Tuesday, October 26, 2010

எது பயங்கரவாதம்

எது பயங்கரவாதம்? ( Payangaravatham - Tamil Katturaikal - General Articles
பிரிட்டனிலிருந்து அமெரிக்கா செல்லும் பிரிட்டிஷ் விமானங்களைத் திரவ வெடிகுண்டுகளை வைத்து வெடிக்கச் செய்ய சதி நடந்தது என 24 பிரிட்டிஷ் முஸ்லிம்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கைது செய்யப்பட்டனர். அப்படி ஒரு சதி பற்றிய தகவல்களை பிரிட்டிஷ் போலீசுக்குத் தெரிவித்தது பாகிஸ்தான் அரசு. இதைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்தது மட்டுமல்ல, விசாரணைகளையும் நடத்தி வருகிறது பிரிட்டிஷ் அரசு. இதற்கிடையில் 12.8.2006 அன்று அமெரிக்க ரேடியோவில் பேசிய ஜார்ஜ் புஷ், விமானங்களைத் தகர்க்கச் சதி செய்தவர்கள் லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லாக்கள் என்று அறிவித்திருக்கிறார். கூடுதலாக ஜார்ஜ் புஷ் ஹிஸ்புல்லாக்கள், ஆப்கானிய தலிபான்கள், ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுபவர்கள் எல்லோருமே ஒரே வகையைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் அவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து மேற்கத்திய சமூகத்தை அழிக்கத் திட்டமிடுகிறார்கள் என்றும் பேசியிருக்கிறார்.
ஜார்ஜ் புஷ்பின் ரேடியோ உரை பல கேள்விகளுக்கு இட்டுச் செல்கிறது. உண்மையிலேயே ஹிஸ்புல்லாக்கள் விமானத் தகர்ப்புச் சதியில் சம்மந்தப் பட்டிருக்கிறார்கள் என்று விசாரணையில் தெரிய வந்திருக்கிறது எனில் அதற்குரிய ஆதாரங்களோடு அதனை பிரிட்டிஷ் போலீஸ் அறிவித்திருக்க வேண்டும். பிரிட்டிஷ் போலீஸ் இன்னும் விசாரணைகள் தொடர்வதாக மட்டுமே சொல்லி வருகிறது. ஆனால் ஜார்ஜ் புஷ் எல்லா விசாரணைகளையும் தாண்டிக் குதித்து, அவர்கள் ஹிஸ்புல்லாக்கள் தான் என்ற ஒரு யூகத்தை முன்வைக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?
அமெரிக்கா ஏற்கனவே தொடங்கியுள்ள "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தோடு" இஸ்ரேல் லெபனானுக்குள் நடத்தியுள்ள தலையீட்டை ஒரே விதமானது எனப் பட்டியலிடும் வேலையாக ஜார்ஜ் புஷ்பின் ரேடியோ உரை அமைந்துள்ளது. அதாவது, இஸ்ரேல் லெபனான் மீது படையெடுத்ததும் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் மற்றும் ஈராக்கில் போர் நடத்துவதும் எல்லாம் ஒன்றுதான் என்று பொதுமைப்படுத்துவதாக புஷ்பின் உரை அமைந்துள்ளது. அப்படியெனில் இஸ்ரேல் லெபனானின் மீது படையெடுக்க இருப்பது அமெரிக்காவிற்கு முன்பே தெரியும். அது இஸ்ரேலோடு சேர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிராகவே இப்போரையும் திட்டமிட்டது என்றாகிறது. இப்படி இஸ்ரேலும் அமெரிக்காவும் அவர்கள் சந்தேகப்படும் நாடுகள் ஒவ்வொன்றின் மீதும் படையெடுப்பதற்கான உரிமையை இவர்களுக்கு யார் வழங்கியது?
ஹிஸ்புல்லா, தாலிபான், சதாம் உசேன், பின்லேடன் என்று எல்லோருமாகச் சேர்ந்து அமெரிக்காவை அழிக்கத் திட்டமிட்டார்கள் என்ற கதை நம்பும்படியாக இருக்கிறதா? அமெரிக்க மக்களை புஷ் முழு முட்டாள்கள் என்று கருதி இது போன்ற கதைகளைச் சொல்லுகிறாரா? அல்லது இந்தக் கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க மக்கள் உண்மையிலேயே முட்டாள்களா? அல்லது அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களின் மீது தாக்குதல் தொடுத்தவர்கள் அமெரிக்க அரசு வரிசையாகப் பழி வாங்கி வருகிறது என்ற திருப்தியில் அமெரிக்க மக்கள் திளைத்துக் கொண்டிருக்கிறார்களா? ஒரு பின்லேடனை அமெரிக்கா எங்கேயோ ஓட விட்டுவிட்டு ஊர் முழுக்க தீ வைப்பது எப்படி நியாயமாகும்? பின்லேடன் ஓடிக் கொண்டேயிருக்க, அமெரிக்கா இஸ்லாமியர் வாழும் நாடுகளிலெல்லாம் தாக்குதல்களைத் தொடுக்குமா?
ஆப்கானிஸ்தானில் தலையிட்டது அமெரிக்கா. ஈராக்கில் தலையிட்டது அமெரிக்கா. இப்போது லெபனானில் இஸ்ரேலைத் தலையிடச் செய்துள்ளது அமெரிக்கா. எமது நாட்டில் அமெரிக்காவிற்கு என்ன வேலை? என்று ஆப்கானியனும் ஈராக்கியனும் லெபனானியனும் ஓர் சிறு கேள்வியைத் தான் கேட்கின்றனர். எனது நாட்டின் மீது பின்லேடன் தாக்குதல் தொடுத்தான். எனவே பதிலுக்கு தாக்குகிறோம் என்று அமெரிக்கா பதில் சொல்லுகிறது என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் அமெரிக்காவைத் தாக்கியது பின்லேடன் தான் என்பதற்கு அமெரிக்கா இதுவரை எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.
அமெரிக்க சமுதாயத்தை அழிப்பதற்கான அவசியம் அல்லது தேவை ஆப்கானிஸ்தானுக்கும் ஈராக்கிற்கும் லெபனானுக்கும் இப்போது என்ன ஏற்பட்டது? இப்படி யூகங்களையும் சந்தேகங்களையும் பயங்களையும் அடிப்படையாகக் கொண்டு பல ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள நாடுகளின் மீது அமெரிக்கா படையெடுத்து பொதுமக்களின் மீது குண்டுகளை வீசி அழிக்குமெனில் சர்வதேச சட்டங்களின் நிலை என்னவாகும்? ஜநா சபையின் நிலை என்ன? இன்னும் இப்படி எத்தனை நாடுகளின் மீது அமெரிக்கா படையெடுக்க உரிமை பெற்றுள்ளது? இன்னும் எத்தனை கோடி மக்கள் அமெரிக்காவின் பயப் பிராந்திக்குப் பலியாக வேண்டும்?
ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் பல ஆயிரம் ராணுவ வீரர்களை பல மாதங்களாகக் குவித்துள்ள அமெரிக்கா பின்லேடனை அங்கே கண்டு பிடித்ததா? பின்லேடனைத் தேடிக் கொண்டேயிருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு நாடாகத் தீயிட்டு அழிக்க அமெரிக்காவிற்கு உரிமையுண்டா? பின்லேடனைக் கண்டு பிடிக்க முடியாத விரக்தியில் அமெரிக்கா வீழ்ந்துள்ளதா? அந்த விரக்தியின் விளைவாகத் தலையைப் பிய்த்துக் கொண்டு கண்ணில் படும் ஒவ்வொருவரையும் அமெரிக்கா கடித்துக் குதறுகிறதா? தெருவில் காணுவோரை எல்லாம் எட்டிக் கடிக்கும் ஒரு வெறிநாயைக் கட்டிப் போடத் தெரியாமல் எல்லோருமே தவித்துக் கொண்டிருக்கிறோமா?
பின்லேடனைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் அமெரிக்க மக்களுக்கு எத்தனை கோடி டாலர்கள் விரயம்? ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் லெபனானிலும் எத்தனை லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்? எத்தனை கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன? இத்தனை மாதங்களில் தாலிபான்களை அமெரிக்கா ஜெயித்து விட்டதா? ஈராக்கில் எதிராளிகளை அழித்து விட்டதா? ஹிஸ்புல்லாக்களை அழித்து விடுவீர்களா?
அமெரிக்கா எந்த நாட்டையும் இதுவரை வென்றது கிடையாது. வியட்நாமில் 30 வருடங்களாகப் போர் நடத்திய பிறகும் அமெரிக்கா வியட்நாமை வென்றதில்லை. கியூபாவோடு 50 வருடங்களுக்கு மேலாகப் போராடிய பிறகும் அமெரிக்காவால் தோற்கடிக்க முடியவில்லை. சைனாவை அமெரிக்கா தோற்கடித்ததில்லை. ஒரு காலத்தில் இந்து மகாக் கடலுக்குள் அமெரிக்கக் கப்பல்கள் நுழைந்தன. ஆனால் இந்தியாவை அமெரிக்கா அப்போது நடந்த போரில் தோற்கடித்ததில்லை. லத்தீன் அமெரிக்க நாடுகளில் பல ஆட்சிக் கவிழ்ப்புகளையும் படுகொலைகளையும் அமெரிக்கா செய்துள்ளது. ஆனால் லத்தீன் அமெரிக்காவில் இப்போது கம்யூனிஸ்ட் ஆட்சிகள் வென்றுள்ளன.
மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அமெரிக்காவால் பல ஆயிரம் மக்களைக் கொல்ல முடிந்திருக்கிறது. அழிபாடுகளை ஏற்படுத்த முடிந்திருக்கிறது. ஆனால் அந்த மக்களை வெற்றி கொள்ள முடிந்ததில்லை. உடனடியாகவோ சிறிது தாமதமாகவோ அந்த மக்கள் தான் கடைசியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஆயுத வலிமையின்றியும் சொந்த அரசின் ஆதரவு இன்றியும் கூட மக்கள் போரிட்டுப் பின் வாங்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தோற்றதில்லை. அமெரிக்காவிற்கு எதிராகப் போராடியவர்களில் யாருமே பயங்கரவாதிகள் இல்லை. வியட் நாமியர்கள் பயங்கரவாதிகளா? கியூபர்கள் பயங்கரவாதிகளா? லத்தீன் அமெரிக்கர்கள் பயங்கர வாதிகளா? ஈராக்கியர்கள் பயங்க ரவாதிகளா? ஹிஸ்புல்லாக்கள் பயங்கரவாதிகளா? என் நாட்டை விட்டு வெளியேறு என அமெரிக்க ராணுவத்திற்கு எதிராகப் போராடும் போராளிகளை பயங்கர வாதிகள் என்று எப்படிச் சொல்ல? பகத்சிங் அப்படித்தான் சொன்னார். காந்தியும் கூட அப்படித்தான் சொன்னார்.
பின்லேடனையும் தாலிபான்களையும் பயங்கரவாதிகளாப் பயிற்சியளித்து அனுப்பியது அமெரிக்க ராணுவம். இப்போதும் அவர்களைப் பயங்கரவாதிகளாக ஆக்கி வைத்திருப்பது அமெரிக்க ராணுவம்தான். பிரிட்டனுக்கு பிழைக்கச் சென்ற அந்த இளைஞர்களைப் பயங்கரவாதிகளாக்கியது யார்? அமெரிக்காவின் அரசியல் தான். உலகிலுள்ள ஒவ்வொரு முஸ்லீமும் எனது எதிரி என்று அமெரிக்க அதிபர் நேரடியாகவும் மறைமுகமாகவும் கடந்த பத்து ஆண்டுகளாக திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் அமெரிக்க அரசின் எதிரிகளாக அமெரிக்க அதிபரே ஆக்கி வருகிறார். ஆனால் அமெரிக்க அரசுக்கு எதிரானவர்களெல்லாம் இன்னும் அமெரிக்க நாட்டுக்கோ அமெரிக்க மக்களுக்கோ எதிரானவர்கள் அல்ல.
அமெரிக்க அரசுக்கு எதிரான மனோபாவம் கொண்ட எத்தனையோ கோடி மக்கள் இன்றைய உலகில் உள்ளனர். அமெரிக்க எதிர்ப்பு மனோபாவம் மிக வேகமாகக் கூடிக் கொண்டே வருகிறது. அமெரிக்க எதிர்ப்பாளி களெல்லாம் இன்னும் அமெரிக்காவிற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடத் தொடங்கவுமில்லை. ஆனால் ஜார்ஜ் புஷ் உலகிலுள்ள எல்லா முஸ்லிம்களையும் பயங்கரவாதிகள் எனத் தொடர்ந்து அறிவித்து வருகிறார். ஜார்ஜ் புஷ்பின் முட்டாள் தனமான அறிவிப்புகள் உலக முஸ்லிம்களை விரக்தியடையச் செய்கின்றன. இந்த விரக்தி மேலும் மேலும் முஸ்லிம்களை அமெரிக்க எதிரிகளாக மாற்றி வருகிறது.
எந்த வகையில் பார்த்தாலும் ஒரு மிகப் பெரிய வல்லரசுக்கு எதிராக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அவ்வல்லரசுக்கு எதிரான உறுதியான எண்ணங்களைக் கொண்டிருந்தாலும் ராணுவரீதியாக அல்லது ஆயுதரீதியாக பலம் குறைந்தவர்களே. கொடூரமாக ஆட்சி செய்த பல அரசர்களுக்கு எதிராக மத்திய காலச் சமூகங்களில் விவசாய ரகசியக் குழுக்கள் பல கலகம் செய்தன. பலவீனமான சிறுசிறு குழுக்கள் அவை. சனநாயகப் பூர்வமான எந்த எதிர்ப்புக்கும் வாய்ப்பற்ற அக்காலங்களில் அக் குழுக்கள் கையில் கிடைத்த குறைந்தபட்ச ஆயுதங்களை ஏந்திப் போராடின. படைபலம் கொண்ட அரசர்கள் தம்மை அழித்தொழித்து விடுவார்கள் என்பது நன்றாகவே தெரிந்திருந்த போதிலும் தற்கொலைப் படையினர் போல ரகசியக் குழுக்கள் தமது போராட்டங்களை நடத்திப் போராடி மடிந்தார்கள்.
ஹிட்லரது பாசிசப் படைகள் நாடுகளை ஆக்கிரமித்த போது தேசபக்த எதிர்ப்பு இயக்கங்கள் பல அத்தகைய ரகசியக் குழுக்களாகவும் தற்கொலைப் படையினராகவும் போராடியிருக்கின்றன. இவர்கள் எல்லோருக்கும் இடையில் ஒரு பொதுப்பண்பு உண்டு. அது, அவர்கள் மிகப்பலமான, கொடூரமான ஓர் எதிரியோடு மிகப் பலவீனமான சூழல்களில் தாம் உயிர்ப்பலி ஆவோம் என அறிந்தே போராடினார்கள் என்பது. இப்போது அமெரிக்க பயங்கரவாதம் என முத்திரை குத்திவரும் பல கொரில்லாக் குழுக்கள் வரலாற்று ரீதியாக மத்திய கால ரகசியக் குழுக்களை ஒத்தவை. மத்தியகால கொடூரமான அரசுகள் ஏற்படுத்தியது போன்ற நெருக்கடிகளை அமெரிக்கா இன்றைய உலகில் ஏற்படுத்தி வருவதால், ரகசியக் குழுக்களும் தற்கொலைப் படைகளும் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவின் மிகக் கொடூரமான உலக அரசியல் கைவிடப்படாத வரைக்கும் ரகசியக் குழுக்களும் தற்கொலைப் போராட்ட முறைகளும் குறைவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.
இன்னும் சில வருடங்கள் கழித்து மீண்டுமொரு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும். அத் தேர்தலில் வெற்றிபெறும் புதிய அதிபர் ஈராக்கில் இருந்தும் ஆப்கானிஸ்தானில் இருந்தும் அமெரிக்கப் படைகளைத் திரும்ப அழைத்துக் கொள்வார். அந்நாடு களில் சனநாயகத்தை நிலை நாட்ட அமெரிக்கப் படைகள் சென்றிருந்ததாக அப்போது அமெரிக்க மக்களில் ஒருபகுதியினர் நம்புவார்களாக இருக்கலாம். ஆனால் இந்த பத்து இருபது ஆண்டுகளில் அமெரிக்க ராணுவம் அரபு நிலத்தில் அழித்தொழித்த உயிர்களை அப்போது நாம் கவலையோடு நினைத்துக் கொள்வோம். ஹிரோஷிமா, நாகசாகி, வியட்நாம், ஈராக், லெபனான் என அமெரிக்கக் கொலைவெறிக்குப் பலியானோரின் பட்டியல் நீளும்.
அப்போதும் கூட அமெரிக்கா இன்னொரு புதிய தாக்குதலுக்கான தலைப்பையும் கோஷத்தையும் படைப் பிரிவுகளையும் தயார் செய்து கொண்டிருக்கும்.
அமெரிக்கா தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கிறது. தனது அடக்குமுறை அரசியலைக் கைவிடுவதற்குப் பதிலாக, ரகசியக் குழுக்கள் தங்கியிருப்பதாகக் கருதும் நாடுகளின் மீது படையெடுத்து அந்நாடுகளின் மக்களையும் சொத்துக்களையும் அழித்து வருகிறது. அமெரிக்கா இவ்வாறு தொடர்ந்து நடத்தும் அக்கிரமங்களால் ரகசியக் குழுக்களின் எண்ணிக்கை கூடி வருகிறதே தவிர குறையவில்லை. நேற்று வரை ஆயுதம் ஏந்தாதவர்களை அமெரிக்கா ஒவ்வொரு நாளும் ஆயுதம் ஏந்துபவர்களாக மாற்றி வருகிறது. ஈராக்கிற்குள் சதாம் உசேனை எதிர்த்தவர்கள் ஏராளமாக இருந்தார்கள். ஆனால் அமெரிக்க ராணுவம் ஈராக்கை ஆக்கிரமித்ததால், புதிதாக ஆயுதம் ஏந்தியவர்கள் ஏராளம் தாலிபான்களை ஆப்கானியர் அனைவரும் ஆதரிக்கவில்லை. ஆனால் பின்லேடனைத் தேடுகிறேன் என அந்த நாட்டுக்குள் அமெரிக்கா நுழைந்ததால் புதிதாக ஆயுதம் ஏந்தத் தொடங்கியவர்கள் ஏராளம். இப்படித்தான் அமெரிக்கா நுழைந்த ஒவ்வொரு நாட்டிலும் ஆயுதம் ஏந்திய ரகசியக் குழுக்கள் பெருகி வருகின்றன. அமெரிக்காவும் பிரிட்டனும் கூட பாதுகாப்பில்லாத நாடுகளாகி விட்டன.

No comments:

Post a Comment