Saturday, October 30, 2010

ஈரம் கசியும் பாறை

ஈரம் கசியும் பாறை
Tamil Politics News Article பெங்களூரிலிருந்து ஓசூர் வரும் பாதையில் சிறை.
கட்டிடம் புதிதாய் இருந்தாலும், மத்திய சிறைச்சாலைகளுக்கே உரிய நீண்ட நெடிய மதில் சுவர்கள், மிகப்பெரிய கதவுகள், துப்பாக்கி ஏந்திய காவலர்கள், தடபுடலான அதிகார ஆணைகள் எல்லாம் சேர்ந்து சிறை சிறைதான் என்பதை உணர்த்தின.
தலைவர் நெடுமாறனோடு, நானும், பெங்களூர் வழக்குரைஞர் இராமமூர்த்தியும் அந்தச் சிறையை அடையும் போது, மதியம் மூன்று மணி நெருங்கிக் கொண்டிருந்தது. கடந்த ஓராண்டிற்கும் மேலாக அச்சிறையில் பேராசிரியர் நெடுஞ்செழியனும், ஆய்வாளர் குணாவும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களைச் சந்திப்பதே எங்கள் நோக்கம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த வழக்குரைஞர் இராமமூர்த்தி, சிறை அதிகாரிகளோடு கன்னடத்தில் பேசிக் கொண்டிருந்தார். அந்த நிமிடம் வரை, அது எனக்கு ஒரு இயல்பான நிதழ்வாகவே இருந்தது.
"பொடா" சிறையில் நான் இருந்தபோது நண்பர்கள் பலர் என்னை வந்து சந்தித்துள்ளனர். உள்ளே இருந்துகொண்டு, வெளியிலிருந்து வருபவர்களைச் சந்திப்பதற்குப் பதிலாக, இப்போது வெளியில் நின்றபடி, உள்ளே இருப்பவர்களைச் சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணம்தான் இருந்தது. அச்சந்திப்பு என் நெஞ்சை நெகிழ வைக்கப்போகும் ஒன்றாக இருக்கும் என நான் அப்போது எண்ணவில்லை. அதிகாரிகளிடம், நண்பர் இராமமூர்த்தி அனுமதி பெற்று வந்ததும், மூவரும் உள்ளே சென்றோம்.
பொதுவாக வலைக் கம்பிகளின் வழியாகத்தான் உள்ளே இருப்பவர்களைப் பார்க்க முடியும். என்னோடு சிறையில் இருந்த மருத்துவர் தாயப்பன், தன்னைப் பார்க்க வந்த தன் தங்கையைப் பற்றி ஒரு கவிதை எழுதினார்.
கம்பிவலை மறைக்கிறது
காணமுடியவில்லை
உன் முகத்தை முழுதாய்...
எல்லோரும்
இரைந்து பேசுகின்றனர்
ஒழுங்காய்க் கேட்க
முடியவில்லை
உன் குரலை.
விழிகள் சிவந்து நிற்கும் உன்
விரல் பற்றிக் கூட என்னால்
சொல்ல முடியவில்லை
ஒரு ஆறுதல் வார்த்தை
இந்தச் சிறைச் சூழலில்
எப்படி எழுதுவேன்
உனைப் பற்றி ஒரு கவிதை
இதுதான் சிறை என்றாலும், தலைவர்களோ, புகழ்பெற்ற பெரியவர்களோ வரும்போது, சிறையதிகாரிகளின் அறையில் நேருக்கு நேர் சந்தித்து அருகில் அமர்ந்து உரையாட அனுமதிப்பார்கள். நெடுமாறன் அவர்களோடு சென்றதால், அந்த வாய்ப்பு அன்று எனக்கும் கிட்டியது. கூடுதல் கண்காணிப்பாளர் அறையில் நாங்கள் அமர்த்தப்பட்டோம். முதலில் தோழர் குணாவை அந்த அறைக்கு அழைத்து வந்தனர், அவரை நான் சந்தித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்போதுமே அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கம் இல்லை. அவருடைய நூல்கள் பலவற்றைப் படித்துள்ளேன் என்பதும், ஓரிரு முறை பொது நிகழ்ச்சிகளில் பார்த்துள்ளேன் என்பதும் தான் எங்களுக்கிடையிலான தொடர்பு. இடையில் ஒருமுறை, கோலார் தங்கவயல் கூட்டமொன்றில் அவர் தலைமையில் நான் பேசமாட்டேன் என்றும், கூடக் கூறியிருக்கிறேன். அதற்கு ஓர் அழுத்தமான காரணம் உண்டு.
தந்தைப் பெரியாரை நான் என் தாய், தந்தைக்கு இணையாக நேசிப்பவன். என் கண் திறந்த அறிவாசான் அவர்தான் என்று நம்புகிறவன். இது வெறும் உணர்ச்சி வயப்பட்ட உறவன்று. அவர் நூல்களைப் படித்தும், அவரின் உரையைச் சிறுவயதில் கேட்டும் நான் பெற்ற உணர்வு. தோழர் குணா, திராவிடத்தால் வீழ்ந்தோம் என்னும் நூலில் தந்தை பெரியாரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். விமர்சனம் செய்யக் கூடாது என்று நான் கூறவில்லை. அப்படிக் கூறுவது பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைக்கே எதிர் முரணானது.
அதே நேரம், விமர்சனத்திற்கும், அவதூறுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நாம் மறந்துவிடக் கூடாது. கவிஞர் பாரதிவசந்தன் அண்மையில் எழுதியிருந்ததைப் போல "நாம் எந்தத் தளத்தில் நின்று கொண்டு யாரை விமர்சிக்கிறோம் என்பதும், நம்முடைய விமர்சனம் யாருடைய குரலாக ஒலிக்கிறது என்பதும்" மிக முக்கியமான செய்திகள். ஆனாலும், குணாவின் பரந்து விரிந்த படிப்பறிவை நான் மிகவும் மதிப்பவன். மார்க்சியப் பார்வையில் தேசிய இனச் சிக்கல்கள் குறித்து வினா - விடை முறையில் அவர் எழுதியுள்ள நூல் ஒன்றினை நான் மிக விரும்பி படித்துள்ளேன். அவருடைய "இந்திய தேசியமும், திராவிட தேசியமும்" என்னும் நூலும், "தமிழின மீட்சி" என்னும் சிறு நூலும் வெளிவந்தபோது, அக்கருத்துகளில் எனக்கு மாறுபாடு ஏற்பட்டது. வெளிநாட்டு ஆய்வாளர் இர்ஷிக் எழுதியுள்ள "1930 களில் தமிழ் மறுமலர்ச்சி" என்னும் ஆங்கில நூலில் கூறப்பட்டிருந்த பல கருத்துகள், குணாவின் இரு நூல்களிலும் இடம் பெற்றிருந்தன.
"திராவிடத்தால் வீழ்ந்தோம்" நூலோ, கருத்து விவாதங்களைத் தாண்டி, பெரியாரை மிகவும் இழிவுபடுத்துவதாக இருந்தது. சங்கராச்சாரியையும், பெரியாரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் பார்வை அந்நூலில் இருந்தது. அது கண்டு வெறுப்படைந்த நான், அவரோடு சேர்ந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைக் கூட தவிர்த்தேன்.
இப்போது அவர் சிறையிலிருக்கும் வேளையில், பழைய கோபங்களைத் தாண்டி, அவரைச் சந்தித்து உரையாட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. கூடுதல் கண்காணிப்பாளர் அறைக்கு அழைத்துவரப்பட்ட அவர் எங்களைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் கை குலுக்கினார். என்னிடமும் உரையாடினார். இருவரும் பகை பாராட்டவில்லை.
வழக்கு விவரங்கள் குறித்தும், சிறையில் அவர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். அவர் வந்து, பதினைந்து, இருபது நிமிடங்களுக்குப் பிறகு, பேராசிரியர் நெடுஞ்செழியனை அழைத்து வந்தனர். நெடுஞ்செழியன், பெரியாரியக் கொள்கைகளில் பிடிப்பும், உறுதியும் கொண்ட ஆய்வறிஞர். பகுத்தறிவுக் கொள்கைகளில் என் போன்றவர்களுக்கு முன்னோடியாய்த் திகழ்பவர். "உலகாயுதம்" குறித்த அவருடைய ஆய்வு நூல் தமிழ் அறிவுலகிற்குக் கிடைத்துள்ள பெரும் சொத்து என்றே கூறவேண்டும். திருச்சி கல்லூரியில் பணியாற்றிய காலம் தொட்டே அவரை நான் அறிவேன். பிறகு, தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு அவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என்ற எண்ணம் கல்வி உலகில் இருந்தது. அதற்கான தேர்வுப் பட்டியல் வரையில் கூட, அவர் பெயர் இடம்பெற்றிருந்ததாகச் செய்திகள் உண்டு.
இத்தனை தகுதியும், திறமையும் கொண்ட பேராசியர் நெடுஞ்செழியன், 04.07.2003 காலை, திருச்சியில் உள்ள அவரது வீட்டில் கைதுசெய்யப்பட்டார். காலையில் நடைப்பயிற்சிக்காக வெளியில் சென்று திரும்பிய அவரைச் சிலர் பின்பற்றி அவர் வீட்டுக்குள் வந்துள்ளனர். அவருடைய நூல்களைப் படித்துள்ளதாகவும், அவரோடு உரையாட விரும்புவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்களுடைய தோற்றம் பேராசிரியருக்கு ஐயத்தைக் கொடுத்திருக்கிறது.
சில நிமிடங்களில் இந்த நாடகம் முடிந்து, தாங்கள் கர்நாடகத்திலிருந்து வந்துள்ள காவல் துறையினர் என்றும் 1986ஆம் ஆண்டு, "சுதந்திர தமிழ்நாடு" கோரி அவர் பேசிய பேச்சுக்காகக் கைது செய்ய வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். தமிழ்நாட்டிற்குள் வந்து, கர்நாடக காவல்துறை ஒரு தமிழறிஞரை எளிதாகக் கைது செய்ய முடிகிறது. 1986ஆம் ஆண்டு பேசிய பேச்சுக்கு, ஏன் இவ்வளவு காலந் தாழ்ந்து நடவடிக்கை என்றால், அவர் தலைமறைவாக இருந்ததாக முதல் தகவல் அறிக்கை கூறுகின்றது. திருச்சியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்தபோது, கண்டுபிடித்து கைது செய்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். சொந்த வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருக்க வேண்டிய அவசியம் பேராசிரியருக்கு ஒரு நாளும் வராது. மேலும் 17 ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்தார் என்பதைக் காட்டிலும் கேலிக் கூத்து வேறு எதுவும் இருக்க முடியாது. அவர் கைது செய்யப்படுவதற்கு முதல்நாள் வரையிலும், அவருடைய வருகையும் அதற்கான அவருடைய கையெழுத்தும் பல்கலைக்கழகப் பதிவேட்டில் பதிவாகியுள்ளது.
இவ்வளவு உண்மைகளையும் குறிப்பிட்டு, நீதிமன்றத்தில் அவர் சார்பில் தொடுக்கப்ட்ட விடுவிப்பு மனு (Discharge petition) வும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அதனால் தொடர்ந்து அவர் சிறையில் இருந்து வருகிறார். என்னையும், தலைவர் நெடுமாறனையும் கண்ட அவர், எங்கள் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார். மனநெகிழ்ச்சி அழுகையாய்ப் பீறிட, அதனைக் கட்டுப்படுத்த முயன்று அவர் குலுங்குவதை அறிய முடிந்தது. அவருக்கு இருபுறமும் அமர்ந்திருந்த நாங்கள், ஆளுக்கொரு கையைப் பற்றி அறுதலாக அழுத்தினோம். அவருடைய குமுறல் அடங்கச் சில நிமிடங்கள் ஆயின. "சிறை கண்டோ தனிமையை எண்ணியோ நான் அழவில்லை. எந்தக் குற்றமும் புரியாத நான் ஓராண்டாய்ச் சிறையில் இருக்கிறேன். என்னைப் பார்க்கத் தமிழ்நாட்டிலிருந்து நீங்கள் வந்துள்ளதை எண்ணி, உங்கள் அன்பிலே நெகிழ்ந்து போனேன்" என்றார் பேராசிரியர். அவருடைய கொள்கை உறதியையும் நெஞ்சுரத்தையும் நாங்கள் அறிவோம். ஆனாலும் அன்பெனும் ஈரம் அந்தக் கொள்ளைப் பாறையிலிருந்து கசிந்தது.
"தமிழ்" என்பது கெட்ட வார்த்தையாகவும், தமிழ் உணர்வாளர்கள் தீவிரவாதிகளாகவும் கருதப்படும் காலத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்பதை அந்நிமிடங்கள் நெஞ்சில் ஆழப்பதித்தன. பேராசிரியர் கைது செய்யப்பட்ட போது உடைமாற்றிக் கொள்ளவும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லையாம். காவல் நிலையத்திலும் ஒரு குற்றவாளியைப் போலவே அவர் நடத்தப்பட்டுள்ளார்.
சிறையில், நாங்கள் சந்தித்த அன்றைய நாள்வரை, அவருக்கு முதல் வகுப்பு வழங்கப்படவில்லை. காலை உணவாகக் களிதான் கொடுக்கப்படுகிறதாம், அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், ஆசிவக மதம் பற்றிய புதிய செய்திகளைக் கொண்டுவரும் நோக்கில் உள்ளே பல நூல்களைப் படித்துக் கொண்டிருப்பதாகவும், வெளியில் வந்தவுடன் சிறந்த ஆய்வு நூல் ஒன்றை எழுதத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
சிறைக்கதவுகள் திறக்குமா? ஆய்வு நூல்கள் வெளிவருமா? அல்லது "தமிழ்" எப்போதும் களி தின்று கொண்டிருப்பதுதான் நமக்குச் சம்மதமா?

No comments:

Post a Comment