Tuesday, October 26, 2010

சுமையல்ல; சுகம்

சுமையல்ல; சுகம் Tamil Katturaikal - General Articles
"உன் நண்பர்களைச் சொல்; உன்னைப் பற்றிச் சொல்கிறேன்" என்பார்கள். "ஒருவன் படிக்கும் புத்தகங்களை வைத்து அவனைப் பற்றிச் சொல்லவிட முடியும்" என்றும் சொல்வார்கள்.
இவ்விரண்டு அற்புத வார்த்தைகளும், தனி மனிதர்களின் பண்புகளையும் குணங்களையும் லட்சியங்களையும் வரையறுப்பதை மையக் கருத்துகளாகக் கொண்டுள்ளன. மேலும், நண்பர்களையும் புத்தகங்களையும் ஒரே தகுதியாக்கி, வாழ்க்கைப் பாதையில் புத்தகங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. இங்கே புத்தகங்கள் என்னும் சொல்லில், இதழ்களையும் உள்ளடக்கிக் கொள்வது, இன்றைய சூழலுக்கு ஏற்புடையதாகும்.
சில இதழ்களும் புத்தகங்களும் படித்துவிட்டு எடைக்குப் போடப்படும். அவை அத்தகைய தன்மைகளைக் கொண்டிருப்பன. சில, படித்த பிறகு, மறுபடியும் படிக்கவும் பயன்பெறவும் பாதுகாத்து வைக்கப்படும். அவை ரசனை மற்றும் தொழில் அடிப்படையில் அவசியமானவையாக இருப்பன. சில அடுத்த தலைமுறைக்கும் சேகரித்து வைக்கப்படும். அவை வாழ்வியல், கலாசாரம், அரசியல், அறிவியல், சமூக அக்கறை ஆகிய பன்முக அறிவுத் தேடலின் தனமாக இருப்பன.
சில புத்தகங்கள் மகிழ்ச்சியைத் தரும். சில கண்ணீரை வரவழைக்கும். சில கோபமூட்டும் அல்லது எழுச்சியூட்டும். ஆனால், நல்ல புத்தகம் எதுவும் சோம்பலைக் கொடுக்காது; சுயமரியாதையைக் குலைக்காது; தன்னம்பிக்கையைத் தகர்க்காது; தவறுகளுக்குத் தூண்டாது; நாடு மற்றும் மக்கள் மீதான பற்றினைக் குறைக்காது.
லட்சியவாதிகளில் மிகச் சிலர், தமது வாரிசுகளுக்கான சொத்தாக, நல்ல பெயரையும் நல்ல புத்தகங்களையும் மட்டுமே சேர்த்து வைப்பது விதிவிலக்கானதாகச் சொல்லப்பட்டாலும், அவர்களின் சுயநலமற்ற உயர்ந்த செயல், விலக்கப்படவும் விமர்சிக்கப்படவும் வேண்டியதல்ல. ஏனெனில், பணத்தால் பெற முடியாத நல்ல பண்புகளையும் கொள்கைகளையும் புத்தகங்கள் உருவாக்க முடியும்.
அனைத்து கலைகளைப் போலவே, இலக்கியத்திலும் நல்லது உண்டு; தீயதும் உண்டு. மற்ற ஊடகங்களைப் போன்றே, அச்சு ஊடகத்திலும், நன்மை, தீமை ஆகிய இரண்டும் உண்டு. முக்கியமான இவ்விரு முரண்பாடுகளையும் அறிந்து கொள்வதற்கு, படிப்பறிவு மட்டுமே போதுமானதல்ல - கூடுதலாக, பகுத்தறிவும் பட்டறிவும் அவசியமானவையாகும். அவற்றைப் பெற வேண்டுமெனில், புறநிலை சமூகத்தைப் பற்றிய ஆழ்ந்த புரிதலும், அகநிலை மனத்தைப் பண்படுத்தலும் முன்தேவைகளாகும். இம்முன்தேவைகளை நிறைவு செய்வதற்கான முன் நிபந்தனைகளாக, தேசபக்தியும் மக்களின் நல்வாழ்வுக்கான நாட்டமும் அடிப்படை அம்சங்களாகத் திகழ்கின்றன.
அந்த வகையில், நாம் தேர்ந்தெடுத்துப் படிக்கும் புத்தகங்கள், நமது கொள்கைகளுக்கு மாறுபட்டவையாக இருக்கலாம்; நமது சிந்தனைகளுக்கு எதிரானதாகவும் இருக்கலாம். பல்வேறு கருத்துகளை அறிந்து கொள்ளும் முகமாக, பரவலான புத்தகங்களைப் படிப்பதே, உயர்தர வாசிப்புப் பண்பாடாகும்.
இது, "களவும் கற்று மற" என்பதைப் போன்ற சிரழிவுக்கான தூண்டுதல் அல்ல. மாறாக, "சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்" என்னும் மகாகவி பாரதியின் பாடல் வரிகளை வழிமொழிந்து, நம்மைச் சிர்படுத்திக் கொள்ளவும் நேர்படுத்திக் கொள்ளவும் முன்மொழிவதாகும்.
எனவே, புத்தகங்களைப் படிப்பதற்காகக் காலத்தைச் செலவழிப்பது, வீணாகப் பொழுதுபோக்குவதல்ல. புத்தகங்களை வாங்குவதற்காகப் பணத்தை இழப்பது, பணத்தை விரயமாக்குவதல்ல. ஏனெனில், புத்தகங்களைப் படிப்பது, மனிதர்களைப் படிப்பதாகும்.
ஆகவே, வருமானத்தில் ஒரு பகுதியை, புத்தகங்களுக்காக ஒதுக்க வேண்டும்; மற்றவர்களுக்கும் படிக்கத் தர வேண்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியவர்களுக்கு, அன்பளிப்போ நினைவுப் பரிசோ வழங்க வேண்டிய சந்தர்ப்பங்களில், புத்தகங்களைக் கொடுத்து, வாசிப்புப் பண்பாட்டினை வளர்த்தெடுக்க வேண்டும். சமுதாயத்தைச் சிரழிக்கும் நுகர்வுக் கலாசாரத்திலிருந்து விடுபட்டு, நல்ல புத்தகங்களைப் போற்றும் நாகரிக சமூகத்திற்கான வழி காண வேண்டும்.
ஏனெனில், நல்லவற்றை விரும்பும் எவருக்கும், புத்தகங்கள் சுமையல்ல; சுகமானவையாகும். மேலும், வாழ்க்கைத் தேவைகளில் முதல் வரிசையில் இடம்பெறத்தக்க வகையில், புத்தகங்கள் இன்றியமையாதவையாகும்

No comments:

Post a Comment