Saturday, October 30, 2010

பக்தி - ஏமாற்றுபவர்களும், ஏமாறுபவர்களும்

பக்தி - ஏமாற்றுபவர்களும், ஏமாறுபவர்களும்!
Deceptives, devotees and disciples! - Tamil Poltics News Article அதே செய்தி, அதே தலைப்பு, அதே பரபரப்பு, ஆட்கள்தான் மாறுகிறார்கள். ஆனால், அதே செய்தி மீண்டும் மீண்டும். ஆன்மீகவாதி என அறியப்பட்டவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் அல்லது பொருளாதார மோசடிகள் என தமிழ் ஊடகங்களில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கொருமுறை பரபரப்பு எழுகிறது. உணவு விடுதிகள், பேருந்துகள், அலுவலக இடைவேளை, திருமண மண்டபங்கள், மகளிர் மன்றங்கள், கல்லூரி செய்திகள் ஆவேசமாக அலசப்படுகின்றன. ஆனால், அடுத்து வேறு ஒரு செய்தி அலை எழும்போது எல்லாம் மறக்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்குப் பின் இன்னொரு ஆன்மீகவாதி. இன்னொரு சம்பவம். மீண்டும்.... ஏன் மக்கள் ஏதோ ஒரு சாமியாரை நோக்கிப் போகிறார்கள்? ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து அவர் பாதங்களை கழுவக் காத்திருக்கிறார்கள். மணிக்கணக்கில் தரிசனத்திற்காகக் காத்திருக்கிறார்கள். நிரம்பப் படித்தவர்கள், அறிவி ஜீவி எழுத்தாளர்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள்கூடக் காலில் விழுந்து கும்பிடுகிறார்கள். ஏன்? கூட்டம் கூட்டமாக மக்கள் தனிமனித வழிபாட்டில் இறங்குவதன் பின்னுள்ள உளவியல் காரணங்கள் என்ன?
இன்று அக உலகின் ஆன்மீகத் தேடல்களின் காரணமாக, ஒரு குருவைத் தேடுபவர்களின் எண்ணிக்கையை விடப் புற வாழ்வில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகள், உறவு ரீதியான சிக்கல்கள் அல்லது உடல் உபாதைகள் இவைதான் பெரும்பாலானவர்களை சாமியார்களை நோக்கிச் செல்ல உந்துகின்றன. இந்த மாதிரியான நெருக்கடிகளுக்கும், சிக்கல்களுக்கும் பெரும்பாலும் விழிப்புணர்வு இல்லாமை, சில இயல்புகள் போன்ற தனிமனிதக் குறைபாடுகள்தான் காரணமாக அமைகின்றன. எனவே தீர்வு, விழிப்புணர்வு பெறுவது அல்லது இயல்புகளைத் திருத்திக் கொள்வது என்பதில்தான் இருக்க முடியும். ஆனால், இது தர்க்க ரீதியாகச் சரி, நடைமுறைக்கு ஒத்துவராது என நம்மில் பலர் நினைக்கிறோம்.
நெருக்கடிக்குள்ளாகும்போது நமக்குத் தேவைப்படுவது தீர்வல்ல. வலி நிவாரணி (Paliative). அதை, நம்மைவிட அசாதாரண சக்தி கொண்டவர்கள் என நாம் நம்பும் சாமியார்கள் தருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களிடம் ஓடுகிறோம்.
"பணச்சிக்கல் அதிகமாக இருந்தபோது மனநிம்மதி இல்லாமல் தவித்தேன். அப்போது, நண்பர்கள் மூலமாக குருஜி பற்றிக் கேள்விப்பட்டு அங்கு சென்றேன். அங்கு சென்று தியானமுறைகளைக் கற்றுக்கொண்டு கடைப்பிடிக்க ஆரம்பித்தேன். அதன்பின் பணச்சிக்கல் தீராமல் இருந்தாலும், இன்றுவரை மனநிம்மதியுடன் இருக்கிறேன்" என்கிறார் கோவையைச் சேர்ந்த மல்லிகா.
மதுரையைச் சேர்ந்த வெற்றிவேலின் அனுபவமும் ஏறத்தாழ இதைப் போன்றதுதான்: "உறவினர்களோடு எனக்கு சரியான புரிதல் இல்லாமல் இருந்தது. இது குறித்த கவலை எனக்கு அதிகமாக இருந்தது. அப்போது எனது அண்டை வீட்டுக்காரர்தான் துறவி ஒருவரைக் குறித்துக் கூறினார். சரி! அவரிடம் போகலாம், அப்போதாவது சிக்கல்கள் தீர்கிறதா பார்க்கலாம் என்று நினைத்து அவரை நாடினேன்."
"உயர் ரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது தியானம், யோகா போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் உடல்நலம் தேறிவிடும் என்று நண்பர்கள் கூறினார்கள். அவர்கள்தான் முதன்முதலில் என்னை அனுப்பி வைத்தனர். அவற்றை நான் முறையாகக் கற்றபிறகு என் உடல்நலம் தேறியது" என்கிறார் அண்ணாத்துரை.
மனவியல் வல்லுநர்கள் இதைத் தனிநபர்களின் பிரச்சினையாக மட்டுமல்லாமல், சமகாலச் சமூகம் சார்ந்த பிரச்சினையாகவும் பார்க்கிறார்கள்.
"முடிவில்லாத ஆசைகளால் "போதும்" என்று நிறுத்திக் கொள்ள மனமில்லாத பேராசை, அதன் விளைவாகப் புரியும் குற்றங்கள்; உறவுகளை தனக்குக்கிடைத்த சொத்தாகப் பேணிக் காப்பாற்றாமல், தொலைத்துவிடும் சுயநலம், அதன் விளைவாக மன அழுத்தங்கள்; தினசரி வாழ்வில் உள்ள வேகத்தின் காரணமாகப் பாதிக்கப்பட்ட உடல் ஆரோக்கியம், அதன் விளைவாக நோய்கள். திருப்தியும், நிம்மதியும் இல்லாத வாழ்க்கை. இவை இன்றைய காலகட்டத்தில் மக்களின் இயல்புகள்" என்கிறார் உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்.
பிருந்தா ஜெயராமன் சுட்டிக் காட்டும் காரணங்கள் பெரும்பாலும் நடு வயதிலிருப்பவர்களுக்குப் பொருந்தக் கூடியவை. ஆனால், அண்மைக்காலமாக சாமியார்களை நாடுவோர்களில் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?
"எழுபதுகளில் தேடல் உள்ளவர்கள் கம்யூனிஸ்டுகளாக மாறினார்கள். எண்பதுகளில் அறிவுஜீவிகளாக ஆனார்கள். தொண்ணூறுகளில் சாமியார்கள் பின்னால் போனார்கள். ஏனென்றால், கம்யூனிஸ்ட்டாக ஆனாலோ, அறிவுஜீவியாக எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டும் இருந்தாலோ உங்களைச் சுற்றியுள்ள குடும்பமும், சுற்றமும் உங்களை விடாது. வேறு வேலையில்லையா என்று திட்டிக்கொண்டே இருக்கும். ஆனால், சாமியார் பின்னால் போனால், யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆசீர்வாதம் செய்து போகச் சொல்வார்கள். இதுதான் இன்றைய நிலைக்குக் காரணம்" என்கிறார் மனநல மருத்துவர் டாக்டர். ருத்ரன்.
அமெரிக்காவில் ஒரு தனி மனிதனைக் கூட்டமாக வழிபாடு செய்யும் பெரிய அளவிலான இயக்கங்கள் (cult) 2,500லிருந்து 3,000 இருக்கும் என்றும், முப்பது லட்சம் பேர் இந்த இயக்கங்களில் உறுப்பினராக இருக்கிறார்கள் என்றும் மதிப்பிட்டிருக்கிறார்கள். இதை ஒரு சமூகப் பிரச்சினையாக நினைத்து அதை உளவியல் நிபுணர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜான். ஜி.கிளார்க், இந்த "கல்ட்" மனோபாவத்திற்கு உள்ளாகிறவர்களிடம் உள்ள சில பொதுத் தன்மைகளைப் பட்டியலிட்டிருக்கிறார்.
* இவர்கள் பெரும்பாலும் மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
* பாதுகாப்பான சூழ்நிலைகளில் மத நம்பிக்கைகளோடு வளர்க்கப்பட்டவர்கள்.
* எதையும் மிகச் சரியாகச் செய்ய வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள்.
* ஆனால், தவறுகளுக்கு அடுத்தவர்கள் மீது பழி போடுபவர்கள்.
* எவரோடும் நெருக்கமாகப் பழகும் இயல்பில்லாதவர்கள்.
பக்தர்கள் யார் என்பதில் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இந்து மதத்தில் துறவிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில வரையறைகள் இருக்கின்றன.
"உண்மையான துறவிகள் பின்னாலிருந்து பிறர் அளிப்பதை முகத்தைக்கூடப் பார்க்காமல், இரு கைகளையும் தூக்கிப் பெற்று உண்ணவேண்டும். மரத்தடியில்தான் இருக்க வேண்டும் என்ற நியதிகள் இருக்கின்றன. கிரி, புரி, ஆரண்ய, தீர்த்த, பரமஹம்ச என்று பிரிவுகள் உண்டு. "கிரி" என்றால் அவர்கள் மலைப்பகுதியிலும், "புரி" நகர்ப்பகுதியிலும், "ஆரண்ய" காட்டுப்பகுதியிலும், "தீர்த்த" நீர்ப்பிரதேசங்களிலும், இருப்பார்கள். "பரமஹம்ச" எல்லா பகுதிகளிலும் இருப்பார்கள். ஆனால், போக்குவரத்தும், தொழில்நுட்பமும் வளர்ந்த இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் இருப்பது சாத்தியமல்ல. காலம் மாறியிருக்கிறது. அதனால், கோலமும் மாறியிருக்கிறது" என்கிறார் இந்து முன்னணி தலைவர் திரு. இராம.கோபாலன்.
காரணங்கள் என்னவாக இருந்தாலும், ஆன்மீகம் என்பது இன்று வர்த்தகமயமாகிவிட்டது. மடங்கள் கார்ப்பொரெட் நிறுவனங்களைப்போல நடத்தப்படுகின்றன. ஆசிரமங்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர்களுக்குப் பரந்து கிடக்கின்றன. அவற்றில் கட்டப்படும் கட்டிடங்கள் நட்சத்திர விடுதிகளைப்போல வசதி நிறைந்தவையாக வடிவமைக்கப்படுகின்றன.
நுகர் பொருட்களை விற்கும் பெரிய நிறுவனங்கள் முதலில் பெரும் விளம்பரங்கள் மூலம் "பிராண்ட்"களை உருவாக்க முயற்சிக்கும். இன்று ஆன்மீக நிறுவனங்களும் அதைப்போன்ற முயற்சிகளை மேற்கொள்கின்றன. ஊடகங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். தனியே தொலைக்காட்சி சானல்கள் நடத்துகிற சாமியார்கள் இருக்கிறார்கள். பல துறவிகளுக்கு இணையத் தளங்கள் இருக்கின்றன. நித்தியானந்தா, கல்கி பகவான், ஜக்கி வாசுதேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் போன்றவர்கள் பேஸ்புக் போன்ற சமூகவலைப் பின்னல்களிலும் காணப்படுகிறார்கள். ஒலிநாடாக்கள் முதல் ஃபிளக்ஸ் பேனர்கள்வரை எல்லாவிதமான விளம்பரச் சாதனங்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சன்யாசிகளுக்கு பி.ஆர்.ஓக்கள் இருக்கிறார்கள். தரிசனங்களுக்குக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. வீடுகளுக்கான பிரத்யேக விஜயம், சாமியாரின் காலை அலம்பி பூஜை செய்யும் பாத பூஜை இவற்றுக்குக் கணிசமான பணம் வசூலிக்கப்படுகின்றன. சுற்றுப்பயணங்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு விளம்பரப்படுத்தப்படுகின்றன.
ஆக, துறவறம் என்பதின் இலக்கணம் மாறிவிட்டது. உறவுகளையோ, வசதிகளையோ துறக்காமல் தன்னுடைய செயல்கள் மூலம் பணம் ஈட்ட, இல்லறத்தில் இருக்கும் மற்ற மனிதர்களைப்போலவே துறவிகளும் வாழலாம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதியாகிவிட்டது. இதெல்லாம் தவறில்லை என்கிறார் இராம.கோபாலன். "இப்போது மைக் பயன்படுத்துகிறார்கள். அது ஒரு வசதிதானே. அப்படித்தான் எல்லாமே. இப்போது வீடியோ கான்பிரன்சிங் முறையில் அதிக மக்களைச் சென்றடையும் துறவிகள் இருக்கிறார்கள். வாழ்க்கை முறை மாறிவிட்டது. இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆசிரமங்களுக்கு சொத்துக்கள் இருக்கலாம். தப்பில்லை. ஆனால், அவை எப்படி வந்தன என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும். நல்லவழியில் வந்திருந்தால் சாமியார்களுக்கு சொத்து இருப்பதில் தப்பில்லை" என்கிறார் அவர்.
ஆனால், நெடுங்காலத்திற்கு முன்பல்ல, அண்மைக் காலங்களிலேயேகூட, உண்மையான ஆன்மீகவாதிகள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் நம்மிடையே வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். "முன்பு உண்மையான ஆன்மீகத்தேடலுடன் இருந்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் இப்படி மடம், ஆசிரமம், புலித்தோல் என்ற ஒரு செட்அப்பிற்குள் வரமாட்டார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர் இருந்தார். அவர் மடம் அமைக்கவில்லை. அவரது சீடர் விவேகானந்தர்தான் அமைத்தார். ரமணர் இருந்தார். அவருடன் இருந்தவர்கள்தான் மடம் அமைத்தனர். சீரடி சாய்பாபா மடம் அமைக்கவில்லை. சீடர்கள்தான் அமைத்தார்கள். உண்மையான தேடலுள்ளவர் போஸ்டர் ஒட்டமாட்டார்; நோட்டீஸ் கொடுக்கமாட்டார். முக்கியமாக கட்டணம் வாங்கமாட்டார்" என்கிறார் டாக்டர்.ருத்ரன்.
பெரும்பாலும் இந்த கார்ப்பொரேட் குருமார்கள், பக்தர்களைத் தங்கள் பக்கம் இழுத்து வர மூன்று வழிகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒன்று நயமான பேச்சுக்கலை. இரண்டு வித்தைகள். மூன்று யோக, தியானம் அல்லது சிகிச்சை. மனதிற்கு இதமளிக்கும் விதமாகப் பேசுகிறவர்கள் (sooth sayers), தந்திரக்காரர்கள், யோகா ஆசிரியர்கள் எல்லோரும் துறவிகளாகக் காணப்படுகிற காலம் இது.
இதைப் பகுத்துணர்ந்துகொள்ள இயலாத சமூகத்தின் நிலைதான் இன்றைய சமூகத்தின் நிலை. பணத்தின் மீதும், வசதிகளின் மீதும் உள்ள விருப்பத்தைத் துறக்க முடியாதவர்கள், உன் ஆசைதான் உன் துன்பத்திற்குக் காரணம் என்று எப்படித் தன்னை நாடி வந்தவர்களிடம் சொல்வார்கள்? பக்தர்கள் எப்போதும் தன்னைச் சார்ந்திருக்க வேண்டும் (dependent) என்று கருதுபவர்கள் எப்படி விடுதலையும், விழிப்புணர்வும் தரக்கூடியவர்களாக இருப்பார்கள்? குறுக்கு வழியில் பணமும், புகழும், தேட முயற்சிக்கிறவர்கள், எப்படி நமக்கு நேர் வழியைக் காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள்? இந்தக் கேள்விகளைக் கேட்டுக் கொள்ளாதவரை எந்தச் சமூகமும் காலில் விழுகிற சமூகமாகத்தான் இருக்கும்.
அப்படியானால், ஆன்மீகம் என்பதே வேண்டாத ஒன்றா? ஏமாற்று வேலையா? ஆன்மீகத் தேடல் என்பது நிச்சயமாக தனிமனிதர்களுக்கு மிகவும் தேவைப்படும் ஓர் உணர்வு. ஆனால், அது உள்நோக்கிய தேடலாக அமைய வேண்டும். உண்மையான ஆன்மீகத் தேடல், முதலில் எல்லாவற்றையும் கேள்வி கேட்கும். எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாது. தான் உள்பட எல்லாவற்றையும் நிராகரிக்கும். ஆனால், எதையும் அலட்சியப்படுத்தாது. விடைகளைப் புத்தகத்தில் தேடாது. அனுபவத்தில் காண முயற்சிக்கும். சுருக்கமாகச் சொன்னால், ஆன்மீகம் என்பது ஓர் அனுபவம். அது வியாபாரம் அல்ல.

No comments:

Post a Comment