Saturday, October 30, 2010

உயர் கல்வியும் தமிழகமும்

உயர் கல்வியும் தமிழகமும்
Higher education in tamilnadu - Tamil Poltics News Article பல்கலைக்கழகத்தில் முறைப்படி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் ஒருவரை தமிழகத்தில் முதல்முறையாக உயர்கல்வி அமைச்சராக புதிய அரசு நியமித்துள்ளது பாராட்டுக்குரியது. முன்னேறிய நாடுகளுக்கும், பின்தங்கிய நாடுகளுக்குமுள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை அந்தந்த நாடுகளிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்களின் தரத்தை வைத்து எளிதாக வரையறுத்து விடலாம். பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்புகளின் நவீனமயம் மட்டும் ஒரு நாட்டை முன்னேறிய நாடாக நீண்ட நாள்களுக்கு வைத்திருக்க இயலாது என்பதை எண்ணெய் வள நாடுகளின் நிலைமை தெளிவாக்கி விட்டது.
மாறாக, உயர் கல்வி, உயர் ஆய்வு, கருத்துச் சுதந்திரம், மாற்றுத் திட்டங்களைத் தாராளமாக அனுமதித்து வருகின்ற அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நார்வே, புதிய ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகள் பல சவால்களின் மத்தியிலும் தொடர்ந்து ஸ்திரத்தன்மையுடன் வளர்ந்து வருகின்றன.
அறிவுதான் உண்மையான பலம் என்று சொல்வார்கள். கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், உயர் ஆய்வு மையங்கள் அனைத்தும் உயர்கல்வி நிலையங்கள் என்பது பலராலும் ஒத்துக் கொள்ளப்படும் கருத்து. ஆனால் உயர்கல்வி என்றாலே, விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல் என்ற குறுகிய எண்ணத்தோடு அறிவு ஜீவிகள் சிலர் செயல்பட்டு, உயர்கல்வி நிறுவனங்களில் உயர் பதவியைப் பெற்று, சமூகவியல், மனித இயல் பாடங்களைப் பயனற்றது, பணம் பண்ணாதவை என்று ஒதுக்கித் தள்ளி, மனித சமுதாயத்துக்கு மிகப்பெரிய கேடுகள் செய்வது இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளில் பெருகி வரும் மிகப்பெரிய தீமை. இப்படிப்பட்ட அறிவு ஜீவிகளிடமிருந்து உயர்கல்வியைக் காப்பாற்றி தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் வழி நடத்துவது புதிய அமைச்சகத்தின் முதல் கடமை.
ஒரு பாடம் பயனுள்ளதா, பயனற்றதா என்பதை முடிவு பண்ணுவது ஆய்வுக்கூட விஞ்ஞானிகளாயிருந்து உயர்பதவி வகிக்கும் கல்வியாளர்களும், குறுகிய நோக்கத்தோடு செயல்படும் காலனியாதிக்கத்தின் பிரதிநிதிகளான அதிகார வர்க்கமுமல்ல. அந்தந்தப் பாடத்தின் தேவையையும், முக்கியத்துவத்தையும் அந்தந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சமீபகாலமாக விஞ்ஞானிகள் உயர்கல்வியின் தலைமைப் பொறுப்பை ஏற்றால், சமூகவியல் பாடங்களை அமைதியாக ஒழித்துக் கட்டுவதும்-ஓரம்கட்டுவதும்-முடமாக்குவதுமான அவலநிலை தொடர்கின்றது. இந்த நிலையை மாற்ற வேண்டும். துணைவேந்தர், உயர்கல்வித் தலைவர்கள் நியமனத்தில் சுழற்சி முறையில் நியமனங்கள் செய்யப்பட வேண்டும். ஒருமுறை விஞ்ஞானப் பாடத்தைச் சேர்ந்தவரை நியமித்தால், அடுத்த முறை மொழி மற்றும் சமூகவியல் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். சமீபகாலமாக சாதி, மதம் என்று துணைவேந்தர் பதவிகள் அரசியலாக்கப்பட்டுள்ளன. இந்த நிலை மாற வேண்டும். முடிந்தால் வெளிநாட்டில் பணியாற்றும் புகழ்பெற்ற, தொலைநோக்கு கொண்ட பேராசிரியர்களையும் உயர் பதவிகளுக்கு நியமிக்க வேண்டும். இத்துடன் துணைவேந்தர் பதவிக்காலத்தை மூன்றாண்டிலிருந்து ஐந்தாண்டாக உயர்த்த வேண்டும்.
சமீபகாலமாக IME, ICE தேர்வுகளில் அதிகம் தேர்ச்சி பெற்றவர்கள் அரசியல் மற்றும் பொது நிர்வாகத்தை சிறப்புப் பாடமாக எடுத்தவர்கள்தான். தற்போது தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்கள் மற்றும் எட்டு கல்லூரிகளில் மட்டும்தான் இப்பாடங்கள் போதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலை மாற்றப்பட்டு மேனிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இப்பாடங்களைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல தனியார் கல்வி நிறுவனங்களிலும் சமூகவியல், மனித இயல் பாடங்களைத் தொடங்க அரசு மானியம் கொடுத்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
தற்போது பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நூற்றுக்கணக்கான இடங்கள் காலியாயுள்ளன. தாற்காலிக ஆசிரியர்கள், ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனம் போன்றவற்றை அரசு முடிவுக்குக் கொண்டு வந்து, 2006 ஏப்ரல் - 1 முதல் அனைத்து விரிவுரையாளர்களுக்கான இடங்களையும் நிரந்தரமாக யு.ஜி.சி. ஊதியத்துடன் நியமிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் 2005 ஜூலை 18-ல் கொடுத்த உத்தரவைத் தமிழக அரசு அமல்படுத்தி ஆசிரியர்களைக் கௌரவப்படுத்த வேண்டும். அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களே ஆசிரியர்களுக்கான காலி இடங்களை நிரப்பாமலும், அரைகுறை சம்பளத்தோடு ஆசிரியர்களை நியமித்தும் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதுதான், தற்போது ஆசிரியர் சமுதாயத்தின் வயிற்றில் அடிக்கும் கொடுமையை தனியார் கல்வி நிறுவனங்கள் இரக்கமின்றிச் செய்வதற்கு வழிவகுத்தது என்பதை உயர்கல்வித் துறை உணர வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான நாடுகளில் தனியார் கல்வி தவிர்க்க முடியாததாகி வருகின்றது. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களை நெறிமுறைப்படுத்த வேண்டிய பெரிய பொறுப்பு அரசினுடையது. காரணம், விதிமுறைகளின்படி கட்டுப்படுத்தப்படாத, வியாபார நோக்கோடு மட்டும் செயல்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் கரையில்லாத காட்டாறு போன்று தடுத்து நிறுத்த இயலாத பெருந்தீமைகளை எதிர்காலச் சமுதாயத்துக்கு இழைக்கும். பல தனியார் கல்வி நிறுவனங்களில் நவீனக் கட்டமைப்புகள், அழகான புல்வெளிகள், நவீன சோதனைக் கூடங்கள், அருமையான வகுப்பறைகள், சிறந்த நூலகம், வாகன வசதி போன்றவை மாணவர்களைக் கவர்ந்திழுக்கும் அம்சங்கள். இந்தக் கல்வி நிறுவனங்கள் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பதுபோல, பணத்தை முதலீடு செய்து பெரும் பணத்தைச் சம்பாதிக்கின்றன. ஆனால் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் பல தனியார் மற்றும் அரசுக் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன என்பதை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் நலனை உயர்கல்வி அமைச்சகம் கவனிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள ஊதியத்தை இந்நிறுவனங்கள் கொடுக்கின்றனவா? தகுதியான அனுபவமுள்ள ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்களா? அவர்களுக்கு பணிப்பாதுகாப்பு, முறைப்படியான விடுப்பு மற்றும் தங்களின் தகுதியை மேம்படுத்தும் வாய்ப்புகளை இந்நிறுவனங்கள் கொடுக்கின்றனவா என்பதை அரசு கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலகமயமாக்குதலும், வளர்ந்து வரும் தொழில் நுட்பமும் உலகத்தைச் சுருக்கி உலக மக்களையும், பல்வேறு நிறுவனங்களையும் இணைத்து வருகின்றன. இந்த நிலையில், நம் நாட்டின் கல்வி நிறுவனங்கள் தனித்து இயங்குவது சிறப்பாக இருக்காது. உலகத் தரத்துக்கு நம் கட்டமைப்புகளை உருவாக்குவதோடு நம் நாட்டின் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் உலகின் முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளோடு கல்விப் பரிமாற்றத்திற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும். உயர்கல்வி அமைச்சகம் இதுகுறித்து சிறந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
இதன் மூலம் கூட்டு ஆய்வு, ஆசிரியர்கள் - மாணவர்கள் பரிமாற்றம், கூட்டு கருத்தரங்குகள் போன்றவற்றால் நம் நாட்டு மாணவர்கள் பயன் பெறுவர்.
அதுபோல ஒவ்வோர் உயர்கல்வி நிறுவனமும் தங்களின் அடுத்த ஐந்தாண்டுக்கான இலக்குகள் குறித்து துல்லியமாகத் திட்டமிட்டு அதை அடைவதற்கான தேவைகளை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்தியா உண்மையில் வளர்ந்த நாடு என்று நாம் சொல்ல வேண்டுமென்றால் அடிப்படைக் கல்வி மற்றும் உயர்கல்வியிலும், உயர் ஆய்விலும் சிறந்து விளங்க வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையை எடுத்த தமிழக அரசு பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் இது புதிய அமைச்சரை எதிர்நோக்கியுள்ள வாய்ப்பும், சவாலுமாகும்.

No comments:

Post a Comment