Tuesday, October 26, 2010

'கலப்படம்' மெல்லக் கொல்லும் விஷம்

'கலப்படம்' மெல்லக் கொல்லும் விஷம்Tamil Katturaikal - General Articles
"கலப்படம், கலப்படம், எங்கும் எதிலும் கலப்படம், அதை எடுத்துச் சொன்னாலே புலப்படும்" மேற்சொன்ன வரிகள் கலைவாணர் என்.எஸ்.கே. ஒரு படத்தில் பாடிய வரிகளாகும். அவரது வார்த்தைகள் இன்று நூற்றுக்கு நூறு பொருந்துவதாகும். அதன்படி நாம் ஒவ்வொரு பொருளிலும் உள்ள கலப்படத்தைப் பற்றி சொன்னால் எழுதிக் கொண்டே இருக்கலாம். எத்தனை இதழ் போட்டாலும் காணாது. ஆகவே அதில் சிலவற்றை மட்டும் காண்போம்.
விஞ்ஞானம் நாட்டின் உயர்வுக்காக மட்டும் பயன்படுத்தப்படவில்லை. சமூக விரோதிகளாலும் பணத்தாசை மிக்கவர்களாலும் உணவில் கலப்படம் செய்யவும், தாங்கள் அதிக லாபம் சம்பாதிக்கவும் உதவியுள்ளதை கீழே வரும் செய்திகளின் மூலம் நாம் உணரலாம்.
காலையில் எழுந்தவுடன் பெரும்பாலோனோருக்கு காபியோ, டீயோ குடிக்கவில்லை என்றால் தலையே வெடித்து விடுவது போல இருக்கும். ஆனால் நீங்கள் குடிப்பது டீத்தூளோ, காபித்தூளோ கலந்த பானம் கிடையாது. காபித்தூளுடன் சிக்கரி கலக்கின்றனர். அதே போல டீத்தூள் உடன் மரத்தூள்களையும், இரும்புத்தூள் மற்றும் சில நேரங்களில் "மஞ்சனத்தி" இலையை அரைத்துப் பொடியாக்கி கலப்படம் செய்கின்றனர். பெரும்பாலான நிறுவனங்களின் பொருட்கள் இவ்வாறு கலப்படம் செய்யப்படுபவைதான். என்ன காபியோ, டீயோ குடிக்க ஆசை இல்லையா? விட்டுவிடுங்கள். உடலுக்கு நல்லது.
தேங்காய் எண்ணெய்:
நாம் உண்ணும் உணவில் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய் தற்பொழுது சராசரியாக லிட்டர் 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த எண்ணையுடன் லிட்டர் 15 ரூபாய்க்கு விற்கப்படும் வேக்ஸ் ஆயில் கலக்கப்படுகிறது. வட மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த வேக்ஸ் ஆயில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணையுடன் 9 லிட்டர் என்ற அளவில் கலக்கப்படுகிறது. இந்த கலப்பட எண்ணையை கண்டறிவது மிக மிகக் கடினமாகும்.
அதே போல சமையலுக்குப் பயன்படுத்தப்படும் நல்லெண்ணையில் குறைந்த விலையில் விற்கும் முந்திரி எண்ணையைக் கலந்து விற்பனை செய்கின்றனர்.
மேற்கண்ட கலப்பட எண்ணையைப் பயன்படுத்திச் செய்யப்படும் உணவுப் பொருட்களை உண்பவர்களுக்கு ஆரம்பத்தில் வயிற்றெரிச்சலும், பின் வாந்தி அதைத் தொடர்ந்து இரத்த வாந்தி கூட ஏற்படும் அபாயம் உள்ளது. இதைத் தொடர்ந்து சாப்பிடுபவர்கள் அஜீரண கோளாறுகளால் பாதிக்கப்படுவதுடன் முடிவில் குடல் புண்ணுக்கும், புற்று நோய்க்கும் ஆளாவார்கள்.
அடுத்ததாக நாம் உணவில் பயன்படுத்தும் நெய். நாட்டில் தினமும் 300 டன் சுத்தமான நெய் உற்பத்தி செய்யப்படுகிறது. அதைவிட அதிகமாக 400 டன் அளவிற்கு செயற்கை நெய் உற்பத்தி செய்யப்பட்டு புழக்கத்தில் விடப்படுகிறது. அது சந்தையில் அதிகமான இடத்தையும் பிடித்துள்ளது. பிரபல நெய் உற்பத்தி நிறுவனங்கள் பெயரில் போலியான அக்மார்க் முத்திரையுடன் இந்த நெய் வகைகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. இந்த செயற்கை நெய் தயாரிப்பதற்கு மாட்டுக் கொழுப்பு, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சணல் எண்ணைய் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த மூலப் பொருட்களுடன் சேர்த்து சுத்தமான நெய் வாசனை வருவதற்காக ஜெர்மனியிலிருந்து அரை கிலோ ரூ.2000 என்ற விலையில் இறக்குமதி செய்யப்பட்ட எசன்ஸ் ஊற்றப்படுகிறது. ஒரு சொட்டு எசன்ஸ் ஊற்றினாலே செயற்கை நெய் சுத்தமான பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட நெய்யை விட நறுமணம் தூக்கலாக இருக்கும். பிரபலமான நிறுவனங்கள் பெயரில் இந்த வகை நெய் விற்கப்படுவதால் அப்பாவி நுகர்வோர் அவற்றின் பாதிப்புகளை அறியாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் கெமிக்கல் பொருட்கள், பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் மெழுகு ஆகியனவும் கலக்கப்படுகின்றன. முன்பு பனை எண்ணைய், வனஸ்பதி ஆகியவற்றை கலப்படம் செய்து நெய்யாக விற்பனை செய்து வந்தனர். ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எசன்ஸ் வந்த பின்பு இந்த வகை நெய்கள் அதிகமாகிவிட்டன. சுத்தமான ஒரிஜினல் நெய்யின் விலை ரூ.130 லிருந்து ரூ.140 வரை விற்கப்படுகிறது. ஆனால் கலப்பட நெய் தயாரிப்பதற்கு ரூ.60 வரை மட்டும் செலவாகிறது. மார்க்கெட்டில் ரூ.110 வரை விற்கப்படுகிறது. இதனால் மொத்த மார்க்கெட்டில் 80 சதவீதம் வரை பிடித்துவிட்டது.
ஹரே கிருஷ்ணா, கவாலா, முராரி, நந்தகோபால், காமதேனு, மில்க் மாஸ்டர் போன்ற பெயரில் போலியான வடமாநில முகவரிகளோடு விற்கப்படுகின்றன.
மிளகாய்:
நமது வியாபாரிகள் மிளகாயையும் விட்டுவைக்கவில்லை பெரும்பாலான மக்கள் நல்ல சிவப்பான மிளகாய் வற்றல்களையே தரமான வற்றலாக எண்ணியுள்ளனர். பல வியாபாரிகள் தரம் குறைந்த, முற்றாத மிளகாய்களை மிகக் குறைந்த விலையில் வாங்கி குடோன்களில் நிரப்பி வைக்கின்றனர். இவற்றின் நிறம் பழுப்பு நிறத்துடனும், பச்சை நிறத்துடனும் காட்சியளிக்கும். குறைந்த விலையில் வாங்கிய வியாபாரிகள் மிளகாயின் நிறத்தை முழுச் சிவப்பாக காட்ட "சூடான் ரெட்" என்ற ரசாயனத்தை இந்த மிளகாயுடன் கலக்குகிறார்கள். மிளகாய்கள் எல்லாம் இந்த ரசாயன கலவை கலக்கப்படுவதால் ரத்தச் சிவப்பாக மாறிவிடுகிறது. சந்தையிலும் இதற்கு நல்ல விலை கிடைக்கிறது.
இந்த ரசாயனம் கலந்த மிளகாயை, மிளகாய்ப் பொடியை சமையலில் பயன்படுத்துபவர்களுக்கு சாப்பிட்டவுடன் வயிற்றெரிச்சல், வாந்தி, அஜீரணம் மற்றும் ஒரு சிலருக்கு இரத்த வாந்தியும் குடல் புண்ணும் ஏற்படுகிறது. தொடர்ந்து இதை உபயோகிப்பவர்களுக்கு புற்றுநோய் கூட வர வாய்ப்பு உள்ளது.
பழங்கள்:
உடலின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் தாதுப்பொருட்கள், நார்ச் சத்துக்கள் அதிக அளவில் உள்ள பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டால் தோல் வியாதி, குடல் புண், மற்றும் புற்று நோய் வராமல் தடுக்க வாய்ப்பு உள்ளது? ஆனால் நமது வியாபாரிகள் விற்கும் பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டால் மேற்கண்ட அனைத்து நோய்களும் வரும் வாய்ப்பு உள்ளது. என் குழந்தைக்கு மாம்பழம் கொடுத்தேன், வாழைப்பழம் கொடுத்தேன். வயிற்றுப்போக்கு வந்துவிட்டது. வலிப்பு வந்துவிட்டது என்று சொல்லி மருத்துவர்களிடம் வரக்கூடிய அவல நிலை வந்துள்ளது. இதற்குக் காரணம் நமது வியாபாரிகளின் கைவண்ணம் தான். காய் கனிந்து, இயற்கையாக பழங்களாக வேண்டும். முன்பு அப்படித்தான் இயல்புடன் இருந்தது. ஆனால் இன்றைக்கு வணிகப் பெருமக்கள் பழங்களை இயற்கையாகப் பழுக்க விடுவதில்லை. செயற்கையாக பழுக்க வைத்து விற்று, முதலாக்கி சிக்கிரம் பணம் பண்ணுவதிலேயே குறியாக உள்ளனர். அதற்கு அவர்கள் "கார்பைட்" என்ற ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். எந்த கார்பைட் தெரியுமா? போபால் விஷவாயு என்றால் உங்களுக்கு பளிச்செனத் தெரியும். அந்த ரசாயனப் பொருளான கார்பைட்டைத்தான் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைக்கின்றார்கள்.
பொதுவாக காய்கள் பழுப்பதற்கு, இயற்கை காய்களை பதமாகவும், பக்குவமாகவும் சூடுபடுத்துகின்றது. அப்போது "எத்திலின்" என்ற இரசாயன வெளிப்பாட்டின் மூலம் காய் கனிந்து பழமாகின்றது.
இது நிகழ இயற்கையில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தேவைப்படும். ஆனால் இவ்வளவு நாட்கள் காத்திருக்க வணிகர்கள் தயாராக இல்லை. ஆறிலிருந்து ஒன்பது மணி நேரத்திற்குள் பழுக்க வைத்து சந்தைக்கு அனுப்பி விடுகிறார்கள். இதற்கு இவர்கள் பயன்படுத்தும் "கால்சியம் கார்பைட்" என்ற ரசாயனப் பெயரில் "ஆர்கானிக், பாஸ்பரஸ்" என்ற தனிமங்கள் உள்ளன. இந்த கார்பைட்டைத் தண்ணீரில் கலக்கின்றபோது அதிலிருந்து "அசிடிலின்" என்ற வாயு உண்டாகி எதிலினைத் தூண்டி துரிதப்படுத்தி அது உண்டாக்குகிற கூடுதல் வெப்பத்தினால் பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றன.
இப்படிப் பழுக்க வைக்கப்படும் பழங்களைச் சாப்பிடுவதால் நெஞ்சு எரிச்சல், வயிற்றுப் போக்கு, அதிகத் தண்ணீர் தாகம் எடுத்தல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. இப்பழங்களைத் தொடர்ந்து சாப்பிடுவதால் நடக்கத் தெம்பு இல்லாமல், உடல் சோர்வு ஏற்படுகிறது. தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு பல்வகைத் தீங்குகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட பழங்களை கருவுற்ற பெண்கள் கருவுற்ற ஆரம்ப கட்டத்தில் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இவ்வகைப் பழங்களை நாம் எளிதில் அறிந்து கொள்ளலாம். இரசாயனக் கலவையால் பழுத்த மாம்பழம், பப்பாளி ஆகியவை முழுவதும் மஞ்சளாகவும், தக்காளி என்றால் முழுவதும் சிகப்பாகவும் இருக்கும். உட்பகுதி சரியாகப் பழுக்காமலும் கல்லைப் போல கடினமாகவும் இருக்கும்.
இயற்கையாகப் பழுத்த பழங்கள் சிவப்பு மஞ்சளாகவும், பச்சை மஞ்சளாகவும் இருக்கும். இவைகளை அப்படியே வைத்திருந்தால் தோல்கள் சுருங்கி ஆங்காங்கு கருப்பாக மாறி அழுக ஆரம்பித்துவிடும். இந்த வகையில் நாம் இயற்கையான பழங்களையும், செயற்கையான பழங்களையும் இனம் பிரித்து அடையாளம் காணலாம்.
இவ்வாறாக காலையில் நாம் அருந்தும் டீயிலிருந்து இரவு படுக்கப்போகும் பொழுது சாப்பிடும் பழங்கள் வரை உண்ணும் அனைத்து பொருட்களிலும் வியாபாரிகளின் கைவரிசையால் கலப்படமே பொருட்களாக நம்முன் உலா வருகின்றது. இவற்றைத் தடுக்க சட்டங்களும் செயல்படுத்த அதிகாரிகளும் இல்லையா என்ற கேள்வி எழலாம். நம் நாட்டில் சட்டங்களுக்கா பஞ்சம்? உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது உணவுக் கலப்படத் தடுப்புச் சட்டம் 44ம் பிரிவின்படி குறைந்தபட்சம் ஓராண்டு மற்றும் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கத்தக்க குற்றமாகும். பொருட்களில் கலப்படத்தை வணிகர்கள் இடைவிடாமல் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அரசுத் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் இதுவரை அதிக அளவில் எடுக்கப்படவில்லை. அவ்வாறு தொடுக்கப்படும் ஒன்றிரண்டு வழக்குகளும் "பேரம்படியாமலே" அதிகாரிகளால் தொடுக்கப்படுகிறது.
மேலும் இதைத் தடுப்பதற்கு போதிய அளவில் சுகாதாரத் துறை அதிகாரிகளும், பொருட்களின் தரம் குறித்து சோதிக்க ஆங்காங்கே சோதனைக் கூட்டங்களும் கிடையாது. அவ்வாறு இருக்கும் அதிகாரிகளுக்கும் பொருட்களைப் பறிமுதல் செய்ய அதிகாரம் கிடையாது.
சில மாதங்களுக்கு முன்பு தென் மாவட்டத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருவர் ஆவின்பால் மட்டுமே சுகாதார முறையில் தயாராவதாகவும், மற்ற பால் பொருட்கள் எல்லாம் உடலுக்கு கெடுதி விளைவிக்கும், கெமிக்கல் கலந்து தயாராவதாகவும் கூறினார்.
ஆக பொருட்களின் கலப்படம் பற்றி உயர் அதிகாரிகள் வரை அனைவருக்கும் நன்கு தெரிகிறது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதிலிருந்து சட்டத்தைச் செயற்படுத்த வேண்டிய அதிகாரிகள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்று நாம் அறியலாம். மொத்தத்தில் கலப்படம் செய்யும் வணிகர்கள் திருந்த மாட்டார்கள். அதைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் அதைச் செய்யாமல் மெத்தனமாக இருப்பார்கள். அவர்களை நிர்வாகம் செய்யும் அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கும்.
பொதுமக்களாகிய நாம் தான் நமது உடல் நலத்தினைப் பாதுகாக்கும் பொருட்டு நல்ல பொருட்களை சரியான விலை கொடுத்து நேர்மையான வணிகரிடம் மட்டுமே வாங்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே நாம் உடல் நலத்தினைப் பாதுகாக்க முடியும்.

No comments:

Post a Comment