Saturday, October 30, 2010

தேடிவரும் வேலை

எல்லா தேர்தல் அறிக்கைகளிலும் தவறாமல் காணப்படும் ஒரு வாக்குறுதி - "இத்தனை லட்சம் பேருக்கு இத்தனை ஆண்டுகளில் கட்டாயம் வேலைவாய்ப்பு" என்பதாகும். இந்த வாக்குறுதி தொடர்ந்து கொடுக்கப்படுவதே வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு தொடர்கதை என்பதை உறுதி செய்கிறது.
பொறியியல், மருத்துவம், கணக்குத் தணிக்கையாளர் போன்ற தொழில் சார்ந்த கல்வி கற்போர் பெரும்பாலும் சுலபமாகக் காலுன்றிவிடுகிறார்கள். ஆனால் ஏறத்தாழ ஏட்டுப்படிப்பு என்றே சொல்லக்கூடிய சில பட்டங்களைப் பெறுபவர்களும், இதுபோன்ற பிற பட்டயங்களைப் பெறுபவர்களும் வேலை பெறுவது மிகக்கடினமாக உள்ளது.
ஒரு மிகப்பெரிய வட்டவடிவ மைதானம் இருக்கிறது. அதற்குப் பல இடங்களில் வாயிற்கதவுகள் இருக்கின்றன. ஒரு கதவில் ஆ.அ., என்று எழுதப்பட்டுள்ளது. இது போல ஒவ்வொரு கதவிலும் ஒரு பட்டம் / பட்டயப் படிப்பின் பெயர் காட்டப்பட்டுள்ளது. வேலை தேடும் இளைஞர்கள் கூட்டம் கனவுகளோடு கதவுகளைத் தட்ட, என்ன வியப்பு - உடனடியாகத் திறக்கப்படுகின்றன கதவுகள். மகிழ்ச்சி ஆரவாரத்தோடு உள்ளே நுழையும் ஒவ்வொருவரும் இப்போது திகைத்துப் போய் நிற்கின்றனர். ஏன்?
உள்ளே அவர்கள் கண்களில் தென்படுகிறது இன்னொரு சிறிய வட்ட வடிவ மைதானமும், அதில் உள்ள பல கதவுகளும். "போட்டித்தேர்வுகள் - அரசு சார் நிறுவனங்கள்" "ஆசிரியர் பயிற்சி போன்ற வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகள்", "தனியார் துறை" போன்ற சில வார்த்தைகள் அக்கதவுகளில் காணப்படுகின்றன. "அரசு சார் நிறுவனங்களின்" கதவின் முன் அளவிட முடியாத கூட்டம். இந்த வரிசையில் கடைசியாக இணையும் இரண்டு இளைஞர்கள் பேசிக் கொள்கிறார்கள் - "டேய், அங்கே பாரு, நாம் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, காலேஜில் படித்தாரே, அந்த அங்கிள் நிற்கிறார்".
தனியார் துறையின் கதவுகள் மட்டும் பெரிதாகவும், எத்தனை பேர் வந்தாலும் உள்ளே நுழைய முடியும் போலவும் தோன்றின. "நாளைக்குக் கிடைக்கும் பலாக்காயை விட, இன்று கிடைக்கும் களாக்காயே மேல்" என்ற சொலவடையை நம்பும் ஒரு கூட்டம் தனியார் துறையின் கதவுகளைத் தாண்டி உள்ளே நுழைகின்றது.
என்ன இது? உரிக்க, உரிக்க வெங்காயத்தில் தோலாக வருவதுபோல், இங்கேயும் ஒரு மைதானச் சுவரும், சில கதவுகளும்! இக் கதவுகளில் "தட்டச்சு, சுருக்கெழுத்து, கணிப்பொறி அறிவு, ஆளுமைத் திறன், விளையாட்டுத் திறன், வேற்று மொழிப் புலமை, உணர்வாக்கத் திறன் போன்ற பல வார்த்தைகள் காணப்படுகின்றன.
உள்ளே வந்த இளைஞர்களில் சிலர் மட்டும் கலங்காமல் இப்போதும் சில கதவுகளைத் (அவரவர் திறமைக்கு ஏற்ப) தட்டி, உள்ளே நுழைகின்றனர். என்ன அநியாயம்! இங்கேயும் இன்னொரு மைதானத்தின் கதவுகளே காணப்படுகின்றன. ஆனால் ஒரு வேறுபாடு. இங்கே "முன் அனுபவம் உள்ளவர்", "புதியவர்" என்ற இரண்டே இரண்டு கதவுகள் மட்டுமே காணப்படுகின்றன.
"புதியவர்" கதவின் முன் புலம்பல்கள் கேட்கின்றன. "அந்த கம்பெனியில் சர்டிபிகேட் எல்லாம் வாங்கி வைச்சுக்குவாங்களாம்", "அதாவது பரவாயில்லை. இந்தக் கம்பெனியில் முதல் ஆறு மாசத்துக்கு வெறும் ஐநூறு ரூபாய் தான் சம்பளமாம்", "ஒருநாள் லீவு போட்டால் கூட சம்பளம் கட் பண்ணிடுவாங்களாம்".
"முன் அனுபவம் உள்ளவர்" கதவின் முன்னே நிற்பவர்களோ ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். "அட சும்மா புலம்பாதீங்கப்பா. முதல்லே ஒரு வேலையைப் பிடிங்க. அதிலே முழுமூச்சோடு ஈடுபடுங்க. அதே சமயம் உங்க திறமைகளையும் வளர்த்துக் கிட்டே வாங்க. நிறுவனத்திற்கு நீங்க அத்தியாவசியத் தேவை என்ற நிலை வரும்போது, பதவி உயர்வும், சம்பள உயர்வும் உங்களைத் தேடி வரும். அப்படி வராவிட்டால் வெளியில் வந்து, இந்த வரிசையில் நில்லுங்க. உங்க தகுதி, திறமை இவற்றோடு அனுபவமும் சேரும்போது நல்ல வாய்ப்புகள் கட்டாயம் வரும்".
இப்படிப்பட்ட ஒரு சூழலில் நமது படிப்பின் காரணமாகக் கிடைக்கும் பட்டங்கள், பட்டயங்கள் போன்றவை ஒரு "நுழைவு அனுமதிச் சிட்டு" மட்டுமே என்பதுதான் உண்மை.
இளைஞர்களே, கற்றுத் தேர்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. "இதனை, இதனால் நான் கற்பேன்" என்று குறிக்கோளுடன், உங்களுக்கு ஒத்திசைவானவற்றைக் கற்றுத் தேர்ந்தால், எண்ணியாங்கு எய்த முடியும். வேலையைத் தேடி நீங்கள் போக வேண்டாம். உங்களைத் தேடி வரும் வேலைகளிலிருந்து பிடித்ததைத் தேர்ந்தெடுக்க முடியும். சொல்லப் போனால் நீங்கள் பலருக்கு வேலை கொடுக்கும் காலம் சிக்கிரம் வரும்.

No comments:

Post a Comment