Saturday, October 30, 2010

மகாத்மா நேசித்த மதுரை

மகாத்மா நேசித்த மதுரை (

புண்ணிய பூமி கண்ட புரட்சி சகாப்தம்
அடிமைத் தளையில் சிக்கிக் கிடந்த பாரத மாதாவை மீட்க வந்த விடி வெள்ளியாக ஜொலித்த தேசப்பிதா காந்தியடிகளை அகிலம் போற்றும் அண்ணலாக-மனித குலம் என்றென்றும் நேசிக்கும் மகாத்மாவாகப் பரிணமிக்க வைத்து, பிரகாசிக்கச் செய்த புண்ணியம் மதுரைக்கு உண்டு.
ஒரு வகையில் பார்த்தால் மதுரை மண்ணைக் காந்தியடிகள் மிகவும் நேசித்தார் என்றே சொல்ல வேண்டும் ஏனெனில், தமது மேல் சட்டையைத் துறந்து அரை ஆடைத் துறவியாகி அகில உலகமும் வணங்கும் பரமாத்மாவாக அவர் நிலை உயர்ந்தது மதுரையில் தான்.
அதே போல, எத்தனையோ நூற்றாண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த தாழ்த்தப் பட்ட சமுதாயத்தினரின் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தும் வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆலயப் பிரவேச நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார்.
தமிழைப் போற்றினார்
26.3.1919-ல் தான் மதுரைக்கு முதன் முதலில் காந்தி வந்தார். பழைய மதுரைக் கல்லூரித் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழையும், இந்தியையும் ஒப்பிட்டு அவர் பேசினார்.

"தமிழைப் பற்றி எனக்கு ஓரளவு தெரியும். அது அழகான-இசைமயமான மொழி. ஆனால், அதன் இலக்கணத்தைக் கற்றுத் தேர்வது என்பது மிகக் கடினம். இந்தி இலக்கணமோ குழந்தைக்குக் கூட எளிது" என்றார்.

20.9.1921-ல் மதுரைக்குக் காந்தி வரும் வழியில் மணப்பாறை, திண்டுக்கல், அம்மைய நாயக்கனூர், வாடிப்பட்டி, கருப்பட்டி , சோழவந்தான், சமய நல்லூர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் அவரை வரவேற்க திருவிழாக் கோலம் பூண்டிருந்தன. மக்கள் கூட்டம் அலை மோதியது . சோழவந்தான் ரயில் நிலையத்தில் இரும்புக் கிராதியே சாய்ந்து விட்டது.
கதருக்கு கிராக்கி
கதர் ஆடையை உடுத்திக் கொண்டு காந்தியைக் காண வேண்டும் என்கிற ஆவல் மதுரையில் உள்ளவர்களுக்கு ஏற்பட்டது. அதனால் தையற் கடைக் காரர்களுக்குக் கதர் சட்டையும், குல்லாய்களையும் தைக்கவே நேரம் போதவில்லை. கதர் வேட்டி-சேலைகள் அமோகமாக விற்பனை ஆகின.
மதுரை ரயில் நிலையத்துக்குக் காந்தி வந்த போது, அந்தக் காலத்திலேயே 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் குழுமி நின்று வரவேற்றனர். ரயில் நிலையத்துக்கு வெளியே அவரை அழைத்து வந்து, காரில் அமர வைத்து, அருகே இருந்த மதுரைக் கல்லூரித் திடலுக்கு அழைத்துச் சென்றனர். பொதுக் கூட்டம் நடை பெற்ற இடத்தில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்தனர். அவர்கள் எழுப்பிய சப்தத்தில் காந்தியின் பேச்சு கேட்கவில்லை.
இதனால் சற்றே மனம் புண் பட்ட காந்தி, தனது பேச்சை ரத்தினச் சுருக்கமாக முடித்துக் கொண்டார். " இந்த சப்தம் எனக்கு மன வருத்தத்தை அளிக்கிறது. இந்த வெட்டிச் சப்தத்தைக் கேட்கவா மதுரைக்கு வந்தேன் என வருந்துகிறேன். உங்களுக்குத் தர்ம ராஜ்யம் வேண்டும் என்றால், நீங்கள் ராட்டையைச் சுழற்ற வேண்டும். அது தான் சாந்தியின் சின்னம். இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் சின்னம் " என்று காந்தி கூறிய பிறகே அமைதி ஏற்பட்டது.
இக்கூட்டத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இங்கு தான் காந்தியை முதன் முதலாகக் காமராஜர் பார்த்தார். அப்போது காமராஜர் ஒரு சாதாரண ஊழியர்.
அதே போல, இக் கூட்டத்துக்குக் காந்தி வருவதற்கு முன்பாகத் தேசியவாதியும், நாடக நடிகருமான தியாகி விசுவ நாததாஸ் சுதந்திர வேட்கையை ஊட்டும் பாடல்களைப் பாடி, கூட்டத்தை அமைதிப் படுத்தினார்.
அரை ஆடைத் துறவி
22.9.1921-ம் தேதி உலகமே தம்மை உற்று நோக்கும் புரட்சியை மதுரையில் அவர் செய்தார். விவசாயிகளும், வசதியற்றவர்களும் சட்டை அணியாமல் ஏழ்மைக் கோலத்தில் இருந்ததைப் பார்த்து மனம் வருந்திய அந்த மனிதப் புனிதர் தமது மேல் சட்டையைக் கழற்றி எறிந்தார்.
அரை நிர்வாணப் பக்கிரி என்று கேலி செய்த பிற நாட்டுத் தலைவர்களும், அந்நாளைய சர்வாதிகாரிகளும் பிற்காலத்தில் காந்தியை வணங்கிப் பணிந்தனர்.
28.9.1927-ல் மீண்டும் மதுரைக்குக் காந்தி வந்தார். மாலையில் நகராட்சி மன்ற மண்டபத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது. பின்னர் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார். "தாழ்த்தப் பட்ட சமுதாயத்தினர் நகராட்சியில் ஆசிரியர்களாகவும், அலுவலர்களாகவும் நியமிக்கப் பட்டுள்ளனர். அச் சமுதாயத்தினர் நகராட்சி மன்றப் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் படிக்கிறார்கள். அவர்களிடம் யாரும் சாதி வேறுபாடு காட்டுவது இல்லை என நகராட்சி மன்ற வரவேற்பு உரையில் கூறப் பட்டிருந்தது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது " என்றார் காந்தி.
காந்தி பாராட்டிய வரவேற்புரை
29.9.1927-ல் மாரியம்மன் தெப்பக் குளத்துக்கு எதிரே உள்ள சௌராஷ்டிர மன்றத்தில் காந்திக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது. தேவநாகிரி எழுத்தில் சௌராஷ்டிர மொழியில் எழுதப் பட்டு, தமக்கு அளிக்கப் பட்ட வரவேற்புரையை மிக அழகானது என்று காந்தி பாராட்டினார். அதற்கு முன்பு வேறு எந்த வரவேற்புரையையும் அவ்வாறு அவர் பாராட்டியது இல்லை.
இக் கூட்டத்தில் காந்தியின் உருவப் படத்தை வெள்ளித் தகட்டில் செய்து, கண்ணாடி போட்டு, முத்து ராமலிங்க ஆசாரி என்பவர் அளித்தார். ஐரோப்பிய பெண்மணி ஒருவர், 25 ஆண்டுகளாகத் தாம் அணிந்து கொண்டிருந்த-விலை உயர்ந்த கற்கள் பதித்த தங்கச் சங்கிலியைக் காந்தியிடம் நன் கொடையாக அளித்தார்.
30.9.1927-ல் விக்டோரியா எட்வர்டு அரங்கில் நடை பெற்ற மகளிர் கூட்டத்தில் காந்தி உரையாற்றினார்.
குடிசைகளைக் கோபுரம் ஆக்கியவர்
26.1.1934-ல் மதுரைக்கு வந்த காந்தி, மேல வாசல், தெற்கு வாசல், மதிச்சியம் குடிசைப் பகுதிகளைப் பார்வையிட்டார் . மதுரையிலேயே மிகவும் சுத்தமானது என்று பெயர் பெற்ற குடிசைப் பகுதியில் கூட மழை நீர் தேங்கி, முழங்கால் அளவுக்கு நின்றது.
பிறகு நகராட்சி மன்றத்தில் தமக்கு வரவேற்பு அளிக்கப் பட்ட போது, குடிசைப் பகுதிகளில் தாம் கண்ட அவலத்தைக் காந்தி குறிப்பிட்டார்.
சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் அளித்த வரவேற்பிலும், குடிசைப் பகுதிகளில் நிலவும் சிர்கேடுகளைப் பற்றி அவர் கூறினார். "வாரத்தில் ஒரு முறையாவது குடிசைப் பகுதிகளுக்குச் சென்று தூய்மைப் படுத்த வேண்டும். அங்குள்ள தாழ்த்தப் பட்டவர்களின் அழுக்கான ஆடைகளைத் துவைத்துத் தர வேண்டும்" என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
காந்தியின் கையெழுத்தைப் பெறுவதற்காகப் பல மாணவர்களும், மாணவிகளும் அன்பளிப்புகளை அள்ளிக் கொடுத்தனர். ஒரு மாணவர் கொடுத்த வட்டமான வெள்ளிப் பேழையில் குங்குமம் இருந்தது. உடனே தாழ்த்தப்பட்ட சமுதாயக் குழந்தைகளை அழைத்து, அவர்களின் நெற்றியில் காந்தி திலகமிட்டார்.
மாணவியிடம் சோதனை
அதைத் தொடர்ந்து, விக்டோரியா எட்வர்டு அரங்கில் நடைபெற்ற இந்திப் பிரசார சபையின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பரிசு வாங்கிய ஒரு பெண்ணை அழைத்து, இந்தியில் இருந்த புத்தகத்தைப் படிக்கும் படி காந்தி கூறினார். அப்பெண் தெரியாது என விழித்த போது காந்தி மட்டுமின்றி, அரங்கில் இருந்தவர்களும் சிரித்து விட்டனர். பிறகு, மாலையில் மதுரை மணல் மேட்டில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மக்கள் எல்லோரும் பார்ப்பதற்கு வசதியாக நின்று கொண்டே காந்தி பேசினார்.
தொடர்ந்து, பொன்னகரம் நகராட்சி விளையாட்டுத் திடலில் நடைபெற்ற தொழிலாளர்கள் பொதுக் கூட்டத்தை "அமைதியாக நடந்த ஏ-1 நிகழ்ச்சி" என்று காந்தியே பாராட்டினார். "தொழிலாளர்கள் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்கள் தங்களுக்கும் சொந்தம் என்கிற உணர்வுடன் பணியாற்ற வேண்டும்" என அன்று அவர் கூறிய அறிவுரை என்றும் எல்லோருக்கும் பொருந்துகிறது.
காந்தி படம் தாங்கிய அலங்கார ரயில்
1.2.1946-ல் மதுரை செல்வதற்காகச் சென்னையிலிருந்து தனி ரயிலில் இரவு 10.30-க்குக் காந்தி புறப்பட்டார். ராஜாஜி, காமராஜர் உள்ளிட்டவர்கள் உடன் சென்றனர். தூய வெள்ளை ஆடை அணிந்த ரயில் ஓட்டிகள் அன்றைய காங்கிரஸ் கொடியோடும், காந்தியின் உருவப் படத்தோடும் அலங்கரிக்கப் பட்ட என்ஜினை ஓட்டிச் சென்றனர்.
2.2.1946-ல் அச்சரப்பாக்கம், திருச்சி, மணப்பாறை என வழி நெடுக ஆங்காங்கே குழுமி நின்ற மக்களிடையே காந்தி பேசினார். மதுரையில் காந்தியைக் காண வேண்டும் என்கிற ஆர்வம் கரை புரண்டோட மக்கள் கூட்டம் ரயில் நிலையத்தில் பொங்கி வழிந்தது. மதுரை ரயில் நிலையத்தில் இறங்கினால், மக்கள் கூட்டத்தைச் சமாளிக்க முடியாது என்பதால் சமய நல்லூருக்கும் அப்பால் ரயிலை நிறுத்தி, காந்தியும் மற்றவர்களும் இறங்கினார்.
அங்கிருந்து மதுரைக்குக் காரில் வந்தனர். வழியெங்கும் மக்கள் வெள்ளம் கரை புரண்டது.
மக்கள் கடல்
பந்தய மைதானத்தில் காந்தியைக் காண குழுமி இருந்த கூட்டத்தை "மக்கள் கடல்" என அப்போது எல்லோரும் வர்ணித்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு மதுரைக்கு வந்த காந்தியைக் காண மக்கள் போட்டி போட்டுக் கொண்டு முன்னால் ஓடி வந்தனர்.
முதலில் அமைதியாக இருந்த கூட்டம் இதனால் கூச்சல் நிறைந்ததாக மாறியது. உடனே மக்கள் கூட்டத்தின் மத்தியில் அமைக்கப் பட்டிருந்த மேடையில் நான்கு புறமும் நடந்து வந்து மக்களைப் பார்த்து கையசைத்த பிறகே காந்தி பேசத் தொடங்கினார்.
தங்கத்தால் செய்யப் பட்ட மூவர்ணக் கொடி, ஒரு தங்க தக்ளி, 2 வெள்ளித் தக்ளிகள் உள்ளிட்டவை காந்தியிடம் அளிக்கப் பட்டன. மறுநாள் 3.2.1946-ல் மீனாட்சி அம்மன் கோயிலுக்குக் காந்தி சென்றார். தாம் முதலில் முயன்று நடை பெறாத ஹரிஜன ஆலயப் பிரவேசத்தை நிகழ்த்திக் காட்டுவதைப் போல, ஏராளமான தாழ்த்தப் பட்ட மக்களுடன் சென்றார்.
கோயிலில் அவருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப் பட்டு, "மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி" என்கிற முழுப் பெயரில் அம்மனுக்கு அர்ச்சனை நடைபெற்றது. தம்மைச் சுற்றி மக்கள் வெள்ளம் சூழ்ந்திருந்த போதிலும், பக்தி வெள்ளத்தில் திளைத்தவராகக் காந்தி காணப் பட்டார்.
கோயிலில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில், " பல ஆண்டுகளாக எனக்கு இருந்த விருப்பம் இன்று நிறைவேறியதில் மகிழ்கிறேன்" என இந்தியில் காந்தி எழுதினார்.
மகாத்மாவின் விருப்பத்தையே நிறை வேற்றிய மதுரையின் மகோன்னதப் பெருமை காந்தியின் புகழ் உள்ளளவும் நிலைக்கும்.

No comments:

Post a Comment