சிந்துவெளி நாகரிகமும் மொழியும்
இந்திய வரலாற்றின் தொன்மையைத் தெளிவுற எடுத்துக்காட்டும் சான்றுகளைச் சிந்துவெளி நாகரிகம் தந்துள்ளது. பௌராணிக மரபில் வரையப்பட்ட இந்திய வரலாறு, சிந்துவெளி நாகரிகச் சின்னங்களால் அறிவியல் வழிப்பட்ட வரலாறாக அமைந்தது. சிந்துவெளி நாகரிக இடிபாடுகளைக் கண்டுபிடிப்பதில் அயராது உழைத்த இந்திய, ஐரோப்பிய அறிஞர்களை இதற்காக நாம் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். ஹரப்பாவைக் கண்டுபிடித்த Charless Massan (1826) காலந்தொட்டு இன்று வரை சிந்துவெளி நாகரிகத்தின் விடுபட்டுப் போன பல கூறுகள் பற்றிய ஆய்வு தொடர்கிறது. ஒரு முறையான, அறிவியல் வழியிலான ஆராய்ச்சி அணுகுமுறை கொண்டு, பல்வேறு தரவுகளின் அடிப்படையில் வெளிப்பட்ட கருத்துகள் / முடிவுகள் சிலவற்றைத் திரித்தும், குழப்பியும் புதிய வரலாற்றை - அகநிலைவயப்பட்டும் (Subjective) மதவாத அரசியலைப் பின்புலமாகக் கொண்டும் - எழுதும் முயற்சி கடந்த சில ஆண்டுகளாக மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில்தான், சிந்துவெளி நாகரிகம் / ஹரப்பா நாகரிகம் என்பது சிந்து - சரஸ்வதி நாகரிகம் எனப் புதுப்பெயர் பூண்டு முகம்காட்டத் தொடங்கியுள்ளது. இவ்வாறு, வரலாற்றைத் திரித்துப் பேசும் சூழலில், அந்த வரலாற்றின் அசைக்க இயலாத சில கருத்துகளை / முடிவுகளை மீண்டும் கவனத்தில் கொள்வது இன்றையத் தேவையாகிறது. பல நாடுகளைச் சேர்ந்த தொல்லியல், மொழியியல், வரலாற்றியல், சமூகவியல், மானிடவியல், அறிவியல் அறிஞர்களின் தற்சார்பில்லாத அறிவியல் முறையிலமைந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வெளியீடுகள் கூறும் கருத்துக்களின் / முடிவுகளின் மெய்மையைத் தெரிந்து கொள்வதன் மூலம் வரலாற்றின் திரிபுகளை இனங்காண முடியும்.
பண்டைய இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் (இன்றைய பாகிஸ்தான் உள்ள பகுதி) ஓடிக் கொண்டிருந்த சிந்து / இந்து நதிக்கரையில் இருந்த ஹரப்பா, மொகஞ்சதோரோவைக் கண்டுபிடித்த காலம் இந்திய வரலாற்றின் ஒளிமயமான காலமாகும். ஒரு சாதாரண / தற்செயலான நிகழ்வு, மிகப்பெரிய வரலாற்று நிகழ்வாக மாறிய விந்தையாக இது அமைந்தது. சார்லஸ் - மாசன் என்கிற ஆங்கில இராணுவ அதிகாரி, தமது பதவியை விட்டு விலகி, ஒரு சுற்றுலாப் பயணியாக ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான் பகுதியில் 1826 - இல் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, சிந்து நதியின் கிளைநதியான இரவியின் இடது கரையில் அமைந்த ஹரப்பாவைக் கண்டார். அவரது குறிப்பில் அது "Haripah" என இடம் பெற்றதோடு, "a ruinous brick castle" (பாழடைந்த ஒரு செங்கல்கோட்டை) என்ற குறிப்பும் இடம் பெற்றது. ஹரப்பா பற்றிய முதல் தகவல் இது. அதே பகுதிக்கு 1833-இல் Sir Alexander Burns வந்தார். அரசனது கொடுங்கோன்மையைப் பொறாத கடவுள் தந்த தண்டனைதான் இந்த இடிபாடுகள் என்று மக்கள் கூறிய கர்ண பரம்பரைக் கதையை அவர் கேட்டார். பிறகு கராச்சியையும், லாகூரையும் இணைக்கும் வகையில் இருப்புப் பாதை அமைக்கும் திட்டத்தோடு வந்த ஸ்காட்டிஷ் பொறியாளர்களான பிரண்டன் சகோதரர்கள் (John Branton, Robert Branton, 1850) ஹராப்பாவில் கேட்பாரற்றுக் கிடக்கும் பழங்காலச் செங்கற்களை இதற்குப் பயன்படுத்தலாயினர். அங்கு, அப்போது வாழ்ந்த மக்களும் தங்கள் தேவைக்கேற்ப இங்கிருந்த செங்கற்களைப் பயன்படுத்தினர். இந்தியத் தொல்லியல் துறையின் முதல் ஆய்வாளரான Alexander Cunningam 1850-களின் தொடக்கத்தில் இப்பகுதிக்கு வந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் 1870 - களில் ஹரப்பாவில் அகழ்வாய்வினை மேற்கொண்டார். தமது கண்டுபிடிப்பை Archaeological Survey of india இதழில் வெளியிட்டார். "The most curious object discovered at Harappa in a seal... above the bull there is inscription in six characters which are quite unknow to me" என்று எழுதினார். இவ்வகைக் குறிப்புகளால் தூண்டப்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் sir John Marshall (1923-34) முறைப்படியான ஆய்வை மேற்கொண்டார். இவர் காலகட்டத்துக்கு சிறிது முன்பாக D.R. பண்டார்கர் மொகஞ்சதோரோ முதுமக்கள் முகடு அல்லது மறைந்தோர் மணல்மேடு, Mount of Death people) இடிபாடுகளைக் கண்டறிந்தார் (1911). ஹரப்பா - மொகஞ்சதோரோ ஆய்வில் Daya Ram Sahan (1920) Rakhal Das Banerji (1921) எனப் பலரும் ஈடுபட்டனர். G.J. Gadd (1932) Mortin Wheeler (1946) பணி மிகவும் குறிப்பிடத்தக்கது. இவ்வாய்வின் பலனாக ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் (சுமார் 20 இலட்சம் ச.கி.மீ) கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விடங்கள் உள்ள நிலப்பகுதி வடக்கு - கிழக்காக 950 மைல் என்று சொல்லப்படுகின்றது. நகரங்களும் பிறவும் கண்டுபிடிக்கப்பட்ட நிலப்பகுதியின் அடிப்படையில் இது சிந்துவெளி நாகரிகம் (Indus Civilization) என்றும், நாகரிகத்தின் வகைக் குறித்து ஹரப்பா பண்பாடு (Harappan Culture) என்றும் அழைக்கப்பட்டது. Sri John Marshall, Indus Civilization (1931) என்றார். stuart Piggot (1950) Harappan Culture என்றார். தற்போது இதை Indus - Saras என அழைக்கும் முயற்சியும் ஆர்வமும் தலை தூக்கியுள்ளன. புதுதில்லி அரசு அருங்காட்சியகத்திலுள்ள பகுதி Indus Civilization பகுதி தற்போது Indus - Saraswathi Civilization எனப் புதுப்பெயர் பூண்டு நிற்கிறது. இப்புதுவகைப் பெயர் சூட்டலுக்கு குப்தா (The Indus - Saraswathi Civilization - 1996) B.B. lal (The Saraswathi Flowson) V.S. Wakaner, மிஸ்ரா (Decaan College) முதலியோரின் அண்மைக்காலக் கண்டுபிடிப்புகள் காரணமாயின. இதன் குறைகளை Irfan Habib தமது Imaging River Saraswathi: A defence of Commonsense (Social Scientist, 29: 1-2, 2001) என்ற கட்டுரையில் தெளிவாகக் காட்டியுள்ளார். மேலும் Saraswathi என்பது பழைய இந்தோ - இரானியச் சொல்லான Harax vaitii என்பதன் மரூஉ என்பதும் (Witzel, Sharma, Ratnager, Rajesh Kochar முதலியோரால்) எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. Harax vaitii - என்பது இந்தோ - இரானியப் பகுதியில் ஓடும் ஒரு ஆறு என்றும், அங்கு வாழ்ந்திருந்த ஆரியர்கள் அதன் நினைவாக சிந்துவெளிப் பகுதியில் கிளை நதியாக ஓடிய Gagger என்பதற்கு இப்பெயரைச் சூட்டினர் என்றும் கூறப்படுகிறது. (Indho-Iraninan Vedic Sanskrit -இல்/ S / ஆக மாறும்) Sindhu என்பது இரானியர்களால் Hindu என அழைக்கப்பட்டது. (Witzel in Erdosey) Macdonell & keith (1912) தமது Vedic Index of Names and Subjects என்ற நூலில் Saraswathi என்ற பதிவில் தந்துள்ள அடிக்குறிப்பில்,
"Literally, "abounding in Pools", perhaps, with reference to its condition when the water was low. The name of corresponds phonetically to the Iraninan Haraqaiti (The modern Helmand)" என்று குறிப்பிடுகின்றனர்.
காலம்: சிந்துவெளி / ஹரப்பா நாகரிகத்தின் காலம் குறித்து ஒருமித்த கருத்து உண்டு.
1. தொடக்க காலம் கி.மு. 2800-2600.
2. முதிர்ந்த நிலை கி.மு. 2600-1900.
3. பிற்காலம் கி.மு. 1800.
ஹரப்பா பண்பாடு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் நிலவியிருந்தது எனத் தெரிகிறது. இக்கால கட்டத்தில் இதன் நாகரிகம் ஹரப்பா மொகஞ்சதோரோ, சன்குதரோ (பாகிஸ்தான்), தொடங்கி லோத்தல் (குஜராத்), காளிபங்கன் (இராஜஸ்தான்), பன்வாலா (ஹரியானா), மெஹர்கர் (பலுசிஸ்தான் - பாகிஸ்தான்) வரை பரவி, கங்கைச் சமவெளி வரை நீண்டது என்பர். இதன் பரப்பு 1200 கி.மீ. (ஹரப்பா - மொகஞ்சதோரோ இடையே 640 கி.மீ).
சிரும் சிறப்புமாக இருந்த இந்த நாகரிகம், தங்களுக்குள் உள்ள முரண்பாடு, வறட்சி, சுற்றுச்சூழல் பாதிப்பு, வாணிபத்தில் ஏற்பட்ட இறக்கம், ஆரியர் வரவால் ஏற்பட்ட மோதல்கள் முதலிய காரணங்களால் மெல்ல மெல்ல அழியத் தொடங்குகிறது. சிந்துப் பகுதியில் நுழைந்த ஆரியர்கள், இந்தப் பண்பாட்டின் சில முக்கியக்கூறுகளை - குறிப்பாக சமயம், சடங்கு பற்றியவை - தமதாக்கிக் கொண்டனர். இந்து மத வளர்ச்சியில் சமவெளி நாகரிகக் கருத்துகளின் எச்சங்கள் உள்ளன என்பர்.
சிந்துவெளி மக்கள்: சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள் அல்லது சிந்து வெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற வினாவுக்குத் தெளிவான விடை கிடைத்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சிந்துவெளி நாகரிக மக்கள் ஆரியர், ஆரியரல்லாதவர் / ஆரியருக்கு முந்தியோர் என்கிற இருவிதக் கருத்துகளின் முந்தைய கருத்து புறந்தள்ளப்படுகிறது. ஆரியரல்லாதார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகம் என்றதும், ஆரியரல்லாதார் யார் என்கிற கேள்வி தொடர்கிறது. அவர்கள் திராவிடமொழி பேசியவர்கள் என்கிற கருத்து பல சான்றுகள் மூலம் மெய்ப்பிக்கப்பட்டது. முண்டா மொழி பேசும் மக்கள் குழுவாக இருக்கலாம் என்கிற கருத்து வலுப்பெறவில்லை.
சிந்துவெளி நாகரிகத்தைப் படைத்தவர்கள் திராவிடர்கள் என்பதற்கான சில வலுவான காரணங்கள்:
1. ஆரியர்களின் ரிக் வேதம் (கி.மு.1500-900) குதிரை, சோமபானம், தேர் பற்றி விரிவாகப் பேசும். சிந்துவெளி நாகரிகத்தில் இவற்றுக்கு இடம் இல்லை. சிந்துவெளி நாகரிகத்தின் தளர்நிலையில் / இறுதிக் காலத்தில் (கி.மு.1800) ஒன்றிரண்டு இடங்களில் குதிரை எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன என்பதைத் தவிர, சிந்துவெளி மக்கள் குதிரையைப் பயன்படுத்தினர் என்பதற்கான சான்றுகள் இல்லை. இதை மறுக்கும் முயற்சியில் N.S. இராசாராம் என்கிற கணினி வல்லுநர், சிந்துவெளி முத்திரைகளில் பரவலாகக் காணப்படும் ஒற்றைக் கொம்புக் காளையை (Unicorn bull) தமது கணினி நுட்ப அறிவு கொண்டு குதிரையாக மாற்றி, சிந்துவெளியில் குதிரை இருந்தது என்றும் எனவே, அது ஆரியர் நாகரிகம் என்றும் எழுதினார். (Deciphering Indus Script) இதற்குச் சரியான பதிலடியை Witzel தந்தார். ஐராவதம் மகா தேவனும் இதை மறுத்துள்ளார். குதிரைகள் கருங்கடல் (Black Sea) மற்றும் தென் உரால் (South Ural) பகுதியில் கி.மு. 6000 அளவில் காணப்பட்டன. மேற்காசியாவிற்கு இது 1900-ஐ ஓட்டியும், பாபிலோனியாவிற்கு கி.மு. 1500-லும் வந்தது. இதை மலைக்கழுதை (Ass of the Mountain) என அழைத்தனர்.
குழந்தைகள் விளையாட, களிமண்ணில் ஆன தேர்ப் பொம்மைகள் உண்டு. ஆனால் ஆரைச் சக்கரத் தேர் (Spoked wheel chariot) சிந்துவெளி முத்திரைகளில் இல்லை. சோமபானம் அருந்தி இந்திரன் திளைப்பான். இப்படி ஒரு பானத்தை, சிந்துவெளி மக்கள் அருந்தியதற்கான சான்றில்லை. மேலும் சோமபானத்திற்கான சாறு தரும் தாவரம் Ephedra என்ற பெயருடையது. இது தென்துர்க்மேனிஸ்தான் பகுதியில் விளையக்கூடியது. அவெஸ்தா மொழி (ஈரானில் பேசப்படுவது) இது Haoma (h>s) என்று வழங்கும்.
2. ரிக் வேதம் சிந்துவெளியில் எதிர்கொண்ட மக்களைக் கறுப்பர்கள், சப்பை மூக்கினர், புரியாத மொழி பேசுபவர்கள், லிங்க வழிபாட்டினர் எனக் குறிக்கும். தஸ்யுக்கள், தாசர்கள், பானிகள் என்றும் அழைக்கும். எனவே இவர்கள் திராவிடர்கள் என்பதில் ஐயமில்லை. ஆஸ்கோபர்போலா தஸ்யுக்கள், தாசர்கள், பானிகள் ஆகியோர் ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன் வந்த ஆரியர்களில் ஒரு பிரிவினர் என்கிற கருத்தை முன் வைத்தார். இதை C.A. Winters மறுத்தார் (IJDL, 17: 2, 1988, IJDL, 18:2, 1989).
3. சிந்துவெளி சார்ந்த பலுசிஸ்தானத்துக்குள் பேசப்படும் பிராகுவி மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. அங்கு வாழ்ந்த திராவிடர்களை நினைவூட்டும் விதத்தில் இன்றும் இந்த மொழி பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் பேசப்பட்டு வருகிறது.
4. ரிக் வேதத்தில் திராவிடச் சொற்கள் உள்ளதை, T.பர்ரோ, எமினோ முதலிய மொழியியலாளர் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளனர். கூய்ப்பர் 300 சொற்களை இனங்காட்டுவார். மைக்கேல் விட்சல் கூடுதலாக 80 சொற்களைத் தருவார்.
5. இந்தோ - ஐரோப்பிய / இந்தோ - இரானிய மொழிகளில் இல்லாத வளைநா ஒலி (Retroflex) சமஸ்கிருதத்தில் உள்ளது. வளைநா ஒலி திராவிடர்களுக்குரியது. எனவே, இந்தியா வந்த ஆரியர் திராவிடர்களோடு கலந்தபோது இந்த ஒலித் தாக்கம் நிகழ்ந்திருக்க வேண்டும். இந்த ஒலித் தாக்கத்திற்கு வேறு ஒரு விளக்கம் தரப்படுகிறது. ஆரியர் வருகை ஒரே காலத்தில் நடந்ததல்ல என்றும் சிலசில குழுக்களாக, கால இடைவெளிவிட்டு வந்த போது அவற்றுள் ஒரு குழுவினர் சிந்துவெளியில் வழங்கிய புராதன திராவிட மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும், ரிக் வேதம் படைக்கப்பட்ட காலத்து அதை உச்சரித்த இந்த மக்கள் வளைநா ஒலியைச் சேர்ந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. (There were compelling reasons - particularly substratun influences on old indo - Aryan - to belive that the majority of early old Indo-Aryan speakers had a Dravidian mother tongue which they gradually abandoned - Erdosey, p.21)
எவ்வாறாயினும் திராவிடமொழி பேசுவோர் வாழ்ந்தனர் என்பது மறுக்கப்படவில்லை. மேலும், சிந்துவெளி எழுத்துக்களைப் படித்தோர் அவை சுட்டும் மொழி ஒட்டுநிலை (Aggluntinative) மொழி என்றும், அது தொல் திராவிட மொழியாதல் வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
6. ஆரியர்கள் தந்தை வழிச் சமூகத்தினர். சிந்துவெளி முத்திரைகளில் தாய்த் தெய்வ வழிபாட்டுக்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, தாய்த்தெய்வ வழிபாட்டினர் தாய்வழிச் சமூக அமைப்புடைய திராவிடர்களாவர் என்பர். சிந்துவெளி எழுத்துக்களை ஆராய்ந்தோர் அங்குள்ள மீன் வடிவக் குறியீடு, அதனோடு தொடர்புடைய பிற குறியீடுகளின் அடிப்படையில் திருமால் வழிபாட்டின் முந்தைய தடம் இங்கு இருக்கிறதெனக் கருதுகின்றனர். இந்திரன், அக்னி, பெற்ற இடத்தை ரிக்வேதம் திருமாலுக்கோ, சிவனுக்கோ தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வகைச் சான்றுகளால் சிந்துவெளி நாகரிக மக்கள் திராவிடர்களாவர் என்கிற கருத்து வலுப்பெற்று வரக் காணலாம்.
மொழி: சிந்துவெளி நாகரிக மக்கள் திராவிடர்கள் என்பதால் அங்கு பேசப்பட்ட மொழி தொல் திராவிட மொழியாதல் வேண்டும் என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆனால், சிந்துவெளியில் கிடைத்துள்ள 3000க்கும் மேற்பட்ட முத்திரைகளில் காணப்படும் 400-க்கும் மேற்பட்ட குறியீடுகள் ஐயந்திரிபற, முடிந்த முடிவாக இன்னும் படித்தறியப் படாததால் சிந்துவெளி மக்கள் பேசிய மொழி பற்றித் திட்டவட்டமாகச் சொல்ல இயலவில்லை. 1929-இல் G.R. Hunter இதை வாசிக்க முயன்றார். தொடர்ந்து இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, சோவித் அறிஞர்கள் இந்த ஆய்வில் ஆழ்ந்த கவனம் செலுத்தலாயினர். 1950-களில் ஹீராஸ் பாதிரியார், சிந்துவெளி மொழி திராவிட மொழி என்கிற கருத்தை முன் வைத்தார். பின்லாந்து அறிஞர் ஆஸ்கோபர்போலா, சோவியத் அறிஞர், கொனொரோவி, அமெரிக்க அறிஞர்கள் சவுத் வொர்த், ஃபெயர்சர்வீஸ் திராவிட மொழியியலறிஞர் தி.பர்ரோ, செக்கோஸ்லாவாக்கிய அறிஞர் கபில் சுவலபில், தமிழறிஞர் ஐராவதம் மகாதேவன் முதலியோர் திராவிட மொழி சார்ந்தது என்கின்ற கருத்தை ஏற்கின்றனர். தி.பர்ரோ இதில் கொஞ்சம் கவனம் தேவை என்கிற குறிப்போடு ஏற்பார். A.R.K. Zide என்ற அறிஞர் சிந்துவெளி மொழி சமஸ்கிருதம், ஹிட்டைட், சுமேரியன் மொழிகளோடு ஒப்பிடுவதைக் காட்டிலும் திராவிட மொழிகளோடு ஒப்பிடுதல் பொருந்தும் என்பார்.
Steatite என்கிற சவர்க்கார/ சோப்பு கல்லில் பொறிக்கப்பட்ட இந்த முத்திரை எழுத்துக்கள் வலதுபுறத்திலிருந்து இடது புறம் படிக்க வேண்டியதாகவுள்ளது. இக்கருத்தில் அனைவரும் உடன்படுகின்றனர். குறுகிய வாக்கியம் 6 குறியீடுகளையும், நீண்ட வாக்கியம் 26 குறியீடுகளையும் கொண்டுள்ளன. நீண்ட வாக்கியங்களை வலது - இடது - வலது எனப்படிக்க வேண்டியுள்ளது என்ற குறிப்பும் உண்டு.
இந்த எழுத்து முறை Logogram / Logosyllabie என்பதால் ஒரு குறியீடு, தான் குறிக்கும் கருத்தை / பொருளை மட்டுமல்லாது அதோடு தொடர்புடைய சொற்களையும் பொருள்களையும் குறிக்கும் என்பர். இதற்கு Robos முறை என்று பெயர். சான்றாக மீன் வடிவக் குறியீடு l. மீன் என்ற பொருள் தருவதாக படிக்கப்பட்டு, பொருள் விரிவு என்கிற அடிப்படையில் மின்னுதல், சிறூர்த்தலைவன், குருமார் எனவும் படிக்கப்படுகிறது. காவடி தூக்குவது போல ஒரு சுதை வடிவம் காணப்படுகிறது. இது காவடி எனப் படிக்கப்பட்டு, காவலன், காப்பாளன் என்று கூறப்படுகிறது. காவடி என்பது தமிழ், மலையாளம், கன்னடம்முதலிய மொழிகளில் உண்டு "கா" என்றால் காத்தல் என்கிற பொருள். காவடியான் என்றால் காப்பவன் என்று விளக்கம் தரப்படுகிறது.
அம்பு வடிவம் இதை பர்ப்போலா 4 ஆம் வேற்றமை உருப்பாகக் கருத, மகாதேவன் முன்னிலை விகுதியாகக் கருதுவார். இவ்வகை ஆய்வில் பர்ப்போலா, ஃபெயர் சர்விஸ், கொகொரோவ், மகாதேவன் ஆகியோரிடையே சிற்சில வேறுபாடுகள் காணப்படினும், திராவிடமொழி என்கிற கருத்திலும் தமிழோடு நெருங்கியது என்கிற கருத்திலும் உடன்பாடு உண்டு.
சுமேரியாவில் / தெற்கு ஈரானில் பேசப்பட்ட எலாமைட் மொழியோடு திராவிட மொழிகளை ஒப்பிட்டு McAlpin எழுதியிள்ளதும் கருதத்தக்கது. "தொல்-எலாமிக்-திராவிட மொழிகள்" என்ற கருத்தை மையப்படுத்தி அவரது ஆய்வு அமைகிறது. திராவிட மொழியிலுள்ள "குதிரை" என்ற சொல் எலாமிக் மொழி சார்ந்தது என்பது அவரது கணிப்பு. சுமேரிய மக்களோடு சிந்துவெளி மக்கள் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதற்கு அங்கு உள்ள "ஊர்" போன்ற சில சொற்களும், சிந்துவெளியைக் குறிக்க அவர்கள் பயன்படுத்திய "மெலுகா என்ற சொல்லும் சான்றுகளாகும்.
H.D. சங்காலியா, ராஜஸ்தான், சிந்து, தெக்கானப் பகுதிகளில் கிடைத்த பனை ஓடுகளின் வடிவங்கள் சுமேரியன் எலாமைட் பகுதி வடிவங்களோடு ஒத்துள்ளதாகக் கூறுவார். A.S.C. Rass என்பவர் இந்தோனேஷ்ய மொழியோடு ஒப்பிட்டுக் காணும் முயற்சியில் ஈடுபட்டார்.
சிந்துவெளியில் கிடைத்துள்ள முத்திரைகளையும், சாயும் எழுத்துக்களையும் கணினி வழித் தொகுத்து, சொல்லடைவு தயாரித்துள்ளனர். 2290 சிந்துவெளி வாசகங்களை ஆராய்ந்த போது 419 குறியீடுகள் தனி உருவில் கிடைக்கின்றன. இவை 13,372 முறை பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் 112 குறியீடுகள் ஒருமுறையும், 47 குறியீடுகள் இரண்டு முறையும், 59 குறியீடுகள் ஐந்து முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சில குறியீடுகள் 50-100 முறை வருகின்றன. ஐ.மகாதேவன் இதைப் பட்டியலிட்டுள்ளார். இதுவரை 47வகை முயற்சிகள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. இரு மொழி வாசகங்கள் முத்திரைகளில் இல்லாதது இவற்றின் வாசிப்பில் முன்னேற்றம் காணத்தடையாய் உள்ளது. குறியீடுகள் பெரும்பாலும் தனிமனித /குழுப் பெயர்களாகவும், வணிகக் குறிப்புகளாகவும், சமயம் சார்ந்தவகையாகவும் உள்ளனவாகத் தெரிகின்றன. இரா.மதிவாணன் இந்த எழுத்துக்களைத் தமிழ்ப்படுத்தியுள்ளார். எனினும் முத்திரைகளை இவர் இடமிருந்து வலமாகப் படித்துள்ளார். இதில் எந்த அளவு சரியானது என்பது தெரியவில்லை.
பண்பாடு: சிந்துவெளி மக்களின் பண்பாடு உயர்வானது என்பர். பார்லி, கோதுமை, எள், பட்டாணி, போன்றவை விளைந்தன. சுட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட காற்றோட்டமுள்ள வீடுகளில் வசித்தனர். சுட்ட செங்கல் பயன்பாட்டை இந்தோ-ஆரியர், சிந்துவெளி மக்களோடு தொடர்பு கொள்ளும் வரை அறிந்திருக்கவில்லை. சுல்வசூத்திரம் என்ற நூல் சுட்ட செங்கல்லை "இஷ்டிக" என்று குறிப்பிடுவது. இச்சொல் சமஸ்கிருதச் சொல் அல்ல, இது திராவிட மொழிச் சொல்லாகலாம். அகன்ற தெருக்கள். கழிவுநீர் ஓடதற்கேற்ற கால்வாய்கள், பாதாளச் சாக்கடைகள் அமைக்கப்பட்டன. சிறந்த நகர அமைப்பு; சுமேரியர் நகரங்களை விட உயர்ந்தது இது என Dr. Mackey கூறுகிறார். குடியிருப்பு கட்டடங்கள் அன்றி பொதுக்கட்டடங்களும் இருந்தன. பாசன வசதிக்கேற்ப, கிணறுகள், ஏரிகள் இருந்தன. மண்பாண்டக் கலை உயர்ந்திருந்தது. வீட்டுப் பயன்பாட்டுக்கென அம்மி, உரல் போன்ற கருவிகள் இருந்தன. தாயக் கட்டைகள், சொக்கட்டான் காய்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள் வழக்கிலிருந்தன. செம்பு, வெண்கலம், பொன், வெள்ளி முதலிய உலோகங்கள் பயன்பாட்டில் இருந்தன. அசோகு, வேம்பு மரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.
யானை, எருது, நாய், முதலிய விலங்குகள் இப்பகுதியில் இருந்தன. குதிரை இல்லை. பருத்தி பயிர் செய்யப்பட்டதால் அதை மையப் படுத்திய உடைகள் இருந்தன. அணிகலன்களை அணிந்த பெண் உருவங்கள் கிடைக்கின்றன. மீன்பிடித்தல், துணி நெய்தல், பயிரிடுதல், கப்பலோட்டுதல் போன்ற தொழில்கள் அம்மக்களின் தொழில் நுட்பத்தைக் காட்டும். தாய்த்தெய்வ வணக்கம், லிங்க வழிபாடு, நட்சத்திரங்களை அறிந்து வணங்குதல் போன்ற சமயச் செயல்பாடுகள் இருந்தன. பிணங்களைத் தாழிகளில் புதைத்தாலும் சில சமயம் சுடுதலும் வழக்கிலிருந்தன. சுட்ட பிணத்தின் சாம்பலையும் எலும்பையும் தாழிகளில் புதைத்தனர். தீர்த்தமாடும் பெரிய குளமும் இருந்தது கோட்டைகள் இருந்தன.
சிந்துவெளி நாகரிகம் நகர நாகரிகமாகும் வெளிநாட்டினரோடும், உள்நாட்டவரோடும் வாணிகம் நடத்தினர். அதற்கான அளவுக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் வழி இவர்தம் கணித அறிவும், வணிகத் திறனும் தெளிவுறும். வணிகம் மற்றும் சமயம் தொடர்பான பலவற்றைக் குறிக்கவே முத்திரைகளையும் குறியீடுகளையும் பயன்படுத்தினர் எனத் தெரிகிறது.
இவ்வாறு சிறந்தோங்கிய நாகரிகம் அழியக் காரணம் என்ன? ஆரியர் படையெடுப்பு என்பர். இப்போது இதற்கு முக்கியத்துவம் இல்லை. சுற்றுச் சுழல் பாதிப்பு, உள் முரண்பாடு, வாணிகத் தளர்ச்சி, உழவுமுறை மாற்றம், வறட்சி, வெள்ளம் காரணமாகப் பிறபகுதிகளில் குடியேறல் -இவற்றோடு போர்க் குணம் கொண்ட ஆரியர் வருகை முதலியன காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

No comments:
Post a Comment