Saturday, October 30, 2010

இந்திய அரசு அதிகாரம் ஆபத்தானது

இந்திய அரசு அதிகாரம் ஆபத்தானது
Indian Government - VIS Jeyabalan - Tamil Poltics News Article ஈழத்தின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளுள் ஒருவர், வ.ஐ.ச. ஜெயபாலன். பெருமளவு கவிதைகள், கொஞ்சம் சிறுகதை மற்றும் குறுநாவல்கள் எழுதியுள்ள ஜெயபாலன் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டு வருகிறார். தென்னாசியாவில் நாடுகளுக்கிடையேயான உறவுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்த அதன் புரிதலை விரிவாக நம்முடன் பகிர்ந்துகொண்டார். தீராநதி: இரண்டு ஆண்டுகளுக்கு முன் "தீராநதி"யில் வெளியான உங்கள் நேர்காணலில், "கடல்மார்க்கமாக இந்தியாவுக்குள் ஊடுருவ இந்தியாவின் எதிரிகள் திட்டமிடுகிறார்கள்" என குறிப்பிட்டிருந்தீர்கள். சமீபத்திய மும்பைத் தாக்குதல் உங்கள் அனுமானத்தை உறுதிப்படுத்தியுள்ளது. உங்களுக்குக் கிடைத்த எத்தகைய தகவல்களின் அடிப்படையில் இந்த அனுமானத்துக்கு வந்தீர்கள் எனக் கூறமுடியுமா?
வ.ஐ.ச. ஜெயபாலன்: பெரும்பான்மையான இலங்கைத் தமிழர்களைப் போலவே, என்னை நான் உலகத் தமிழர்களின் ஒரு அங்கத்தவனாகத்தான் உணர்கிறேன். ஆனபடியால் என்னுடைய அக்கறைகளும் ஈடுபாடும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் தென்னாசியப் பிராந்தியத்தைப் பற்றியே தொடர்ந்து இருந்து வருகிறது. என் அடிப்படைத் தேடலாக இது இருப்பதால், தென்னாசியா மற்றும் தென்னாசியப் பிராந்தியத்தில் மிகப் பெரிய வல்லரசான இந்தியா, என் இனமானத் தமிழர்கள் பற்றி நான் பயணம் செய்யும் பல்வேறு நாடுகளிலும் நான் சந்திக்கும் அறிஞர்கள் எத்தகைய கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். குறிப்பாக, இந்தியா மீதான என் ஈடுபாட்டுக்குக் காரணம், இந்திய அரசின் மேம்பட்ட செயல்பாடும் இந்தியாவின் பாதுகாப்பும், எங்களையும் உட்படுத்தி தென்னாசியாவைச் சேர்ந்த அனைவருக்கும் முக்கியத்துவம் தருவதும்தான். இந்தியாவின் பிரச்சினை தென்னாசிய நாடுகளின் பிரச்சினைதான். இந்தியாவின் எதிரிகள் கை ஓங்குவது இந்தியாவின் பிரச்சினை மட்டுமல்ல, எங்களுடைய பிரச்சினையும்கூடத்தான்.
நான் இலங்கையில் இருந்த காலங்களில் கொழும்பில் உள்ள பல்வேறு துறை அறிஞர்களுடனும், சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளுடனும், ராஜதந்திரிகளுடனும் பழகியிருக்கிறேன். நார்வேயில் சமாதான முயற்சியில் ஈடுபட்ட தூதுவர்களுடன் பேசியிருக்கிறேன். ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் போதெல்லாம், அங்குள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராஜதந்திரிகளைச் சந்திந்திருக்கிறேன். இவர்கள் எல்லோரின் மூலமாக எனக்குத் தெரிய வந்த தகவல்களைவிட முக்கியமானது, இலங்கை தமிழ்ப் பத்திரிகையாளரும் ராணுவ ஆய்வாளருமான எனது நண்பர் சிவராமன் என்னுடன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள். தென்னாசிய நாடுகளைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் உளவுத்துறையினருடன் நெருக்கமான பழக்கம் சிவராமனுக்கு இருந்தது. அவர்கள் மூலம் அவர் நிறைய தகவல்களைச் சேகரித்து வைத்திருந்தார். அவற்றையெல்லாம் வைத்து ஒரு புத்தகம் எழுதும் திட்டமும் அவருக்கு இருந்தது. இலங்கையில் இருந்தால் அது சாத்தியமில்லை என்பதால் ஜப்பானில் குடியேறிவிட்டு பிறகு எழுதுவேன் எனச் சொல்லிவந்தார். இந்நிலையில்தான் அவர் கடத்திக் கொல்லப்பட்டார். கருணா கோஷ்டியினர்தான் அவரைக் கொன்றார்கள் என்று சொல்லப்பட்டாலும், அவருக்குத் தெரிந்த பல்வேறு நாடுகளின் உளவுத்துறை ரகசியங்கள் வெளியாகக்கூடாது என்பதற்காகத்தான் அவர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது என் சந்தேகம். ஏனெனில், அவரது புத்தகம் வந்தால் பல அதிகாரிகளின் ரகசியத் தொடர்புகள் வெட்ட வெளிச்சமாகிவிடும் என்று அவரே என்னிடம் சொல்லி இருக்கிறார். இப்படி பல்வேறு வழிகளில் எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், உள்ளார்ந்த ஊடுருவல்களுக்கு வாய்ப்பான சூழல் இந்தியாவில் இருக்கிறது என்பது என் அனுமானம். 1992-இல் "சன்" தொலைக்காட்சியில் என் நேர்காணல் ஒலிபரப்பானது. அதில் நான் இது சம்பந்தமாக சில விஷயங்களை வலியுறுத்தி இருந்தேன். அதன்பிறகு "நந்தன்", ஞாநியின் "தீம்தரிகிட", "தீராநதி" ஆகிய பத்திரிகைகளிலும் ஆங்கில ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களிலும் இதனைக் குறிப்பிட்டிருக்கிறேன்.
கடைசியாக, "தீராநதி"க்கு அளித்த நேர்காணலில் இலங்கை கடற்படையில் சீனா, பாகிஸ்தான் போன்ற இந்தியாவின் எதிரி நாடுகளைச் சேர்ந்த உளவுப்பிரிவினர் ஊடுருவி இருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன். இலங்கைக் கடற்படைக்குள் ஐ.எஸ்.ஐ.யின் ஊடுருவல் பற்றி, காகம் கறுப்பு என்பதுபோல், கொழும்பில் எல்லோருக்கும் தெரியும். இலங்கையில் ஒரு கடற்படை வீரன் ராஜீவ்காந்தியைக் கொலைசெய்ய முயற்சித்ததை இதனுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்கலாம். ராமேஸ்வரம், நாகப்பட்டினம் கடல்பகுதியில் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் தூத்துக்குடி, கன்னியாகுமரி கடல்பகுதியில் பல ஆண்டுகளாக நடந்துவரும் கடத்தல்களில் ஐ.எஸ்.ஐ.யின் கை இருக்கிறது என்பதை கொழும்பில் நான் சந்தித்த ராஜதந்திரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தியக் கடற்கரை தொடந்து கண்காணிக்க முடியாத அளவுக்கு மிக நீளமானது. உண்மையில் கடற்கரையோரமாக வாழும் மீனவச் சமுதாயம்தான் இந்தியாவின் பாதுகாப்பு அரணாக இருக்கிறார்கள். மீனவர்களைத் தொடர்ந்து தாக்கி, இந்தியக் கடற்படை மற்றும் இந்திய அரசுக்கு எதிரான மனநிலையை அவர்கள் மத்தியில் உருவாக்குவதுதான் ஐ.எஸ்.ஐ.யின் நோக்கம். அது நிறைவேறினால் கடற்கரை வழியாக அவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவது சுலபமாகும் என நினைக்கிறார்கள். அதன் அடிப்படையில் கடல்மார்க்கமாக இந்தியாவுக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் திட்டமிடுகிறார்கள் என்று குறிப்பிட்டேன். என் தீராநதி நேர்காணலின் ஆங்கில மொழிபெயர்ப்பை டில்லியில் நான் சென்ற சில அலுவலகங்களில் பார்த்திருக்கிறேன். அவர்கள் என் வார்த்தைகளை கவனிக்கிறார்கள் என்பது உறுதிப்பட்ட பிறகு, இந்திய அதிகாரிகளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும் ஒவ்வொரு முறையும் இந்த விஷயங்களை அழுத்தமாகச் சொல்லிக்கொண்டு வருகிறேன். இப்பொழுது என் அனுமானம் உறுதியாகியுள்ளது.
தீராநதி: சமீபத்தில் தென் தமிழகக் கடற்கரை வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் வாய்ப்புள்ளது என்றும் கூறியிருக்கிறீர்கள்?
வ.ஐ.ச. ஜெயபாலன்: மும்பை பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் கடற்படை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது இந்திய அரசு. இந்நிலையில், கண்காணிப்புக் குறைவாக இருக்கும் தமிழகத்தின் தென்பகுதியான தூத்துக்குடி, கன்னியாகுமரி கடல்பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளது என்பது என் அனுமானம். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல், இந்தியாவுக்கு முன்னால் உள்ள முக்கிய அச்சுறுத்தல் பாகிஸ்தான் உளவுத்துறையின் தென்னாசிய செயல்பாடுகள்தான். நேபாளம், வாங்காள தேசம், இலங்கை போன்ற இந்தியாவின் அண்டை நாடுகளில் இருந்து பாகிஸ்தான் உளவுத்துறை செயல்பட்டு வருவது ரகசியம் இல்லை. இதற்கு சீனாவின் அணுசரணை உள்ளது என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள். இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யின் செயல்பாடுகள், பாகிஸ்தானில் இருந்து மட்டுமல்லாமல் நேபாளம், பங்களாதேஷ், இலங்கை என ஐ.எஸ்.ஐ. பரந்துள்ள இடங்களில் இருந்தும் திட்டமிடப்படுகிறது. காத்மாண்டு, டாக்காவில் உள்ள ஐ.எஸ்.ஐ.யின் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்திய உளவுத்துறை நிறுவனங்களே பலமுறை தெரிவித்துள்ளன. கொழும்பில் நடக்கும் ஐ.எஸ்.ஐ. செயல்பாடுகளை இந்தியா உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்திய உளவுத்துறைக்கு சந்தேகம் இருக்கிறது. பாகிஸ்தான் உளவுத்துறைத் தலைவரான பஷீர்வாலி முகமது இலங்கைக்கான தூதராக நியமிக்கப்பட்டது, இலங்கை அரசியல்வாதிகளுடனும் அதிகாரிகளுடனும் சாயங்காலங்களில் விருந்து சாப்பிடவும் தேநீர் குடிக்கவும் மட்டும் இல்லை.
இலங்கையில் ஐ.எஸ்.ஐ.யின் செயல்பாடுகளைப் பலப்படுத்தத்தான் என்பது அங்கே எல்லோருக்கும் தெரியும். 2006-ஆம் ஆண்டு பஷீர்வாலியைக் கொலை செய்யும் நோக்கத்துடன் கொழும்பில் மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இலங்கை ராணுவத்துக்கு பாகிஸ்தான் ஆயுத சப்ளை செய்துவருவதால் புலிகள்தான் அதைச் செய்தார்கள் என்று சொல்லப்பட்டாலும், இந்திய உளவுத்துறைதான் அதைச் செய்தது என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. கொழும்பில் பாகிஸ்தான் உளவுத்துறை பலப்படுவது இந்தியாவை சீர்குலைப்பதற்குத்தான். கொழும்பில் உள்ள ஐ.எஸ்.ஐ.தான், கொழும்பு தூத்துக்குடி - கன்னியாகுமரி முக்கோணக் கடல்பகுதி வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளது என்கிறேன். தமிழகத்தின் தென்பகுதியில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, கொழும்பு மூன்று ஊர்களுக்கும் இடைப்பட்ட முக்கோணப் பகுதி தொடங்கி கேரளாவின் மேற்குக் கடற்கரை வரை இலங்கையின் ஊடாக இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சி இருக்கிறது என்பதான சந்தர்ப்ப சாட்சிகள் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இது சம்பந்தமான சூசகமான தகவல்களை கொழும்பில் கேள்விப்படுகிறோம். கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கேரள சம்பந்தம் உள்ளது சாதாரணமான விஷயம் இல்லை. கோயம்புத்தூர் தாக்குதலுக்கான ஆள்கள் இலங்கை ஊடாக வந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை கொழும்பிலேயே என்னிடம் பலர் எழுப்பினார்கள். எனவே, இலங்கைக்குள் நடக்கும் ஐ.எஸ்.ஐ. செயல்பாடுகளையும், தென் தமிழகம் தொடங்கி கேரளாவில் மலைப்புறம் வரைக்குமான இந்தியாவின் தென் கடல்பகுதியிலும் கண்காணிப்பை இந்தியா தீவிரப்படுத்த வேண்டும்.
தீராநதி: தமிழகக் கடற்கரை வழியாக ஊடுருவுவது மட்டுமல்லாமல், தமிழகத்துக்கும் தீவிரவாதத் தாக்குதல் அபாயம் இருப்பதாக கருதுகிறீர்களா?
வ.ஐ.ச. ஜெயபாலன்: இந்தியாவின் பாதுகாப்பு குறித்த எல்லா ஆய்வுகளும் உலகமயமாதல் இந்தியாவில் எப்படிச் செயல்படுகிறது என்பது குறித்த ஆய்வாகவும் மாறிவிட்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும். உலகமயமாதலுக்குப் பிறகு இந்தியாவின் தென்மாநிலங்கள் நன்கு வளர்ச்சியடைந்துள்ள நிலையில், வடமாநிலங்கள் வளர்ச்சியடையவில்லை. பெரும் பகுதியும் பின்தங்கி இருக்கிற கடல் இல்லாத ஹிந்திப் பகுதி, பெருமளவு வளர்ச்சியடையாத வடகிழக்குப் பகுதி மற்றும் ஹிந்திப் பகுதிக்கு வடக்குப் பகுதி இந்த மூன்றும் சமீப கால வளர்ச்சியில் பின்தங்கியுள்ள பகுதிகள். திட்டமிட்டு தொழிற்சாலைகள், வளர்ச்சித் திட்டங்களை ஹிந்திப் பகுதிகளுக்கு நகர்த்திய டில்லியின் செயல்பாடு உலகமயமாதல் பின்னணியில் சாத்தியமில்லை என்பதால் இது வேகமாக நடந்துவிட்டது. இதனால், ஏற்கெனவே ஹிந்திப் பகுதியினர் கையில் இருந்து பறிபோகத் தொடங்கியிருந்த டெல்லி அதிகாரம் தென்மாநிலங்கள் கையில் வரத் தொடங்கியுள்ளது. ஆனால், மிச்சமீதியுடன் இன்றும் தொடர்ந்து அதிகார மையமாக வடக்குதான் இருக்கிறது என்பது வேறு விஷயம். இருந்தாலும் பொருளாதார ரீதியான அதிகார மையங்களாக மகாராஷ்டிராவும் அதற்குத் தெற்கே இருக்கிற ஹிந்தி அல்லாத பகுதிகளும் உருவாகி வருகின்றன. உலகமயமாதல் வளர்ச்சி அடைந்துள்ளதுடன், அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் மிக வேகமாக நெருக்கமாகிக் கொண்டிருப்பதும் இந்த கடல் ஓரமாக இருக்கும் ஹிந்தி அல்லாத தென் மாநிலங்கள்தான். எனவே, இந்தியாவின் எதிரிகளின் குறியாக எதிர்காலத்தில் இந்தப் பகுதிகள்தான் இருக்கும் என அனுமானிக்கலாம்.
உலகமயமாக்கலுக்குப் பிறகு தாய் மொழியும் ஆங்கிலமும் தெரிந்தால் போதும் அதுதான் வளர்ச்சிக்கும் நல்லது என்ற எண்ணம் எல்லோரிடமும் உருவாகிவிட்டது. ஹிந்திப் பகுதியிலும் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பின்தங்கி இருக்கிற ஹிந்திப் பகுதி முன்னேறாவிட்டால், அதனால் இந்திய ஒருமைப்பாட்டுக்கே எதிர்காலத்தில் சிக்கல்கள் உருவாகலாம். இப்பொழுதே மகாராஷ்டிராவில் பிகாரிகளுக்கு எதிராக நடக்கும் கிளர்ச்சிகள் கவனிக்க வேண்டியவை. அதை உலகமயமாக்கல் பின்னணியில் புரிந்துகொள்ளாமல் மரபார்ந்த புரிதலுடன் அணுகுவதுதான் இங்கு நடக்கிறது. அதனால் எந்த முன்னேற்றமும் நடக்கப்போவதில்லை. தமிழகம், கேரளா உள்பட பல தென் மாநிலங்களில் தொழிலாளிகளாக ஹிந்திப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இருப்பதைப் பார்க்கலாம். அப்படி உள்ளவர்களில் பலர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதையும் காணலாம். சட்டங்களால் இதனை நிவர்த்தி செய்ய இயலாது.
தீராநதி: உங்களுக்குத் தெரிந்திருக்கும் இந்தத் தகவல்கள், மிகப்பெரிய அமைப்பான உளவுத்துறைக்கும் இந்திய சமூக பொருளாதார ஆய்வாளர்கள் பார்வைக்கும் தப்பியிருக்கும் என்று நம்புகிறீர்களா?
வ.ஐ.ச. ஜெயபாலன்: நான் அப்படிக் கருதவில்லை. நிச்சயம் உளவுத்துறைக்கும் தெரிந்திருக்கும். ஆனால், உளவுத்துறையின் தகவல்களை செயல்படுத்துவதில் இந்திய அரசு மெத்தனம் காட்டுகிறது என்பதைத்தானே ஒவ்வொரு குண்டுவெடிப்பும் உறுதிப்படுத்துகிறது. உளவுத்துறையினர் கொடுக்கும் தகவல்களை பொறுப்புடன் ஆராய்ந்து, செயல்படுத்தக்கூடிய வாய்ப்புகள் இந்தியாவில் இல்லை என்பதுதான் கவனிக்க வேண்டியது. ஒவ்வொரு குண்டு வெடிப்புக்குப் பின்னரும் இதுபற்றி ஏற்கெனவே உளவுத்துறை தகவல் கொடுத்திருந்தும், அதிகாரிகள் அதைப் பொருட்படுத்தவில்லை என வரும் செய்திகள் இதற்கு சாட்சி.
இந்தியாவின் பலம் பத்திரிகை சுதந்திரத்திலும் உயர்நீதிமன்றத்தின் சுதந்திரமான செயல்பாடுகளிலும் தங்கியிருக்கிற இந்தியாவின் ஜனநாயகம்தான். பாராளுமன்றம் முழுமையாக செயல்படுவதன் அடிப்படையில் இந்த ஜனநாயகம் பலப்படாவிட்டால் அது இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் என்பதுதான் என்னுடைய கருத்து. ஆனால், பாராளுமன்ற ஜனநாயகம் பலப்படுவதற்கு மாற்றாக அது பலமிழக்கும் சூழல்தான் இங்கு நிலவி வருகிறது. துரதிருஷ்டவசமாக, மாநிலங்களைச் சேர்ந்த இயற்கையான தலைவர்கள் கட்சிகளில் முக்கியப் பதவிகளை வகிப்பதற்குப் பதிலாக, கட்சித் தலைவர்களால் நியமிக்கப்பட்ட மாநிலத் தலைவர்களால் நிர்வகிக்கப்படும் சூழ்நிலையில்தான் இன்று இந்தியாவின் பல தேசிய கட்சிகள் உள்ளன. காமராஜர் போன்ற மக்கள் மத்தியில் இருந்து உருவாகி வந்த இயற்கையான தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்டதில் இருந்து இந்தப் போக்கு தொடங்கியது. மாநிலக் கட்சிகள் வலுவடைய அடிப்படைக் காரணம், இந்தப் போக்குதான். மாநிலக் கட்சிகளும் மாவட்ட அளவில் இயற்கையாக உருவாகி வந்த தலைவர்களை புறக்கணிக்கும் போக்கால் இப்பொழுது சாதிக்கட்சிகள் வலுப்பெறத் தொடங்கியுள்ளன.
இயற்கையாக உருவாகும் தலைவர்களைப் புறக்கணித்து, தலைமையால் நியமிக்கப்படுபவர்களால் கட்சி வழிநடத்தப்படும் போக்கு மக்களின் அதிகாரத்தை ஒரு சிலர் கைப்பற்றி தங்கள் வசப்படுத்தும் சூழலாக மாறியிருக்கிறது. இந்தச் சூழல் வெளிநாட்டினர் கட்சிக்குள் ஊடுருவக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்பது என் அபிப்ராயம். அல்லது தலைவர்கள் வெளிநாடுகளுக்கு தங்கள் நாட்டை காட்டிக் கொடுப்பதற்கான வாய்ப்புகளை இது உருவாக்குகிறது. முதலில் கட்சிகளுக்குள் வரும் இந்தத் தன்மை, பிறகு அரசு மட்டத்திலும் தன் கைகளை விரிக்கும். இப்பொழுது இந்தியாவில் இதுதான் நடந்திருக்கிறது. பாராளுமன்ற அலுவல்கள் கட்சித் தலைவர்களின் வீடுகளில் நடக்கிற மாதிரியான சூழல் இதன் ஒரு கட்டம்தான். பாதுகாப்பு, வெளிவிவகாரம் போன்ற முக்கியத் துறைகளின் முடிவுகள் பாராளுமன்றத்துக்கு வெளியே உருவாகியிருக்கும் இந்த அதிகார மையங்களில் எடுக்கப்படும் சூழல் இந்தியாவில் உள்ளது. இதன் நீட்சியாக பாராளுமன்றத்துக்கு வெளியே கோப்புகளைக் கொண்டுசென்று அதிகாரிகள் செயல்படும் போக்கும் உள்ளது.
இந்தப் போக்கின் அதிகபட்ச ஆபத்து, பிரதமர் பாராளுமன்றத்துக்கு வெளியே இருக்கும் அந்த யாரோ ஒரு அதிகார மையத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுவதுதான். ஒரு நாட்டை பிரதமர் ஆளவில்லை என்றால் அந்த நாடு ஆபத்தில் இருக்கிறது என்றுதான் அர்த்தம். இந்தச் சூழலில் நாட்டுக்கும் நாட்டின் அரசியல் அமைப்புக்கும் பிரதமருக்கும் விசுவாசமான அதிகாரிகள் பலம் இழந்து, வெளியே இருக்கும் அதிகார மையத்துக்கு விசுவாசமான அதிகாரிகள்தான் பலம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். விசுவாசிகள் விலகி, எடுபிடிகள் கோலோச்சும் சூழலில் அரசியலுக்குள் ஊடுருவி இருக்கும் வெளிநாட்டினர் மூலமாக இந்தியாவை ஆட்டிப் படைக்கும் வாய்ப்புகள் எதிரிகளுக்கு கிடைக்கிறது. இதனை சுலபமாக இப்படி விளங்கிக்கொள்ளலாம்... ஈழத் தமிழர்கள் மீது அக்கறையும் கரிசனமும் கொண்ட தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளையும் மீறி இலங்கை அரசு தங்கள் விருப்பங்களை இந்தியாவில் சாதிக்க முடிவதற்கு, பாராளுமன்றத்துக்கு வெளியே அதிகாரம் இருக்கும் இந்தப் போக்கும், அதிகாரிகள் மட்டத்தில் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கும்தான் காரணம்.
இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, வங்காள தேசம், நேபாளம் ஆகிய நாடுகளை இந்தியாவுக்கு எதிராக மாற்றவேண்டும் என்னும் சீனாவின் விருப்பம் பாராளுமன்றத்துக்கு வெளியே செயல்படும் இந்த அதிகாரம் மூலமாக நிறைவேறத் தொடங்கியுள்ளது கண்கூடு. இது என் கண்டுபிடிப்பு மட்டுமல்ல... பாராளுமன்றத்துக்கு வெளியேயுள்ள அதிகார மையங்களுக்கு விசுவாசமாக செயல்பட்டு தங்களைப் பலப்படுத்திக் கொள்கிற அதிகாரிகள்தான் இந்தியாவின் இன்றைய பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணம் என்ற எண்ணம் நான் சந்தித்த பல ராஜதந்திரிகளுக்கும் இருக்கிறது. நான் வெளிநாடுகளில் சந்தித்த சில இந்தியர்களும் இந்த ஆபத்தை உணர்ந்திருக்கிறார்கள்.
உண்மையில் மும்பைத் தாக்குதலுக்காக நீங்கள் ஒருவரைக் குற்றம்சாட்ட வேண்டுமென்றால், அவர் பிரதமரைத் தன் கையில் வைத்திருப்பவராகத்தான் இருக்க முடியும். ஆனால், இங்கே என்ன நடக்கிறது? அவரை விட்டுவிட்டு, மத்திய உள்துறை அமைச்சர், மகாராஷ்டிர முதல்வர், மகாராஷ்டிர துணை முதல்வர் ஆகியோரை ராஜினாமா செய்யச்சொல்லி இருக்கிறார்கள். இத்தனைக்கும், உளவுத்துறை தகவல்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்திய பாதுகாப்பு ஆலோசகரின் ராஜினாமா நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இது இன்னும் கேலிக்கூத்தானது. பிரதமருக்கே அதிகாரம் இல்லாத ஒரு கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சராலும் மாநில முதல்வராலும் என்னதான் செய்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?
மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ஒரு இரவில் படகில் வந்து இறங்கியவர்கள்தான் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியாவுக்குள் ஏற்கெனவே ஊடுருவி செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் மூலம்தான் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவில் இருந்து செயல்படுகிறவர்கள் உதவி இல்லாமல் இவ்வளவு பெரிய தாக்குதலைத் திட்டமிடுவது சாத்தியமில்லை. இந்தியாவுக்குள் உள்ள தங்கள் தளங்கள் மேல் உளவுத்துறையின் கவனம் திரும்பாமல் இருக்கவும் உளவுத்துறையை பிழையாக வழிநடத்தவும் படகு நாடகத்தை அவர்கள் பயன்படுத்தி இருக்கலாம். உண்மையில் எத்தனை பேர் வந்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து மாறான தகவல்களை அதிகாரிகள் சொல்லிவந்ததை நீங்கள் கவனிக்க வேண்டும். மும்பைத் தாக்குதலை நடத்தியவர்களில் ஒரு பகுதியினர் தப்பிச் சென்றிருக்கிறார்கள் என்றுதான் நான் கணிக்கிறேன்.
மீண்டும் பிரதமருக்கும் பாராளுமன்றத்துக்கும் அதிகாரம் திரும்பும் போதுதான் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா வெற்றிபெற முடியும் என்பது என் நம்பிக்கை. அடுத்தகட்டமாக, தென்னாசியாவில் உள்ள தன் உண்மையான நண்பர்களை இந்தியா அடையாளம் காணவேண்டும்.
தீராநதி: இந்த வருடம் மாவீரர் தின உரையில், "இந்தியாவுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப விரும்புகிறோம்" என விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சொல்லியுள்ளார். அதை இதனுடன் பொருத்திப் பார்க்க இயலுமா?
வ.ஐ.ச. ஜெயபாலன்: நான் தொடக்க காலத்தில் இருந்தே, ஈழ விடுதலைப் போராட்டத்தில் என்னுடைய நிலைப்பாடாக வலியுறுத்தி வரும் விஷயம் இதுதான். இப்பொழுது புலிகள் இயக்கத்தினரும் இந்த முடிவுக்கு வந்துள்ளது மிகவும் வரவேற்க வேண்டிய மாற்றம். தென்னாசியாவில் இந்தியா மிகப் பெரிய நாடு என்பதுடன், நாங்களும் இந்தியர்களும் ஒரே கலாசாரத்தவர்கள். எங்களுடன் தொப்புள்கொடி உறவுடைய தமிழர்கள் இந்தியாவின் மிக முக்கியமான ஒரு அங்கத்தினராக இருக்கிறார்கள். தனித்தனியாக நின்று எங்களை நாங்கள் காப்பாற்றிக்கொள்ள முடியாது. ஒரு தொகுதியாக இணைந்து நின்றுதான் நாங்கள் எங்கள் வளங்களையும் வாய்ப்புகளையும் கலாசார எதிர்காலத்தையும் காப்பாற்ற முடியும். ஒருவருக்கொருவர் முரண்பட்டு நின்றால் நாம் எல்லோருமே அழிந்துவிடுவோம் என்பதுதான் என் நம்பிக்கை. எனவேதான், இரண்டு தரப்புமே தங்கள் பங்குத் தவறுகளையும் எதிர் தரப்பு தவறுகளையும் மறந்து மீண்டும் ஒன்றுபட வேண்டும் என்பதை நான் வலியுறுத்தி வருகிறேன். இந்தியா தன் உண்மையான எதிரிகளை விட்டுவிட்டு இலங்கைத் தமிழர்களை தங்கள் எதிரிகளாக எண்ணியிருக்கிறது. விரைவில் அது மாறும் என நம்புகிறேன்.
தீராநதி: இந்தியா - விடுதலைப்புலிகள் நட்புறவு மேம்படும் பட்சத்தில், ஏற்கெனவே இலங்கையில் காலூன்றி இருக்கும் சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் இலங்கை மேலும் நட்பை பலப்படுத்திக்கொள்ளாதா?
வ.ஐ.ச. ஜெயபாலன்: சீனா மிகவும் கச்சிதமாக செயல்படுகிறது. இந்தியாவைச் சுற்றி எல்லா நாடுகளிலும் சீனா காலூன்றி இருக்கிறது. பர்மாவிலும் பாகிஸ்தானிலும் கடற்படைத் தளமாக பயன்படுத்த வாய்ப்புள்ள துறைமுகங்கள் சீனாவுக்கு உள்ளது. இப்பொழுது இலங்கையிலும் அதுபோன்ற ஒரு துறைமுகத்தைக் கட்டி வருகிறது. இந்துமகாக் கடலிலும் சீனா பலமாகக் காலூன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் தைவான், கொரியா, வியட்நாம் போன்ற சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளிலோ; பசிபிக் சமுத்திரப் பகுதிகளிலோ இந்தியாவுக்கு ஒரு தளமும் இல்லை. இனிமேலும் ஒரு தளத்தைக் கட்டக்கூடிய வாய்ப்பும் இல்லை. இப்பொழுது எண்ணெய் ஆய்வு என்ற பெயரில் சேது சமுத்திரப் பகுதியிலும் சீனா காலூன்ற முயற்சிக்கிறது. இதற்கு இலங்கையும் ஆதரவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இந்தியா பற்றிய பயம் பல்லாண்டுகளாக உள்ளது. எனவேதான் சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் அது உறவைப் பலப்படுத்துகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, இந்தியாவின் முதல் எதிரி பாகிஸ்தான் இல்லை; சீனாதான் என்றே தோன்றுகிறது. இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தானை மட்டும் குற்றம்சாட்டிக் கொண்டிருக்காமல் சீனா பக்கமும் இந்தியா திரும்பவேண்டும். சீனா, தனது வல்லரசுத் திட்டத்தின் ஒரு கருவியாக ஐ.எஸ்.ஐ.யைப் பயன்படுத்துகிறது.
சீனா மட்டுமல்லாமல் அமெரிக்காவும் இஸ்ரேலும்கூட ஐ.எஸ்.ஐ.க்குள் ஊடுருவி இருக்கிறது. ஐ.எஸ்.ஐ.யின் இந்திய விரோத அமைப்பு என்பது ஒரு சர்வதேச அமைப்பு. ஐ.எஸ்.ஐ., பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளின் கைப்பாவையாகச் செயல்பட்டு ஒரு தன்னிச்சையான அமைப்பாக வளர்ந்துள்ளதும் பாகிஸ்தான் அரசையே அவர்கள் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதும்தான் இன்று இந்தியாவுக்கு முன்னுள்ள மிகப்பெரிய சவால். அமெரிக்காவும் இஸ்ரேலும் மும்பைத் தாக்குதலைப் பயன்படுத்தி, முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான போருக்கு இந்தியாவை கூலிப்படையாக மாற்ற முயற்சிக்கிறார்கள் என்பதை கே.சுப்பிரமணியன் போன்ற பல அறிஞர்கள் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கும் இந்தியா பலியாகிவிடக்கூடாது.

1 comment:

  1. THIS SHOWS THAT INDIA IS GREAT , AND A SLEEPING GIANT ONCE IT WAKES, BEWARE PAKI AND CHINI

    ReplyDelete