Saturday, October 30, 2010

நாட்டுப்புற வாழ்வு

நாட்டுப்புற வாழ்வு
Tamil Politics News Article இன்று நாட்டில் மேலை நாட்டு நாகரிகம் மிக விரைவாகப் பரவி வருகின்றது. மக்களுடைய பழக்க வழக்கங்களும் நடையுடைகளும் எண்ணப் போக்கும் மாறிவருகின்றன. இதனால் தமிழருடைய பண்டைய மரபுகள் வலுவிழந்து வருகின்றன எனலாம். காலத்திற்கேற்ற மாற்றங்கள் ஏற்படுவதனைத் தடுக்க வியலாது என்றாலும் நமது அடிப்படை நாகரிகம் குழைந்தொழியா வண்ணம் அரண்செய்வது வேண்டத்தக்கதாகும். எத்துணையோ புதுமைகள் புகுந்த பிறகும் ஆங்கிலேயர் தமக்கேயுரிய பண்டைய மரபுகளைப் பேணுவதில் கண்ணுங்கருத்துமாயுள்ளமை ஞாலமறிந்தது. இவ்வகையில் தமிழர் அவர்களைப் பின்பற்றியொழுகுதல் நலமாகும். பெரிய நகரங்களில் அயலவரின் பண்பாட்டுக் கூறுகள் மிகுந்து வருகின்றன எனினும், நெடுந்தொலைவிலுள்ள சிற்றூர்கள் இப்புதிய நாகரிகத்தின் தாக்குதலிருந்து பேரளவு தப்பியுள்ளன எனலாம். அறிவியல் முன்னேற்றத்தாலும், போக்குவரத்து வசதிகளாலும் சிற்றூர்களிலும் இப்புது நாகரிகம் சிறிதளவு இடம் பெற்றுள்ளது. எனினும் நமது பழைய பண்பாட்டின் அடிப்படையைப் பேரளவுக்குக் கட்டிக்காத்து வருவன நாட்டுப்புறங்களே என்பதில் ஐயமில்லை. எனவே பண்பாட்டாராய்ச்சி செய்ய விழைவார் நகர்ப்புறங்களை விட நாட்டுப் புறங்களை நாடுவதே சாலச்சிறந்தது.
நாட்டுப்புற மக்கள் இயற்கையன்னையின் மடியில் தவழ்ந்து விளையாடி இன்பம் நுகர்கின்றனர். ஆறுகளிலும், குளங்களிலும் நீராடி மகிழ்கின்றனர். சோலைகளிலும் மலைச்சாரல்களிலும், வெளிகளிலும், இயற்கையின்பம் நுகர்கின்றனர். புகையும், தூசும், பேரிரைச்சலும், சந்தடிகளும் அற்ற இனிய சூழல் அவர்களது உடலையும் உள்ளத்தையும் என்றும் வலிமையும் மலர்ச்சியும் கொண்டனவாக வைத்துள்ளது. உழைப்பே அவர்களது தெய்வமாக விளங்குகிறது. ஆணும், பெண்ணும் இணைந்து தொழிலாற்றுகின்றனர். நீரிறைக்கும் போதும், நாற்று நடும்போதும் களைபறிக்கும் பொழுதும் அவர்கள் பாடும் இனிய பாடல்கள் நெஞ்சையள்ளுகின்றன. இளம்பெண்கள் வட்டமிட்டுத் தம் வளைக்கரங்கள் ஒலிக்கக் கொட்டியிசைத்திடும் கூட்டமுதப் பாட்டொலியையும், சுண்ணம் அடிப்பார்தம் சுவை மிகுந்த பண்ணொலியையும், மண்ணை மடவார்தம் பழகு பல பாட்டொலியையும் இன்றும் கேட்டு மகிழலாம். துன்ப நிகழ்ச்சிகளின் போது பெண்கள் பாடும் ஒப்பாரிப் பாடலும், குழந்தைகளைத் தொட்டிலில் கிடத்தித் தாலாட்டும் பாடல்களும் இன்றும் நாட்டுப் புறங்களில் உயிரோடு வாழ்கின்றன. எண்ணற்ற பழமொழிகளைச் சிற்றூர் வாழ் மக்கள் போற்றிக் காத்து வருகின்றனர். நாட்டுப் பாடல்களின் பெருமையுணர்ந்த சான்றோர் சிலர் அவற்றைத் தொகுக்கும் பணியிலீடுபட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.
எண்ணற்ற புதிய விளையாட்டுக்கள் நகர நம்பியரிடையே செல்வாக்குப் பெற்றுள்ளன. பண்டையோர் பெரிதும் போற்றிய உடல் நலமளிக்கும் விளையாட்டுக்கள் அடியோடு மறக்கப்பட்டுவிட்டன. இந்நிலையிலும் சிற்றூர்களில் கிட்டிப்புள், உப்புக்கோடு, தட்டுக்கோடு, நொண்டிக்கோடு, சில்லுக்கோடு முதலிய விளையாட்டுகள் வாழ்கின்றன. முல்லை நிலத்து ஆரியரிடையே வழங்கிய ஏறுதழுவல் என்னும் வீரவிளையாட்டு பொங்கல் பண்டிகைக் காலத்தில் இன்னும் சிற்றூர்களில் நடந்து வருகின்றது. சிறுவர், சிறுமியர் மரக்கிளைகளில் கயிற்றூஞ்சல் கட்டி ஆடி மகிழ்கின்றனர். சிறுமியர் கூடி, பாடிக் கொண்டே கழங்காடி மகிழ்கின்றனர். பரண்களில் நின்று கொண்டு, கவண்வீசிக் கல்யெறிந்து பறவைகளை யோட்டுவதனை இன்னும் காண முடிகின்றது.
சிற்றூர் வாழ்வின் சிறப்புக் கூறுகளில் தலையாயது "எளிமையாகும்." உணவு, உடை, உரையுள் அனைத்திலும் இவ்வெளிமையைக் காணலாம். கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகியவற்றாலான கூழையும், பழஞ்சோற்றையும் விரும்பியுண்டு உடல் நலத்தோடு வாழ்கின்றனர். "உண்பது நாழி, உடுப்பவை இரண்டே" என்ற பழந்தமிழ்க் கோட்பாட்டையொட்டி ஆண்களும் பெண்களும் வாழ்கின்றனர். எத்துணையோ புதுவகையான ஆடைகள் நகர வாழ்வில் இடம் பெற்றபோதும், நாட்டுப்புற மக்கள் பழைய உடைகளைப் போற்றி வருகின்றனர். அரையாடையொன்றும், மேலாடையொன்றும் அணிந்த ஆடவர்களே இன்னும் மிகுதி. நகரப்புறத்து ஆடைக் குறைப்பு நாகரிகம் அவர்களை தீண்ட அஞ்சுகின்றது. உதட்டுச் சாயமும், வெண்மாவும் நகரப் பெண்களைப் பிடித்துக் கொண்டுள்ளன. மங்கலமான மஞ்சள் விடைபெற்று விட்டது. எனினும் நாட்டுப்புறப் பெண்கள் மஞ்சளை விடாது பற்றிக் கொண்டுள்ளனர்.
பண்டைக் காலத்தில் "ஊராட்சி முறை" மிகவும் சிறப்புற்றிருந்தது. ஊர்மன்றங்கள் எண்ணற்ற அதிகாரங்களைப் பெற்றிருந்தன. ஒவ்வொரூரும் ஒருசிறு குடியரசாக விளங்கிற்று. எத்தணையோ அரசியல் மாற்றங்களுக்கு இடையில் இன்னும் பஞ்சாயத்து முறை சிற்றூர்களிலும் வளமுடன் வாழ்கிறது. தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்கள் செயற்படும் தற்பொழுதும், பழைய நாட்டாண்மைக்காரரின் ஆட்சி நிலவி வருகின்றது. ஊரில் ஏற்படும் சிறு வழக்குகளைத் தீர்த்து "ஒற்றுமையைக்" காத்து வருகின்றது.
ஆண்டுதோறும் கிராம தேவதைகட்குத் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஊரின் ஒற்றுமைக்கு இவ்விழாக்களே அடிப்படையாக அமைந்துள்ளன. தமக்குள்ளிருக்கும் "வேற்றுமைகளை" மறந்து அனைவரும் ஒன்றுபட்டே திருவிழா நடத்துகின்றனர். உறவினரையும் நண்பர்களையும் அழைத்து, விருந்து படைத்து மகிழ்கின்றனர். விழாவைக் காணவரும் அயலூரார்க்கு அவர்கள் காட்டும் "பணிவும் பரிவும்" குறிப்பிடத்தக்கவை. அவர்கட்கு உணவளிக்கும் பொறுப்பை அனைவரும் பகிர்ந்து கொள்கின்றனர். பூசை முடிந்த பின்னர் வெளியூரார்க்கே முதலில் திருநீறு வழங்குவர். இஃது அவர்களது "விருந்தோம்பற் பண்பாட்டிற்கு" நல்ல சான்றாகும். கம்பசேவை என்ற பெயரில் நடக்கும் திருவிழாவில் ஏழைகட்கு உணவிடுவதே சிறந்து நிற்கின்றது. விழாவின் முடிவில் நாடகம் நடத்தி மகிழ்வது குறிப்பிடத்தக்கது. தெருக்கூத்துகள் பழைய இசை மரபையொட்டி நடப்பது போற்றத்தக்கதாகும்.
திருமணக் காலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் "ஏழை செல்வர் என்ற வேற்றுமையின்றி" அனைவரும் கூடுகின்றனர். ஒவ்வொருவரும் தத்தம் குடும்ப நிகழ்ச்சியாகவே கருதுகின்றனர். நிகழ்ச்சி முடியும் வரையில் இருந்து, பிறகே தமது சொந்தக்கடமைகளைச் செய்வர். வாழ்வைத் தள்ளினாலும் சாவைத் தள்ள மாட்டார்கள். பகைவராக இருந்தாலும் இறப்பு நிகழ்ச்சியைத் தள்ளாத உயர்ந்த பண்பாடு அங்கே நிலவுகின்றது. இறப்பு வீட்டுக்குச் செல்பவர் அரிசியும், நெல்லும், இளநீரும் கொண்டு செல்வர். இறுதிச் சடங்கு முதலியவற்றுக்கு ஆகும் "செலவினை ஈடுசெய்வதே" "இவ்வேற்பாட்டின் நோக்கமாகும்".
ஒருவர் வீட்டில் விழா நடந்தால் அனைவரையும் வீடு வீடாகச் சென்று அழைப்பர். பலகாரங்கள் செய்தால் அண்டை அயல் வீட்டாருக்கும் கொடுத்து மகிழ்வர். இறப்பு நிகழ்ந்த வீட்டார் அவ்வாண்டு முழுவதும் விழாக்கள் கொண்டாட மாட்டார். ஏனையோர் அவர்கட்குப் பலகாரங்களைக் கொடுத்து மகிழ்வர். கிராமங்களிலுள்ள தச்சர், நாவிதர், குயவர், பள்ளர், பறையர் முதலியோரையும் தமது உறவினரைப் போலவே கருதி அன்புடன் வாழ்கின்றனர். அறுவடைக் காலங்களில் அவர்களுக்கு நெல் கொடுத்து மகிழ்கின்றனர். அவர்கள் வீட்டு நன்மை தீமைகளிலும் கலந்து கொள்கின்றனர்.
பழைய நாட்டு "மருத்துவ முறையினைப்" போற்றிக் காப்பதும் சிற்றூரே. பச்சிலை மூலிகைகளைக் கொண்டு நோய்தீர்க்கும் மருத்துவர் பலரைச் சிற்றூர்களில் காணலாம். அவர்களை மக்கள் மிகவும் பெருமையாகப் போற்றி வருகின்றனர். ஒவ்வொரு தாயும் ஒரு மருத்துவர் என்று கூறுமளவுக்குக் குழந்தை மருத்துவத்தில் தேர்ந்துள்ளனர். இன்னும் மொழியின் பழைய வழக்காறுகளைக் காத்து வருவதும் சிற்றூர் மக்களே. நகரங்களில் வழக்கிழந்து போன பழைய சொற்களை அங்கே காணலாம். என் தாய் என்னும் பொருளுடைய யாய் என்ற சொல்லையும் அம்மா என்ற பொருளுடைய ஆத்தா என்ற சொல்லையும், சோறு என்ற சொல்லையும் நாட்டுப்புறத்திலன்றிக் காணமுடியாது. பிள்ளைகட்கு இன்று என்னென்னவோ பெயரிடுகின்றனர். பாட்டன் பெயரை இடும் பழைய மரபு இன்னும் நிலைத்துள்ளது. கணவன் பெயரையும், மாமன் மாமியார், நாத்தூணார், கொழுந்தன் ஆகியோர் பெயரையும் சொல்லாத பண்பாட்டை நாட்டுப் புறத்தில்தான் காணமுடியும்.
இதுகாறும் கூறியவற்றால், நாட்டுப்புறங்களே பழைய மரபுகளைக் கட்டிக் காப்பவை என்று உணரலாம். "உயர்ந்த பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டது நாட்டுப்புற வாழ்வு" என உணரலாம்

No comments:

Post a Comment