Saturday, October 30, 2010

உலகமயமும் உழவர் இயக்கமும்

உலகமயமும் உழவர் இயக்கமும் Impact of globalization on small farmers worldwide - Tamil Katturaikal - General Articles
இன்றைக்கு நாம் சந்தித்துக்கொண்டிருக்கிற முக்கியமான பிரச்சினை உலகமயம்.
உலகமயம் என்பது மூலதனமும், உழைப்பும் உற்பத்திப் பொருள்களும் நாடுகடந்து தாராளமாகச் செல்வது என்றப் பொருளியல் கோட்பாட்டைக் குறிக்கிறது. நாட்டு எல்லைகள், தனித்தன்மைகள், ஆட்சி முறைகள் போன்றவை பொருளியல் துறையில் அர்த்தமற்றதாக மாற்றப்படுவது என்பதே இதன் உண்மையான பொருள். உலகமயத்தை பொருத்தவரை எல்லா நாடுகளும் சந்தைதான்.
உலகமயம் உழவர்களை எப்படி தாக்குகிறது. உழவர் இயக்கம் அதை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்வி எழுகிறது. இந்தியா முழுவதும் உழவர்கள் தொகை தொகையாக தற்கொலை செய்துக்கொண்டிருக்கிறார்கள். என்ற செய்தியை நாம் பார்க்கிறோம். தமிழ்நாட்டில் உழவர் தற்கொலைகள் குறைவு. அனைத்திந்திய அளவில் கிட்டதட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த தற்கொலை நடந்திருக்கிற இடங்கள் இரண்டு வகையில் முக்கியமானவை. குஜராத், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு இந்த பகுதிகள் எல்லாம் பசுமைப் புரட்சியின் மையப் பகுதியாக கருதப்பட்டவை. இவைகளெல்லாம் பசுமைப் புரட்சியின் அடிப்படையில் உற்பத்தியை உயர்த்திக் காட்டிய மாநிலங்கள். இன்னொன்று.... இந்த மாநிலங்கள் எல்லாம் உழவர் இயக்கங்களில் வலுவான மாநிலங்கள். ஆந்திராவைச் பற்றிச் சொல்லத் தேவையில்லை. கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, போன்ற மாநிலங்கள் வலுவான உழவர் இயக்கத்தைப் பெற்றவை. எல்லா இடத்திலும் செங்கொடி சார்ந்த உழவர் இயக்கங்கள் பழைய காலத்திலே சிறப்பான அர்ப்பணிப்போடு மகத்தான தியாகங்களைச் செய்து உழவர்களை திரட்டி போராடி இருக்கிறது. உரிமைகளை நிலை நாட்டி இருக்கிறது. அந்த இடத்தில்தான் உழவர் தற்கொலையும் அதிகமாக இருக்கிறது. இது எப்படி நேர்ந்தது?
1947இல் இந்திய சுதந்திரம் வந்தது. சுதந்திரம் வாங்கிய முதல் பத்தாண்டுகளில் காங்கிரஸ் கட்சி தன்னுடைய வாக்குறுதியாக கூறியவற்றில் பலவற்றை நிறைவேற்ற வேண்டிய தேவை இருந்தது. பல அணைகளைக் கட்டினார்கள் - வேளாண்மை மீது கூடுதலான அக்கறை செலுத்தினார்கள் - வேளாண்மைக்கான முதலீடு அதிகம் செய்தார்கள். பல வேளாண் திட்டங்கள் வகுத்தார்கள். வேளாண்மைத் துறை சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கியது. இது 60-64 வரை.
அந்தக் காலத்தில் உழவர்கள் வாழ்வில் சில மாறுதல்கள் தொடங்கின. அவர்கள் ஏற்கெனவே கைக்கும் வாய்க்கும் உழைத்துக்கொண்டு இருந்தவர்கள். ஒரு பகுதியை விற்பனை செய்யலாம் என்ற அளவுக்கு வளர்ந்தார்கள். ஆனால் காங்கிரஸ் ஆட்சியுடைய திட்டமிட்ட பொருளாதாரத்தின் அடிப்படை நோக்கம் உழவர்கள் வேளாண்மையில் உயரவேண்டும். வேளாண்மை இலாபகரமானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை மையமாக கொண்டதல்ல. மாறாக பொருளாதாரத்தை தொழில் மயமாக மாற்ற வேண்டும் என்பதே மையநோக்கம். விவசாயிகளுக்கான அடிப்படை தேவைகளை அவர்கள் செய்ததற்கான நோக்கம் வேளாண்மையிலிருந்து உபரி கிடைக்க வேண்டும் அந்த உபரியை மற்ற பொருளாதார துறைக்கு மாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் சோகம் என்னவென்றால் காங்கிரஸ் கட்சியினுடைய அந்த பொருளாதாரப் பார்வைதான். இங்கே இயங்கி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இருந்தது. பிற இடதுசாரிகளுக்கும் இருந்தது.
விவசாயம் என்றால் பின்தங்கியத்தனம், கிராமப்புற வாழ்க்கை பிற்போக்கின் மையம் என்ற கருத்து இவர்களுக்கும் இருந்தது.
1970களுக்கு முன்பு வரையிலான காலகட்டத்தில் நிலக்கிழமைக்கு எதிரான, சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான மகத்தான போராட்டங்கள் செங்கொடி உழவர் இயக்கம் நடத்தியது. தியாகங்கள் நடந்தன. பல உரிமைகள் நிலை நாட்டப்பட்டன.
ஆனால் பசுமைப்புரட்சி கிராமப்புறங்களில் - அங்கு நிலவிய உறவுகளில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியது. கூலி உழைப்பின் மூலம் உற்பத்தி நடத்தும் முதலாளிய முறை வேளாண்மையில் நீக்கமற நிலை கொண்டது. நவீன எந்திரங்களும், புதிய ஒட்டு விதை வகைகளும், இரசாயன உரங்களும் வந்தன. முதல் ஐந்தாண்டுகளில் பசுமைப்புரட்சி மூலம் உற்பத்தி பெருகிறது. உற்பத்தித் திறனும் பெருகியது.
75-80ம் ஆண்டுக்கு பிறகு சிக்கல் தலை தூக்க தொடங்கிவிட்டது. மீண்டும் மீண்டும் அதிகமாக செலவு செய்து வேளாண்மை செய்து கடன்படுவது என்ற நிலைமை பசுமை புரட்சியின் மையக் காலத்தில் தலை தூக்கியது. இந்த பிரச்சினையை எதிர்கொள்வதற்கு தெளிவான பார்வையோடு செங்கொடி இயக்கம் இல்லை.
அதிக உற்பத்தி - அதிகக் கடன் என்ற புதிய நிலையில் ஒட்டு மொத்த வேளாண்மைத் தொழிலையே பாதுகாக்க வேண்டியநெருக்கடி தலைதூக்கியது. வேளாண்மைத் தொழிலுக்குள் இருக்கிற வர்க்கப்பிரிவினரிடையே நடக்கும் மோதல் பின்னுக்குச் செல்லத் தொடங்கியது. இந்தப் புதிய நிலைமையை செங்கொடி உழவர் இயக்கம் உரியவாறு புரிந்து கொள்ளவில்லை.
எனவே 1970களுக்குப் பிறகு செங்கொடி உழவர் இயக்கம் தேங்கிப்போனது. வெண்மணி தியாகத்திற்குப் பிறகு சொல்லத்தக்க பெரும் போராட்டம் இதன் தலைமையில் நடக்கவில்லை. புதிய நிலையை எதிர்கொள்ள கட்சி அமைப்பு அல்லாத உழவர் இயக்கங்கள் முன்னால் நின்றன. இங்கே நாராயண சாமிநாயுடு, மராட்டியத்தில் சரத் ஜோதி போன்ற புதிய தலைமைகள் தோன்றின. உழவர்களைச் சார்ந்த தொழிற்சங்கம் இவை. அவர்கள் தான் அன்று உழவர் பிரச்சினைக்கு முகம் கொடுத்தார்கள். இலவச மின்சாரம், மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும். விலை வேண்டும், குறைவான விலையிலே இடு பொருள்கள் வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து தியாகம் கலந்த போராட்டங்களை நடத்தினார்கள்.
இங்கு தமிழ்நாட்டில் நாராயணசாமி நாயுடு தலைமையில் பச்சைத் துண்டு உழவர்கள் 45 பேர் பலியாகி இருக்கிறார்கள் மின்சாரம் கேட்ட போராட்டத்தில் யாரெல்லாம் போராட்டத்திற்கு வரமாட்டார்கள் பிற்போக்கு சக்திகள் என கருதப்பட்டார்களோ அவர்கள் 15 ஏக்கர் 20 ஏக்கர் உள்ளவர்கள் எல்லாம் போராட்டத்திற்கு வந்தார்கள். அதனுடைய மையப்பகுதியாக 5 ஏக்கர் 6 ஏக்கர் நிலம் உள்ள உழவர்கள் இருந்தார்கள். அந்த இயக்கம் தியாகத்தின் அடிப்படையில் நிவாரணங்களைப் பெற்று தந்தது. CPM-ல் இதை எப்படி எடுத்துக்கொள்வது என்ற குழப்பமே இருந்தது. நிலக்கிழார் போராட்டம், நிலப்பிரபுக்கள் போராட்டம் என்று சொன்னவர்கள் உண்டு,
நாராயணசாமி நாயுடுவுக்கு அரசியல் பின்னணி ஏதுமில்லை. தெளிவான தத்துவப்பார்வை இல்லை என்பது உண்மைதான். ஆனால் அவரது இயக்கம்தான் அன்றைக்கு தமிழ்நாட்டு உழவர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கியது. உரிமைப் போராட்டத்தின் ஈட்டி முனையாக விளங்கியது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல. வடக்கே மகேந்திர சிங் திக்காய்த் தலைமையில் இதேபோன்ற உழவர் இயக்கம் எழுந்தது.
1990களுக்குப் பிறகு இந்த இயக்கங்களும் வலுவிழந்தன. தமிழ்நாட்டில் உழவர் இயக்கம் சிதறுண்டு கிடக்கிறது.
90ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு - உலகமயம் வந்ததற்கு பிறகு - ஒட்டுமொத்தமாக இன்று அரசாங்கத்தின் கணக்கென்ன? எவ்வளவு நிலம் இருக்கிறதோ அவ்வளவு கடன் இருக்கிறது. விரலுக்கு தகுந்த வீக்கம். இந்தியாவிலேயே கடனாளி உழவர்கள் எண்ணிக்கையில் ஆந்திரா முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. 100க்கு 75பேர் கடனாளியாக விவசாயிகள் இருக்கிறார்கள். அதில் பெரும்பாலான கடன் விவசாயத்தால் வந்த கடன் நிலவுடைமையின் அளவை சார்ந்திராமல் எல்லா விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னொரு புறத்தில் நிலக்குவியல் என்பது உடைந்தது. நிலக்குவியல் என்பது வளர்ந்து வரும் போக்கு அல்ல உடைந்து வரும் போக்கே உள்ளது. கர்நாடகத்தில் சராசரி நில உடைமை என்பது 1.2 ஹெக்டேர். கிட்டத்தட்ட ஐந்து ஏக்கர் வரும். தமிழ் நாட்டின் நிலை என்ன? 21/2 ஏக்கர் என்பதுதான் சராசரி நிலவுடைமை. நிலக்குவியல் என்பது ஒழிந்து கொண்டிருக்கிறது. நிலக்குவியல் வளரும் போக்கல்ல. இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் வாய்ப்புக் கிடைத்தால் உழவர்கள் நிலத்தை விட்டு ஓடி விடுகிறார்கள். வேளாண்மை என்பது எந்தக் காலத்திலுமே மிக சிக்கலான தொழில்தான். உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பது பழமொழி.
ஆனால் முக்கியமான வேறுபாடு ஏற்கெனவே உழவுத் தொழில் பொய்த்துப் போனால் விவசாயிகள் பஞ்சம் பிழைக்க வேறு பகுதிக்கு போவார்கள். அவ்வளவுதான். தற்கொலை செய்துக்கொள்வது இப்போதுதான் நடக்கிறது.
இது பெரிய அபாயத்தின் அறிகுறி.
இதனுடைய பின்னணியாக இருக்கிற பொருளாதாரம் தான் உலகமய பொருளாதாரம். நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது இன்றைய பிரதமர் மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்து தொடங்கி வைத்ததுதான். அமெரிக்காவின் இந்திய பிரதமர் மன்மோகன்சிங். அவர் அமெரிக்காவின் ஒரு வைசிராய் போன்றவர். அவர் ஓட்டு வாங்க வேண்டிய வேலை கிடையாது. அதை சோனியா காந்தி பார்த்துக்கொள்வார். ப.சிதம்பரத்திற்கோ மன்மோகன்சிங்குக்கோ மக்கள் திரள் செல்வாக்கு தேவையில்லை. மக்கள் திரளோடு தொடர்பு உடையவர்கள் அல்ல.
உலகமயத்தின் அரசியல் இன்று கட்சிகளை கம்பெனிகளைப் போல நடத்த வைக்கின்றன. மக்களிடமிருந்து வசூல் செய்வதெல்லாம் பழைய காலமாகிவிட்டது. வசூலிக்கும் இடமேவேறு. மன்னராட்சி காலத்தில் செய்ய தயங்கியதை - பயந்ததைக்கூட மக்களாட்சி காலத்தில் செய்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு உலகமயத்திற்கு ஏற்ற ஒரு தேர்தல் சனநாயகம் நிலவுகிறது.
ஒரு கட்டத்தில் சொன்னார்கள். ஒரு வேறூன்றிய சனநாயகம் இருக்கிறது நிலைத்த சனநாயகம் இருக்கிறது இந்த சனநாயகத்தில் மாவட்ட அளவிலான தலைவர்கள் மாநில அளவிலான தலைவர்கள் எல்லாம் கிராமத்தில் இருந்து வருகிறார்கள். ஆகவே உழவர்களின் கருத்தை கேட்காமல் இருக்க முடியாது. இன்னொரு பக்கம் உழவர் இயக்கங்கள் அரசாங்கத்தை நிர்பந்தப்படுத்தக் கூடிய அளவுக்கான அமைப்புகளாக இருக்கின்றன. ஆகவே அவற்றை கேட்காமல் முடியாது என ஒரு வாதத்தை முன்வைத்தார்கள். அது ஒரு கட்டம் வரை உண்மைதான்.
ஆனால் பசுமை புரட்சி வந்து இந்த வேளாண்மை என்பது மீண்டும் மீண்டும் நட்டப்படக்கூடிய தொழில் தான் என்று வந்ததற்கு பிறகு வாய்ப்புள்ளவர்கள் வேறு தொழிலுக்கு மாறினார்கள். அரசியல் தொடர்புடையவர்கள் பலர் கான்ட்ராக்டர்களாக மாறினார்கள். வேளாண்மையிலிருந்து மாறி பேருந்து விடுவது, ஆட்டோ வாங்கி விடுவது, கடை நடத்துவது என்று வேறுவேறு தொழிலுக்கு உழவர்கள் மாறினார்கள். எந்த உழவரும் தன் பிள்ளை விவசாயம் செய்ய வேண்டும் என்று கருதுவதில்லை. தன்னோடு ஒழியட்டும் என்று தான் கருதுகிறார்கள். எனவே அந்த அடிப்படையில் மற்ற மற்ற தொழில்களுக்கு போனார்கள் அந்த வருமானத்தை வைத்துக் கொண்டுதான் அரசியல் நடத்துகிறார்கள். ஊராட்சி தலைவர்களாக, கூட்டுறவு தலைவர்காக அரசியல் பொறுப்புகளுக்கு வேட்பு மனுதாக்கல் செய்யும் தகுதி உள்ளவர்களாக ஆனார்கள். தியாகம் செய்து பணியாற்றியவர்கள் போய் விட்டார்கள். அதற்கு பதிலாக பணம் உள்ளவர் சாதிபலம் உள்ளவர் தான் கட்சியில் கிளைக் கழக தலைவராகக் கூட வரமுடியும். இந்த அடிப்படையில் மாற்றப்பட்டது.
இது உலகமயத்திற்கு ஏற்ற ஒரு அமைப்பு. இன்றைக்கு கட்சிகளே ஸ்பான்சர்ட் கட்சிகள்தான். சில முதலாளிகளிடம் இருந்து பணம் பெறுகிறார்கள் மேலிருந்து பணம் பெறுகிறார்கள் எல்லாவற்றையும் செய்துக் கொள்கிறார்கள். அந்த அடிப்படையில் உலகமயம் அரசியல் கட்சிகளை கம்பெனிகளாக மாற்றியிருக்கிறது. எனவே, அரசியல் கட்சிகள் உழவர்களைச் சார்ந்து இப்போது இல்லை. உழவர்கள் உள்ளூர் மட்டத் தலைவர்களாகக் கூட வரமுடியாது. கட்சிகளின் வழியே இவர்கள் செல்வாக்கு செலுத்த வழியில்லை.
ஒட்டு மொத்த அதிகாரம் முதலாளிகள், கட்சி தலைவர்கள் அவர்கள் குடும்பத்திற்குள் அடங்கிவிடுகிறது. சிலநூறுகட்சி தலைவர்கள் குடும்பங்கள், முதலாளிகள் குடும்பங்கள் இவர்களுக்குள்ளேயே இந்தியாவின் அத்தனை அதிகாரங்களும் அடங்கி விடுகின்றன. இதுதான் உலகமயத்திற்கு ஏற்றது. உலகமயம் என்பது மேலும் மேலும் அதிகாரத்தை மையப்படுத்துவதாகும். அதிகாரத்தை பரவலாக்குவது உலகமயத்திற்கு எதிரான அரசியல் நடவடிக்கை. டெல்லியிலே ஒரு இடத்தில் லைசன்சைப் பெற்றுக்கொண்டு தூத்துக்குடியில் போய் டாட்டா தொழிற்சாலை வைக்க முடியும் அதுதான் அவருக்கு தேவை வால்மார்ட் உள்ளே நுழைய வேண்டுமானால் அதுதான் தேவை. மாநிலங்களுக்கெல்லாம் அதிகாரங்கள் வழங்குவது ஆங்காங்கே போய் உரிமங்கள் கேட்பது எல்லாம் ஒத்துவராது. ஒரு இடத்திலே "கவனித்து" வேலையை முடித்துக்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் உலகமயத்திற்கு ஓர் மையப்படுத்தப்பட்ட ஆட்சி, மையப்படுத்தப்பட்ட அதிகாரம் என்பதுதான் தேவை.
உலகமயம் சந்தைநாயகத்தை சனநாயகம் என்பதாக மாற்றிக் காட்டுகிறது. இதற்கு ஏற்ப உலகு தழுவிய நுகர்வோர் குடிமக்கள் என்ற வகையினத்தைக் கட்டியமைக்கிறது. உலகமய முதலாளிகளின் சுரண்டலுக்கு இதுவே தேவை. இந்த குடிமக்கள் இவர்களுக்கு ஒரு சனநாயக தளத்தை அளிக்கிறார்கள். நம்முடைய நாட்டில் கணினி படித்து ஒரு மாதத்திற்கு 50 ஆயிரம் 60 ஆயிரம் என சம்பளம் வாங்குகிற புதிய ஊழியர் வருகிறார்களே அவர்கள் தான் இவர்களின் சனநாயகத்தளம். இவர்களுக்கு வேளாண்மை என்பது பிற்போக்கானது. இதெல்லாம் ஒழித்துக்கட்ட வேண்டியது இந்த கருத்தில் அவர்கள் இருக்கிறார்கள். இந்த கருத்துக்கு சாய்வாக வேளாண்மை என்பது பின்தங்கிய நிலையின் அடையாளம் என்ற கருத்தில் கம்யூனிஸ்டுகளும் இருந்தார்கள் அதில் மாற்றம் வேண்டும், தன் திறானாய்வு வேண்டும். வேளாண்மை என்பது தொழிற்சாலை உருவாக்குவதற்காக ஒரு துணை சக்தி. தொழில் வளந்து வருவதற்கான துணை சக்தி என்ற கருத்தியல் உருவாக்கப்பட்டிருக்கிறது. பெரியபெரிய தொழிற்சாலைகள், பெரியபெரிய அணைக்கட்டுகள் வளர்ச்சியின் அடையாளங்கள் என்ற கருத்திலே முகாம் வேறுபாடு இல்லை. வலதுசாரி இடதுசாரி என்ற வேறுபாடு இல்லை. இன்றைக்குத் தான் புதிதாக (கிரீன் லெப்ட்") பசுமை இடதுசாரி என்ற புதிய போக்கு வளரத் தொடங்கியுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் தவறான புரிதலுக்கு மார்க்சிய ஆசான்கள் பொறுப்பல்ல.
மனித குரங்கிலிருந்து மனிதன் உருவாகிய வரலாற்றில் உழைப்பின் பாத்திரம் என்ற எங்கெல்ஸ் நூலை எடுத்து பாருங்கள். கண்ணீர்விட்டு சொல்வார் "இயற்கை மீது போர் தொடுக்காதே. உற்பத்தி சக்தியின் வளர்ச்சி என்பதன் பெயராலே இயற்கை மீது போர் தொடுக்காதே இயற்கை மீண்டும் உன்னை தாக்கும் என்று" அய்ரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட இயற்கையின் பேரழிவுகளையெல்லாம் குறிப்பிட்டு எங்கெல்ஸ் கூறுகிறார். "ஜெர்மானிய தத்துவம்" என்ற நூலிலே காரல்மார்க்ஸ் தெளிவாக சொல்லுகிறார். அதை தெளிவாக புரிந்துக்கொண்டு அதை நம் ஊருக்கு ஏற்ப செயல்படுத்துவது என்ற தனித்த அறிவு இல்லாமல் ஒரு அய்ரோப்பிய மையவாதத்தில் மூழ்கி, அங்கே நடந்தது இங்கே நடக்க வேண்டும். அதுதான் வளர்ச்சி என்று பார்த்தார்கள். இந்த வளர்ச்சி மனிதனுக்கு விரோதமான வளர்ச்சியாக மாறிவிட்டது.
மக்களை கொன்று விட்டு மனிதநேயங்களை எல்லாம் கொன்றுவிட்டு இதுதான் வளர்ச்சி என்ற அடிப்படையிலே ஒரு சித்தாந்தம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதன் முழுமையான பாதிப்பு உழவர்களுக்குத்தான். உலக மயத்தினுடைய அடிப்படைத் தாக்குதல் இலக்காக உழவர்கள் தான் இருக்கிறார்கள்; வேளாண்மை தான் இருக்கிறது. ஏற்கெனவே பசுமை புரட்சியிலே அதற்கான அடித்தளத்தை உருவாக்கி விட்டனர். அந்த அடித்தளம் என்ன?
ஏற்கெனவே நமக்கு ஒரு பன்முக தன்மை இருந்தது பன்முகத் தன்மையில் நமக்கு தானியங்கள் இருந்தன. புன்செய் தானியங்கள் நன்செய் தானியங்கள் உள்ளூர் விவசாயிகளுக்கு தெரியும்.
அவற்றெயெல்லாம் அழித்துவிட்டு ஒற்றை சாகுபடிக்கு மாறச் சொன்னார்கள். பிலிப்பைன்சில் உள்ள உலக அரிசி ஆராய்ச்சி நிலைய அறிவியலாளர்களும், அவர்களது இந்திய வாரிசுகளும் இதைத்தான் பிரச்சாரம் செய்தார்கள். அரசாங்கம் அதைச் செயல்படுத்தியது. நெல்லுக்கு மட்டுமே முதன்மை என்று மாறி உழவர்கள் கடன்வலையில் சிக்கினார்கள். பசுமைப்புரட்சி இந்த அடித்தளத்தை உலகமயத்திற்கு ஏற்படுத்தித் தந்தது.
இன்று என்ன சொல்கிறார்கள்? நெல்லை விட்டுவிட்டு மாற்றுப் பயிருக்கு மாறுங்கள் என்கிறார்கள். அதற்கேற்ப கம்பெனி விதைகள் வந்து இறங்கின. ஆனால் தற்கொலைகள் பெருகின. பருத்தி, கரும்பு, மூலிகை என்று மாற்றுப் பயிருக்குப் போன உழவர்கள்தான் அதிகம்பேர் தற்கொலைசெய்து கொண்டார்கள்.
இதற்கு அடுத்து இவர்களே சொல்கிறார்கள்:
"வேளாண்மை என்றாலே இப்படித்தான் நட்டம்தான்". நிலைத்தை விட்டு விடுங்கள்" என்கிறார்கள். தமிழ்நாட்டில் தற்காலிகமாக தரிசு போடும் நிலங்களும் நிரந்தரமான தரிசு நிலங்களும் அதிகரித்து வருகின்றன என தமிழக அரசின் வேளாண்மைத்துறை கூறுகிறது. வேளாண்மை செய்ய முடியாமல் உழவர்கள் தரிசு போடுகிறார்கள்.
இதுதான் உலகமய முதலாளிகளுக்கு நல்லது. வேளாண்மையை விட்டு, நிலத்தை விட்டு உழவர்கள் வெளியேற வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு தொழிற்சாலை நிறுவ, உயர் சம்பளப் பணியாளர்களுக்கு குடியிருப்பு, கேளிக்கை நிலையங்கள் அமைக்க நிலம் வேண்டும். தமிழ்நாட்டில் சிறு நிலவுடைமையாளர்கள்தான் அதிகம். இவர்களைப் பிதுக்கி வெளியேற்ற வேண்டும். அரசின் வேளாண்மைக் கொள்கை அதற்கு ஏற்ப உருவாக்கப்பட்டிருக்கிறது.
முக்கிய அரசியல் புள்ளிகள் மனைத் தொழிலில் (ரியல் எஸ்டேட் தொழிலில்) கொடி கட்டிப் பறக்கிறார்கள். இவர்களுக்கும், உலகமய முதலாளிகளுக்கும் நிலவிற்பனையில் உறவு இருக்கிறது.
ஐந்தாண்டு பத்தாண்டு வேளாண்மை செய்து பொய்த்து தரிசு போட்டவர்கள் வந்த விலைக்கு விற்றுவிடத் தயாராகிறார்கள். சாலைஓரம் உள்ள நிலங்களை விற்று விடுகிறார்கள். யார் நிலம் வாங்குகிறார்கள் என்று தெரியாமலே வாங்குகிறார்கள் பினாமி பெயராலே வாங்குகிறார்கள்.
உலகமயம் தனக்கேற்ற தொழில் நுட்பத்தோடு வந்த இறங்குகிறது. மரபீனி மாற்று விதை அதில் ஒன்று. மான்சாண்டோ கம்பெனியின் பி.ட்டி விதைகள், அதுபோன்ற பிற பன்னாட்டு கம்பெனிகளின் விதைகள் வருவதற்காகவே புதிய விதைச்சட்டத்தை மன்மோகன்சிங் முன்வைத்தார்.
உள்ளூர் விதைகளை நீக்கிவிட்டு கம்பெனி விதைகளை நிலைநாட்டும் வேலை இது. ஏமாந்த உழவர்களும் பி.ட்டி விதைகளைப் பயன்படுத்தி பயிரிடுகிறார்கள். முதல்போகத்தில் இது நன்கு விளையும் அடுத்தடுத்த போகத்தில் பொய்த்துப்போய், தொடர் தீய விளைவுகளை ஏற்படுத்தி வேளாண்மையை வீழ்த்திவிடும்.
மான்சான்டோவோ, வால்மார்ட்டோ பிற பன்னாட்டு நிறுவனங்களோ உலகம் ஒரே சந்தை என்கின்றன. இருவரும் உழவர்களுக்கு எதிரான - மக்களுக்கு எதிரான இரட்டைக்குழல் துப்பாக்கிகள்.
உலகமயத்திற்கு எதிராக உள்ளூர்மயத்தைத நிலைநாட்ட வேண்டும். அதுதான் தற்காப்பு.
பி.ட்டி நெல்லை நமது மரபான நெல் மூலம் எதிர்கொள்ள வேண்டும். மரபுவழி தொழில்நுட்பம் மூலம் எதிர்க்கொள்ள வேண்டுமே ஒழிய வேறுவழியில் முடியாது. தமிழர்களின் மரபான தொழிற் நுட்பத்தை வேளாண்மையில் வைத்துக் கொள்வதுதான் உலகமயத்துக்கான பதிலடி.
அலோபதி ஒருவகை மருத்துவம்தான். இன்று உலகமயத்தில் காப்புரிமை சட்டத்தை மாற்றி விட்டார்கள். மருந்துகள் கம்பெனிக்கு வாய்ப்பான அலோபதி ஆதிக்கம் செலுத்தும்போது நமது பதிலடி என்ன? நமது பாரம்பரிய மண்ணின் மருத்துவத்தை உருவாக்குவதுதான். மண்ணின் மருத்துவத்தை - சித்தமருத்துவத்தை நாம் கைகொள்ளுவோமானால் உலக மயத்திலிருந்து நம்மை தற்காத்து கொள்ளமுடியும். நம் தமிழ் இலக்கியங்களை, அவற்றில் உள்ள அறிவியலை அடையாளங்காண வேண்டும். ஆங்கிலம் ஓன்றுதான் அறிவின் அடையாளம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழின் மூலமாகத்தான் பழைய தொழில் நுட்பத்தை நாம் பாதுகாக்க முடியும். குறிஞ்சிப் பாட்டில் 96 பூக்கள் தாவரங்கள் அதுவும் பொட்டானிக்கல் கிளாசிபிகேஷன் என்று சொல்லுகிறார்களே தாவர இயல் வகைப்பாடு - அதற்கேற்ப குறிஞ்சிபாட்டிலே வகைப்படுத்தியிருக்கிறார்கள். இந்த மரபான அறிவை தெளிவான அறிவை இழந்துவிட்டுத் தவிக்கிறோம். தற்காப்பை இழக்கிறோம். உலகமயம் ஆங்கிலத்தின் துணையோடு வருகிறது. ஆங்கில ஆதிக்க எதிர்ப்பும் உலகமய எதிர்ப்பும் ஒருங்கிணைந்தவை.
தமிழை வாழ வைத்தால் நம் அறிவியல் வாழவைக்கப்படும். மொழி அறிவாயுதம் ஆகும்.
சந்தைப் பரவலாக்கம் (decentralised market) இன்னொரு தற்காப்பு நடவடிக்கை. சந்தை மையப்படுத்துவதுதான் பன்னாட்டுக் கம்பெனிக்கும் நல்லது. இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் நல்லது. ஏற்கெனவே இது தொடங்கிவிட்டது. திருந்துறைப்பூண்டிக் கடைத்தெருவில் விற்கப்படும் காய்கறி விலையை திருச்சி மார்க்கெட் தீர்மானிக்க வேண்டிய தேவை என்ன?
இன்று இது வளர்ந்து விட்டது ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரால் சந்தையில் மக்களிடம், நுகர்வோரிடம் பரிவர்த்தனைக்கு வராமலேயே ஊக வணிகத்தில் சரக்குகள் கைமாறுகின்றன. கண்ணுக்கு தெரியாத ஆதிக்க சக்திகளின் விளையாட்டு மைதானமாக சந்தை மாறிவிட்டது.
பவுன் விலையை அமெரிக்கா தீர்மானிக்கிறான். பம்பாய் மார்கட் தீர்மானிக்கிறது. பம்பாயிலிருந்து சேட் சென்னைக்கு சொல்லுகிறார்கள். உடனே விலை மாற்றப்படுகிறது. இது என்ன அன்று கொள்முதல் செய்ததா? இப்படி கண்ணுக்கு தெரியாத இடத்தில் சந்தை ஆட்சி செய்கிறதே. இந்த உலகமயத்திலிருந்து மீள்வதற்கான பதிலடி என்ன? உள்ளூர் சந்தையை வலுப்படுத்துவதுதான்.
இதற்கான அரசியல் என்பது தமிழ்த் தேசியம் தான். தமிழ்த் தேசிய அரசியல் ஒன்றுதான் உலகமயத்திற்கு எதிரானது.
இன்று நீங்கள் பார்க்கலாம். உலகமயத்தை எதிர்த்து பல ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. ஆர்ப்பாட்டத்தில் அவர்களுடைய பாரம்பரிய உடையோடு பாரம்பரிய இசையோடு வருகிறார்கள்.
பல மொழிகளை பேசும் ஐரோப்பிய ஒன்றியம் ஒன்று சேரும் போது ஒரே ஸ்பானிஷ் மொழி உடைய ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஏன் ஒன்று சேரக்கூடாது என் கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ பேசுகிறார்.
பிடல் காஸ்ட்ரோ பேசுவது பிற்போக்கு என்று சொல்லமுடியுமா? முடியாது. அது தற்காப்பு வாதம். குருதி வாதம் பேசுகிறார் பிடல் காஸ்ட்ரோ என அதை ஒதுக்க முடியாது. ஏனெனில் அது உலகமயத்தை எதிர்க்கிற உணர்ச்சி கடலாக மாற்றுகிறது. அதற்கு ஒரு அரசியல் பயன்பாடு உண்டு. அந்த பயன்பாடுதான் இன்றைக்கு உலகமயத்தை எதிர்ப்பது.
உழவர் இயக்கம் என்பது கட்சிகளின் வாயிலாக இல்லாமல் கட்சிக்கடந்த ஒன்றாக மாற வேண்டிய அவசியம் இருக்கிறது.
தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் கட்சிசார்பற்ற தமிழக உழவர் முன்னணியில் பணியாற்றுகிறார்கள். உநுதியோடு உழவர் பிரச்சினையை முன்னெடுக்கிறார்கள். இது சிறிய தொடக்கம்தான். இன்னும் எவ்வளவோ செய்யவேண்டியிருக்கிறது.
உழவர் சிக்கலானது அதன் தன்மையின் அடிப்படையிலேயே உலகமயத்திற்கு எதிர்ப்பானது. இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிரானது ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது. பெரும் முதலாளிகளின் ஆதிக்கத்திற்கு எதிரானது. அவர்களின் நிலைமை அது. குவின்டால் கோதுமைக்கு விலை ரூ.1000/- நெல்லுக்கு இல்லை. வடவன் என்ன உயர்ந்தவனா? தமிழர் என்ன தாழ்ந்தவனா? என முழக்கம் எழுகிறது. இது இயல்பானது. இந்தியம் பேசி இந்த இயல்பை மறைக்கப்பார்க்கிறார்கள். செயற்கையாக பூட்டிவைத்து இந்தியாவை காக்க முடியாது.
உழவனுடைய இயல்பான கோரிக்கை என்பது அறிந்தோம் எதிரானது, பெருமுதலாளிகளுக்கு எதிரானது.
ஒரு காலத்தில் நாம் இருக்கும்நாடு நமது என அறிவோம் என பாரதியார் பாடினார்.
பெரியார் "தமிழ்நாடு தமிழுக்கே" என்றார். நாம் என்ன சொல்லுகிறோம் "தமிழ்நாட்டு சந்தை தமிழ்நாட்டு உழவருக்கே" என்கிறோம். ஏன்? கர்நாடக பொன்னியும், ஆந்திரா பொன்னியும் தமிழ்நாட்டுச் சந்தையில் ஆதிக்கம் செய்கின்றன. அரசாங்கத்தின் ரேஷன் கடை, தேவை 36 லட்சம் டன் அரிசி, சிறைச்சாலை மருத்துவமனை போன்றவற்றிற்கு இன்றும் 7லட்சம் டன் தேவை. ஆக மொத்தம் ஆண்டுக்கு 43 லட்சம் டன் அரிசி தேவை. நெல் கணக்கில் கூறினால் மொத்தத் தேவை 66 லட்சம் டன். இந்த ஆண்டு தமிழ்நாடு அரசாங்கத்தின் கொள்முதல் இலக்கு 18 லட்சம் டன். மீதியை எங்கிருந்து வாங்குகிறார்கள். பஞ்சாப் அரிசி, அரியானா அரிசி வாங்குகிறார்கள். பஞ்சாப் அரிசியும், அரியானா அரிசியும், கர்நாடகா அரிசியும் வெளிநாட்டு அரிசியும் இங்கு ஆக்கிரமித்தப் பிறகு தமிழக உழவர்கள் எங்கே போவார்கள்? "தமிழ்நாட்டு உழவர்கள் சந்தையை அவர்களுக்கு உரிமையாக்கு. கர்நாடக பொன்னி இங்க வரக்கூடாது ஆந்திர பொன்னி இங்கு வரக்கூடாது தமிழ்நாட்டை தனி உணவு மண்டலம் ஆக்கு" என முழக்கம் எழுப்புகிறோம்.
இந்தியா ஒரு உணவு மண்டலம் என்பது பெருமுதலாளிகளுக்கு தேவை. உலகமே ஒரு சந்தை என்பது உலக முதலாளிகளுக்கு தேவை. தமிழ்நாடு தனி உணவு மண்டலம் என்பதுதான் உழவர்களுக்குத் தேவை. அதுதான் தற்காப்பு முழக்கம். இது பிரிவினை வாதம் அல்ல.
தமிழகத்தின் சந்தையை பாதுகாத்துக் கொள்வது. தமிழர்களின் மரபான வேளாண் அறிவை பாதுகாப்பது தமிழனின் மரபான பாசன அறிவை பாதுகாத்துக்கொள்வது பயன்படுத்துவது என்ற அடிப்படையில் தமிழகம் சார்ந்த சிந்தனையில் உழவர்களைத் திரட்டினால், கட்சி கடந்து, நாராயணசாமி நாயுடு போல் கட்சி கடந்து உழவர்களை திரட்ட முடியும். சில தொழிற்சாலைகளில் ஒரு தொழிற்சாலைக்கு ஒரு சங்கம் நடக்கிறது அங்கு எல்லா கட்சிகளும் இருக்கும். எல்லோரும் போட்டி போடுவார்கள். இது தொழிலாளர்களுக்கு விரோதம் கிடையாது. கட்சி கட்சியாக சாதி சாதியாய பிரிந்து இருப்பது மாற வேண்டும். அவரவர் கட்சி இருக்கட்டும். ஆனால் உழவர்கள் அமைப்பு கட்சி சார்பற்றதாக இருக்கட்டும்.
உலகமயத்திற்கு எதிர்ப்பாக தமிழ்த் தேசிய அரசியல்தான் செயல்படும். கட்சிசார்பற்று உழவர்களைத் திரட்டுவது தான் உலகமயத்திற்கு எதிரான தற்காப்பை வழங்கும்.

No comments:

Post a Comment