Tuesday, October 26, 2010

சங்க கால நடுகற்கள் கண்டுபிடிப்பு

சங்க கால நடுகற்கள் கண்டுபிடிப்பு ( Sanga - Nadukargal - Tamil Katturaikal - General Articles
இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழ் (தமிழ்ப் பிராமி) எழுத்துப் பொறிப்புப் பெற்ற மூன்று சங்ககால நடுகற்களை முதன்முதலாகத் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தமிழகத்தில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ள புலிமான்கோம்பை என்ற சிற்றூரில் இந்நடுகற்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்றூரான புலிமான்கோம்பை வைகை ஆற்றின் தென்கரையில் வத்தலக்குண்டிலிருந்து தெற்கே 15 கி.மீ. தொலைவிலும் ஆண்டிப்பட்டியிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகப்பழமையானவை என்ற பெருமையை இந்நடுகற்கள் தட்டிச் செல்கின்றன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இச்சங்ககால நடுகற்களின் கல்வெட்டுப் பொறிப்பு இதுவரை தமிழகத்தில் கிடைத்த பழந்தமிழ் (தமிழ் பிராமி) கல்வெட்டுகளில் காலத்தால் முந்தியதாகும். மூன்றடி உயரமும் ஒன்று முதல் ஒன்றரை அடி அகலமும் கொண்ட இந்நடுகற்கள் நிலத்தில் ஓர் அடி ஆழத்தில் நடப்பட்டிருந்தன. இந்நடுகற்கள் சங்ககாலத்தைச் சார்ந்த முதுமக்கள் தாழிகளை உட்கொண்ட ஈமச்சின்னத்தின் ஒரு பகுதியாக நடப்பட்டிருந்ததால் தமிழக வரலாற்றாய்விலும் சங்ககால ஆய்விலும் சிறப்பான இடத்தை பெற்றுத் திகழ்கின்றன.
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பெறும் நடுகற்கள் தற்பொழுது முதன்முதலாகக் கிடைத்துள்ளதால் சங்க இலக்கிய ஆய்விற்கு ஒரு புதிய பரிமாணம் கிடைத்துள்ளது. இதுகாறும் தமிழகத்தில் சமணர் உறைவிடங்களிலேயே பழந்தமிழ் (தமிழ் பிராமி) கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வரிய கண்டுபிடிப்பின் மூலம் தமிழக மக்கள் பரவலாக எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது உறுதிப்படுகிறது.
ஈமச்சின்னத்தின் ஒரு பகுதியாகக் காணப்பெற்ற இந்நடுகற்கள் விவசாயத்திற்காக நிலம் பண்படுத்தப்பெற்றபொழுது அப்புறப்படுத்தப்பட்டுக் கிடந்தன. பின், கால ஓட்டத்தில் மண்ணுக்குள் புதையுண்டும் போயின. ஏராளமான முதுமக்கள் தாழிகள் புலிமான்கோம்பையிலும் பரல் உயர் பதுக்கைகள் இவ்வூரின் எதிர்ப்புறம் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள பூம்பட்டியிலும் காணக் கிடைக்கின்றன. புலியன் கோம்பைக்குக் கிழக்கே இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தெப்பத்துப்பட்டி என்ற சிற்றூரிலும் ஈமச் சின்னங்கள் காணப்படுவதால் சங்ககாலத்தில் இப்பகுதி சிறந்த நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பது உறுதிப்படுகிறது.
கிடைக்கப் பெற்ற மூன்று நடுகற்களுள் ஒன்றில் "கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆ கோள்" என்ற எழுத்துப் பொறிப்புள்ளது. இதற்கு, "கூடல் ஊரில் நடைபெற்ற ஆகோள் பூசலில் உயிர்நீத்த பேடு தீயன் அந்தவன் என்பவனுக்கு எடுப்பித்த கல்" எனப் பொருள் கொள்வதால் இது வெட்சிப் பூசலில் (போரில்) ஈடுபட்ட வீரனுக்கு எடுக்கப் பெற்றதாகும். சங்க இலக்கியமான மலைபடு கடாம் கல்லெறிந்து எழுதிய நல்லரை மராஅத்த கடவுள் ஓங்கிய காடுஏசு கவலை எனவும் திருக்குறள் எந்தைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர் என்ஐ முன்னின்று கல் நின்றவர் எனவும் குறித்தலால் கல் என்ற சொல் நடுகல்லையே குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். ஆகோளைப் பற்றி வரும் தெளிவான முதல் நடுகல் இது என்பது இங்குக் குறிப்பிடத்தகதாகும். தொல்காப்பியம் இதனை ஊர் கொலை ஆகோள் பூசன் மாற்றே (தொல் 20:3) என்று கூறும்.
அடுத்த நடுகல்லின் முன்பகுதி உடைந்துபோய் உள்ளது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட பழந்தமிழ்ப் பிராமி வரிவடிவத்தில் எழுதப் பெற்ற இந்நடுகல்லில் இரு வரிகள் காணப் பெறுகின்றன. முதல் வரி அன் ஊர் அதன் என்றும் இரண்டாவது வரியில் ....ன் அன் கல் என்றும் காணப் பெறுகின்றன.
அடுத்த நடுகல்லில் வேள் ஊர் பதவன் எனக் காணப் பெறுகிறது. இதற்கு வேள் ஊரைச் சார்ந்த பதவன் அவ்வன் என்பவனுக்கு எடுக்கப்பெற்ற நடுகல் எனப் பொருள் கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட மூன்று நடுகற்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நடுகற்கள் கி.மு.மூன்றாம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாகும். ஆ கோளைப் பற்றிக் குறிப்பிடும் முதல் நடுகல் கி.மு. மூன்றாம் நுற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணக்கில் கொள்ளலாம். உயிரெழுத்துக்களில் பிரித்தெழுதப்படுதல் பழ மரபு. அதே மரபு இங்கும் பின்பற்றப்பட்டுள்ளது. எனவே இக்கல்வெட்டுகள் மூன்றும் காலத்தால் முற்பட்டவை எனக் கருதலாம். தொல்லெழுத்தியல், எழுத்தமைப்பியல் மற்றும் மொழியியல் ஆகியவற்றின் அடிப்படையில் இக்கல்வெட்டுக்கள் காலத்தால் முந்தியவை.
நடுகற்களைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சங்க காலப் புலவர்கள் இவற்றை வியந்து கூறியுள்ளனர். தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, மலைப்படு கடாகம், ஐங்குறுநூறு, பட்டினப்பாலை போன்ற இலக்கியங்கள் நடு கற்களைப் பற்றியும் அவற்றில் காணப்பெறும் எழுத்துக்களைப் பற்றியும் சிறப்புறக் கூறுகின்றன. சித்தலைச் சாத்தனார், "விழுத்தொடை மறவர் வில்இட வீழ்ந்தோர், எழுத்துடை நடுகல்" (அகம்:53) எனவும் ஓதலாந்தையார், "வழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர், எழுத்துடை நடுகல்" (ஐங்குறுநூறு:352) எனவும், மதுரை மருதன் இளநாகனார், "பேஎம் முதிர் நடுகல், பெயர் பயம் படரத்தோன்றும் குயில் எழுத்து" (அகம் :297), "மரம்கோள் உமண்மகன் பெயரும் பருதிப், புன்தலை சிதைத்த வன்தலை நடுகல், கண்ணி வாடிய மண்ணா மருங்குல், கூர் உளி குயின்ற கோடுமாய் எழுத்து" (அகம்: 343) எனவும் குறிப்பிடுகின்றன. இக் குறிப்புகள் அனைத்தும் சங்க காலத்தில் எழுப்பப்பெற்ற நடுகற்களில் எழுத்துக்கள் இருந்தன என்பதைப் புலப்படுத்துகின்றன. இப்போது கிடைத்துள்ள சங்ககால நடுகற்கள் மூலம் முதன்முறையாக இவ்வுண்மை உறுதிப்படுத்தப் பெறுகிறது.
இந்நடுகல்லின் ஒளிப்படத்தைப் பார்வையுற்ற மூத்த கல் வெட்டறிஞரும் தமிழ்ப் பிராமி வரிவடிவ ஆய்வில் ஆழ்ந்த புலமை பெற்றவருமான ஐராவதம் மகாதேவன் அவர்கள் இந்நடுகற்களைக் கண்டுபிடித்த ஆய்வுக் குழுவிற்குத் தமது பாராட்டுக்களையும் மகிழ்வையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், இந்நடுகற்களைக் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: எழுத்தமைதியின் அடிப்படையில் இந்நடுகற்கள் மாங்குளம் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்களை ஒத்திருப்பதால் இவற்றின் காலத்தை கி.மு.இரண்டாம் நூற்றாண்டின் துவக்கக் காலத்திற்கு முன்பாக எடுத்துச் செல்லலாம் இந்தியாவில் கிடைத்த நடுகற்களில் காலத்தால் முந்தைய நடுகற்கள் என்ற பெருமையை இந்நடுகற்கள் பெறுகின்றன் தமிழகத்தில் கிடைத்த தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்களில் பிராகிருதச் சொற்கள் கலந்து வரும் நிலையில் இந்நடுகற்கள் பிராகிருதச் சொற்களின் கலப்பின்றித் தூய தமிழ்ச் சொற்களைக்கொண்டு எழுதப் பெற்றுள்ளன சங்க காலத்தில் தமிழகம் முழுவதும் கல்வி அறிவைப் பெற்றுத் திகழ்ந்திருந்ததை இக்கண்டுபிடிப்பு உணர்த்துகின்றன.
இந்நடுகற்களைப் படித்துணர்வதற்குத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் இந்திய வரலாற்று ஆய்வுக்கழகத்தின் உறுப்பினருமான பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள் பெரிதும் துணைபுரிந்தார். முன்னாள் கல்வெட்டியல் துறைத் தலைவர் பேராசிரியர் செ. இராசு அவர்கள் இலக்கியச் சான்றுகளை அளித்துதவினார். மத்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையைச் சார்ந்த முனைவர் சு.இராசவேலு, டாக்டர் இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர் முனைவர் இல. தியாகராஜன் மற்றும் கல்வெட்டறிஞர்கள் முனைவர் சூ.சுவாமிநாதன், முனைவர் மு.நளினி போன்றோர் கல்வெட்டுக்களைக் கண்ணுற்று இக்கண்டுபிடிப்பை நிகழ்த்திய ஆய்வுக்குழுவைப் பாராட்டினர்.
இந்நடுகற்கள் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையின் தலைவர் முனைவர். கா.ராஜன் தலைமையில் இயங்கிய ஆய்வாளர்கள் திரு.வி.பி. யதீஸ்குமார் மற்றும் திரு.சி.செல்வ குமார் ஆகியோர் கள ஆய்வில் கண்டுபிடித்தனர். ஆய்வாளர் முனைவர் மா.பவானி மற்றும் திரு.ச.வெங்கடாசலம் ஆகியோர் நடுகற்கள் கிடைத்த இடத்திற்கு வந்து கல்வெட்டுக்களைப் படிக்க உதவி புரிந்தனர். இக்களப்பணி ஃபோர்டு அறக்கட்டளைத் திட்ட நல்கையிலும் பல்கலைக்கழக மானியக்குழுத் திட்ட நல்கையிலும் மேற்கொள்ளப் பெற்றது.

No comments:

Post a Comment