Tuesday, October 26, 2010

காதல் படு(த்து)ம் பாடு

காதல் படு(த்து)ம் பாடு
 
 
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்ற தொடர் பரவலாகப் புகழப்பெற்றது. இங்கே, காதல் என்ற சொல் மானுடவுயிர் இறையை அடையும் ஒன்றுதலை க் குறிப்பதற்காக வரும். அதைப்போலவே ஆடவன் ஒருவரின் உள்ளமும் பெண் ஒருத்தியின் உள்ளமும் அன்பினால் ஒன்று கலப்பதைக் காதல் என்று கூறுகிறோம். இரண்டு கண்கள் இருந்தாலும் இரண்டு வெவ்வேறு பார்வைகள் இல்லையே? இரு கண்களின் பார்வையும் ஒருகிணைந்தால்தானே ஒரு பொருளைப் பார்க்க முடியும். காதல் என்பதும் இரண்டு மனங்களின் சரியான சங்கமமாகத்தான் இருக்க வேண்டும். இன்றைக்கும் காதல் அந்த மாதிரியாகத்தான் இருக்கிறதா என்பதுதான் கேள்வி.
இன்றைக்குக் காணப்பெறும் காதல் என்னென்ன காரணங்களால் உருவாகிறதெனப் பார்க்கலாம்.
1. தாம் கண்ட, கேட்ட, படித்த காதலர்களைப் போலத் தாமும் இருக்க வேண்டுமென்ற உந்துதலால், போலச் செய்வதாகக் காதல் கொள்வது.
2. நவீன உலகத்தில் வாழ்வதாகக் காதல்புரியும் போலி மனப்பான்மை.
3. பருவ வயதின் காரணமாக, வாலிபப் பருவக் கோளாறு காரணமாகக் காதலிப்பது
4. ஒரு பாலினம் மற்ற பாலினம் கொண்டுள்ள அழகு, புகழ், தீரம் இவற்றில் மயங்கி விருப்பம் கொள்வது.
5. பொழுதுபோக்கிற்காகவும் நேரங்கடத்தவும் நடப்புக்காலக் கலாசாரம் என்பதற்காகவும் காதல் மேற்கொள்வது.
6. திரைப்படம், இதழ்கள், தொலைக்காட்சிகள் வெளிச்சம் போட்டுக்காட்டிய காதல் உலகில் தம்மையும் இணைத்துக் கொள்ள விரும்புவது.
7. சில இடங்களில் ரொக்கம், காதலுக்கான அடிப்படையாவது.
8. பெற்றோர், உறவினர் ஆகியோரிடம் கிடைக்காத இனந்தெரியாத அன்பு எவரால் தரப்பெறுகிறதோ அவரைத் தமக்குரியவராகக் கருதிக் காதலிப்பது. இவைபோல எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால், காதல் என்பது நேர்மையானதாக இருக்க வேண்டும். ஆனால் மின்னல் போல் தோன்றி மறைந்துபோகும் காதல்களே மிகுதியாகத் தென்படுகின்றன.
முப்பது, நாற்பதாண்டுகளுக்கு முன்பெல்லாம் காதல் பற்றிய திரைப்படங்கள் நாகரிகத்தைக் குலைக்காதவாறு வெளிவந்தன.வெற்றிபெறாத காதலை உள்ளடக்கிய படங்கள்கூட அமரகாவியம் எனப் போற்றப்பட்டன. தெய்வீகக் காதல் என்ற சொல் அழுத்தமாக உச்சரிக்கப்பெற்றது. இன்று தலைகீழாக யாவும் மாறிப்போய்விட்டன. தமிழகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், தமிழாக்கத் தொடர்கள், புராணக் கதைகள் தவிர ஏனைய நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் காதல் உணர்வு கொச்சைப்படுத்தப்படுகிறது என்பது அப்பட்டமான உண்மை. ஒரு பெண்ணைப் பல ஆடவர்கள் காதல் கொள்வது அல்லது ஆண்மகன் ஒருவனை நங்கையர் பலர் காதல் கொள்வது, முறைகேடான காதல் நிலைகளை மேற்கொள்வது, என்பன போன்ற கதைப்பகுதிகளே பரவலாகத் தென்படுகின்றன. இதனால் இவற்றைப் பார்க்கும் இளம் பருவத்தினரின் உள்ளங்களில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சு கலக்கப்பெறுகின்றது.
காதல் என்பது தேவையற்றதாகவோ, தீண்டத்தகாததாகவோ கருதப்பெறும் ஒன்றல்ல. சரியானதாகவும் நெறியானதாகவும் வடிவமைக்கப்பெற்ற காதல் வாழ்க்கையே மிகவும் சிறந்தது. அங்கே பூசல்கள், போர்கள், பிணக்குகளுக்கு வாய்ப்பே இல்லை. மேலோட்டமான காதலை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையில் இன்பம் என்பது கானல் நீராகத்தான் இருக்கமுடியும். காதலித்து இல்லறத்தை மேற்கொண்டவர்களின் வாழ்க்கையில் சிக்கல்களும் பிரிவுகளும் ஏற்பட என்ன காரணம்? திருமணத்திற்குப் பிறகும் காதல் தொடரப்படாததுதான். காதலால் பல பயன்கள் உண்டு. அது சாதி, மதம் பார்ப்பதில்லை. மொழியோ, வட்டாரமோ காதலை முடமாக்கிவிடாது. அழகு, பணம், வேறு கூறுகள் காதலுக்கு இடைஞ்சலாக அமைவதில்லை. உண்மையான காதலுக்கு நேரம், வயது, வாழுமிடம் போன்றவை முட்டுக்கட்டை போடுவதில்லை. முறைப்படியான காதல் காலங்கடந்து நிற்கும்.
பழங்காலக் காதல் குறைவேதுமற்ற, குற்றமேதுமற்ற நிறைவான காதலாயிருந்தது. ஏமாற்று வேலைகளுக்கு அங்கே வேலையில்லை. கவர்ச்சி, மேனிப்பசி, மோகம் போன்ற இழிவான குணநலன்கள் அக்காலத்தில் எட்டிக்கூடப் பார்த்ததில்லை. இக்காலத்தில் அவையே காதலுக்கான மூலதனங்கள். மெய்ம்மை உணர்வுடன், நியதிகளுக்கு உட்பட்ட காதல் அங்கொன்று இங்கொன்றாக மட்டுமே வெகு அரிதாகத் தென்படுகின்றது.
தாய் போன்ற உறவுகளிடம் கொள்ளும் காதல் பாசம் எனப்படும். மொழி, நாடு இவற்றின் மீதான காதல், பற்று என்றழைக்கப்படும். பிறர் மீது இரக்கம் கொண்டு எழும் காதலுக்குப் பரிவு என்பது பெயர். வேறுபாடு கருதாத அருளுணர்வு கலந்த காதல் கருணை என்ற பெயர்பெறும். மற்றவழிகளில் வருபவை இச்சை, கீழானவேட்கை, இழிகாமம் ஆகும். ஒழுங்கானதும் ஒழுக்கம் நிறைந்ததுமான காதலால் சாதி, மத, சமயப் பூசல்கள் மறையும். வேறு பிரிவினைகள் ஒழியும்; அன்பு பெருகும்; இல்லறம் நல்லறமாகும்; வாழ்க்கை வளமும் நலமும் உடையதாகும். எனவே, நல்ல காதலுக்கு வாழ்த்துமடல் வாசிப்போம். பாரதியுடன் சேர்ந்து நாமும் பாடுவோம்: ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே.

No comments:

Post a Comment