Tuesday, October 26, 2010

எது அழகு

எது அழகு? ( Yethu Alagu? - Tamil Katturaikal - General Articles
உலகம் பிறந்ததிலிருந்து ஒரு கணம் கூட நின்றதில்லை. அப்படி ஒரு இயக்கம்! அப்படி ஒரு சுழற்சி! அப்படி ஒரு மாற்றம்! மாறுகின்ற உலகில் காண்பவைகளும் கண்ணோட்டமும் மாறிக் கொண்டே இருக்கின்றன!
ஆனால் அந்தந்தக் காலகட்டத்தில் வாழும் போது அழகு, அழகற்றவை என விமர்சிக்கிறோம். அது நியாயமாகவும் படுகிறது. உண்மையில் எது அழகு? தீப்பட்ட முகத்தையுடைய தாய் ஒருத்தி தனது குழந்தையைக் கொஞ்சி விளையாடும் போது, அந்த குழந்தைக்கு அந்த தாய்தான் உண்மையான அழகு. அந்த அழகு நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை! உலகிலேயே மிகச் சிறந்த அழகு தாய்மை!
வெறும் தோற்ற அழகை மட்டுமே எடை போடுகின்ற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், நமது முன்னோர்கள், வரும் தலைமுறை எங்கே தவறிவிடுமோ என்று எக்காலத்திலும் பொருந்தும் வகையில் அழகு எது எனத் தமிழ் வரிகளில் அன்று அழுத்தம் திருத்தமாகக் கூறிச் சென்றிருக்கிறார்கள்.
கல்விக்கழகு பேசும் சொற்களில் குற்றமில்லாமை, செல்வம் படைத்தவர்களுக்கு அழகு சுற்றத்தினரைக் காப்பாற்றுவது, மன்னர்க்கு அழகு நீதிமுறைப்படி நாட்டை ஆள்வது, வணிகர்க்கு அழகு நாணயம் தவறாமை, வேளாண் மக்களுக்கு அழகு உழவை உயிராக மதிப்பது, மற்றும் வருமுன் அறிவது மந்திரிக்கு அழகு, போர் வீரனுக்கு அஞ்சாமை அழகு, வறுமையிலும் ஒழுக்கம் அழகு, அறிவுடையோருக்கு அடக்கம் அழகு என்பது வெற்றிவேற்கை காட்டும் அழகின் அணிவகுப்பு.
அன்றைய பட்டியல் அழகு! இது நமக்குப் புரிவது கடினம். நேற்றைய வரிகளில்,
"கண்ணுக்கு மையழகு,
கவிதைக்குப் பொய்யழகு"
ஏற்றுக் கொள்ள எளிதான இந்த அழகுப் பட்டியல் நன்கு புரிகிறது! மென்மையான மனதுக்குள் உட்கார்ந்து மணியடிக்கிறதே! இன்று மட்டும் ஏன் காலழகு, கையழகு, உந்தியழகு, விரலழகு, அதில் நகம் அழகு என்று சுருங்கிவிட்டோம்! புரியவே இல்லை! மலரின் அழகை ரசிக்கலாம். இதழ் இதழாகப் பிய்த்துப் பார்ப்பது ரசனையா? நிலவின் குளிர்ச்சியை ரசிக்கலாம், குழந்தைகளின் அழகை ரசிக்கலாம் இன்னும் எவ்வளவோ?
அழகென்பது அவரவர் கண்ணோட்டத்திலுள்ளது என்பதை இப்படியும் சொல்லுவார்கள். மஜ்னுவின் கண்களோடு பார்த்தால் லைலாவின் அழகு புரியும் என்று!
பிறந்த குழந்தைக்குத் தாயழகு, பள்ளிப் பருவத்தில் கற்பிக்கும் ஆசிரியை அழகு, (இது அன்றைய அனுபவம்), இளமைப் பருவத்தில் உள்ளத்தில் நிறைந்தவர் அழகு, முதுமையில் பேரப் பிள்ளைகள் அழகு. இப்படி நமக்குள்ளேயே எத்தனை மாற்றங்கள்!
இதில் எந்தவித மாற்றமும் இல்லை! அது போலவே ஈரத்து மலரழகு! எரிகின்ற சுடர் அழகு!
தூரத்துப் பச்சை அழகு! தொடுகின்ற வான் அழகு!
ஓரத்துப் பார்வை அழகு! உனக்கு நீயே அழகு!!! - இந்த ரசனையிலும் அதிக மாற்றமில்லை! கடைசியில் சொன்னதில் மாற்றமிருந்தால் கண்ணாடிக்கு இங்கு வேலை இருந்திருக்காதே!
மிருகங்களின் அழகைக் கூட ரசிக்கக் கற்றுக் கொண்டுள்ள நாம், நம் இனத்தின் அழகு, மற்ற எல்லா உயிர்களிடமும் காட்டுகின்ற மனித நேயத்தில் தான் இருக்கிறது என்பதை ஏன் மறந்து விட்டோம்?
காட்டில் வாழும் மிருகங்களும், "பசிக்கு மட்டுமே கொல்வது" என்ற கட்டுப்பாட்டுடன் தமது இனத்தவரே அழகு என்று கூடிக் குலவிச் சேர்ந்து வாழ்கின்றன.
மிருகங்களின் அழகைக் கூட ரசிக்கக் கற்றுக் கொண்டுள்ள நாம் நம்முடைய இனத்தின் அழகு, மற்ற எல்லா உயிர்களிடமும் காட்டுகின்ற மனித நேயத்தில்தான் இருக்கிறது என்பதை ஏன் மறந்து விட்டோம்?

No comments:

Post a Comment