Tuesday, October 26, 2010

அலைகள் ஓய்வதில்லை (

அலைகள் ஓய்வதில்லை (

Tamil Katturaikal - General Articles சுனாமி பேரலைகள் ஓய்ந்த போதிலும் அதன் தொடர்ச்சியாக பல்வேறு விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. ஒரு நாட்டிலிருந்து பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லாமலேயே மனித உடல்களும் விசித்திரமான பல பொருட்களும் வேறு நாடுகளுக்குச் சென்று கரை ஒதுங்கியுள்ளன.
அண்மையில் அபூர்வமான வடிவமைப்பு கொண்ட பழங்கால புத்தர் சிலை ஒன்று தமிழ்நாட்டில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது. கரையோரங்களில் அமைந்திருந்த கோயில்கள் தேவாலயங்கள் மற்றும் பல்வேறு பகுதியிலிருந்து சுனாமி பல பொருட்களை வாரிக் கொண்டு போய் வஞ்சகமில்லாமல் பல நாடுகளுக்கும் கடல் விநியோகம் செய்து வருகிறது. பெரிய தேக்கு மரங்கள், அபூர்வமான கலைப் பொருட்கள் எனத் தொடங்கி உடுத்துகின்ற ஆடை வரை எண்ணற்ற பொருட்கள் கடலில் மிதந்தபடி இருப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர். தென்னாப்பிரிக்கக் கடல்ப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது ஒரு சிலை வந்து மோதிய சம்பவமும் நடந்தது. அது ஒரு அனுமன் சிலை அதைப்பார்த்து அதிசயித்த அக்கடற்கரையில் இருந்த சுற்றுலாப்பயணிகள் அதன் பூர்விகத்தை ஆராய்ந்து வருகின்றனர்..
தமிழகத்தில் சுனாமிக்குப் பின் நடுக்கடலில் இருந்து கரையொதுங்கும் மருந்துக் குப்பிகள், பாட்டில்கள் போன்றவை கடலியல் ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. சுனாமிக்குப் பின் தமிழகக் கடலோரப் பகுதிகளில் பல்வேறு பொருட்கள் கரை ஒதுங்கி வருகின்றன. இலங்கை, அந்தமான் போன்ற தீவுகளில் இருந்து இந்தியக் கடலோரத்தில் கரை சேர்ந்த பல பொருட்களை ஆய்வுக் குழுவினர் ஆராய்ந்ததில் விசித்திர தகவல்கள் கிடைத்துள்ளன.
சுனாமியால் கரை சேர்ந்த பொருட்கள் கடலோர காடுகள், நீர்நிலைகள், புதர்கள், கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளன. அப்பொருட்கள் இந்தியக் கடற்கரை சூழலுக்குப் முற்றிலும் புதிதானதாகவும், பொருத்தமற்றதாகவும் காணப்படுவதாக அக்கடலியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் கோடியக்கரை பகுதியில் மருந்துக் குப்பிகளும், பிளாஸ்டிக் மருந்து, பாட்டில்களும் இரத்தம் உறிஞ்சவும், செலுத்தவும் பயன்படும் குழாய்கள் ஒதுங்கியுள்ளன. வேதாரண்யம் வனத்துறைக்குச் சொந்தமான கடற்கரை மரங்களின் இடையேயுள்ள சமவெளியில் விலங்கு மற்றும் மனித மண்டையோடுகள் சிதறிக் கிடக்கின்றன. சில இடங்களில் நுரையுடனும், கரியப்படிவுகள் ஒதுங்கியுள்ளன. சுண்ணாம்புத் தன்மையை ஒத்துள்ள பளபளப்பான வெண்ணிற படலங்களும் கடற்கரையில் படிந்துள்ளன. கடற்கரையை ஒட்டியுள்ள கிராமங்களில் எல்லாம் இதே நிலைதான் தென்படுகின்றன.
இப்பொருட்களுடன் அந்தமான், இலங்கை பகுதியில் இருந்து மிதந்து வந்துள்ள மரங்கள், விதைகள், மட்டைகள் கலந்துள்ளன. இதனால் புதிது புதிதாக தாவரங்கள் அந்நாடுகளில் முளைப்பதற்கான சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளன. கடல் என்பதே ஒரு அதிசயம் தான்! எத்தனையோ மர்மங்களைத் விஞ்ஞானயுகத்திலும் ஆச்சர்யப்படுத்த தவறுவதில்லை; அது Titanic ஆக இருந்தாலும் சரி, தனுஷ்கோடியாக இருந்தாலும் சரி. மனித குலத்திற்கு ஆச்சர்யம் ஊட்டும் அனுபவம். கடல், எதிர்காலத்தில் அப்படிதான் இருக்கப்போகிறது. சுனாமியின் செய்திகளை, வருங்காலத் தலைமுறைக்குத் தரும் அதிசயத்தை கடல் செய்யப் போகிறது. அலைகள் எப்போதும் ஓய்வதே இல்லை.

No comments:

Post a Comment