Saturday, October 30, 2010

வீதிக்கு வீதி மழைநீர்த் தொட்டி

வீதிக்கு வீதி மழைநீர்த் தொட்டி! (

மழை நீரைச் சேமிப்போம், நீர் வளம் பெருக்குவோம் - தமிழக அரசின் தற்போதைய கொள்கை முழக்கம் இது.
மழை நீர் சேமிப்புத் தொட்டி அமைக்கா விடில் குடிநீர்க்குழாய் இணைப்பு, மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற எச்சரிக்கை வேறு!
வீதியில் தேங்கும் மழைநீரைச் சேமிப்பதற்கு எந்தவொரு திட்டமும் வகுக்காமல், வீட்டின் மொட்டை மாடியில் விழும் மழைநீரைச் சேமிப்பதை மட்டும் சட்டத்தின் மூலம் கட்டாயப் படுத்துகிறார்கள்.
நகரங்களை எடுத்துக்கொண்டால் தெருக்களின் பரப்பளவும் கட்டடங்களின் பரப்பளவும் ஏறக்குறைய சமமாக இருக்கும். அப்படிப் பார்த்தால் வீதியில் தேங்கும் மழைநீரில் 50% கட்டடங்களில் உள்ள மொட்டை மாடியின் மூலமாகவும் கட்டடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் மூலமாகவும் வருகின்றது. மீதமுள்ள 50% மழைநீர் தெருக்களில் விழுவதனால் வருகின்றது. இவ்வாறு மொத்தமாக வரும் மழைநீரில் 50% சாக்கடை நீரில் கலக்கின்றது. 50% நிலத்தினால் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீராக மாறுகின்றது.
தெருக்களில் தேங்கும் மழைநீரைச் சேமிக்கத் திட்டம் வகுத்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் மழைநீர் சேமிப்புத் தொட்டி கட்டாயம் என்பதைத் தவிர்க்கலாம். இவ்வாறு நாம் மாற்று யோசனை கூறும் போது, திட்டம் தயாராகத்தான் உள்ளது. ஆனால் நடைமுறைப்படுத்த, போதிய நிதி ஆதாரம் இல்லை என்று கைவிரிப்பார்கள். மக்களிடம் மட்டும் நிதி என்ன குவிந்தா கிடக்கின்றது? இன்று உள்ள பொருளாதார நெருக்கடியில், நாட்டில் நிலவும் பஞ்சத்தில், பணப்புழக்கமே இல்லாத நேரத்தில் மக்களைச் செலவு செய்யக் கட்டாயப்படுத்தினால், மனத்தளவிலாவது அவர்களின் எதிர்ப்பைத்தான் சம்பாதிக்க நேரிடும். இதனால் திட்டத்தின் நோக்கம் பரிபூரணமாக நிறைவேறுவது கடினம்.
வைகை அணையிலிருந்து நீரை மதுரை நகருக்குக் குழாய் மூலம் கொண்டு வந்து, அதனை மேல்நிலை நீர்த்தொட்டியில் நிரப்பி, அதன் மூலம் மதுரை நகருக்குக் குடிநீர் விநியோகம் செய்யத் திட்டம் வகுக்கப்பட்டது. அதற்காக உலக வங்கியிடம் கோடிக்கணக்கான பணம் கடனாகப் பெற்று, அத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் சரியான செயல்பாடு இல்லாத காரணத்தினால், பெரும் செலவு செய்து கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தொட்டிகள் வீணாக உள்ளன.
ஆண்டுக்கு 15, 20 நாள்கள் மட்டுமே பெய்யக்கூடிய மழைக்கு (சில சமயங்களில் கூடலாம், குறையலாம்) வீட்டுக்கு வீடு மழைநீர் சேமிப்புத்தொட்டி என்பது நடைமுறைக்கு ஒத்து வரக்கூடியதா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
மேலும் நகரங்களில் நெருக்கமான கட்டடங்கள் உள்ள சூழ்நிலையில், சிறு இடம் கூட இல்லாமல் கட்டப்பட்ட கட்டடங்களில் மழைநீர் சேமிப்புத் தொட்டியைக் கட்டடத்துக்கு உள்ளேயே அமைத்தால் அது ஆபத்தானதாக அமையாதா?
மேலும் சில நேரங்களில் அசாதாரணமாக கடும் மழை பெய்யக்கூடும். அச்சமயங்களில் வீட்டுக்கு உள்ளே அமைக்கப்பட்டு இருக்கும் மழைநீர் சேமிப்புத் தொட்டி நிரம்பி வழிந்து, வீடு முழுவதும் வெள்ளமாக வாய்ப்புள்ளது.
வேண்டுமானால், இனி கட்டப் போகும் கட்டடங்களுக்கு உரிய ஏற்பாடுகளுடன் இத்திட்டத்தைக் கட்டாயப்படுத்தலாம். அதில் நடைமுறைச் சிக்கல் இருக்காது.
மழைநீர் கட்டாயம் சேமிக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது. அப்படியானால் மழைநீரைச் சேமிக்க மாற்றுத் திட்டம்தான் என்ன?
வீடுகளில் உள்ள கழிவுநீரை வெளியேற்ற, தெருக்களில் பாதாளச் சாக்கடை உள்ளதைப்போல, தெருவுக்குத் தெரு மழைநீர் சேமிப்புத் தொட்டிகளை அமைத்து அத் தெருக்களில் உள்ள கட்டடங்களின் மொட்டை மாடிகள் அனைத்தையும் குழாய் மூலம் இணைத்து, தெருக்களில் தேங்கும் மழைநீரையும் சேர்த்து, மழைநீர்ச் சேமிப்புத் தொட்டியுடன் இணைத்துவிடலாம்.
வீட்டுக்கு வீடு மழைநீர் சேமிப்புத்தொட்டி அமைப்பதைக் காட்டிலும் தெருவுக்குத் தெரு அமைப்பதில் சிரமம் ஒன்றும் கிடையாது. செலவும் குறையலாம். அந்தச் செலவைக் கூட, ஒவ்வொரு வீட்டுக்கும், வீட்டு வரியுடன் சேர்த்து, தவணை முறையில் வசூலிக்கலாம். இதனால் மக்களுக்கும் சுமை தெரியாது. இதன் மூலம் அந்தநாள் முதல் இந்த நாள் வரை தெருக்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்குத் தீர்வு காணப்பட்டுவிடும். ஊர்கூடித் தேர் இழுத்தால் நிலைக்கு வந்து சேரும். ஊர் மக்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு தேராக இழுக்கக் கட்டாயப்படுத்தாமல், ஊர்மக்கள் அனைவரும் விரும்பி ஒன்று சேர்ந்து ஒருதேரை இழுக்க வைத்தால் வெற்றி நிச்சயம்!

No comments:

Post a Comment