Tuesday, October 26, 2010

மரம் நட்டவன்

Tamil Katturaikal - General Articles
மனித நாகரிகத்தின் வேட்கையால் இயற்கைக்கு எதிரான ஒரு முரணியக்கம் பன்னெடும் காலமாக இயங்கி வருகின்றன. அந்த முரணியக்கத்தின் செயலால் மனிதனுக்கும் இயற்கைக்குமான தொடர்பினை தொலைதூரத்திற்கு அப்பால் இட்டுச் செல்கின்றது. இந்த உண்மையினை தற்பொழுதுள்ள காலச்சூழலில் உணரும் நிலை பெற்றுள்ளோம்.
"நீரின்றியமையா உலகம்" என்னும் வாக்கிற்கேற்ப மனிதனின் தண்ணீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. ஆனால், காட்டை அழித்து நாட்டை உண்டாக்கும் வேட்கையால் நீரின் வளம் குறைந்து கொண்டே போகின்றது. போருக்காக "மூன்றாம் உலகப்போர்" மூழும் அபாயம் கூட உள்ளது.
"வீட்டிற்கோர் மரம் வளர்ப்போம்" என்கிறது அரசு. ஆனால் வீடு? கேட்கிறான் பாமரன். நிலை இப்படி இருக்க, இன்றைய நாளேட்டில் "அமைதிக்கான நோபல் பரிசு" பெற்றவர் கென்ய நாட்டைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் வங்காரி மாத்தாய் "மரம் வளர்போம் அழிந்துவரும் பசுமையை காப்போம்" என்னும் கொள்கைக்காகத் தரப்பட்டது விருது.
இதே பாணியில் 1910-ம் ஆண்டில் இந்தியாவில் ஒரு பெரிய சாதனை செய்தவர் ஹ்யூகோ வுட் (Hugo Wood) இந்திரகாந்தி வனச் சரணாலயம் இன்று வளர்ந்து சிறப்புப் பெற்றதற்கு இவரது பங்கும் அளப்பரியது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.
உலகிலேயே பல்லுயிரியத்திற்குப் பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றான மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதிதான் ஆனைமலைத் தொடர். மலையின் அடிவாரத்திலிருக்கும் ஆனைமலை என்ற பெயருடைய கிராமம் வரை இக்காடு பரந்திருந்தன. 1800 இல் இங்கு பயணித்த புக்கனன் (Buchannan) என்ற ஆங்கிலேயர் இக்காடுகளின் வளத்தைப் பற்றியும் அதிலும் அங்குள்ள தேக்கு மரங்களைப் பற்றியும் பக்கம் பக்கமாகத் தனது பயண நூலில் எழுதி விட்டார். இவ்வூருக்கருகே உள்ள ஒரு குன்றின் மேலிருக்கும் கோட்டை திப்புசுல்தான் வசமிருந்தது. கும்பினிப்படை புதர்களையும், மரங்களையும் வெட்டித் தான் அதை அணுக வேண்டியிருந்தது என்றும் புக்கனன் எழுதியிருந்தார். இந்தக் காட்டுக்குப் பிடித்தது சனியன். 1820இல் வார்டு மற்றும் கொன்னர். (Ward and Connor) என்ற இரு ஆங்கிலேயர்கள் ஆனை மலை பகுதியை சர்வே செய்ய அனுப்பப்பட்டனர். தாங்கள் வேறு எங்கும் கண்டிராத பெரும் தேக்கு மரங்களைக் கொண்ட காடுகள் இங்கு அடர்த்தியாக இருப்பதைப் பதிவு செய்தார்கள்.
மரம் வெட்டும் வேலை இங்கு பெருமளவில் ஆரம்பமானது. இப்பகுதியில் அன்று சாலைகள் கிடையாது. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் அல்லவா. ஆகவே வெட்டப்பட்ட மரங்கள் ஒரு மலைச்சரிவிலிருந்து பொன்னானி நதிக்குள் விழும்படி தள்ளப்பட்டு மிதவைகளாக கொச்சிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து கப்பல்கள் மூலம் இங்கிலாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. மலைமுகட்டிலிருந்து மரங்கள் கீழே தள்ளப்பட்ட இடத்தில் உள்ள கிராமம் இன்றும் டாப் ஸ்லிப் (Top Slip) என்றறியப் படுகின்றனது. ஒரு அஞ்சலகம் கூடி இப்பெயரில் இங்கு இயங்குகின்றது. பொள்ளாச்சியிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ளது டாப்ஸ்லிப் கிராமம்.
பல்லூழிகாலமாகத் தழைத் திருந்த காடுகளின் அழிவு ஆரம்பமானது. பல பதிற்றாண்டுகள் மர வெட்டு வேலை தொடர்ந்தது. 1889 ஆம் ஆண்டு டாப் ஸ்லிப்பிலிருந்து, 11 கி.மீ. நீள தண்டவாளம் ஒன்று போடப்பட்டு, மாடுகளால் அல்லது யானைகளால் இழுக்கப்பட்ட ரயில் பெட்டிகள் மூலம் மரங்கள் கொண்டு செல்லப்பட்டன. பொள்ளாச்சியிலிருந்து ரயில் மூலம் வேறு இடங்களுக்கு மரங்கள் அனுப்பப்பட்டன. அந்த ஆண்டுகளில்தான் இந்தியாவில் பல இடங்களில் ரயில் பாதைகள் போடப்படும் பணியும், தந்தி, மின்சார கம்பிகள் இணைக்கும் வேலையும் நடந்து கொண்டிருந்தது. ஆகவே தண்டவாளத்தில் போடும் ஸ்லீப்பர் கட்டைகளுக்காகவும், தந்திக் கம்பங்களுக்காகவும் மரம் தேவைப்பட்டது. நம் நாட்டிற்கு வெளியே, பிரித்தானியர்களுக்கும் பிரான்ஸ்சுக்கும் நடந்துகொண்டிருந்த போராட்டத்தில், கப்பல் கட்ட, தேக்கு தேவைப்பட்டது. ஈட்டி, வேங்கை, மத்தி, பலா, மருதம் எனப் பல வகைப் பட்ட மரங்கள் கோடாலிக்கிரையாயின. அதிகமான மரங்களை வெட்டி, காடு திருத்திய வேட்டைக் காரன்புதூர் காண்ட்ராக்டர் ஒருவருக்கு பிரித்தானிய அரசு, தந்தத்தால் ஆன பல்லக்கு ஒன்றைப் பரிசளித்தது பற்றிய குறிப்பொன்றை நான் கண்டதுண்டு. வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா இந்திய தேக்கு மரங்களில்லாமல் ஆங்கிலேயர்கள் பிரான்ஸ்சை வென்றிருக்க முடியாது என்கிறார். வெட்ட வெட்ட குறையாத காடுகள் போல காணப்பட்டாலும் அங்கே நாளடைவில் மர அறுவடை குறைந்தது. இந்தக் கட்டத்தில்தான் அங்கு ஹ்யூகோ வுட் வந்து சேர்ந்தார்.
முன்னர் ராஜஸ்தானில் அஜ்மிர் காடுகளில் அவர் செய்த அரிய பணியைக் கவனித்த பிரித்தானிய அரசு அவரை ஆனைமலையில் பணிபுரிய, கோயம்புத்தூர் வனக் கோட்டத்திற்கு அனுப்பியது. அவர் அங்கு வந்து அப்பகுதியின் மர வளம், காட்டுவாகு இவற்றைக் கூர்ந்து கவனித்து 1915 இல் ஒரு செயல் திட்டத்தை (working Plan) தாயரித்து அரசுக்கு சமர்ப்பித்தார். மர அறுவடையை நிறுத்தாமல் ஆனைமலைக்காடுகள் பொட்டலாகி விடாமல் அழிவினின்று காப்பதே அத்திட்டத்தின் சாரம். இதில் அவர் இருமுனைச் செயல் பாட்டை வலியுறுத்தினார். முதலாவது, மரங்களை அடியோடு வேரோடு வெட்டக்கூடாது. அடி மரத்தின் ஓரிரு அடிகளை விட்டு விட்டு வெட்டினால் வெட்டுமரமும் கிடைக்கும். அடிமரத்திலிருந்து மறுபடியும் மரமும் துளிர்க்கும். இன்று நாடு முழுவதும் கையாளப்படும் Coppice Method எனப்படும் இந்த மர அறுவடை முறை வுட் அறிமுகப்படுத்தியதுதான் இரண்டாவது, சில காட்டுப்பகுதிகளை 25 ஆண்டுகளுக்குத் தொடாமலிருப்பது. அரசு இதற்கு ஒத்துக் கொண்டது. வெட்டப்பட்ட மரங்களை சிர் செய்ய, தூவானம் மலையருவி மூலம் இயக்கப்பட்ட மர அறுப்பு சாலை ஒன்றை வுட் நிறுவினார். அதில் பணிபுரிய காட்டில் வாழும் பழங்குடியினரான காடர்களை அமர்த்தினர். காட்டுவளம் என்பது வங்கியிலிருக்கும் மூலதனம் போல, வட்டியை மட்டும் எடுத்துப் பயன்படுத்தி, காட்டையும் காப்பாற்றி வைக்க முடியும் என்ற கோட்பாட்டை அவர் நிரூபித்துக் காட்டினார்.
இன்றும் வுட் தொரை பற்றிய கதைகளை காடர்கள் அன்புடன் நினைவு கூறுகின்றனர். அங்கேயே ஒரு சிறுவீட்டில் தனியாக வசித்த வுட் காடுகளை சுற்றி வரும்போது தனது ஊன்றுகோலால் ஒரு தரையில் ஒரு சிறு குழி செய்து, அதில் பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து ஒரு தேக்குமர விதையைப் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்கின்றனர். தான் இறந்தபின் தான் நேசித்த இந்தக் காட்டிலேயே தனது உடல் புதைக்கப்பட வேண்டுமென்று உயில் எழுதி சமாதி பராமரிப்புக்கென சிறு தொகையையும் ஒதுக்கி வைத்து 1933இல் இவர் காலமானார். அவர் உடல் டாப் ஸ்லிப்பில் புதைக்கப்பட்டது. அந்த உயிலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பல அலுவலகங்களுக்குச் சென்று தேடினேன். ஒரு தடயமும் கிடைக்கவில்லை.
ஆனைமலை காடுகள் இவரால் காப்பாற்றப்பட்டன. சென்னை ராஜதானியில் பல மலைப்பகுதிகள் தேயிலை, காப்பி, சின்கோனா மற்றும் ஏலக்காய் போன்ற தோட்டப் பயிர்களுக்காக அழிக்கப்பட்டு "பசும் பாலைவனமாக" மாற்றப்பட்டபோதும், 1942 இல் அந்தமான் மற்றும் மையன்மார் காடுகள் ஜப்பானியர் பிடிக்குள் போனதால் மரத்தட்டுப்பாடு ஏற்பட்டபோதும் கூட ஆனைமலை காடுகளை யாரும் தொடவில்லை. இன்று அவை இந்திராகாந்தி வனச் சரணாலயம் என்று உலகப் புகழ் பெற்று விளங்குகின்றன. புதர்க்காடுகள், இலை யுதிர்க்காடுகள், மழைக்காடுகள், புல்வெளிகள் என பலவகையான வனப்பகுதிகளை உள்ளடக்கிய இவ்வரிய உறைவிடம், அழிவின் விளிம்பிலிருக்கும் சிங்கவால் குரங்கு, வரையாடு, வேங்கை போன்ற அரிய விலங்குகளின் வாழிடமாக இன்று அறியப்படுகின்றது. ஆழியார், அமராவதி போன்ற நதிகளுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்குகின்றது. தஞ்சைப் பெரிய கோவில், கர்நாடக இசை இவைகளை நமது பாரம்பரியமென்று போற்றும் நமக்கு யுகங்களுக்கு முன் உருவாகி, இன்றும் அரிய காட்டுயிர்களின் வாழிடமாக விளங்கும் காடுகள் போற்றுவதற்குரிய பாரம்பரியமாகத் தெரிவதில்லை. நதிகள் வறண்டதற்கான, நீர்த் தட்டுப்பாட்டுக்கான காரணங்களை தேடிக் கொண்டிருக்கின்றோம்.
(மரம் தான் மண்ணின் உயிர், "மரம் தான்.... மனிதன் எல்லாம் மறந்தான்" என்னும் நிலை ஏற்படாமல் மறைந்தாலும் மறுக்க முடியாத சாதனை செய்ய ஹ்யூகோ வூட் (Hugo Wood) யாக மாறுவோம்.)

No comments:

Post a Comment