Tuesday, October 26, 2010

கட்டபொம்மனின் கடைசி நாட்கள்

கட்டபொம்மனின் கடைசி நாட்கள்... ( Kattapomman's last days... - Tamil Katturaikal - General Articles
வீரபாண்டிய கட்டபொம்மன்
ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, 3.1.1760 இல் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
பாஞ்சாலங்குறிச்சி
ஆதியில் திருநெல்வேலி மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் கட்டபொம்மனின் மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது. வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் "பாஞ்சாலன்" நினைவாக பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரிட்டு கோட்டை கொத்தளங்களுடன் தலைநகர் அங்கு அமைக்கப்பட்டது. இந்த அரச மரபில் 47வது வேந்தராக வந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
ஊமைத்துரை
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்கள் இருந்தனர். ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் கட்டபொம்மனுக்கு இருந்தனர்.
வீரசக்கம்மா
2.2.1790 இல் பாஞ்சாலங்குறிச்சியில் அரசுக் கட்டில் ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மனது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.
ஆட்சிக் கட்டிலில்
9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனிடம், கிழக்கிந்தியக் கும்பெனியார் கி.பி 1793 இல் கப்பம், கிஸ்தி, திரை கேட்டனர். கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன்துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 - 1798 இல் முதல்முறையாக போர் தொடுக்கப்பட்டு, போரில் வீரபாண்டிய கட்ட பொம்மனிடம் ஆலன்துரை தோற்று ஓடினார்.
ஜாக்சன்
நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனைச் சந்திக்க அழைத்தார். பல இடங்களுக்கு அலைக் கழித்தார். இறுதியில் 10.9.1798 இல் இராமநாதபுரத்தில் பேட்டி கண்டார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். வீரபாண்டியக் கட்டபொம்மன் போரிட்டு வெற்றி வீரராகப் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தடைந்தார்.
பானர்மென்
5.9.1799 இல் பானர்மென் என்ற வெள்ளைத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல வெள்ளையர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்து விடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். 9.9.1799 இல் வெள்ளையர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப் பட்டது. 1.10.1799 இல் புதுக்கோட்டையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டார். 16.10.1799 இல் கயத்தாற்றில் தூக்கில் வீரமரணத்தைத் தழுவிக் கொண்டார்.
பாஞ்சாலங்குறிச்சியின் மன்னர்கள்
வீரபாண்டிய நாயக்கர் கி.பி. 1709 - 1736
பால்பாண்டியன் கி.பி. 1736 - 1760
ஜெகவீரபாண்டியன் கி.பி. 1760 - 1790
வீரபாண்டிய கட்டபொம்மன் கி.பி. 1790 - 1799
ஊமைத்துரை கி.பி. 1799 - 1801
கட்டபொம்மனின் கடைசி நாட்கள்....
மூண்டது போர்
பாருக்குள்ளே நல்ல நாடாம் நம் பாரதத் திருநாட்டிற்கு கண்ணாடியும் சிப்பும் விற்க வந்த வெள்ளையரின் மண்ணாசை வெறி தலைக்கேறியது. தென்னாட்டில் உள்ள பாளையக்காரர்கள் எல்லோரும் தாங்கள் இருக்கும் திக்கு நோக்கி வந்து திறை செலுத்த வேண்டுமென்று ஆணையிட்டனர். பலர் ஓடிச்சென்று திறை செலுத்தினர். பலர் மண்டியிட்டனர். தான் உயிர் நீக்க நேரினும் வரிசெலுத்த முடியாதென்று சிலர் கூறினர். வெள்ளையரை எதிர்த்து நின்றனர். பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் வானம் பொழியுது; பூமி விளையுது; மன்னவன் காணிக்கு கிஸ்தி ஏது?" என்று வீரமுழக்கமிட்டார்; திறை செலுத்த மறுத்தார்; வெகுண்டெழுந்த வெள்ளையர் போருக்குத் தயாராயினர்; விளைவு மூண்டது போர்; கிளம்பிற்று கும்பினிப் படைகள்....
பாளையக்கோட்டையிலிருந்து புறப்பட்ட படை
மேஜர் ஜாண்பானர்மென் என்ற தளபதி தனது ஆங்கிலக் கும்பினிப் பட்டாளத்துடன் 1799 செப்டம்பர் 4 இல் பாளையங்கோட்டையிலிருந்து புறப்பட்டு பாஞ்சாலங் குறிச்சி நோக்கி சிவலப்பேரி மார்க்கமாக விரைந்து சென்றார்.
காப்டன் ஓரீலி(O"Reilly), ப்ரூஸ்(Bruce), காலின்ஸ்(collins), டக்ளஸ்(Douglas), டார்மீக்ஸ்(Durmieux), ப்ளேக்(blake), ப்ரௌன்(Brown) போன்ற ஆங்கிலேய அதிகாரிகளும் பாஞ்சாலங்குறிச்சியைச் சுற்றி தங்களது படைவீரர்களுடன் போருக்கு ஆயத்தமாக நின்றனர்.
வெள்ளையர் படை 5.9.1799 காலையில் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தது. கோவில்பட்டியிலிருந்தும், கயத்தாற்றிலிருந்தும் இராணுவ வீரர்கள் வந்து வெள்ளையர் படையோடு சேர்ந்து கொண்டனர். லெப்டினென்ட் டல்லாஸ் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை தனது குதிரைப் படையுடன் சுற்றி வளைத்துக் கொண்டார்.
தமிழர் படை
வீரபாண்டிய கட்டபொம்மனின் படையில் சிவத்தையா நாயக்கர், தானாபதிப் பிள்ளையின் தம்பி வீரபத்திரபிள்ளை, சம்பிரதி பொன்னப்ப பிள்ளை, பாதர் வெள்ளை எனப்படும் வீரன் வெள்ளையத் தேவன், தன்னலங் கருதாத ஊமைத்துரை, தளபதி சுந்தரலிங்கம் மற்றும் பலரும் இருந்தனர்.
வெள்ளையர் அனுப்பிய தூது
போர் துவங்குவதற்கு முன்னர் மேஜர் ஜான் பானர்மென் தம்முடைய துபாஷியான ராமலிங்க முதலியாரை ஹவில்தார் இப்ராஹிம் கான், அரிக்கரன்சாமி ஆகியவர்களுடன் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள் அனுப்பி வைத்தார். அவர்கள் கட்டபொம்மனைச் சந்தித்தனர். பின்னர் கட்டபொம்மன் பானர்மென்னைச் சந்திக்கும்படி சொல்லி அனுப்பிய செய்தியையும் கட்டபொம்மனிடம் தெரிவித்தனர்.
தனக்கு எழுத்து மூலமாக ஏதேனும் ஓர் உத்திரவு வந்தாலன்றி, மேஜர் பானர் மென்னைப் பார்க்க முடியாது என்று கட்டபொம்மனும் அதற்கு பதில் சொல்லி அனுப்பினார்.
"I lost no time in ordering the polegar to surrender at discretion to the company. if i would grant a written cowl, he said he would come to me; but not without."
அரசின் செயலாளரான ஜோசையா வெப்பிற்கு 5.9.1799 இல் பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து மேஜர் ஜான் பானர்மென் எழுதிய கடிதத்தின் வரிகள் இவை.
சமரச முயற்சிகள் பலனளிக்கவில்லை. வெள்ளையருக்கு அடங்கி ஒடுங்கிப் போகவும் திறை செலுத்திடவும் அஞ்சா நெஞ்சங் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தயாராக இல்லை. காலத்தால் அழியாத, வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கின்ற பாஞ்சாலங்குறிச்சிப் போர் துவங்கிற்று.
வீழ்ந்த வெள்ளையர்கள்
பாஞ்சாலங்குறிச்சியின் தெற்குக் கோட்டை வாசலும், வடக்குக் கோட்டை வாசலும் வெள்ளையரின் படையினரால் தாக்கப்பட்டது. போரில் வெள்ளையர் பக்கம் சேதம் அதிகமாக இருந்தது. நான்கு ஐரோப்பிய அதிகாரிகள் போரில் கொல்லப்பட்டனர்; இரண்டு பேர் காயம் பட்டனர். போர் வேகமாக நடைபெற்றது. வெள்ளையரின் பேய்வாய்ப் பீரங்கிகள் கோட்டைச் சுவர்களைத் துளைத்து உடைத்தெரியத் தலைப்பட்டன.
கோட்டை விழுந்து விடுமோ என்ற நிலை ஏற்படலாயிற்று. தீவிர ஆலோசனை செய்தார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
கோட்டையை விட்டு வெளியேறியது
திருச்சி வரை சென்று ஆங்கிலேய மேலதிகாரிகளைச் சந்தித்து, விரைவில் வந்து விடுகிறேன் என்று வீட்டாரிடம் விடைபெற்றுவிட்டு, ஒரு தண்டிகை, ஏழு குதிரைகள், ஐம்பது வீரர்கள், தம்பியர், தானாபதிகளோடு இரவு பதினொரு நாழிகையில் சித்தார்த்தி வருடம் ஆவணி மாதம் 22ஆம் நாள் (7.9.1799) இரவு 10.30 மணிக்கு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை விட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேறி வடதிசை வழியே விரைந்து சென்றார்.
நாகலாபுரம்
பொழுது விடிவதற்குள் வீரபாண்டிய கட்டபொம்மன் நாகலாபுரத்தை அடைந்தார். அங்கு இரவப்ப நாயக்கர் அவரை அன்போடு உபசரித்தார். அங்கிருந்து விடைபெற்று கோசுகுண்டு வழியாக கோலார்பட்டியை வந்தடைந்தார். அங்கு இராஜகோபால நாயக்கர் அவரை எதிர் கொண்டழைத்து அன்போடு உபசரித்தார்.
கோட்டை பிடிபட்டது
சித்தார்த்தி வருடம் ஆவணி மாதம் 24 ஆம் நாள் 9.9.1799 காலை பத்து நாழிகையில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையினை மேஜர் பானர்மென் கைப்பற்றிக் கொண்டார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேறிச் சென்றிருக்கும் திசையைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்ட மேஜர் பானர்மென் பல பாளையக்காரர்களுக்கும் கடிதங்கள் அனுப்பி வீரபாண்டிய கட்டபொம்மனைப் பிடிப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
பானர்மென் கடிதம்
"ஒவ்வொருவருடைய குணத்திற்கும் கட்டபொம்மன் மீது கொண்டிருக்கும் அவர்களுடைய அபிப்பிராயத்திற்கும் ஏற்றவாறு வெவ்வேறு விதமாக அந்தப் பாளையக்காரர்களுக்கு பானர்மென் கடிதம்
எழுதியதாக அவரே அரசுக்கு 11.9.1799 இல் நாகலாபுரத்திலிருந்து எழுதிய கடிதத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார்.
... that I found it necessary to very the style of my letters to the different polegars, according to the knowledge I had of their characters, and what I knew of their dispositions towards cataboma Naig.
(வெள்ளையரின் வஞ்சக எண்ணமும், நம்மவர்களை அவர்கள் எப்படி யெல்லாம் ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதற்கு இந்தக் கடிதம் சான்று பகர்கிறது).
பிடித்திடத் தயாரான படைகள்
லெப்டினென்ட் டல்லாஸ் தலைமையில் இரண்டு குதிரைப் படைகளையும், காப்டன் ஓரெய்லி தலைமையில் 400 குண்டு வீச்சாளர்களையும் இடது பக்கமாக அனுப்பி வைத்துவிட்டு முக்கிய படைகளுடன் மேற்கு பக்கமாக மேஜர் பானர்மென் செல்லவும் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி சிறிது தூரம் சென்றதும் எட்டயபுரம் பாளையக்காரர் தனது படைவீரர்களுடன் கட்டபொம்மனைப் பிடிப்பதற்குச் செல்வதாகவும், தனக்கு உதவியாக மேலும் சிப்பாய்களை அனுப்பும்படியும் தகவல் தந்தார். அதன்படி காப்டன் ஓரெய்லியும் லெப்டினென்ட் டல்லாஸ“ம் எட்டயபுரம் படையினருக்கு துணையாகச் சென்றனர்.
கோலார்பட்டியில் கடும் போர்
கோட்டையை விட்டு வெளியேறிச் சென்ற வீரபாண்டிய கட்டபொம்மனை கோலார்பட்டி கோட்டைப் பகுதியில் எட்டயபுரத்தாரின் படைகள் 10.9.1799 இல் எதிர்கொண்டன. அங்கு போர் நடைபெற்றது. இரு தரப்பிலும் பெரிய சேதமேற்பட்டது. கட்டபொம்மனது படையினர் வீரப் போரிட்டனர். வெள்ளையர் தரப்பில் 37 பேர்களும், கட்டபொம்மன் தரப்பில் 16 பேர்களும் போரில் மாண்டனர். ஆறு பேர்களுடன் குதிரைகளில் ஏறி வீரபாண்டிய கட்டபொம்மன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
தானாபதி சிவசுப்பிரமணியபிள்ளை, அவரது தம்பி வீரபத்திரபிள்ளை, ஆதனூர் வெள்ளைச்சாமி நாயக்கர், அல்லிக்குளம் சுப்பா நாயக்கர், முள்ளுப்பட்டி முத்தையா நாயக்கர், கொல்லம்பரும்புக் குமாரசாமி நாயக்கர் முதலிய 34 பேர்களை வெள்ளைக் கும்பினியர் கைது செய்தனர்.
தானாபதி சுப்பிரமணி பிள்ளை
கோலார்பட்டி போரின் போது தானாபதி சுப்பிரமணியபிள்ளை கைது செய்யப்பட்டதற்காக எட்டயபுரத்துப் படையினருக்கு வெள்ளையர் தகுந்த சன்மானங்களை அளித்தனர். நாகலாபுரம் கிராமத்தின் முக்கியப் பகுதியில் சுப்பிரமணிய பிள்ளையை தூக்கிலே தொங்கவிட்டு, அவருடைய தலையை வெட்டி எடுத்துச் சென்று ஈட்டியில் வைத்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டையிருந்த பகுதியில் காட்சிப்பொருளாக வைத்தனர்.
சௌந்திரபாண்டிய நாயக்கர்
நாகலாபுரம் பாளையக்காரரின் தம்பியாகிய சௌந்திரபாண்டிய நாயக்கர் 12.9.1799 இல் கைது செய்யப்பட்டார். பின்னர் சர்ஜன் எனும் தளகர்த்தரின் தலைமையில் பலத்த பாதுகாப்புடன் இராமநாதபுரம் எல்லையிலுள்ள கோபாலபுரம் கிராமத்திற்கு கொண்டு சென்று 13.9.1799 காலையில் அங்கு அவரும் தூக்கிலே தொங்கவிடப்பட்டார்.
நாடு கடத்தப்பட்டவர்கள்
நாகலாபுரம் ஜமீன் மானேஜர் சாத்தூரப்பிள்ளை, கோலார்பட்டி ஜமீன்தாரின் மைத்துனரும் மானேஜருமான சவுந்தரலிங்க நாயக்கர், குளத்தூர்த் தானாபதி ஆறுமுகம் பிள்ளை, காடல் குடித்தானாபதி கோமதிநாயகம் பிள்ளை, ஏழாயிரம் பண்ணைத் தானாபதி தருமப் பெருமாள் பிள்ளை ஆகிய ஐவரையும் ஆயுள்காலம் வரை அயலிடம் செல்ல ஆணை பிறப்பிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். நாகலாபுரம் பாளையக்காரர் இரவப்ப நாயக்கரையும், ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர் காளைவன்னியனாரையும், குளத்தூர் பாளையக்காரரின் மகன் சின்ன வெட்டூர் நாயக்கரையும் சென்னைப் பட்டிணம் கொண்டு போய் அங்கு அவர்கள் சிறை வைக்கப்பட்டனர்.
கோலார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, காடல்குடி, குளத்தூர் இவை அனைத்தும் கும்பெனியாரின் ஆதிக்கத்தின் கீழ் அப்போது வந்தன.
பட்டக்குதிரை முத்துராம்
அழகும், வேகமும், அறிவும் கொண்ட வெள்ளை நிறங் கொண்ட தனது பட்டக் குதிரை முத்துராமில் இருந்து கொண்டு வடதிசை நோக்கி விரைந்து கொண்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கில தளகர்த்தர்கள் டல்லாசும், "போயனும்" விரட்டிக்கொண்டு வந்தனர். கடிய வேகமுடைய 200 குதிரையாளர்கள், கொடிய வெடி வேல்களை உடைய 1100 படைவீரர்களும் பின் தொடர்ந்தனர். ஆனால் காற்றினும் வேகமாக கட்டபொம்மனின் குதிரை பறந்து சென்றது. கடுவேகமாக நெடுந்தூரம் தாவிப் போக நேர்ந்ததால் பட்டக் குதிரை முத்துராம் தனது ஆவியை இழந்தது. தனது பட்டக் குதிரை இறந்ததைக் கண்ட, கட்டபொம்மன் கண்ணீர் சிந்தினார். வேகம் குறைந்து விடும் நிலையில் இருந்த மீதி இரண்டு குதிரைகளையும் வழியே விட்டு விட்டு கால் நடையாய் கட்டபொம்மனும் உடன் வந்தவர்களும் நடக்கத் துவங்கினார்கள்.
ஆனியூர்
கல்லிலும் முள்ளிலும் நடந்து வந்த கட்டபொம்மன் சிவகங்கை நாட்டின் வடமேற்கு எல்லையில் மறவர் மரபில் கள்ளர் என்னும் பிரிவினர் தங்கி வாழும் ஆனியூர் என்ற கிராமத்தை வந்தடைந்தார்.
காளிமுத்து - பெரிய நம்பி
இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்த கட்டபொம்மனையும் மற்றும் அவருடனிருந்த ஊமத்துரை, மைத்துனர்கள் முத்தையா நாயக்கர், குமாரசாமி நாயக்கர், முத்துக்குமாரசாமி நாயக்கர் அந்தரங்க ஊழியர் வீரண்ண மணியக்காரன், அண்ணன் ஆகிய ஆறுபேர்களையும் பாதுகாப்புக் கருதி மலைச் சாரலுக்கு அழைத்துச் சென்று மறைவாக இருக்க வைத்த பெருமைக்குரியவர்கள் ஆனியூர் காளிமுத்துவும், பெரிய நம்பியும் ஆகும்.
வீர கஞ்சய நாயக்கர்
ஏழு நாட்கள் ஆனியூரில் கட்டபொம்மன் தங்கியிருந்த வேளையில், ஏழாம் நாள் இரவு காடல்குடி, ஜமின்தார் வீர கஞ்சய நாயக்கர் நேராக வந்து கட்டபொம்மனைச் சந்தித்தார். தானாபதி பிள்ளை தூக்கிலிடப் பட்டதையும், பாளையங்கள் வீழ்ந்த விவரங்களையும் தெரிவித்தார்.
திருக்களம்பூர்
அங்கிருந்து திருச்சிக்கு, புதுக்கோட்டை வழியாகச் செல்லத் திட்டமிட்டார் கட்டபொம்மன், சோளபுரம் என்னும் ஊரை அடைந்தார். அங்குள்ள மடத்தில் தங்கியிருந்தார் கட்டபொம்மன். பின் அங்கிருந்து புதுக்கோட்டைச் சிமையில் திருக்களம்பூர் என்னுமிடத்திற்கு மேற்கில் கலியாப்பூர் என்ற ஊருக்கு அருகிலுள்ள காட்டினை அடைந்தார்.
லூஷிங்டன் கடிதம்
8.9.1799 இல் ராமநாதபுரத்திலிருந்து கலெக்டர் லூஷிங்டன், புதுக்கோட்டை ராஜா விஜயரகுநாத தொண்டைமானுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-
"தன்னுடைய குற்றங்களுக்காகவும் கீழ்ப்படியாமைக்காகவும் பாஞ்சாலங் குறிச்சி பாளையக்காரருக்கு வெகு நாட்களாக கொடுக்க காத்திருக்கும் தண்டனையை கவர்னர் ஜெனரல் நிறைவேற்றத் தீர்மானித்திருக்கிறார் என்பதை நீர் அறிவீர்! மேஜர் பானர்மென் இதனை நிறைவேற்ற தன்னுடைய படைகளைத் திரட்டிக் கொண்டிருக்கும் போது, கட்டபொம்மு நாயக்கர் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை விட்டு உம்முடைய நாட்டை நோக்கி வந்து கொண்டிருப்பதாக அறிகிறோம். அவரை எவ்வளவு சிக்கிரம் பிடிக்க முடியுமோ அவ்வளவு சிக்கிரம் பிடிக்க வேண்டியது அவசியமாதலால், நீர் இந்தக் காரியத்தில் உம்மை ஈடுபடுத்திக் கொள்வீர் என்று நிச்சயமாக நம்புகிறேன். இந்தப் பணியை முடித்துக் கொடுத்தால் உம்மைப் பற்றி கவர்னருக்கு, பாராட்டி தெரிவிப்பதோடு, எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்தப் பணியில் உமது ஈடுபாடுகள் கம்பெனி அரசிற்கு உம்முடைய கீழ்ப்படிதலையும், தொடர்பையும், உறவையும் நிரூபிப்பதற்கு சான்றாக அமையும்."
கலெக்டர் லூஷிங்டன் இந்தக் கடிதத்திற்கு, புதுக்கோட்டை அரசர் விஜய ரகுநாதத் தொண்டைமான் தமிழில் 14.9.1799 இல் எழுதிய கடிதம், லூஷிங்டனுக்கு 19.9.1799 இல் கிடைத்தது.
வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு வாழ்த்துதலைச் சொல்லிவிட்டு, அந்தக் கடிதத்தில் விஜய ரகுநாத தொண்டைமான் சொல்லியிருப்பதாவது.
விஜய ரகுநாத தொண்டைமானின் கடிதம்
"கட்டபொம்மு நாயக்கரும், நாகலாபுரம் பாளையக்காரரும் கும்பெனிக்கு எதிராக கலகம் செய்ததால், கும்பெனிப் படைகள் அங்கு சென்றபோது தங்களது பாளையங்களை விட்டு வெளியேறி என்னுடைய எல்கையை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், அவர்களைக் கைது செய்திட வேண்டுமென்று விரும்பியும், நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது.
கும்பெனியின் காரியங்களில் என்னுடைய நெருக்கத்தை நீங்கள் நினைவு கூர்ந்த இந்தச் செயல் என்னால் சொற்களால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியை எனக்கு ஏற்படுத்துகிறது. கும்பெனிக்கு சேவை செய்வதைவிட வேற எந்த நல்ல காரியம் எனக்கு இருக்க முடியும்? கும்பெனியாரின் கருணையைப் பெறுவதற்கு இது தகுதியாக இருக்கிறது. துவக்க காலம் முதல் நான் கும்பெனியாரிடம் நெருக்கமாக இருந்து வந்திருக்கிறேன். கும்பெனியுடன் உள்ள விசுவாசந்தான் என்னுடைய வாழ்க்கையில் முக்கிய குறிக்கோளாகும்.
திப்பு சுல்தானுக்கு எதிராகச் சென்ற புதுக்கோட்டைப் படைகள்
திப்பு சுல்தானுக்கு எதிராக நடந்த போரில் கர்னல் பிரௌனுக்கு 5000 ஆடுகளையும், 2000 போர் வீரர்களையும் நம்பத் தகுந்த தலைவர்களுடன் ஸ்ரீரங்கப் பட்டணத்திற்கு அனுப்பி வைத்து அங்கே அவர்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் நடந்து கொண்டார்கள் என்பதையெல்லாம் தாங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
உங்களுடைய கடிதம் கிடைத்த அடுத்த நொடியே பல்வேறு படைப் பிரிவுகளை என்னுடைய நாட்டின் எல்கைகளுக்கு அனுப்பி வைத்துள்ளேன். அவர்கள் மிகுந்த விழிப்புடன் செயல்படுகிறார்கள். இந்தப் பாளையக்காரர்கள் என்னுடைய எல்லையை நெருங்கினால், கடவுளுடைய கிருபையால் என்னுடைய நெருக்கமும் உண்மையும் வெளிப்படுத்தப்படும் (அதாவது கட்டபொம்மனை எப்படியும் பிடித்துக் கொடுத்து விடுவேன்).
கும்பெனிக்காக உயிரை விடவும் தயார்
சர்வ வல்லமையுள்ள இறைவனின் கோவிலில் நான் எடுத்துக் கொள்ளும் முதல் பிரார்த்தனை என்னவென்றால் கம்பெனியார் எனக்கு கொடுக்கும் எந்தப் பணியிலும் என்னுடைய உயிரைக் கொடுத்தாவது நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதே. இதற்கு மேல் நான் என்ன எழுதிட? என்பால் உங்கள் நட்பு மேலும் வளரட்டும்."
இந்த ஒரு கடிதத்தோடு மட்டும் விஜயரகுநாத தொண்டைமான் நிற்கவில்லை. திரும்பவும் 16.9.1799 இல் லூஷிங்டனுக்கு புதுக்கோட்டை அரசர் தமிழில் எழுதிய கடிதம் 26.9.1799 இல் கிடைக்கிறது. அதில் எல்லா வகையிலும் கும்பெனியின் ஆதரவாளர் நான். உங்களுடைய சொந்த ஆட்களைப் போல என்னை ஒருவனாக நினைத்து உங்களுடைய நெஞ்சம் நிறைந்த நட்பினை எனக்கு நல்கிட வேண்டும். இதற்கு மேல் என்ன எழுத? என்பால் உங்களது நட்பு என்றும் வளரட்டும் என்று திரும்பவும் கடிதம் எழுதி தனது "வெள்ளையர் விசுவாசத்தை" நிரூபித்துக் கொண்டார் புதுக்கோட்டை அரசர் விஜயரகுநாத தொண்டைமான்.
புதுக்கோட்டையார் பிடித்துக் கொடுத்து
24.9.1799 இல் புதுக்கோடை அரசர் விஜயரகுநாத தொண்டைமான் எழுதி ய கடிதம் 29.9.1799 இல் கலெக்டர் லூஷிங்டனுக்கு கிடைத்தது. கும்பெனியாரை வாழ்த்தித் துவங்கும் அந்த கடிதம் தரும் விபரம் இதோ.
மலைகளிலும் குன்றுகளிலும் எல்லாப் பக்கமும் என்னுடைய படையினரை பகைவர்கள் மறைந்திருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக நிறுத்தி வைத்திருந்தேன். இறைவனின் கிருபையாலும், கும்பெனியாரின் செழிப்பினாலும், மற்றும் என்னுடைய நல் அதிர்ஷ்டத்தாலும், சிவகங்கை தாலூகாவிலுள்ள கலியாப்பூர் என்ற ஊரிலுள்ள காட்டிலே, கட்டபொம்மனும் அவனது தம்பி ஊமத்துரையும் மற்றும் அவர்களது உறவினர்கள் ஆக ஏழு பேர்களுடன் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, நேற்று இரவு எனது படைகளை அனுப்பி அவர்களைச் சூழ்ந்து கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடனும், முயற்சியுடனும் அவர்கள் கைது செய்யப்பட்டனர். (சர்தார் திருக்களம்பூர் முத்துவைரவ அம்பலக்காரர் தலைமையில் சென்ற படை கட்டபொம்மனைப் பிடித்தது. இவரைப் புகழ்ந்து பாடிய கும்மிப்பாடலும் இருக்கிறது).
உயிரைவிடத் துணிந்த உத்தமன்
கலியாப்பூர் காட்டிலே கைது செய்யப்பட்டபோது தன்னைத் தானே கொன்று உயிரை மாய்த்துக் கொள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் முன் வந்தான்.
"cattaboma Naig at the time he was seized, wished to have slain himself, but my people having bound hishands kept him in confinement"
"ஆனால் எனது படையினர் கட்டபொம்மனது கரங்களைக்கட்டி கைது செய்து கொண்டு வந்து விட்டார்கள்.
கட்டபொம்மனைப் பற்றி உங்களுக்கு மிகவும் நன்றாகத் தெரியும் அவரைப் பாதுகாப்பாக ஒரு நாள் வைத்துக் கொள்வது கூட மிகவும் கடினமான காரியமாகும்."

1 comment:

  1. vaalga tamil, when i have learned about him in my school days, i was very proud to have such a person in our state. and i also appreciate the admin for creating such a blog for tamil

    ReplyDelete