Tuesday, October 26, 2010

கவிதையும் காலமும்

கவிதையும் காலமும் ( Poem and Time - Tamil Katturaikal - General Articles
காலம் என்று சொல்லும்போது அது நமக்கு மிகவும் பரிச்சயமான ஒரு விஷயம் போன்ற உணர்வு நமக்கு உண்டு. அதே நேரத்தில் அது பற்றி சிந்திக்கும் போது பிடிபடாத ஒரு விஷயமாகவே தோன்றுகிறது. "காலம் என்றால் என்ன என்று என்னிடம் யாரும் கேட்காதிருக்கும்போது எனக்குத் நன்றாகத் தெரியும். ஆனால் யாராவது கேட்டுவிட்டால் அது என்ன என்று எனக்குத் தெரிவதே இல்லை.
ஒரு முறை ரஷ்யர் ஒருவர் மேற்கு நாடுகளில் சுற்றுப்பயணம் செல்லும்போது, அவருக்கு நேரம் என்ன என்று தெரிய வேண்டியிருந்தது. அவரிடம் கைக்கடிகாரம் இல்லை போலிருக்கிறது. வழியில் எதிர்ப்பட்ட ஒருவரிடம் ஆங்கிலம் சரியாகத் தெரியாத காரணத்தால், "What is time?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர், "அது தெரிந்தால் நான் ஏன் இப்படி அலைந்த கொண்டிருக்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். இது போல் காலம் என்பது ஒரு மிகவும் சூட்சுமமான ஒரு விஷயமாகவே எல்லாக் கலாச்சாரங்களிலும் கருதப்பட்டு வந்திருக்கிறது.
காலம் என்னும் பொருள் பற்றி பல நூற்றாண்டுகளாக தத்துவதரிசிகள் மட்டுமே பேசி வந்திருக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் தொட்டு காலம் என்பது விஞ்ஞானத்தில் ஒரு முக்கிய பிரச்சினையாகி இருக்கிறது. ஈன்ஹ்டீனின் "சார்பியல் தத்துவம்" ஒரு புதிய அகில அமைப்பை ஸ்தாபித்தது. நியூட்டனின் பௌதிகவியலில் அமைப்பில், தான் பாட்டுக்கு நிகழ்வுகளுக்கு இடம் கொடுத்துக் கொண்டு இருந்த காலம், வெளி இரண்டும் திடீரென பிரச்சினைக்குள்ளாகி விட்டன.
தனித்தனியான கருத்துருவங்களாக இருந்தது மாறிப் போய் "காலம் - வெளி" யென்னும் நான்கு பரிமாண நீட்சியாக நிலை கொண்டது தவிரவும் காலம் - வெளி - நிகழ்வு - அனுபவம் என்பது ஒரு பார்வையாளனின் பிரக்ஞையைத் சார்ந்த விஷயமாகிவிட்டது. பார்வையாளனின் பிரக்ஞையை விடுத்த சுதந்திரமான இருப்பு என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் இல்லாமல் போய்விட்டது. காலம் என்பது பார்வை அமைப்பின் அடிப்படையாகக் கண்டு கொள்ளப்பட்டது.
அதுவரையில் பௌதிக இயல் என்பது "புறம்" என்று வரையறக்கப்பட்ட பரிமாணத்தை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொண்டிருந்தது. சார்பியல் தத்துவத்தின் கண்ணோட்டத்தில் "புறம்" என்ற வரையறை செயற்கையானது என்றும் "பார்வையாளன்" என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக, காலம், இடம் என்பவை புறவுலகம் நிகழ இடமளிக்கும் சாஸ்வதமான, சுய இருப்பு கொண்டவகையாக இருந்த நிலை மாறியது. பார்வையாளனுக்கும் புறவுலகுக்கும் இடையே உள்ள உறவின்பாற்பட்ட "காலம் - இடம்" என்னும் பிரிவற்ற நீட்சியாக புதிய பொருள் கொண்டது.
இருபதாம் நூற்றாண்டின் கவிஞன், தன் கற்பனை உலகில் சஞ்சரிப்பது மட்டுமின்றி, உலகின் புதிய பார்வைகளினால் ஏற்பட்ட பாதிப்புகளையும் எதிர்கொண்டு அவைகளினாலும் ஆட்கொள்ளப்பட்டவனாக இருக்கிறான். நேரிடையாக நவீன விஞ்ஞானத்தின் புதிய கருத்துருவங்களுடன் பரிச்சயம் கொள்ளாதவர்கள்கூட, அந்த கருத்துருவங்களின் எதிரொலிகளையாவது கவனத்தில் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு "காலம்" என்னும் பொருள் நேரிடையாகவோ அல்லது வேறு பிரதிபலிப்புகளாகவோ கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அனைத்து அனுபவங்களுக்கும் அடிப்படையாக இருப்புணர்வு காலம் என்னும் அமைப்புக்கு அப்பாற்பட்டது. அனுபவத்தின் அடிப்படையான இந்த உணர்வு ஒரு அனுபவம் அல்ல. எந்த அனுபத்திற்கும் ஒரு கட்டுக்கோப்பு இருக்கிறது. இருப்புணர்வுக்கு கட்டுக்கோப்பு எதுவும் இல்லை. எந்தக் கட்டுக்கோப்புக்கும் அமைப்புக்கும் அப்பாற்பட்டது அது. காலம் - இடம் என்பவை எந்த ஒரு அனுபவ அமைப்பின் ஊடும் பாவுமாக அமைந்து இருக்கின்றன. எந்த ஒரு அனுபவமும் ஒரு உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. இந்த உள்ளடக்கம் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பே காலம் - வெளி என்பவை. அனுவபத்தில் உள்ளடக்கத்தை மட்டுமே உணர முடியுமே தவிர, அதன் அடிப்படை அமைப்பை அல்ல. இந்தக் காரணத்தால் காலம் என்பதைத் தனியாக பிரக்ஞையில் உணர முடியாது. நிகழ்வுகள் இன்றி "காலம்" என்று தனியாக ஒன்று இருக்க முடியாது. உள்ளடக்கம் எதுவுமில்லாமல், ஒன்றும் நிகழாமல்போனால் "காலம்" என்னும் நீட்சியே கிடையாது.
ஒரு குறிப்பிட்ட அனுபத்தின் அமைப்புக்குத் தக்கவாறு "காலம்" என்னும் நீட்சியின் பிரக்ஞை வேறுபடுகிறது. கடிகாரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் "காலம்" ஒன்றை நாம் கொண்டிருக்கிறோம். ஆனால் நிகழ் அனுபவத்தில் "காலம்" என்பது வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறாக உணரப்படுகிறது. துன்பமான ஒரு நிகழ்வு அனுபவமாக இருக்கும்போது காலம் மிகவும் மெதுவாக நகர்வதாகவும், இன்பமயமான அனுபவத்தின் போது காலம் மிகவும் விரைவாகப் பறந்து செல்வதாகவும் உணர்கிறோம். இன்பமான அனுபவத்தின் அமைப்பில் மாற்றம் ஏதும் நிகழாமல் போனாலும் கூட தனித்தனி அனுபவங்களின் அமைப்பு தனித்தனியானவையாக இருக்கின்றன.
இந்த விஷயங்களை எடுத்துக்காட்டுகளின் துணை கொண்டு விரிவாக விளக்கம் காணமுடியும். ஆனால் கவிதைக்கும் காலத்துக்கும் உள்ள உறவை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாதலால் "காலம்" என்னும் பொருள் பற்றிய தனி ஆராய்ச்சிக்கும் இங்கே மேலும் அதிக கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறது.
நம் ஞாபங்களை அலசிப்பார்த்தால் எந்த ஒரு நிகழ்வும் எந்த அனுபவமும் எங்கோ, எப்போதோ நடந்ததாகத்தான் இருக்கிறது. காலம் - இடம் என்னும் பின்னணி இல்லாத எந்த நிகழ்வும் இருக்க முடியாது. புற அனுபவமோ, உள் அனுபவமோ எதுவாயினும் சரி, கவிதைக்கு அனுபவம் என்பதே அடிப்படையாக இருக்கிறது. இதனால் காலம் என்பது கவிதையுடன் பிரிக்க முடியாத உறவு கொண்டதாக இருக்கிறது. காலத்துக்கும் கவிதைக்கும் இடையே உள்ள உறவு பல தளங்களில் இயக்கம் கொண்டிருக்கிறது. பல பரிமாணங்களில் இது நிகழ்கிறது. படிப்படிப்யாக நாம் இவற்றைக் கவனிக்கலாம்.
முதலில் கவிஞன் மனதில் கவிதை எழும் அனுபவம் - ஒவ்வொரு கவிஞனுக்கும் கவிதையின் வெளிப்பாடு ஒவ்வொரு விதமாக அமையும் சிலருக்கு காட்சி ரூபமாகவும், சிலருக்கு நேரிடையாக வரிகளாகவும், சிலருக்கு ஆரம்பத்தில் வெறும் உணர்ச்சி ரூபமாகவும், இன்னும் பல்வேறு விதங்களிலும் கவிதை தோன்றக்கூடும். ஆனாலும் மனிதப் பிரக்ஞை பங்கு கொள்கின்றனர் என்பதாலும் கவிதையின் எழுச்சியின் அடிப்படையில், அதன் தோற்றத்தின் முறைபாடு ஒன்றாகவே இருக்க முடியும்.
இங்கு வேறு ஒரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். மனம் என்பதற்கு ஒரு தனிப்பட்ட உருவம் கிடையாது. ஆனால் எந்த ஒரு கணத்திலும் அந்தக் கணத்தின் அனுபவ அமைப்பின் உருவத்தை மனம் மேற்கொள்கிறது. ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு "காலம் - இடம்" என்ற கட்டுக்கோப்பில் அமைந்திருக்கிறது. களிமண்ணுக்கு என் பிரத்யேகமான உருவம் என்று ஒன்று இல்லாதது போலவே மனம் என்பதற்கும் குறிப்பிட்ட ஒரு உருவம் இல்லாமல் இருக்கிறது. களிமண் தேவைக்கு ஏற்றவாறு எந்த உருவத்தையும் எடுத்துக் கொள்வது போல் மனமும் வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு உருவங்களை மேற்கொள்கிறது.
கவிதை எழும் மனத்தின் கட்டுக்கோப்பு பிரத்தியேகமான ஒரு அமைப்பாகும். பொதுப்படையான "காலம் - இடம்" அமைப்பு அங்கு இயங்குவதில்லை. காலையில் அலுவலகம் செல்ல நாம் பஸ்ஸில் ஏறும் மன அமைப்பில் நிகழ்வதில்லை கவிதையின் மலர்தல். அதன் காலம் - இடம் அமைப்பு முற்றிலும் வேறானது. சாதாரண அமைப்பில் இடமில்லாத பல பார்வை வீச்சுக்கள் இந்த அமைப்பில் நிகழ முடியும். கவிஞனின் பார்வை பொதுமனத்தின் கட்டுப்பாடுகளை மீறி கூர்மையாக, அழமாக, நுட்பமாக, ஆக்கபூர்வமாக இயங்குவது இந்தக் காரணத்தினால்தான். அந்த மன அமைப்பில் அது ஆச்சர்யமான ஒன்றல்ல. அதன் லாவகம் அந்த அமைப்பில் இயற்கையானதே.
அந்த அமைப்பில் காணும்போது உலகில் பொருட்களின் இடையே உள்ள தொடர்புகள் பொதுமன அமைப்பின் தொடர்புகளிலிருந்து வேறுபட்டவையாக இருக்கின்றன. இந்த உலகின் நீள, அகல, ஆழங்கள் வித்தியாசமானவை. புதிய பார்வைகளும் வீச்சுகளும் இதனால் சாத்தியமாகின்றன.
அடுத்ததாக, ஆக்கபூர்வமான அந்த மனத்தின் பார்வை ஒரு உருவம் பெறத் தொடங்குகிறது. பார்வையின் பொருள் சேர்கிறது. படிமங்களும் பிம்பங்களும் இயக்கம் கொள்கின்றன. இந்தப் படிமங்களும் பிம்பங்களும் காலம் காலமாக மனிதப் பிரக்ஞையில் சேர்ந்து உருவானவை. தனிமனித மனத்தைவிட அதிக கால நீட்சி கொண்டவை. தனிமனத்தின் வழியாக இயக்கமும் வெளிப்பாடும் கொண்டாலும் தனி மனித அமைப்பின் எல்லைகளுக்குள் அடங்காதவை அவை காலத்தின் சாரம். தனிமனிதப் பார்வையின் பின்னணி.
இதன் பின் கவிதை மொழியின் தளத்தில் இயக்கம் கொள்கிறது. கவிதையின் முறைபாடு அடிப்படையில் நனவு மன அமைப்பை மட்டும் சார்ந்ததல்ல. அதன் எல்லைகளுக்கு அப்பாலும் கவிதையின் முறைபாடு இயங்குவதால் சில நேரம் கவிதை வரிகள் சுயேச்சைபூர்வமாக மனத்தில் தோன்றுதல் மிகவும் அரிதானதல்ல. சில சமயம் முழுக்கவிதையுமே இவ்வாறு நனவு மனத்தின் முயற்சியின்றி வெளிப்படக் கூடும். தேவையெனத் தோன்றினால் நனவு மனம் சில சொற்களையோ, வரிகளையோ மாற்றி வைக்கலாம். ஆக கவிதை, மொழியின் அமைப்புக்குள் வந்துவிடுகிறது.
மொழி என்பதும் காலத்தின் விளைவு, சேகரிப்பு, காலப்பிரக்ஞையின் இயக்கவிதியில் மொழியின் அங்கம் மைய முக்கியத்துவம் வாய்ந்தது. படிமங்களும் பிம்பங்களும் ஒருவகையில் மொழி அமைப்பின் அங்கமே. ஒரு தளத்தில் மொழியே மனமாக செயல்படுகிறது.
எழுதி முடிக்கப்பட்ட கவிதை இப்போது வாசகனுக்குக் கிடைக்கிறது. பிரதியோ அல்லது அச்சிடப்பட்ட புத்தகமோ அன்றாட கால அமைப்பில் உள்ள உலகில்தான் இருக்கிறது ஆனால் வாசகன் கவிதையைப் படிக்கும்போது அவன் மனத்திற்கும் கவிதைக்கும் இடையில் ஏற்படும் உறவு ஒரு புதிய அமைப்பாக உருக்கொள்கிறது. அவனுடைய உடலும் புத்தகமும் பௌதிக உலகின் அங்கமாக இருந்த போதிலும் மனத்தளவில் அவன் பிரக்கைஞ அந்த பௌதிக உலகிலிருந்து விடுபட்டு வேற ஒரு கட்டுக்கோப்பில் அமைகிறது.
கவிதையின் சொற்களும், ஓசையும், பொருளும் அவன் மனத்தின் எழுப்பும் பிம்பங்களும் ஒரு பிரத்யோக வெளியில் இயக்கம் கொள்கின்றன. அந்த உலகில் கால கதி வெறும் வரிசைத் தொடர்ச்சி அல்ல. இயக்க பூர்வமான கால - இட அமைப்பு அது.
சம்பவங்கள் நிகழும் விவரணைக் கவிதையாக இருக்கும் பட்சத்தில் அந்த நிகழ்வுகளின் காலம் ஏது? எந்த வெளியில் அவை நிகழ்கின்றன? பிரக்ஞையே ஒரு காலம் - இடம் கட்டுக்கோப்பை உருவாக்குகிறது. கவிதை படித்து அதன் அதிர்வுகளும் அடங்கிய பிறகு அந்தக் கட்டுக்கோப்பு பிரக்ஞையிலேயே அலைகள் நீரில் அடங்குவது போல் அடங்கிக் கலந்துவிடுகிறது.
கவிதை வாசகனின் பிரக்ஞைகளின் புதிய உலகக் கட்டுக்கோப்புகளை ஏற்படுத்துகிறது. அந்த உலகங்கள் பிரக்ஞையில் நிலைக்கும் வரை அவனது இருப்புணர்வு அந்த உலகங்களில் "வாழ்ந்து" அனுபவம் கொள்கிறது.
ஒரு உண்மையான கவிஞனுக்கு மேற்சொன்ன எல்லா விஷயங்களும் அறிவு பூர்வமாக இல்லாது போனாலும் உணர்வு பூர்வமாகத் தெரியும். அறிவு பூர்வமாக நிறைய விஷயங்கள் அறிந்த கவிஞர்கள் இருக்க முடியும். ஆனால் அவர்களுக்கும் அடிப்படையானது உணர்வு பூர்வமான, நேரிடையான தெரிதல்தான். பிரக்ஞையின் பல தளங்களைப் பற்றிய உள்ளுணர்வு தான் கவிஞனை ஆழத்தில் இயக்குகிறது. அறிவுத் தளத்திலேயே இன்று "காலம்" என்னும் கருத்துருவம் மிகவும் பரிச்சயமாகிக் கொண்டிருக்கிறது. நிறைய புதிய கவிஞர்களும் காலம் என்னும் பொருள் பற்றி புதிய கோணங்களில், புதிய வெளிச்சங்களைத் தம் கவிதைகளில் வெளிப்படுத்துகிறார்கள். காலம் பற்றிய புதிய படிமங்கள் நவீன கவிதைகளில் உருவாகியிருக்கின்றன.
காலத்தின் சார்புநிலை பற்றியும் கால நீட்சியின் அனுபவம் வெவ்வேறு மனநிலைகளில் வெவ்வேறாகத் தோற்றம் கொள்வது பற்றியும் ஆழமான படிமங்கள் பல வந்திருக்கின்றன. கவிதை விமர்சன உலகத்திலும் இன்று புதியதாகத் தோன்றியிருக்கிற "கட்டுடைத்தல் விமர்சனம்" என்பதும் கவிதை அமைப்பில் கட்டுக்கோப்பை ஆராய்கிறது. காலம் என்பது நிகழ்வுகளின் வரிசையாகக் கொள்ளப்படுவதால் "முன் - பின்" என்பது காலம் என்பதில் முக்கியமான கூறு ஆகும். ஒரு குறிப்பிட்ட வரி கவிதையில் எத்தனையாவது வரியாக இருக்கிறது என்பது அந்த வரியின் பொருளை மட்டுமல்லாமல் அதன் தொடர்பாக மற்ற வரிகளின் பொருளையும் அதனால் கவிதையில் முழுப்பொருளையும் நிர்ணயிக்கிறது. கவிதை வரிகளில் நிகழ்வு வரிசையும் ஒரு கால வரிசையே. வரிகளை இடம் மாற்றிப் போட்டு வரிசையை மாற்றிப் பார்த்தால் புதிய கட்டுக்கோப்புகளும், புதிய பிரதிபலிப்புகளும், புதிய எதிரொலிகளும் வெளிப்படுகின்றன.
புறவயமான கடிகாரத் காலத்தின் தயை தாட்சண்யம் அற்ற ஒரு திசை ஓட்டம் ஒரு புறமும், ஆக்கபூர்வமான இயக்க பூர்வமான அகவயமான காலம் இன்னொரு புறமும் மனித வாழ்வில் ஓட்டத்தின் இரு கரைகளாக இருக்கின்றன. நிகழ்வுகள் நடந்தவை, நடப்பவை, நடக்கப் போகும் நிகழ்வுகள் என்று மூன்றாகப் பிரிவடைந்திருப்பது ஒரு முறைப்பாடு. இதன்படி ஒரு குறிப்பிட்ட கணத்தில் ஒரு நிகழ்வு மட்டுமே நிகழ முடியும். மற்ற நிகழ்வுகள் அதன் முன்னும் பின்னுமாக அமைக்கப்பட்டிருக்கும்.
அனைத்து நிகழ்வுகளும் ஒரே கணத்திலேயே உடனிகழ்வாக நிகழ்வதாகக் கொள்வது இன்னொரு முறைபாடு. இதன்படி இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் அமைப்பு ஒரு புத்தகத்தைப் போல் மொத்தமாக, முழுமையாக பிரித்து பக்கங்களைப் போல் முன்னோக்கியோ பின்னோக்கியோ பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
கவிதையின் இயக்கம் முழுப்பிரக்ஞையின் இயக்கமாக இருப்பதால் காலத்தின் இயக்கமாகவும் இருக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள பல்வேறு முறைபாடுகளும் கவிதையின் உட்கூறுகளிலும் கருத்துத் தளத்திலும் வெளிப்படுகின்றன. கவிதைக்கும் காலத்துக்கும் உள்ள உறவு பல பரிணாமங்களில் இயங்குகிறது. இந்தக் கட்டுரையில் ஒரு சில கோணங்களில் மட்டுமே இந்த விஷயம் ஆராயப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment