்னதாகவே எல்லா முட்டுக்கட்டைகளையும் கடந்து, பீரங்கிகளையும் சிறப்புப் படையணிகளையும் கொண்ட ஒரு மரபுவழித் தரைப்படையையும், பெரும் தாக்குதல் படகுகளுடன் கூடிய ஒரு அரைமரபு வழிக் கடற்படையையும், இவற்றின் மகுடமாய் ஒரு வான் படையையும், மிகத் திறமை வாய்ந்த ஒரு புலனாய்வுத் துறையையும் கொண்டிருப்பதை விடவும், ஓர் அரசுக்கு இருக்க வேண்டிய அனைத்து துறைசார் அலகுகளுடனும் கூடிய கண்ணியமும், ஒழுக்கமும் நேர்மையும் மிக்க ஒரு நடைமுறை அரசை உருவாக்கி, பல உலக நாடுகளை விடவும் நேர்த்தியான முறையில் அதனை ஆளுகை செய்வதை விடவும், பல்லாயிரம் ஆண்டு காலப் பாரம்பரியம் கொண்ட ஒரு பெரும் இனத்தினது மனக் குகைக்கு உள்ளேயே ஒரு போராட்டத்தை நிகழ்த்தி "எம்மால் முடியும்!" என்ற நம்பிக்கையை ஊட்டி, துணிவோடு நிமிர வைத்து ஒரு முழு இனத்தினது சிந்தனைப் போக்கையும், வாழ்வு முறையையும் மாற்றியமைத்தது தான் விடுதலைப் புலிகள் படைத்த உண்மையான வரலாறு.

போர் முனையில் ஏற்படும் வெற்றிக்கும் தோல்விக்கும் அப்பால் முன்னேற்றத்திற்கும், பின்னடைவுக்கும் அப்பால் அவற்றுக்குப் பின்னால் படைக்கப்படுகின்ற இந்த மாபெரும் வரலாற்றை நாங்கள் உணர வேண்டும். அந்த வரலாற்றின் படைப்பாளிகளாக அந்த வரலற்றின் அங்கமாக தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவருமே அதனோடு இணைந்திருப்பதை நாங்கள் உணர வேண்டும்.
நாமே படைத்த இந்த வரலாறு சிதைந்து போக நாமே இடமளித்து விடக்கூடாது.

25 வருடங்களுக்கு முன்னதாக தமிழர்கள் கற்பனை கூடச் செய்து பார்த்திருக்காத இனி நாங்கள் திரும்பிப் போக முடியாத ஓர் அரசியல் உச்ச நிலைக்கு தமிழினத்தை அழைத்து வந்து விட்டார் தலைவர் பிரபாகரன்.

எமது தேசத்தின் 24 ஆயிரம் வரையான போர் வீரர்களின் உடல்களையும், 100 ஆயிரம் வரையான குடிமக்களின் உடல்களையும் கடந்து இந்த நீண்ட பயணத்தில் அவருக்குத் துணையாக, அவருக்குப் பலமாக நாம் எல்லோரும் அவரோடு சேர்ந்தே நடந்து வந்தோம். சோர்வுகள், தோல்விகள், துரோகங்கள், முரண்பாடுகள், மனக்கசப்புக்கள் எல்லாவற்றையும் நாங்களும் அவரோடு சேர்ந்தே கடந்து வந்தோம்.

தமிழினம் இனி அவருக்கு முன்னரிலும் விட வித்தியாசமான ஒரு பரிமாணத்தில் துணையிருக்க வேண்டும். முன்னரிலும் பலமான, உறுதியான ஒரு வழிமுறையில் துணை இருக்க வேண்டும். இந்தப் புதிய பரிமாணம் அரசியல் பரிமாணம். எமது போராட்டத்திற்கும், போராட்டத்தின் இலக்கிற்கும் ஓர் அனைத்துலக அங்கீகாரத்தைத் தேடும் பரிமாணம். அது தான் இன்று எமது அவசர, அவசியத் தேவை!
கடந்த 61 ஆண்டு கால தமிழர்களின் சரித்திரத்தைப் படித்து, அவதானித்து, அதற்குள் வாழ்ந்து பார்த்த பின் ஒரு விடயத்தை நாம் எந்தச் சலசலப்பும் இல்லாமல் மிகத் தெளிவாக ஏற்றுக்கொள்ள முடியும். பிரபாகரன் என்ற தனிமனிதரைச் சுற்றித்தான் அவரைப் பற்றிப் பிடித்த வண்ணம் தான் தமிழர்களின் கடந்த கால வரலாறும், எதிர்கால வாழ்வும் இருக்கின்றது. இது ஒர் உணர்ச்சிமயமான முழக்கம் அல்ல, ஒரு விஞ்ஞான ரீதியான நிரூபணம்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தான் தமிழர்களின் ஒரே அரசியல் சக்தி: விடுதலைப் புலிகளைத் தவிர்த்துவிட்டு தமிழர்களது அரசியல் எதிர்காலம் தொடர்பாகக் கற்பனை செய்வது கூட அறிவிலித்தனம்.

விடுதலைப் புலிகள் தொடர்பாகப் பேசுவதனை தவிர்த்துக்கொண்டு தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கலாம் என நம்புவது நகைப்புக்கு இடமானது. விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல.
நாங்கள் இந்த உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கின்ற ஒரு சாதாரண சிறிய மக்கள் குழு அல்ல. நாங்கள் இந்த உலகின் மிகப் பழமையான உயர் பண்புகளை உடைய சுயமரியாதை மிக்க ஒன்பது கோடி உயிர்களைக் கொண்ட ஒரு மிகப் பெரிய தேசிய மக்கள் இனம். அது நாங்கள் பெருமைப்பட வேண்டிய விடயம். விடுதலைப் புலிகள் இயக்கம் தான் எமது தமிழ் தேசிய இனத்தினது பெருமைகளின் முகமாக இந்த உலகில் இன்று விளங்குகின்றது.
புலிகள் இயக்கத்தைப் "பயங்கரவாதிகள்" என்று இந்த உலகம் சொல்லுவது முழுத் தமிழ்த் தேசிய இனத்தையுமே "பயங்கரவாதிகள்" என்று சொல்லிச் சிறுமைப்படுத்துவது போன்றதாகும். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்த உலகத்திற்கு நாம் தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்: எமது சுதந்திரத்திற்காகவும், தேசத்திற்காகவும், சுயமரியாதைக்காகவும் போராடுகின்ற ஒரு மக்கள் இனம் நாங்கள். விடுதலைப் புலிகள் எமது இனத்தின் சுதந்திரப் போராளிகளே என்பதை நாங்கள் வெளிப்படையாக இந்த உலகத்திற்குச் சொல்லிவிட வேண்டும்.

"பயங்கரவாத"ப் பட்டியல்களில் விடுதலைப் புலிகளைச் சேர்த்துவிட்டு, "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற போர்வையில் அவர்கள் மீது நடத்தப்பட்டும் போரை, எம் மீதே நடத்தப்படும் போராகவே தமிழர்கள் கருதுகின்றோம் என்பதை நாங்கள் ஆணித்தரமாக இந்த உலகத்திற்குச் சொல்லிவிட வேண்டும்.

இரண்டாம் உலகப் போரில் ஒவ்வொரு நாடுகளாக ஆக்கிரமித்து "நாசி"ப் படைகள் நடத்திய நிலம் விழுங்கும் போருக்கு நிகரானதாகவே, தமிழர் தாயகம் மீது இன்று நடத்தப்படும் நில ஆக்கிரமிப்புப் போரை நாங்கள் கருதுகின்றோம் என்பதை நாங்கள் குழப்பமில்லாமல் இந்த உலகத்திற்குச் சொல்லிவிட வேண்டும்.

இன்று

விடுதலைப் புலிகளின் சின்னத்தைப் பொறித்த கொடி தான் தமிழர்களது கொடி. தமிழர்களுக்கான உலக அடையாளமாக, தமிழர்களின் அரசியல் அபிலாசைகளின் குறியீடாக, தமிழர்களின் இன்பங்களினதும் துன்பங்களினதும் வெளிப்பாடாக, உலகத் தமிழினம் முழுவதையும் ஒன்றிணைக்கும் ஒற்றுமையாக்கும் ஒரு புனிதப் பொருளாக ஒரு தாயிற்குச் சமமாக, அந்தக் கொடி தான் விளங்குகின்றது. அந்தக் கொடி தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற ஒரு இயக்கத்தின் கொடி என்ற குறுகிய வரைமுறையைக் கடந்து எங்கள் மனங்களில் உண்மையாய் வாழும் "தமிழீழம்" என்ற தேசத்தின் கொடியாக எமது இனத்தின் ஆன்ம தாகத்தினை இந்த உலகத்திற்கு எடுத்துச் சொல்லும் ஒரு குறியீடாக தமிழர்களின் கம்பீரமாக இன்று இந்த உலகில் விளங்குகின்றது.

இன்று

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான் "தமிழ்த் தேசியம்"

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான் "தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமை."

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான் "தமிழர் தனியரசு"

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான் "தமிழர்களது அரசாங்கம்"
தமிழீழ விடுதலைப் புலிகள் தான் இவை எல்லாவற்றினதும் காவலர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத தமிழர்களின் அரசியலில் இவை எதுவுமே இருக்கப் போவதில்லை: அதுதான் யதார்த்தம்.
எமது உடனடிப் பணி

போகிற போக்கில் 2008 ஆம் ஆண்டு முடிவதற்கு முன்னதாகவே விடுதலைப் புலிகளின் கதையை முடித்து விடுவோம் என சிறிலங்கா இந்த உலகத்திற்கு நம்பிக்கைகளைக் கொடுத்தது. தமிழினப் படுகொலை மெதுவாக நடக்கின்றது என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் சிறிலங்கா கொடுத்த நம்பிக்கையை நம்பி விடுதலைப் புலிகளின் கதையை முடிக்க சிறிலங்காவுக்கு காலத்தைக் கொடுத்தது உலகு. அதாவது "இனப்படுகொலை" என்ற விவகாரம் பூதாகாரமாக எழுந்து வெளியே வருவதற்கு முன்னதாக விடுதலைப் புலிகளை சிறிலங்கா அழித்துவிடும் என இந்த உலகம் உண்மையாகவே நம்பியது.
விடுதலைப் புலிகள் அழிந்து போவதற்கும், "இனப் படுகொலை" பூதம் வெளியே வருவதற்கும் இடையில் இருக்கும் சிறிய இடைவெளியில் புகுந்து விளையாடி தமிழர்களைத் தாங்கள் காப்பாற்றி விட்டது போல நடிப்பதற்காக இந்த உலகம், தமிழர்கள் கொல்லப்படுவது தெரிந்திருந்தும் வஞ்சகமாகக் காத்திருந்தது. ஆனால், எல்லோருடைய ஆசைகளையும் முறியடித்து விடுதலைப் புலிகள் போரில் நின்று பிடித்துப் போராட உலகத் தமிழனம் ஒன்றாகத் திரண்டு "இனப்படுகொலை" பூதத்தை வெளியே கொண்டு வந்துவிட்டது. இந்த உலகத்திற்கு தான் கொடுத்த நம்பிக்கையையும், இந்த உலகத்தின் எதிர்பார்ப்புக்களையும் சிறிலங்காவால் காப்பாற்ற முடியவில்லை.

விடுதலைப் புலிகளின் கதை முடிவதற்கு முன்னதாகவே "இனப்படுகொலை" விவகாரம் வெளியில் வந்துவிட்டதானது இந்த உலகம் எதிர்பார்த்திராத ஒரு திருப்பம். இப்போது பெரும் தமிழினப் படுகொலை ஒரு புறத்திலும், பெரும் விடுதலைப் போர் மறுபுறத்திலுமாக, இரண்டும் ஒரு சேர நடக்கின்றன. இந்த உலகத்தின் கவனத்தையும் நாங்கள் தேவையான அளவுக்கு ஈர்த்தாகி விட்டது: இப்போது ஏதாவது செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்த சூழலுக்குள் உலக நாடுகள் தள்ளப்பட்டுவிட்டன.

தமிழர்களின் முன்னால் இப்போது உள்ள ஒரே பணி

"இனப்படுகொலை" விவகாரத்தை மட்டும் சொல்லி அதனைத் தடுத்து நிறுத்துமாறு மட்டும் கோரி அழுதுகொண்டே இருக்காமல்,
"இனப்படுகொலை" விவகாரமும் வெளியே வந்து, விடுதலைப் போரும் உச்சம் பெற்று காலம் எமக்கு அமைவாகக் கனிந்திருக்கும் சூழலைப் பயன்படுத்தி, அடிப்படையான அரசியல் கேரிக்கைகளை முன்வைத்துப் போராடி எமது தேசத்தையும் அந்த மக்களையும் ஒரேயடியாக மீட்க வேண்டியது தான்.

நாம் இப்போது மிகத்தெளிவான குரலில் சுத்தி மழுப்பாமல் பேசி, இரண்டு விடயங்களை இந்த உலகத்தை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் அந்த இரண்டு விடயங்களுக்குமான அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.

முதலாவது

தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழர்களின் ஒரே பிரதிநிதிகள்: தமிழர் தேசியப் போராட்டத்திற்கு முடிவு காணும் எந்தச் சமரச முயற்சியிலும், தமிழர்களின் சார்பாக விடுதலைப் புலிகளே பங்கேற்பர் தமிழர்களின் சார்பில் விடுதலைப் புலிகளுடனேயே முன்னெடுக்கப்பட வேண்டும்.
இரண்டாவது

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான, முழுச் சுயாட்சி அதிகாரம் கொண்ட மாற்றப்பட முடியாத அரசியலமைப்பிற்குள் (Constitution) உள்ளடக்கப்பட்ட ஒரு நிரந்தரத் தீர்வு: அந்தத் தீர்வானது ஆகக்குறைந்தது நிலம், இயற்கை வளம், நிதி, நீதிஒழுங்கு, பொருளாதார மேம்பாடு, வெளிநாட்டு உதவிகள், வர்த்தக மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள் ஆகியவற்றில் முழுமையான அதிகாரங்களைத் தமிழர்களுக்கு வழங்குவதாக மட்டும் அல்லாமல், தமிழர்கள் தமது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தமக்கு என ஒரு ஆயுதப் படையை வைத்திருக்கும் அதிகாரத்தையும் அவர்களுக்கு வழங்குவதாக இருக்க வேண்டும். இந்த இரண்டு விடயங்களுக்குமான உலக அங்கீகாரத்தைப் பெறுவதை நோக்கி தமிழர் செயற்பாடுகள் எல்லா வழிகளிலும் எல்லா முறைகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இது தான் எம் முன்னால் உள்ள அவசரமான அவசியமான பணி.

அரசியல் தலைவர்களுடனான சந்திப்புக்கள், கொள்கை வகுப்பாளர்களுடனான கலந்துரையாடல்கள், ஆய்வுக் கட்டுரைகள், நிலைப்பாட்டு அறிக்கைகள், பல்கலைக்கழக கருத்தரங்குகள், ஊடகப் பேட்டிகள், ஆர்ப்பாட்டப் பேரணிகள் என எல்லா வழிகளிலும் தமிழ் அல்லாத மற்றைய எல்லா மொழிகளிலும் இந்த இரண்டு விடயங்களுக்குமான உலக அங்கீகாரம் பெறும் செயற்பாடுகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் செயற்பாட்டாளர்கள், தமிழர் அமைப்புக்கள், குறிப்பாக உலக மொழிகளைப் பேசும் வல்லமை பெற்று, உலக மக்களின் வாழ்வு முறைகளில் பரிச்சயமும் கொண்ட தமிழ் இளம் சமூகத்தினர் எமக்கான இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முயற்சிகளை உடன் தொடங்க வேண்டும்.

முடிப்பதற்கு முன்னதாக ஒன்றை வலியுறுத்திச் சொல்லி விடுகின்றேன்: "இனப்படுகொலை" விடயத்தை இப்போது பார்த்துக் கொள்ளலாம், அரசியல் விடயங்களை "நாளை" முன்னெடுக்கலாம் என்று தயவு செய்து ஒத்திப் போடாதீர்கள். ஏனென்றால் "நாளை" என்பது எமக்கு வராமலேயே போய் விடலாம்: எங்கள் கையில் நேரம் என்பது இப்போது இல்லவே இல்லை. எப்போதாவது ஏதாவது செய்வதற்கு நாம் இதுவரை காத்திருந்தோம் எனில், நாம் செயற்படுவதற்கான அந்த சரியான நேரம் இதுவே தான்!

கருப்பு வெள்ளிக்கிழமை

கருப்பு வெள்ளிக்கிழமை
Black Friday - Tamil Poltics News Article அவற்றுள் "நல்ல சினிமா" என்பது அவற்றை மேம்பட்ட உண்மையுடனும் யதார்த்தத்துடனும் வழங்கினவை மாத்திரமே. அவை பல்வேறுபட்ட போக்குகளை திரைப்பரப்புள் கொண்டு வந்திருந்தாலும், அனைத்தும் கதாபாத்திரப் பார்வைச்சார்புடனேயே அணுகப்பட்டவையாகும். ஒருவிதத்தில் அந்நிலை ஏற்கத்தக்கதுதானெனினும், நம்மைக் கடந்துவிட்ட அல்லது நாம் கடந்துகொண்டிருக்கிற அரசியல் வரலாற்றுத் தடங்களைப் பற்றிய சித்திரிப்புக்களை அவை நேரடித்தன்மையுடன் சுட்ட உதவியதில்லை. உதாரணத்திற்கு, தமிழில் வெளியான "ஹே ராம்" படத்தை எடுத்துக் கொண்டால், மையக் கதாபாத்திரமான சாகேத் ராமினது பார்வைச் சார்பு மதிப்பீட்டின்படியே காந்திய நிலைப்பாடுகளை அப்படம் கணக்கிட்டுப் பார்த்தது. தனிமனித பாதிப்பின் நீண்டதூரப் பழிவாங்கலாக மாத்திரமே அப்படம் தனித்துவிடுகிறது. "பம்பாய்", "இந்தியன்" ஆகிய திரைப்படங்களையும் இவ்வகையில் இணைக்கலாம். இதைப்போலவே தமிழில் வந்த பல படங்கள் மையக் கதாபாத்திரங்களின் மனமதிப்பீட்டிற்கு ஏற்பவே தாம் கடக்கும் வரலாற்றுத் தடங்களைப் பதிவு செய்பவையாக இருப்பதுவே நடைமுறை.
எனவே, அரசியல் சினிமாவை நேரடித் தேவையுடன் திரைப்பரப்பிற்கு எடுத்துவரும் திரைப்படங்கள் ஏறக்குறைய இல்லை என்கிற நிலைதான் நம்மைச் சூழ்ந்திருக்கிறது. எனினும், படைப்பொளி மேலோங்கிக் கொண்டிருக்கும் இந்தி சினிமாவில் அக்குறைபாட்டை தீர்க்கவென "கருப்பு வெள்ளிக்கிழமை" (Black Friday) என்கிற இந்தித் திரைப்படம் 2007 பிப்ரவரி மாதத்தில் வெளியானது. வழக்கமான ஒரு இந்தி நடுநிலைத் திரைப்படமாக இருக்கும் என்று நம்பிச் செல்பவர்கள் ஆச்சரியங்களுடனும் அதிர்வுகளுடனும் அரங்கத்திலிருந்து வெளியேறுவது உறுதி. "லகான்" திரைப்படத்திற்குப் பின்பு நீண்ட இடைவெளியில் உலகத் திரைப் பார்வையாளர் சமூகமே தலைநிமிர்ந்து பார்க்கும்படியான வாய்ப்பை "கருப்பு வெள்ளிக்கிழமை" அளித்திருப்பது உலகளாவிய நல்ல சினிமாவை இந்திய/தமிழ் மட்டத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாம் முதலில் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டிய விஷயம். ஏனெனில் இந்திய சினிமாவைப் பொறுத்தவரை ஆவணப் புனைவுப் படங்கள் (DocuFiction) ஆவணத்தன்மையையும் பெறாமல் புனைவுத்தன்மையையும் பெறாமல் இரண்டும் கெட்டானாகத் தேங்கிப் போய்விடுபவையாக உள்ளன. பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப் பற்றிய தமிழ்த் திரைப்படம் இதற்கு ஓர் உதாரணம். இப்படத்தின் முக்கியத்துவம் கருதி படத்தின் தேவையை நாம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்திலும், சினிமா என்கிற காட்சியூடக மொழியின் வெளிப்பாட்டினை (Expression of Film Language) இப்படம் பெற்றிருக்கவில்லை என்கிற குறைபாட்டை நாம் சமாதானப்படுத்திக் கொள்ளமுடியாது. நல்லதொரு வரலாற்று நாடகத்தன்மையையே அப்படம் கொண்டிருந்தது. இயக்குநர் திரைமொழியைவிட கதாபாத்திரத்தின் வரலாற்றைப் பதிவுபடுத்தும் மட்டற்ற ஆர்வத்தின் வெளிப்படுதலாகவோ அல்லது திரைமொழி குறித்த அவரது ஆர்வமற்ற நிலைப்பாட்டின் வெளிப்படுதலாகவோ இந்தப் பிழைகளை நாம் கணிக்கலாம். மணிரத்னம் போன்றவர்கள் இவ்விரு தளங்களையும் சமனாகக் கையாள முயன்றிருப்பினும் (இருவர், பம்பாய், மற்றும் குரு), கதாபாத்திரங்களின்மீது திணிக்கப்படும் காதல் ஈடுபாடு காரணமாக படத்தின் மூலச்செய்தி கைதவறிப் போய் விடுகிறது. கவர்ச்சிபூர்வமான அணுகல்தான் (Romanticised Approach) இத்தகைய படங்களின் வீர்யத்தை மட்டுப்படுத்திவிடும் ஒரு கூறாக அமைந்துவிடுகிறது. இந்தப் பலகீனங்களின் பின்னணியில்தான், "கருப்பு வெள்ளிக்கிழமை" திரைப்படத்தின் உச்சபட்ச கலை, அரசியல் வெளிப்பாடுகளின் முக்கியத்துவத்தை நாம் மதிப்பீடு செய்ய நேர்கிறது.
1993ஆம் ஆண்டு நடந்தேறிய பம்பாய் குண்டுவெடிப்புச் சம்பவங்களை முன்வைத்து ஹூசேன் சேய்தி எழுதின புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. 1993, மார்ச் 9ஆம் தேதி பம்பாய் நகரைச் சுற்றி 12 முக்கிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. எதிர்பாராத இந்தத் திடீர் தாக்குதலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 160ரூக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அந்தக் கொடிய சம்பவம் நடந்தது ஒரு வெள்ளிக்கிழமையன்று. மனித கூக்குரல்களும் ரத்த வீறிடல்களும் புகையின் கரிய அடர்த்தியும் படிந்த அந்த வெள்ளிக்கிழமைத் துயரின் சம்பவ விவரிப்பையும் அதன் சதித்திட்டங்களையும் பின்பு நேரும் கைதுவிசாரணைகளையும் தொகுத்து வழங்குகிறது "கருப்பு வெள்ளிக்கிழமை" திரைப்படம்.
மார்ச் 9, 1993இல் பம்பாயிலுள்ள நவ் படா காவல்நிலையத்தில், காட்சிகள் தோன்றாத இருட்பின்னணியில் சிறைக்கதவு பலமாக ஓங்கியறையப்படும் சத்தத்தோடு துவங்குகிறது. அந்தச் சத்தமே படத்தின் தீவிரத்தன்மையை நோக்கிய நமது கவனத்தைக் கூர்மைப்படுத்திவிடுகிறது. தொடர்ந்து பூட்ஸ் காலோசை. காட்சி பரவ, சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட குல் மொஹமத் எனும் இளைஞனொருவன் காவல்துறையினரால் நீரில் மூழ்கடிக்கப்பட்டு வதைக்குள்ளாகிறான். நடைபெற்ற கலவரமொன்றில் அகப்பட்ட அவன், தனது சகோதரர்களுடன் கைதுசெய்யப்பட்டவன். ஆனால் உண்மையில் அவனது சகோதரர்களுக்கு அந்தக் கலவரத்தில் எந்தப் பங்கெடுப்பும் இல்லை. அவர்களை விடுவித்துவிடுமாறு அழுது புலம்புகிறான். பின்பு (சகோதர்களை விடுவிக்கச்செய்யும் விழைவின்பொருட்டாலும்) பயம் கலந்த அழுகையுனூடாக பம்பாயில் இன்னும் 3 நாட்களில் ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் வெடிக்கப்போகும் சதித்திட்டம் பற்றிக் காவல்துறையினரிடம் கூறுகிறான். ஸ்டாக் எக்சேஞ்ச், மந்த்ராலயா மற்றும் சேனா பவன் ஆகிய இடங்கள் வெடிவைத்துத் தகர்க்க குறிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறான். ஆனால் காவல்துறையினர் அதை நம்புவதாக இல்லை. "எளிதாக தரைமட்டமாக்க அவ்விடங்களெல்லாம் என்ன இனிப்புத் துண்டங்களா?" என்று ஏளனத்துடன் பதிலளிக்கின்றனர். ஆனால் உண்மையில் வெடிப்பு நிகழப்போகிறது என்பதை அடுத்த காட்சி நமக்கு உறுதிப்படுத்தத் துவங்குகிறது.
சதி ஏற்பாட்டாளரான டைகர் மேமனது குழுவுரை "மார்ச் 12ஆம் தேதி திட்டம் நிகழ்த்தப்படவேண்டும்" என்று நிகழ்கிறது. அடுத்து ஆங்காங்கு குண்டுகள் பொருத்தப்படும் செயல் விரிவாக காட்டப்படுகிறது. பம்பாயின் கடற்கரையோர புறாக்கள் உற்சாகமாகப் பறந்துகொண்டிருக்கின்ற வெள்ளிக்கிழமை. மதியம் 1.25 மணித்துளியில் ஸ்டாக் எக்சேஞ்ச் கட்டடம் காட்டப்படுகிறது. மக்கள் அபாயமறியாது நெரிசலாக தத்தமது பணிகளைத் தாங்கி நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். கட்டடத்தில் மணியோசை எழும்ப, திரைப்படத்தின் நகர்வு மெதுத்தன்மையை (Slow Motion) அடைகிறது. காலம் உறையத் துவங்குவதான மெதுத்தன்மை. மனித இரைச்சல் கரைந்து கட்டடத்தின் அடிப்பகுதிக்குள் வைக்கப்பட்டிருக்கும் குண்டின் ஒலி மேலெழுகிறது. ஏறக்குறைய இதயத்தின் ஓசை நிதானத்திலிருந்து மெதுவாக பதற்றமடைந்து செல்வதைப் பிரதிபடுத்தும் சத்தம் அது. ஓசை வேகப்பட, கட்டடத்தின் அடிமட்டம் வெடித்துச் சிதறுகிறது. செவியின் தாங்கும்ஓசை அறுபட்டு அருகிருப்பவர்கள் மயக்கத்திலாழும்போது எழும்பும் பீதியடைந்த மௌன இரைச்சல் திரைசூழ்கிறது. உயிரோடிருப்பவர்கள் நடந்ததை இன்னும் உணராவண்ணம் திக்பிரமை பிடித்து சுற்றிப்பார்த்துக் கொள்கிறார்கள். ரத்தம் மழைநீரெனச் சூழ, உடல்கள் சிதறி அசைவற்றுக் கிடக்கின்றன. குண்டு வெடிப்புச் சம்பவத்தில் நாம் நின்றிருந்து தப்பித்துவிட்டால் நமது நினைவு சிதறின பிரமையில் எவ்விதம் அச்சூழலைக் காண்போமோ, அச்சூழல் அப்படியே திரைப்பரப்பில் ஞாபகப்படுத்தப்படுகிறது. அக்காட்சியின் தீவிரப் படமாக்கம் திரைப்படம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உண்மையை அநேகமாக அழித்துவிட்டு குண்டுவெடிப்பு பிறப்பித்துவிடும் கோரத்தை நாம் கண்ணெதிரே கண்டுணர்வதுபோன்ற பிரதிபலிப்பைத் தந்துவிடுகிறது. ஐரோப்பிய சினிமாவில் மாத்திரமே யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கும் இத்தகைய தொழில் நுட்பக் கூறுகளை நாம் காணமுடியும். இப்படத்திலும் இத்தகைய கூறுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்திய சினிமாவிற்குப் புதியதுதான்.
2.45 மணித்துளிக்கு வோர்லி பாஸ்போர்ட் அலுவலகத்தினருகே நிறுத்தத்தில் வந்து நிற்கும் பேருந்து மீண்டும் புறப்படும்போது குண்டுவெடித்துத் தகர்க்கப்படுகிறது. தொடர்ந்து நிஜமாக படம்பிடிக்கப்பட்ட வீடியோக் காட்சிகள் தொலைக்காட்சி செய்திவடிவில் காட்டப்படுகின்றன. குறுகிய நிமிட இடைவெளிகளில் செஞ்சுரி பஜாரில் உள்ள பேருந்துநிறுத்துமிடம், ஏர் இந்தியா கட்டடம், தாதரிலுள்ள சிவசேனா பவனிற்கு அருகிலிருக்கும் லக்கி பெட்ரோல் பம்ப், ஜூகு சென்டர் ஹோட்டல் மூன்றாம் மாடியிலுள்ள அறை, சவேரி பஜாரின் வீதி, மக்கிமேர் காலனி, பிளாசா திரையரங்கில் வாகனம் நிறுத்துமிடம், பந்த்ராவிலுள்ள ஸ“ ராக் ஹோட்டலின் 18வது மாடி, சாந்தா குருஸ் விமான தளத்திற்கருகிலுள்ள மற்றொரு சென்டர் ஹோட்டல் என துல்லியமான திட்டத்தின் அடிப்படையில் தகர்ப்புக்கள் நடத்தப்படுகின்றன. பம்பாய் நகரமே ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துப் போகும்படி புகை குடித்த கருப்பு நாளான அவ்வெள்ளிக்கிழமை வலிகளடர்ந்த பொழுதாக உருவடைகிறது.
5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட படத்தின் முதல் பகுதி முதல் கைதுப் படலம். மகிம் எனும் பகுதியில், அல் ஹுசைனி கட்டட விலாசத்திலுள்ள ரூபினா சுலைமான் மேமன் வீட்டிற்கு காவல்துறையினரோடு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியான ராகேக் மரியா செல்கிறார். அங்கு யாருமிருப்பதில்லை. பக்கத்து வீட்டாரிடம் விசாரிக்கையில் டைகர் பாயின் (டைகர் மேமன்) மூத்த சகோதரன்தான் சுலைமான் எனவும் அவரது துணைவியார்தான் ரூபினா என்பதும் தெரியவருகிறது. ஆனால் குண்டுவெடிப்பிற்கு முதல்நாள் டைகர் பாய் தனது உறவினருடன் துபாய்க்குத் தப்பிச்சென்றுவிட, இந்தக் குண்டுவெடிப்பில் டைகர் பாய் தொடர்புபட்டிருப்பது தெளிவுபடுகிறது. மார்ச் 14ஆம் தேதி டைகர் பாயின் அந்தரங்கக் காரியதரிசியான அஸ்கர் முகாதெம் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுகிறான். இந்தக் காட்சி மிகவும் நுட்பமான வகையில் எடுக்கப்பட்டிருப்பது இக்காட்சியின் தீவிரத்தை தேர்ச்சிப்படுத்துகிறது. ஒளிப்பதிவு அறையில் மேல் மூலையிலிருந்து கவனிப்பதாக அடர் சிவப்பு நிறத்தின் ஒளிப்பின்னணியில் நிகழும் இக்காட்சியில், ஒரு விசாரணைக் கைதியின் பதட்டத்தை மிகத் தேர்ச்சியாக அஸ்கர் கதாபாத்திரம் ஏற்ற நடிகர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
குறிப்பாக காவல் அதிகாரி குடிக்குமாறு கூறி தேநீர் தரும்போது விபரீதமான அபாயம் தன்னைச் சூழ்ந்திருப்பதை உணர்ந்து அஸ்கர் அந்தத் தேநீரைக் குடிக்கத் தயங்குவது நுட்பமான வார்ப்பில் படமாக்கப்பட்டிருக்கிறது. அப்பாவித்தனத்துடன் தோன்றும் அந்தப் பாத்திரம் இந்தச் சதியின் விபரீதத்தை முழுக்க உணராமலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை அவனது வாக்குமுலம் சொல்கிறது. தொடர்ச்சியாக குண்டுவெடிப்பிற்காக ஏவப்படும் இளைஞர்கள் தமக்கு கூறப்பட்ட இடங்களில் குண்டுகளை பொருத்துவது பற்றிய விவரணை மிகவும் துரிதமான காட்சிகளால் சித்திரிக்கப்படுகின்றன. இக்காட்சியில் கோர்க்கப்பட்டிருக்கும் இசை, அந்த அபாயச் செயலின் பதற்றவேகத்தை பிரதிபலிக்கும்விதமாக கையாளப்பட்டிருக்கிறது. உண்மையில் யோசித்தால் படத்தின் ஒவ்வொரு காட்சியின், கதாபாத்திரங்களின் தன்னியல்பான வெளிப்பாடுகள் மட்டுமின்றி, இதர வேலைப்பாடுகளான ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, சத்தப் பின்னணி, நகரச் சூழல் என யாவுமே இணையான தரமேன்மையுடன் அணுகப்பட்டிருப்பது இந்திய சினிமாவில் வியப்பிற்குரிய ஒன்றாகவே தோன்றுகிறது. "கருப்பு வெள்ளிக்கிழமை" போன்ற திரைப்படங்களை எளிதாக இயக்கிவிட முடியாது. இப்படத்தின் ஒவ்வொரு கணநேரக் காட்சிகளையும் கூர்ந்து கவனிக்கும்போது மிகத் தேர்ச்சிபெற்ற பல்துறைக்கலைஞர்கள் பங்கேற்புச் செய்திருப்பது எளிதாகத் தெரியவரும்.
இரண்டாம் பகுதி மார்ச் ஏப்ரல் 1993இல் நடைபெறும் கைது மற்றும் கைதிவிசாரணைப் படலம். காவல்துறைக்குச் செய்தி தருபவன் (Informer) மூலம் பர்வேஸ், சோயிப் கன்சாரி, முஸ்தாக், இம்தியாஸ் கவேத் ஆகியோரின் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. பல அப்பாவி இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். காவல்துறையின் அணுகல்கள் "வன்முறை" என்பதையும் தாண்டி அன்றாட நிகழ்வுகளின் இயல்புத்தொனியுடன் காட்சிக்குள் வந்துசெல்கின்றன. இம்தியாஸ் கவேத்தை விரட்டிப் பிடிக்கும் காட்சியில், விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் சுவாரசியமாக அமைக்கப்பட்ட காட்சி இது. கவேத்தை பிடிக்கும் வினாடிகளில் திரும்பத் திரும்ப அவன், தப்பித்துவிடுகிறான். காட்சியின் வேகமும் பின்புறத்தில் ஒலிக்கும் இசையின் தாளகதியும் இந்த நீண்ட காட்சியை உயிரோட்டப்படுத்துகிறது. கடினமுயற்சிக்குப் பின் அவன் அகப்பட்டதும், விசாரணையறையில் வதைபடும் காட்சியும், சுத்தியலால் கைவிரல்கள் நசுக்கப்படும் அவன், குற்றக் கோப்பில் கையெழுத்துப் போட வலியுறுத்தப்படும் நிலையில், நசுங்கிய கையால் பேனாவைப் பிடிக்கவியலாமல் அவன் கதறும் காட்சியும், அவன் குற்றவாளி எனும் நிலையிலும், நம்மைப் பதறச் செய்துவிடுகிறது. ஏனெனில், இந்தத் திரைப்படம் சாமான்ய மனிதர்கள் சக சூழ்ச்சிகளுக்குப் பலியாகி தமது வாழ்வை அழித்துக் கொள்வதைப் பற்றியதாக இருக்கிறது. அப்பாவி மக்கள் இறந்துவிடுவார்கள் என்கிற பதட்டம் ஒருசிறிதுமின்றிதான் சதி வேலைகளை ஏதோ ஆக்கபூர்வமான வேலை செய்வதுபோல ஈடுபாட்டுடன் இவர்கள் செய்கிறார்கள். அதனுடைய பிரதிபலனை பின்பு வருத்தத்துடன் அனுபவிக்கிறார்கள். எனினும், அவர்களுக்குள்ளும் தலைமறைவாக இருக்கும் எளிய உள்ளங்களைப் பற்றிய நுண்ணிய சித்திரிப்புக்களையும் இந்தப்படம் வழங்கத் தவறவில்லை.
மூன்றாவது பகுதி ஓடும் படலம். இப்பகுதி, டெல்லியிலிருக்கும் மசூதியொன்றிலிருந்து துவங்குகிறது. சதியின் வெற்றிக்குப் பிறகு, பாத்ஷா கானும் பபீர் கானும் டைகர் பாயிடமிருக்கும் தமது பாஸ்போர்ட்டுகளைப் பெற்று இந்தியாவிலிருந்து தப்பிவிடும் நோக்கத்தில் டெல்லியில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். டைகர் பாயைத் தொடர்பு கொள்ளும்போது "ஏன் டெல்லியில் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்? அகப்படவா?" என்று வினா எழுப்பி, உடனே எங்காவது சென்று தலைமறைவாக இருக்கும்படி கூற, உடனே இருவரும் பாத்ஷா கானின் சொந்த ஊரான ராம்பூருக்கு (உத்தரப்பிரதேசம்) செல்கிறார்கள். அங்கிருந்து ஜெய்ப்பூர் செல்லும்படியும், அங்கிருந்து துபாய்க்குச் செல்ல தான் ஏற்பாடு செய்வதாகவும் டைகர் பாய் மீண்டும் தொலைபேசித் தொடர்பில் உறுதியளிக்க, இருவரும் நம்பிக்கையுடன் செல்கிறார்கள்.
அங்கு சக சதியாளர்களோடு உரையாடும்போது அனைவரது பாஸ்போர்ட்டும் எரிக்கப்பட்டுவிட்டதை அறிந்து பாத்ஷா கொதிப்படைகிறான். தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்கிறான். எனினும், டைகர் பாய் அனைவரையும் காக்கும்பொருட்டுத்தான் ஜெய்ப்பூருக்கு வரச் சொல்லியிருப்பதாகவும் புதிய பாஸ்போர்ட்டுகள் பாகிஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் நிலவும் செய்தியொன்றால் சமாதானமடைகிறான். எனினும் உள்மனதுள் தான் கைவிடப்பட்டதாக பாத்ஷா எண்ணுகிறான். மீண்டும் ராம்பூருக்கு வர, மறுநாள் காலையில் பபீர், பாத்ஷாவிடம் சொல்லாமல் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றுவிட, தனிமையின் வெம்மையோடும் பயத்தோடும் பாத்ஷா பழைய தில்லி, கல்கத்தா என அலைக்கழிக்கப்படுகிறான். டைகர் பாயிடம் தொடர்பு கொள்வதும் கடினமாகி கையிலிருந்த பணமெல்லாம் தீர்ந்துவிட்ட நிலையில், மீண்டும் ராம்பூருக்குத் திரும்புகிறான்.
கரிய இருளாக இருப்பின் சுமை அடரத்துவங்கும் ஒரு நாளில் (மே 10, 1993) காவல்துறை அவனது இல்லம் வந்து கைதுசெய்துகிறது. பின்பு விசாரணையறைக்கு அழைத்துவரப்படுகிறான் பாத்ஷா. ராகேஷிற்கும் அவனுக்கும் இடையே அரசியல்ரீதியான விவாதம் நடைபெறுகிறது. "எத்தனைபேர் உயிரை இழந்தார்கள் என்பதையும் இந்த நகரம் எத்தனை துன்பப்பட்டது என்பதையும் அறிவாயா? உனக்கென்ன, நீ தப்பித்துச் செல்ல இந்த உலகத்தில் எத்தனையோ இடங்கள் இருக்கிறது" எனும் ராகேஷிடம், "தான் குற்றமேதும் செய்யவில்லை" என்று பதில்கூறுகிறான் பாத்ஷா. பின்பு மெதுவாக தனது வாதத்தை முன்வைக்கத் தொடங்குகிறான். "பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் எமது மக்கள் மீதான வன்முறையும் இத்தகைய செயலைச் செய்ய எங்களைத் தூண்டியது" என்று கூறுகிறான். வசனங்கள் படத்தில் நேரடித் தன்மையுடன் பிரயோகப்பட்டிருப்பதும் ஆவணப்படத்தில் மட்டுமே காணமுடிகிற அம்சங்களை தயக்கமின்றி புகுத்தியிருப்பதும் வியப்பாகவே இருக்கிறது. இந்த மூன்றாவது பகுதியே கதைகூறலின் அடிப்படையிலும் காட்சிகளை கட்டமைத்ததன் அடிப்படையிலும் படத்தின் மிகச் சிறந்த பகுதியாக பரிணமிக்கிறது. பாத்ஷாவாக நடித்த ஆதித்யா ஸ்ரீவத்சவா நடிப்பின் உச்சம் தொடுகிறார்.
நான்காம் பகுதி, யாகூப் கான் மற்றும் ஆர்.டி.எக்ஸ் படலம். ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்தைக் கடத்துபவனும் சதிவேலையில் ஈடுபட்டவனுமான யாகூப்கானினது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும்பொருட்டு அவனது சகோதரரும் எம்.கே. பில்டர்ஸ் அதிபருமான மஜித்கானும் அவரது துணைவி நபிசாவும் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். இதனை அறியும் யாகூப் தலைமறைவான இடத்திலிருந்து காவல்துறைக்கு தொலைபேசி வழி தனக்கும் குண்டுவெடிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையெனவும், மஜிதையும் நபிசாவையும் விட்டுவிடும்படியும் போதையேறின நிலையில் அழுதுபுலம்புகிறான். தொடர்ந்து டைகர் பாயிடம் தொலைபேசி வழி பேசுகிறான். எதிர்ப்புறமிருந்து "இந்தப் புனிதப்போரில் பலியாவது தவிர்க்கவியலாதது" எனப் பதில்வருகிறது. தாவுத் பாயிடம் (தாவுத் இப்ராகிம்) பேசிப்பாருங்கள் எனக் கோரிக்கை விடுக்கிறான் யாகூப். ஆனால் எதுவும் நடக்கப்போவதில்லை என்றறிந்த நிலையில், காவல்துறையினரிடம், "எனது சகோதரரை விடுவித்தால் ஒரு தகவலைக் கூறுவேன்" என்று கோரிக்கை வைக்கிறான். அதிகாரி விடுவிக்க முயலுவதாகக் கூற, அம்ருத் நகரிலுள்ள காய்ந்த மீன்கள் நிரப்பப்பட்ட உணவுக்கிடங்கில் டைகர் பாய் பதுக்கிவைத்திருக்கும் ஆர்.டி. எக்ஸ் வெடிமருந்து இருப்பதாகத் தகவல் தர, காவல்துறை சென்று மருந்தை பறிமுதல் செய்கிறது. தொடர்ந்து, அருகிலிருக்கும் நக்லா பந்தர் சிற்றோடையிலும் (மார்ச் 30, 1993) பல ஆர்.டி.எக்ஸ் பதுக்கப்பட்ட சாக்குமூட்டைகள் கண்டெடுக்கப்படுகின்றன.
யாகூப் மீண்டும் தொலைபேசி வழி காவல்துறையினருக்கு பிலு கான் அடிக்கடி வரும் உணவுவிடுதி பற்றின தகவலைத் தருகிறான். அவனது பழிவாங்கல் காட்டிக்கொடுப்பதாக உருமாறுகிறது. விசாரணையின்பேரில் அந்த உணவுவிடுதியின் அதிபரான ராஜ்குமார் குரானாவை கைதுசெய்கிறார்கள். அவருக்கு ஏதும் தெரியாது என்கிற நிலையிலும் சிறையிலடைக்கப்படுகிறார். அவரது கண்முன்னே பெண்கைதிகளின் மீதான மானபங்கம் நிகழ்த்தப்பட, மனம் ரணமுற்று அவதிப்படுகிறார். குறுகிய நாட்களில் விடுவிக்கப்பட்ட பின்பும் தனது குடும்பத்திற்கு அவமானம் நேர்ந்து விடுமோ என்கிற அச்சத்தினாலும் துக்கத்தாலும் மனைவி, பிள்ளைகளை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்கிறார். படத்தின் ஒரு கிளைச் சிறுகதை போல வரும் இப்பகுதியில், ராஜ்குமார் குரானாவாக வரும் நடிகர் தனது சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. சில நிமிட நேரங்களிலேயே நடந்துமுடிந்துவிடும் அவரது கதாபாத்திரத்தின் திரைவாழ்வு நமது எண்ணத்துள் நீங்கவியலாமல் ஒட்டிக்கொள்கிறது. எல்லா சூழ்ச்சிகளுக்கும் பின்பாக அப்பாவிகளும் பலியாவதற்கு உதாரணமாக இந்தக் கதாபாத்திரம் வந்துசெல்கிறது.
ஐந்தாம் பகுதி சதியாலோசனைப் படலம். தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை நன்குணர்ந்த பாத்ஷாகான் அப்ரூவராக மாறி வாக்குமூலம் அளிக்கும் பகுதி இது. இதன் தொடர்ச்சியில், தாவுத் பான்சே என்கிற கடத்தல் வியாபாரி கைதுசெய்யப்படுகிறான். டைகர் பாயிடம் ஒருவருட காலமாகப் பணிபுரிபவன். தாவுத் பாயுடனான வியாபார நம்பகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பும் பான்சேயை துபாயிலுள்ள தாவுத் இப்ராகிம் இருப்பிடத்திற்கு டைகர் அழைத்துச் செல்கிறான். நிஜமாகவே உருக்கொண்டு வந்தாற்போல அமைந்திருக்கிறது தாவுத் இப்ராகிம் வந்துசெல்லும் காட்சி. தாவுத்தாக வரும் நடிகர் தோற்றத்தில் அச்சுப்பிசகாமல் தாவுத்தை மறுபிரதி செய்யும் வண்ணமாக இருக்கிறார். படத்தின் நீளத்தால் ஏற்படும் பார்வையாளரது அயர்வை தாவுத் இப்ராகிமின் வருகை அகற்றிவிடுகிறது.
பின்பு, சதியில் ஈடுபடுமுன் அனைவரும் பாகிஸ்தானிலுள்ள பெயரறியா இடமொன்றிற்குப் பயிற்சிக்காக அனுப்பப்படுகிறார்கள். தீவிரமான ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியாளன் ஆர். டி. எக்ஸ் வெடிகுண்டை அறிமுகப்படுத்துகிறான். அவை இரண்டாம் உலகப்போருக்குப்பின்பு தயாரிக்கப்பட்ட குண்டுகளெனக் கூறி, தூரமாக எறிந்து வெடித்துக் காட்டுகிறான். காண்பவர்கள் கலங்கிப்போகும் அளவு அதன் சத்தமும் சிதிலமும் புழுதியெழுப்புகிறது. உணர்வுபூர்வமான மத உரைகளின்மூலமும் பழிவாங்கும் உன்மத்தம் எழுப்பப்படுகிறது. இத்தகைய இனத்துவேஷப் பழிதீர்த்தலுக்கான பின்னணி படத்தில் நிஜமான ஆவணக் காட்சியாக இப்பொழுது காண்பிக்கப்படுகிறது பாபர் மசூதி இடிக்கப்படும் சம்பவத்தின் நேரடிக் காட்சி. தொடர்ந்து பம்பாயில் ஏற்பட்ட இனக் கலவரம். இரு அணியாளர்களும் கொலைசெய்வதும் பாலியல்பலாத்காரம் மேற்கொள்வதும் எனத் தொடரும் வன்செயல்கள். 600 பேர் கொல்லப்படுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களோடும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடிழந்தும் வேதனையி லாழ்த்தப்படுகின்றனர். உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற நிலையில், சிறுபான்மையினரான முஸ்லிம் மக்கள் துயரமும் அச்சமும் கசிய அகதிகளாகின்றனர்.
ஒரு சிறுமி, "தனது தந்தையும் தாயும் தம்பியும் கொல்லப்பட்டுவிட்டதாகவும் தனது தாத்தாவும் பாட்டியும் காணாமல் போய்விட்டார்கள்" எனவும் அனைத்தையும் இழந்துவிட்ட கையறுநிலையின் தீவிர மறியாமல் தொலைக்காட்சி செய்தித் தொகுப்பொன்றில் சொல்கிறாள். ஒரு முஸ்லிம் பெண்மணி, "நீங்களனைவரும் பம்பாயைவிட்டு வெளியேறிவிடுங்கள், உங்களுக்கு இங்கிருக்க இடமில்லை" என எதிரணியினர் கூறுவதாக கவலையுறுகிறார். பொருளாதார நிலைகள் தீவைத்துக் கொளுத்தப்படுகின்றன. டைகர் பாயின் அலுவலகமும் இரவோடு இரவாக எதிரணியினரால் கொளுத்தப்படுகிறது. மறுநாள் காலையில் அலுவலகம் வந்து கொதித்துப்போகும் டைகர் பாய் பழிவாங்கும் நோக்கத்தில் சூளுரைத்துவிட்டு துபாய்க்குப் பறந்துசெல்ல, அங்கு சதியாலோசனை நடைபெறுகிறது. எங்கெங்கு வெடிப்பு நிகழ்த்துவதென இடங்கள் குறிக்கப்படுகின்றன. அடுத்த காட்சியிலேயே படத்தின் முதல்காட்சியில் நாம் கண்ட தொடர் வெடிப்புக்கள் மீண்டும் காட்டப்படுகின்றன. மனித உடல்கள் சிதறி ரத்தம் பீறிட்டு வழிய, வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட பலியுற்ற அப்பாவி மனித உடல்களை காண்பித்தபடியே திரைப்பரப்பில் இருள் நிறைகிறது.
இந்தத் திரைப்படம் ஒரு சாராரின் வன்செயல்களை மட்டுமே சித்திரித்திருந்தால் நிலவும் சூழலில் ஆபத்தைப் பிரயோகிக்கும் படமாகக் கருதப்பட்டிருக்கும். ஆனால் ஒவ்வொரு அரசியல் வன்முறைக்கும் மற்றொரு அரசியல் வன்முறை வேராக பின்னியங்குகிறது என்கிற அறிந்துணர்வை படம் நமது பொதுப்பார்வைக்கு ஏற்படுத்தித் தருகிறது. இருவேறு தன்னுணர்ச்சி மற்றும் துவேஷக் கணக்குகளால் நஷ்டப்படுவது சாமான்ய மக்களின் விலைமதிக்க முடியாத உயிர்களே என்பது படத்தின் மூலச் செய்தியாகிறது. இந்த வன்முறைகளை நாம் செய்வதறியாது பார்த்துக் கடந்ததுபோல திரைப்படமும் பார்த்தபடி கடந்துசெல்கிறது. இத்தகைய சாய்வற்ற அரசியல் சமன்பார்வைகளை இந்தியாவின் சிறந்த ஆவணப்பட இயக்குநரான ஆனந்த பட்வர்த்தனது ஆவணப்படங்களில் மட்டும்தான் நாம் காணவியலும். அவற்றிற்கிணையான பார்வைகளை (புனைவாக்கம் என்னும் வரையறையையும் மீறி) இந்தப்படமும் வழங்குகிறது என்பது சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஓர் அம்சம்.
2006 மத்தியிலேயே வெளிவந்திருக்க வேண்டிய இந்தப் படம் சமகால வழக்கிலிருக்கும் மத/அரசியல் பிரச்சினையை சித்திரிப்பதால் உடனடியாக வெளியாவது ஒத்திவைக்கப்பட்டது. இப்போது வழக்கு முடிவடைந்திருக்கும் நிலையில் படம் வெளியாகியிருக்கிறது. படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப்(Anurag Kashyap), இந்திய சினிமாவின் வலுவான குரலை உலக அரங்கில் ஒலிக்கச் செய்திருக்கும் இளைஞர். ராம்கோபால் வர்மாவினது(Ramgopal Varma) "சத்யா" மற்றும் படங்களில் வசனகர்த்தாவாகப் பணியாற்றியவர் அனுராக். மணிரத்னத்தின்(Manirathnam) "யுவா" படத்திற்கு வசனமெழுதியவர். "குரு(Guru)" படத்திலும் தீபா மேத்தாவின்(Deepa Mehta) "வாட்டர்(Water)" படத்திலும் அவரது பங்களிப்பு உண்டு. அவரது உரைநடை வளம் "கருப்பு வெள்ளிக்கிழமை" படத்திற்கு மிகவும் உந்துதலான வீர்யத்தை அளித்திருக்கிறது. உள்ளீடான கதையம்சமும் சாய்வற்ற அரசியல் பார்வையும் திரைமொழி குறித்த அறிவாற்றலும் ஒருசேர வாய்ப்பது அரிது. அனுராக்கிற்கு அந்த ஒன்றிணைவு வாய்த்திருக்கிறது. நல்ல திரைப்படங்களை தொடர்ந்து அளிப்பார் என நம்பிக்கை கொள்வோம்.
"ஒளிப்பதிவு செய்திருப்பதை உணர்த்தாத படங்களே சிறந்த ஒளிப்பதிவை கொண்டிருப்பவை" என்கிற பார்வை ஒன்றுண்டு. "கருப்பு வெள்ளிக்கிழமை" படத்தில் ஒளிப்பதிவின் தேவையற்ற குறுக்கீட்டு முன்னிலையை நாம் எங்குமே காணமுடியாது. கதையம்சத்தின், கதாபாத்திர உணர்வோட்டத்தின் நிழலெனவே ஒளிப்பதிவு தொடர்கிறது. ராம்கோபால் வர்மாவின் படங்களில் இடம்பெறும் சதவீதங்களையும் தாண்டி, இதுவரை இந்தித் திரைப்படங்களில் நேர் யதார்த்தத்துடன் காணாமலிருந்த மும்பை மைய புறநகர வீதிகளை காட்சிக்குள் கொண்டுவந்திருக்கிறது இப்படத்தின் ஒளிப்பதிவியக்கம். ஒளிப்பதிவாளர் நடராஜ சுப்பிரமணியன். இவர் தமிழரும்கூட. அரிதாகவே கைவரப்பெறும் ஒளிப்பதிவின் நேரிய தன்மையை திரைப்பரப்பில் உலவவிட்ட அவரது உயர்ந்தபட்ச திரைப்பங்கேற்பிற்காக (தமிழர் என்கிற நிலையிலும்) தமிழ்ச்சமூகம் பெருமைப்பட வேண்டும். இன்னும் பல காட்சிகள் கண்களுக்குள் மறக்கவொண்ணாமல் கிளையாடுகின்றன. மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் காட்டப்படும்போது பதற்றமும் வேதனையும் அழிக்கக்கூடிய நீலநிற ஒளிக்கலப்பு குண்டுவெடிப்பிற்குக் காரணமானவர்களை கைதுசெய்யும் தேடல்படலத்தில் குழப்பமும் சூன்யமும் காட்டும் மெல்லிய மஞ்சள் நிறம் கைதிகள் விசாரிக்கப்படும் காட்சியில் வன்முகம் காட்டும் சிகப்பு நிறம் என காட்சிகளின் மனவோட்டத்திற்கேற்ப பல்வேறு வண்ணங்களை பிரயோகித்திருக்கிறார்.
டைகர் பாயாக வரும் பவன் மல்ஹோத்ராவையும், காவல்துறையதிகாரியாக வரும் கே.கே. மேனனையும் உள்ளிட்டு படத்தில் பங்கேற்ற அனைத்து நடிகர்களுமே தமது படைப்பாற்றலை பொறுப்புணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் மற்றொரு பலமான படத்தொகுப்பைச் செய்திருப்பவர் ஆர்த்தி பஜாஜ். காட்சிகளின் தொகுப்பை சிற்ப வேலைப்பாட்டு கவனத்துடன் அணுகியிருக்கிறார். படத்தின் உணர்ச்சிகளுள் நம்மை மூழ்கடித்துவிடும்படியான இசையை இந்தியன் ஓசியன் தந்திருக்கிறது. இனிவரும் எதிர்கால அரசியல் திரைப்படங்களுக்குச் சிறந்த முன்னோடியாக "கருப்பு வெள்ளிக்கிழமை" என்றுமே தன்னிருப்பு பெற்றிருக்கும் என்பதுவும் இறுதியாகச் சொல்லவேண்டியது.