Saturday, October 30, 2010

நாட்டுப்புறத் திருவிழாக்கள்

நாட்டுப்புறத் திருவிழாக்கள்
Folk Festivals - Tamil Poltics News Article "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி வழங்கும் நாடு நம் நாடு, தொன்று தொட்டு நம் மக்களிடையே தெய்வ பக்தி காணப்படுகின்றது. நாட்டுப்புற மக்களில் பெரும்பாலோர் தங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது தெய்வத்தால் வந்தது என்று கூறி போற்றுவார்கள். அதே போல் தீமை ஏற்பட்டாலும், அது தெய்வத்தின் கோபத்தால் வந்தது என்று நினைத்து தெய்வங்களை வேண்டிக்கொள்வார்கள். அந்தத் தெய்வங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை சிரும் சிறப்பாக சிறு விழாக்களும் பெருவிழாக்களும் எடுக்கின்றனர். மனித சமுதாயம் பல்வேறு காரணங்களால் பல்வேறு பிரிவுகளாக வாழ்ந்த போதிலும், அச் சமுதாயம் முழுவதும், ஆண்டு முழுவதும் உழைத்து ஓய்வு பெற்ற நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்க நினைத்து விழா கொண்டாடுவது இயற்கையாகும். கலைகளின் வளர்ச்சிக்கு அடிப்படையானது, திருவிழாக்கள் தான் என்றால் அது மிகையாகாது, கலைகள் அனைத்தும் கோயில்களோடும், விழாக்களோடும் இணைந்துவிட்டன, எனவே கோயில் என்றால் திருவிழா, திருவிழா என்றால் கோயில் என்ற நினைவு அனைவருக்கும் வருவது இயல்பாகும். நாட்டுப்புற விழாக்களின் மூலம் நாட்டு மக்களின் பண்பாடும், நாகரிகமும் வெளிப்படுவதை காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
சித்திரைத் திருவிழா:-
சித்திரை மாதம் நமக்கு முதல் மாதாமாகும், சித்திரை மாதம் சித்திரா பௌர்ணமியன்று, சித்திரா பௌர்ணமி - என்ற விழா கொண்டாடப்படுகின்றது. பண்டைய விழாவான இந்திர விழாவும் சித்திரா பௌர்ணமியன்று தான் முடிந்ததாக சிலம்பு கூறுகின்றன. மதுரையில் மீனாட்சிக்கும், சிவபெருமானுக்கும் சித்திரை மாதத்தில் நடைபெறும் திருமண விழாவாக இவ்விழா இருப்பதால் மதுரை நகரமே விழாக்கோலம் கொண்டிருக்கும், நகர மக்களைக் காட்டிலும் நாட்டுப்புற மக்களே இதில் மிகுதியாக பங்கு பெறுவர். அத்திரு விழாவில் வைகையாற்றில் அழகர் இறங்குற காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். அதனால் தான் ஆற்றழகைக் கண்டாயோ? அழகரைப் பார்த்தாயோ? என்ற பழமொழி தோன்றிற்று.
வைகாசி மாதம்:-
வைகாசி மாத முழு நிலா நாள் முருகனுக்குரிய நாள், முருகன் கோயில்களில் விசாகம் வெகு விமரிசையாக நடைபெறும், திருச்செந்தூரிலும், திருபரங்குன்றத்திலும், பழனியிலும், வைகாசி விசாகத்தையொட்டி நடைபெறும் பால் காவடி முதலிய காட்சிகள் காணதக்கவை யாகும்.
வைகாசி மாதத்தில் குறிப்பாக விசாகத்தில் புத்தர் பிறந்து ஞானம் பெற்றதும், முக்தி அடைந்ததும் குறிப்பிடத்தக்கதாகும். வடஇந்தியாவில் வைகாசி விசாகம் புத்த பூர்ணிமா என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றது, வைகாசி விசாக நாளன்று, வைகாசி மாதத்தில் 12 ஆழ்வார்களில் ஒருவராக நம்மாழ்வார் பிறந்தார். இதனால் வைணவம் தழைத்தது.
ஆடி பெருக்கு:-
ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் காவிரி கரை புரண்டு ஓடும், இதனைப் 18-ம் பெருக்கு என்பர். இந்த நாளில் தஞ்சை மாவட்டம் முழுவதும் காவிரிக் கரையில் பெருவிழா எடுப்பர். நாடு நலம் பெற மூலக் காரணமாக அமைந்த காவிரித் தாயை வணங்கி வழிபடுவர். காவிரிக்கு கரையெடுத்த கரிகாலன் காலத்திலேயே இவ்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது, இவ்விழாவில் பெரும்பான்மையான மக்கள் நாட்டுப்புறங்களிலிருந்து காவிரித் தாயை சிறப்பாக வழிப்பட்டனர்.
இவ்விழாவின்போது புதியதாகத் திருமணமான மணமக்கள் தங்களது மனமாலைகளைப் பத்திரமாக வைத்திருந்து ஆடி பதினெட்டாம் பெருக்கில் விடுவதுண்டு, தவிர பழைய ஓலைச் சுவடிகளை ஆற்றில் மிதக்க விடுவதும் மரபாக இருந்துள்ளன.
டாக்டர், கு. கிருணஷ்னசாமி அவர்கள் எகிப்து நாட்டு நைல் நதி தீரத்தில் அந்த நீரைக் கால்வாய்கள் மூலம் விடுவதைப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடுவதை இவர் ஆடிப்பெருக்கோடு ஒப்பிட்டு உள்ளார்.
கார்த்திகை தீபம்:-
தமிழகத்தில் தொல் காப்பியர் காலமுதலே கொண்டாடப்படும் திருவிழா கார்த்திகை விழாவாகும். சங்க இலக்கியங்களிலும் கார்த்திகை தீபம் கொண்டாடிய செய்திகள் காணப்படுகின்றன.
கிராம புறங்களில் கார்த்திகை தீபப் பெரு விழா மிக முக்கியமான விழாவாக கொண்டாடப்படுகின்றன. கார்த்திகை தீபத்தின் போது கிராமங்களில் சோளத்தட்டையை ஒன்றாக கட்டி ஓரிடத்தில் வைத்து நெருப்பு மூட்டி அதனை மக்கள் தாண்டுவர், அச்சாம்பலை எடுத்துச்சென்று நிலங்களுக்கு இடுவர். அப்படி செய்தால் நன்கு பயிர் விளையும் என மக்கள் நம்புகின்றனர்.
நாட்டுப்புற மக்களின் வழிபாடுகளை, நம்பிக்கைகளை, விழாக்களை, தெய்வங்களைத் தழுவித் தனதாக்கிக் கொண்டு வளர்ந்தது சைவம், நெருப்பு விழாவும் அவற்றில் ஒன்றாகும். பண்டை தமிழர் கொண்டாடங்களில் சமயத் தன்மை குறைந்தே காணப்பட்டன. காலப் போக்கில் சமயத் தொடர்பு பெருகலாயிற்று.
பெண் தெய்வங்களின் கோயில் முன் பக்தர்களை நெருப்பில் நடப்பதை குண்டம் மிதித்தல் அல்லது பூமிதித்தல் என்பர், குண்டம் மிதித்தல் தனது வாழ்வுக்கு வேண்டியவற்றை அளிப்பதுடன் நோய் நொடியின்றும் தன்னைக் காப்பாற்றும் எனவும் மக்கள் நம்புகின்றனர்.
கார்த்திகை விழா உழவுத் தொழில் சார்ந்த விழா - சடங்கு ஆகும், தீபம் என்பதையும் உழவுத் தொழிலோடு இணைத்தே காணவேண்டும். பேய், பிசாசு, முதலியவற்றிலிருந்து தூய்மைப்படுத்த நெருப்பு விழா பயன்படுகிறது. இக்கருத்தை ஏற்றப் பிரேஸர் இதனைத் தூய்மைப்படுத்தும் கோட்பாடு என்று கூறினார்.
பொங்கல் விழா:-
இது தமிழர்களின் தனிப் பெரும் விழாவாகும். உழைப்பின் உயர்வினை உலகுக்கு உணர்த்திடும் உன்னதத் திருவிழா தமிழர்கள் தமிழ் உணர்வோடு கொண்டாடும் ஒரே விழா பொங்கல் விழாவாகும். தை முதல் நாள் தமிழர்களின் இல்லம் தோறும் கொண்டாடப்படும், இவ்விழாவிற்கு முதல் நாள் போகிப் பண்டிகை அன்று வீட்டில் உள்ள பழம் பொருள்களை அகற்றி வீட்டைத் தூய்மைப்படுத்துவர், நாட்டுப்புறங்களில் அன்று காப்பு கட்டுவர் வீட்டில் மட்டுமின்றி நிலங்களிலும் கட்டுவர், போகி என்பவன் இந்திரன், மழைக்கு தலைவன் இந்திரன், இந்திரனைக் குறித்து போகிப் பண்டிகை கொண்டாடப்படுகின்றன. பொங்கலன்று பொங்கலைச் சிறப்பாக கொண்டாடுவர், மாடுகளைக் குளிப்பாட்டி மஞ்சள் தடவிக் குங்குமக் பொட்டு வைத்து அலங்கரித்து மாலைகள் அணிவிப்பார்கள், நான்காம் நாள் கரிநாள், அதைக் காணும் பொங்கல் அல்லது கன்னிப்பொங்கல் என்று கூறுவர். அன்று ஆண்களும் பல வகையான விளையாட்டுகளில் ஈடுபடுவர். இளையவர்கள் பெரியவர்களை கண்டு வணங்கி ஆசியும் பெறுவர்.
ஜல்லிக்கட்டு விழா:-
இது மாட்டுப் பொங்கல் அன்று நடைபெறும் வீரவிளையாட்டு விழாவாகும். இதனை மஞ்சுவிரட்டு என்றும் கூறுவர். தமிழர் வீரத்தை காட்டும் விழா ஜல்லிக்கட்டாகும். தென் மாவட்டங்களில் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது. காளைகளின் கழுத்தில் மஞ்சள் துணியில் பணத்தை முடித்துக் கட்டி விடுவார்கள். அடக்குபவர்கள் அப்பண முடிப்பை பெறுவார். சங்க காலத்தில் ஏறு தழுவுதல் என்ற பெயரில் இது நடைபெற்றது.
சந்தைகள்:-
திருவிழாக்களையொட்டிச் சந்தைகள் நடைபெறுகின்றன. திருவிழாவிற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவர். அச்சமயத்தில் கிராம மக்கள் தாம் விளைவித்தபொருட்களை விற்கவும் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொள்ளவும் சந்தையைப் பயன்படுத்தினர். வாரம் தோறும் நடைபெறும் சந்தையைத் தவிர, விழாக்களையொட்டி நடைபெறும் சந்தைகள் பெயர் பெற்றவையாகும்.
திருவிழாவும் சந்தையும் ஒன்றாக கலந்தது என கூறலாம். தமிழகத்தில் பொள்ளாட்சி சந்தை, தேனிச்சந்தை, கன்னியாகுமாரி, வடசேரிச் சந்தை போன்றவை மிகப்பெரிய சந்தையாகும்.
மதுரை மாவட்டத்தில், வீரபாண்டி மாரியம்மன் விழாவையொட்டி நடைபெறும் மாட்டுச் சந்தையில் மயிலம் மாட்டுச்சந்தையும் சிறப்பானவை.
பொதுவாக, திருவிழா இல்லாத ஒரு பெரிய சந்தையோ, சந்தையில்லாத ஒரு பெரிய திருவிழாவையோ நினைத்து கூடப்பார்க்க முடியாத அளவிற்கு இரண்டும் ஒன்றாகக் கலந்து விட்டது என்றே கூறலாம்.

No comments:

Post a Comment