Tuesday, October 26, 2010

நம்மால் முடியும்

நம்மால் முடியும் ( We can do - Tamil Katturaikal - General Articles
சுதந்திரப் போராட்டத்திற்குப் பின்பு, இதுவரை இந்தியர்கள் அனைவரும் இணைந்து ஒரு பொதுப்பிரச்சினைக்காக ஒட்டு மொத்த மக்கள் இயக்கத்தை நடத்தியதாகத் தெரியவில்லை. ஆனால் மக்கள் சிறுசிறு பிராந்தியங்களாக, பகுதிகளாக, தொகுதிகளாகப் பிரிந்து சிறிய சிறிய பிரச்சினைகளுக்காக இயக்கங்களை உருவாக்கி ஆங்காங்கே போராடி வருவதை நாம் பார்த்து வருகிறோம். பெரும்பாலான நேரங்களில் இந்த இயக்கங்கள் வெற்றியும் பெற்றுள்ளன. ஆனால், இன்று நாம் சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒட்டு மொத்த இந்தியர்களின் எதிரியான வெள்ளையர்களை விரட்டுவதற்கு இயக்கம் அமைத்துப் போராடியது போல் போராட வேண்டிய தருணம் வந்துவிட்டது. எதை விரட்ட ஓர் இயக்கம் உருவாக்கி நாம் போராட வேண்டும்? ஊழலை ஒழிக்கப் போராட வேண்டும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் போராட வேண்டும். இயற்கை வளத்தைப் பாதுகாக்க, செழுமைப்படுத்த நாம் போராட வேண்டும். இந்த போராட்டம் நமக்கானது மட்டுமல்ல நம் எதிர்காலச் சந்ததியினருக்கானதும் ஆகும்.
வறுமை என்பது ஏழைகளை மட்டும் வாட்டி வதைப்பது அல்ல. அது பணம் படைத்தோரையும் பாதிக்கும். வறுமை நிறைந்த நாட்டில் வசதியாளர்கள் அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழ இயலாது. வசதியானவர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை வந்துவிடும். ஏழ்மை நிறைந்த நாட்டில் சுற்றுச் சூழல் பாதிப்படையும். இயற்கை வளங்களைச் சுரண்டி வசதியாக வாழ முயலலாம். ஆனால் அது அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கும். எனவே வறுமை, சுற்றுச்சூழல், ஊழல், இயற்கை வளங்கள் இவை அனைத்தும் பொதுப்பிரச்சினைகள். இவற்றைச் சரி செய்ய அரசாங்கம் என்னதான் முடிவு எடுத்தாலும் மக்கள் இணைந்து போராடவில்லை என்றால், இந்த பிரச்சினைகளை எந்தக் காலத்திலும் தீர்க்க முடியாது.
வீட்டைச் சுத்தம் செய்து குப்பையை மக்க வைத்தால், வீட்டுச் செடிகளுக்கு உரமாக வைக்கலாம். ஆனால் நம் மக்கள் வீட்டைக் கூட்டி, வீதியில் கொட்டி விட்டு வீட்டைச் சுத்தம் செய்து கொள்கின்றனர். வீதியில் கொட்டிய குப்பை, கொசுவை உற்பத்தி செய்து அதன் மூலம் அந்த வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் நோயை உற்பத்தி செய்கிறது. அளவில்லாமல் காட்டில் மரங்களை வெட்டி விற்போர், அளவில்லாமல் மணலையும், கனிம வளங்களையும் அள்ளி, இயற்கை வளங்களைச் சூறையாடித் தன் வளத்தைப் பெருக்கும். தனிநபர்கள் ஒன்றை யோசித்துப் பார்ப்பதில்லை. கனிம வளங்கள் பூமியில் உருவாக எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பிடிக்கும் என்பதை அவர்கள் அறிவது கிடையாது. பூமியில் தண்ணீர் குறைந்தால், மழை குறைந்தால், வெப்பம் அதிகாரித்தால், அது தன்னையும் பாதிக்கும் என்பதைப் புரிந்து கொள்வதில்லை. பணம் பண்ண வேண்டும் என்பதே பிரதானமாக இருக்கிறது. நாம் வாழும் சமுதாயத்தின் தண்ணீரைக் கெடுத்து விடுகிறோம். காசு இருந்தால் தண்ணீரை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என மக்கள் எண்ணுகின்றனர். தண்ணீர் பூமிக்குள்ளிருந்து கிடைக்கவில்லை என்றால் பணத்தைத் தண்ணீருக்குப் பதிலாகக் குடிக்க முடியாது. இயற்கைவளம் என்பதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதும் ஒட்டு மொத்த சமுதாயத்திற்குப் பலனிக்கும் கூறுகளாகும். தனிமனித வளமைக்காக அவற்றைச் சூறையாடுவது தன் வீட்டுப் பணத்தைத் தானே திருடிச் செலவழிக்கும் உதவாக்கரைப் பிள்ளையின் செயலைப் போன்றதாகும். சமுதாயத்தில் ஏழ்மை இருந்தால் நமக்கென்ன என்று எண்ணுபவர்கள் அதிகமுண்டு. ஆனால் அவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். ஏழ்மையும் வறுமையும் கூடக்கூட பொது நியதிகள் கெட்டொழிந்து எவருக்கும் ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலை சமுதாயத்தில் உருவாகும். மாறாக, ஏழ்மை குறையக் குறைய பொது நியதிகள் அதிகரிக்கும். அது தான் ஒரு சமுதாயத்திற்குப் பாதுகாப்பைத் தரும்.
இந்தப் பிரச்சினைகளை நம்மால் சரி செய்ய முடியாதா? முடியும். ஆனால் நாம் முயலுவதில்லை. ஓர் ஊரில் பசியால் வாழும் குடும்பங்கள் எத்தனை என்பதைக் கண்டறிய விஞ்ஞானிகள் தேவையில்லை. அந்த ஊரில் அவர்கள் வசிக்கும் தெருவில் நின்று யாரைக் கோட்டாலும் சொல்லி விடுவார்கள். இவர்களின் பெயரைப் பட்டியலிட்டுக் கிராமசபையில் வைத்து அனுமதி வாங்கி, அத்தனை பேருடைய பசியையும் தீர்க்க நம்மிடம் திட்டங்கள் இருக்கின்றன. இருந்தாலும் நாம் செய்வதில்லை. அப்படியே செய்ய முன்றாலும் நமது சமூகம் விடுவதில்லை. குழப்பத்தில் காலத்தைத் தள்ளும் மனோபாவம் அனைவரிடம் வந்துவிட்டது. அதன் விளைவுதான் உண்மையான வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் கேட்பாரின்றிக் கிடக்கிறார்கள். அதேபோல் ஒரு கிராமத்தில் பொதுச் சொத்துகளை ஒரு சிலர் ஆக்கிரமிக்கிறார்கள் என்றால் அதைப் பொதுமக்கள் தட்டிக் கேட்பது கிடையாது. இதன் விளைவால் அரசின் பல திட்டங்களை நிறைவேற்ற முடிவதில்லை. இதற்கு ஒரு சிறிய உதாரணம்: மகளிருக்கு பொதுக் கழிப்பிட வசதி செய்ய அரசிடம் திட்டம் உள்ளது. பல இடங்களில் இடம் இல்லாத காரணத்தால், அங்கு சுகாதார வளாகங்கள் கட்ட இயலவில்லை. அதே நேரத்தில் அங்குள்ள பொது இடத்தைச் சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். ஆனால் அந்தப் பொதுஇடத்தை மீட்கப் பஞ்சாயத்தால் முடியவில்லை. மக்களும் நமக்கேன் வம்பு என இருக்கின்றனர். இதனால் அரசாங்கத்தில் இருப்போர் மக்களை எளிதாக எடுத்துக் கொள்கின்றனர். மக்களும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று நழுவி விடுகின்றனர். எந்த ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மக்களின் விழிப்புணர்வு மிகவும் இன்றியமையாததாகும். பெரும்பாலான நேரங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு வந்தாலும் வீறுகொண்டு செயல்படத் துணிவு வருவது கிடையாது.
யார் முன்னேற வேண்டும் என்று துடிக்கின்றார்களோ? அவர்கள் அரசின் முடிவுகளை புரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்திக் தங்களை வளமாக்கிக் கொண்டு வருகிறார்கள். மற்றவர்கள் அரசின் செயல்படுகளைப் புரிந்துகொள்ள இயலாமல் பார்வை யாளர்களாக, பயனாளிகளாக, மனுதாரராக, வாக்காளராக மட்டுமே இருந்து தங்கள் முன்னேற்றம் மற்றவர்கள் மூலம் நடைபெறும் என்று எண்ணி வாழ்ந்து வருகின்றனர். பல நேரங்களில் பல திட்டங்களைத் தகுதியுடையவர்கள் பெறத் தவறியதன் காரணமாக, தகுதியற்றவர்கள் அந்தப் பலன்களை எல்லாம் அடைந்து விடுகின்றனர். ஏழைகள் அரசைக் கண்காணித்துத் தமக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளைப் பெற்றாக வேண்டும். நாம் ஒதுங்கி இருந்து, யாராவது நம்மைப் பார்த்துக் கொள்வார்கள் என்றால், நம்மை ஓரம் கட்டிவிட்டு மற்றவர்கள் முன்னேற்றத்தை நோக்கி ஓடி விடுவார்கள். இப் பிரச்சினையைக் களைவதற்குத்தான், வளர்ச்சிச் செயல்பாடுகளில் மக்களின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் எனச் சிந்தனையாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.
வறுமை ஒழிப்பிற்கு, அரசாங்கத்தின் திட்டங்களை விட, வறுமையில் உள்ளவர்கள் தாங்கள் வறுமையிலிருந்து வெளியேற வேண்டும்; வறுமையை வெளியேற்ற வேண்டும் என எண்ண வேண்டும். அதற்கு அந்த மக்களை விழிப்புணர்வு அடையச் செய்ய வேண்டும். ஆனால் நம் அரசியல்வாதிகள் உங்கள் பெயரை நான் பயனாளிப் பட்டியலிலிருந்து எடுக்காமல் பார்த்துக் கொள்கிறேன். என்ற உறுதிமொழியைக் கொடுத்து விடுகிறார்கள். "வறுமையில் வாடும் நபர்களும், தொடர்ந்து இதைத் தகுதியாகவும் பதவியாகவும் கருதி, பட்டியலில் நிரந்தர இடத்தைப் பெறக் கட்சிக்காரரைப் பிடிக்க முயலுகின்றனர். இதை விடுத்து "வெள்ளையனே வெளியேறு" இயக்கம்போல வறுமையை ஒழிக்க "வறுமை ஒழிப்பு இயக்கம்" நம் இயற்கை வளங்களைப் பாதுகாக்கப் "பசுமை இயக்கம்", "சுற்றுச்சூழல் இயக்கம்", "இயற்கை வளப் பாதுகாப்பு இயக்கம்" என மக்களைத் திரட்டிப் பஞ்சாய்த்துடன் சேர்ந்து செயல்பட்டால் நாம் எண்ணியதை அடைய முடியும்.

No comments:

Post a Comment