பிறருக்காக வாழ்வதே வாழ்வு
சென்ற ஆண்டு ஜூலை முதல் நாள் தருமபுரிக் காடுகளின் நடுவே, நவீன உலகம் தீண்டாத பழங்குடி மக்களுக்குச் சேவை புரிந்து வரும் இரண்டு மருத்துவர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறுவது, மருத்துவர் தினத்தைப் பெருமைப்படுத்துவதாக இருக்கும் எனக் கருதிப் புறப்பட்டோம்.
வாழப்பாடியிலிருந்து 40 கிலோமீட்டர் சுமாரான சாலை; அதன் பின் சுமார் 15 கி.மீ. சாலை என்று சொல்லப்பட்ட கற்களில் பயணம் செய்து, வறண்டு போன காட்டருவியைக் கடந்தால் சிட்லிங்கியைச் சென்றடையலாம். பாதி வழியில் இரண்டு டயர்களும் பஞ்சர். கண்ணுக்கெட்டிய தூரம்வரை மனித நடமாட்டமே அற்ற காடு. டயரை எடுத்துப் போய் ஒட்டி வரும்போது சூரியன் சாயத் தொடங்கிவிட்டது. பயணம் தொடரத் துணிவின்றித் திரும்பினோம்.
சில மாதங்கள் பின் அரூர் வழியாகச் சென்றோம். குண்டும் குழியுமான சாலை, கல் அடித்து ஆயில் டாங்க் உடைந்து வண்டி நின்றுபோனது. ஒருவழியாகக் கட்டி இழுத்து அரூர் வந்து சேர்ந்தோம்.
தன் முயற்சியில் மனம் குன்றாத விக்கிரமாதித்தன்போல, எப்படியும் இம்முறை அந்த மருத்துவத் தம்பதியினரைச் சந்தித்து விடுவது என்ற முடிவுடன் புறப்பட்டோம். சென்றபோது டாக்டர் லலிதா, அங்கு பிறந்த குழந்தைக்கு காமாலை என்பதால் குழந்தையை உயர் மருத்துவ உதவிக்காகத் தானே பெங்களூர் எடுத்துச் சென்றிருந்தார்.
டாக்டர் ரெஜி எம்.ஜார்ஜ் வசதியான கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவர். இருண்ட கண்டமான ஆப்பிரிக்க மக்களின் நோய் தீர்க்கத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஆல்பர்ட் ஸ்வைட்சரின் தியாக வாழ்க்கையால் உணர்வு பெற்றவர். டாக்டர் லலிதா கொச்சி அரச குடும்பத்தில் பிறந்தவர். "பிறருக்காக வாழ்வதே வாழ்வு" என்ற துவராடைப் புரட்சிக்காரர் விவேகானந்தரின் வாசகங்களால் உந்தப்பட்ட மாறுபட்ட பெண்.
இருவரும் ஆலப்புழை மருத்துவக் கல்லூரியில் பயின்றனர். மருத்துவக் கல்லூரியில் காலடி வைத்த உடனேயே சொர்க்கபுரி கனவில் லயித்துவிடும் மாணவர்களிலிருந்து இவர்கள் மாறுபட்டவர்கள். மருத்துவக் கல்வி முடிந்தவுடன், மகாத்மாவின் காலடி பட்ட காந்தி கிராமம் கஸ்தூரிபா மருத்துவமனையைத் தமது பயிற்சிக் களமாகத் தேர்ந்தெடுத்தனர். சேவையே வடிவமான டாக்டர் கௌசல்யா, இந்த லட்சிய தீபங்களின் தூண்டுகோலானார். சேவையில் இணைந்த ரெஜியும், லலிதாவும் மணத்தால் இணைந்தனர்.
பின்னர் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் வனப் பகுதிகளில் பழங்குடி மக்களிடம் சேவை செய்வது பற்றிய அனுபவம் பெற்றனர். தென்னகத்தின் ஏதாவது ஒரு பிற்பட்ட மலைப் பகுதியில் தமது சேவையைத் தொடங்க முடிவு செய்தனர். கடைசியாக சந்தனமும், மூங்கிலும் மண்டிய நவீன மருத்துவம் எதுவும் எட்டாத சிட்லிங்கி என்ற மலைப்புறக் கிராமத்தைத் தேர்வு செய்தனர்.
கருவுற்ற பெண்களுக்கு ரத்தசோகை, பிரசவத்தில் மரணம், பிறக்கும் குழந்தைகளில் 16 விழுக்காடு மரணம். வளரும் குழந்தைக்கு தடுப்பூசி இல்லை. வயிற்றுப் போக்கு, காய்ச்சலுக்குக் கூட 100 கிலோமீட்டர் கடந்து சேலம் சென்றாக வேண்டும் என்பதுதான் அப்பகுதி மக்களின் விதி.
ரெஜியும், லலிதாவும் 1993-ல் ஒரு குடிசையில் குடியேறினர். மருத்துவமனை கட்ட இடம் தேடினர். சட்டத்தைக் காரணம் காட்டி, இடம் எதுவும் தர மறுத்தனர் அரசு அதிகாரிகள். பின்னர் ஒரு சிறிய இடத்தை வாங்கி, கல்லும் களிமண்ணும் கொண்டு சிறிய மருத்துவமனையைக் கட்டினர்.
அறியாமையும், மூடநம்பிக்கையும் நிறைந்த பழங்குடி மக்கள், முதலில் இவர்களின் சேவையை ஏற்கத் தயங்கினர். ஆறு மாதங்கள் கடுமையான போராட்டத்தை நம்பிக்கையுடன் நடத்தினர்.
பின்னர் ஒருநாள் ஓர் இளைஞன் இவர்களின் குடிசைக்கு ஓடி வந்து, "என் மனைவி செத்துக் கொண்டிருக்கிறாள். அவளைக் காப்பாற்றுங்கள்" என்று கெஞ்சினான். அப்போது ரெஜி ஊரில் இல்லை. எனவே லலிதா தனது மருத்துவப் பெட்டியுடன் புறப்பட்டார். அந்த இளைஞனின் சைக்கிளின் பின் அமர்ந்து, தொலைவில் உள்ள அவர்களின் குடிசையை அடைந்தனர். மயங்கிக் கிடந்த பெண்ணைச் சுற்றிப் பெண்கள் கூட்டம். பெண்ணின் அருகில் ஒரு பூசாரி வேப்பிலை அடித்து, உரக்கக் கூவிக் கொண்டிருந்தார்.
லலிதா அப்பெண்ணின் அருகில் அமர்ந்து, அவரது நாடியைப் பரிசோதித்தார். "வயிற்றுப் போக்கால் மயங்கிக் கிடந்த அவளுக்கு உடனடியாக க்ளுகோஸ் ஏற்றினால் மட்டுமே காக்க முடியும். எனவே இப்பெண்ணைக் காப்பாற்ற எனக்கு ஒரு வாய்ப்புக் கொடு" என்று பூசாரியிடம் கெஞ்சினார். பூசாரியின் உத்தரவின்றி அங்கு எதுவும் நடக்காது. மனம் இரங்கிய பூசாரி அனுமதி கொடுத்தார்.
முதல் பாட்டில் இறங்கிய உடனேயே அப்பெண் கண் விழித்தாள். பின் அவள் முழுமையாகக் குணம் பெற்றாள். செத்தவளைப் பிழைக்க வைத்த டாக்டர் என மலை முழுவதும் செய்தி பரவியது. பழங்குடி மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இடம் கிடைத்தது. பதின்மூன்று ஆண்டுகள் கடுமையான சோதனைகளைக் கடந்து இன்று 25 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக வளர்ந்துள்ளது. பிரசவம் பார்க்கவும், அறுவைச் சிகிச்சைகள் செய்யவும் அறுவை அரங்குகள் உள்ளன. சிட்லிங்கியைச் சுற்றிய 21 மலைக் கிராமங்களின் 10,000 பழங்குடிகள் பயன் பெறுகின்றனர். ஆண்டுக்கு 150 பிரசவங்கள், 250 அறுவைச் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
மருத்துவமனையின் சிறப்பான சேவைக்கு செவிலியர் தவிர்க்க முடியாத தேவை. ஒதுக்கப்பட்ட இந்தக் காட்டில் பணிபுரிய யார் முன்வருவார்கள்? எனவே சினத்து வெறுங்கால் மருத்துவர்கள் போலத் தங்களது தேவைக்கு உதவும் மருத்துவ உதவியாளர்களைத் தாங்களே பயிற்சி தந்து உருவாக்கத் தொடங்கினர். முப்பதுக்கும் மேற்பட்ட பழங்குடிப் பெண்கள் இப்போது மருத்துவ உதவியாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மருத்துவ சேவையுடன், அருகில் உள்ள கிராமங்களுக்கு சைக்கிளில் சென்று பெண்களைக் கூட்டி, அடிப்படைச் சுகாதாரம், சத்துணவு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றைப் பயிற்றுவிக்கின்றனர்.
தமக்கு முதலில் உதவி செய்ய வந்த ராஜம்மா எனும் பழங்குடிப் பெண்ணைப் பயிற்றுவித்து சிறந்த மருத்துவப் பணியாளராக்கியுள்ளனர். ஒரு பயிற்சி பெற்ற டாக்டருக்கு இணையான திறமையுடன் ஆபத்தான நிலையில் வரும் நோயாளியை முறையாகக் கவனிக்கும் திறமை பெற்றவராக ராஜம்மாள் திகழ்கிறார்.
இப்போது இந்தக் கடைக்கோடி மலைப் பகுதியில் எந்தப் பெண்ணும் பிரசவத்தில் சாவதில்லை. வயிற்றுப்போக்கால் எவரும் உயிரிழப்பதில்லை. காய்ச்சல், தலைவலி என்று 100 கல் தொலைவு ஓடுவதில்லை. மருத்துவ சுய நிறைவைத் தொடர்ந்து, குழந்தைகளுக்குக் கல்வி வழங்க வகுப்புகள் நடத்துகின்றனர்.
சுயதொழில் வேலை வாய்ப்புப் பயிற்சி, வன வளப் பாதுகாப்பு, நீர் சேமிப்பு, இயற்கை விவசாயம் போன்றவற்றில் பயிற்சியளித்து, அவர்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு உதவி வருகின்றனர்.
ஊடகங்கள் எட்டாத இவர்களின் சேவையை உலகறியச் செய்ய இணைய தளத்தை www.tribalhealth.org தொடங்கியுள்ளனர். இதனால் இவர்களின் சேவை தொடர, உலகின் பல பகுதியிலிருந்தும் கிடைக்கும் உதவிகளால் மருத்துவமனை மெல்ல மெல்ல அனைத்து வசதிகளும் பெற்று வளர்ந்து வருகிறது. "இந்த மலைமக்களை வாழ்விக்கும் தெய்வம் இவர்கள்" என்று பழங்குடிப் பெண் பாஞ்சாலி கூறுவது அவர்கள் அனைவரின் இதயக் குரலே.
சூப்பர் ஸ்பெஷாலிடி, கார்ப்பரேட் மருத்துவமனை, மெடிக்கல் டூரிசம் என்று பல ஆயிரம் கோடிகளில் இந்தியா மருத்துவ மெக்காவாகி வருவது பெருமைக்குரியதே. ஆனால் ஏழ்மை மண்டிய நாட்டின் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற காந்தியின் கனவை ரெஜி, லலிதா போன்ற மருத்துவ சேவையாளர்களே ஈடு செய்கின்றனர். இவர்களைப் போன்ற அர்ப்பணிப்பு மிக்க மருத்துவர்களை இனம் கண்டு போற்றுவதே மருத்துவர் தினத்தைப் பொருள் பொதிந்ததாக்கும்.

No comments:
Post a Comment