Saturday, October 30, 2010

குறைந்த நீரில் அதிக மகசூல்

குறைந்த நீரில் அதிக மகசூல் (

)
தமிழ்நாட்டின் நீர் மற்றும் நிலவளங்கள், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது குறைவாக உள்ளன. தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழை அளவு 923 மி.மீட்டர். இது இந்தியாவின் சராசரி மழை அளவை விட 250 மி.மீட்டர் குறைவு. தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக மழை அளவு குறைந்தும், காலங்கடந்தும், ஒழுங்காகப் பெய்யாமலும் பல இடங்களில் வறட்சி நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மக்கள்தொகை இந்தியாவின் மக்கள்தொகையில் 6.5% ஆக இருப்பினும் தமிழ்நாட்டின் நீர்வளம் 3 சதவீதமாகத்தான் உள்ளது. அதேசமயம் தமிழ்நாட்டில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 478 மக்கள் வசிக்கிறார்கள். இது, இந்திய நாட்டில் சராசரியாக 324 ஆகத்தான் உள்ளது. ஆகையால் இங்கு நபர் ஒருவருக்குக் கிடைக்கும் நீரின் அளவு ஒரு இந்தியனுக்குக் கிடைக்கும் அளவில் மூன்றில் ஒரு பங்காக உள்ளது. தமிழ்நாட்டின் நீர்வளம் குறைந்த அளவில் இருப்பதால், இதனைப் பேணிக்காத்து சிறந்த முறையில் பயன்படுத்தி நீர்த்தட்டுப்பாட்டைச் சமாளிக்க முயல வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டில் நீர்த் தட்டுப்பாடு தான் வருங்காலத்தில் விவசாய முன்னேற்றத்திற்கு ஒரு தடங்கலாக இருக்கப் போகின்றது.
தமிழ்நாட்டின் நீர்த்தேவையைச் சமாளிக்க இரண்டு - மூன்று வழிகள் உள்ளன. 1. நீர் மேலாண்மை மற்றும் முன்னேற்றகரமான பாசன முறைகளான தெளிநீர் மற்றும் சொட்டுநீர்ப் பாசன முறையை அதிக அளவில் கையாண்டு குறைந்த நீரில் அதிக மகசூல் எடுத்து, அதிக லாபம் பெறுதல். 2 கிராமம் மற்றும் நகரங்களில் வீணாக ஓடி மாசுபடுத்தும் நீரை சுத்தப்படுத்தி விவசாயத்திற்கும் தொழிற்சாலைக்கும் பயன்படுத்துதல். 3) வெளிமாநிலத்தில் உபரியாக உள்ள நீரை (மேற்கிலிருந்தும் மற்றும் வடக்கிலிருந்தும்) தமிழ்நாட்டிற்குத் திருப்பிவிட்டுப் பாசனத்திற்குப் பயன்படுத்துதல்.
நமது நீர்வளத்தில் 85 சதவீதம் பாசனத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. வரும் 15 - 20 ஆண்டுகளில் இந்த அளவு 70 சதவீதமாகக் குறையும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. நவீனப் பாசன முறைகளான சொட்டுநீர், தெளிநீர்ப் பாசன முறைகள் புகுத்தப்பட்டு வந்தாலும், மேற்பரப்புப் பாசன முறைதான் நம் நாட்டில் இன்னும் பல ஆண்டுகளுக்கு அதிக அளவில் இருக்கப் போகிறது. தமிழ்நாட்டில் தற்பொழுது விவசாயத்துக்கு ஒதுக்கப்படும் நீரில் 75 சதவீத நீர் நெல் சாகுபடிக்குத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெல் மகசூல் தமிழ்நாட்டில் சராசரியாக ஓர் எக்டருக்கு 5 டன்னாக உள்ளது. அதை 7 முதல் 9 டன் வரை எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் மேற்பரப்புப் பாசன முறைதான் பொதுவாக எல்லோராலும் கையாளப்படுகிறது. இந்த முறையில், குறிப்பாகக் கால்வாய்ப் பாசனத்திலும் ஏரிப்பாசனத்திலும், பாசனத்திறன் 30 - 40 சதவீதம் தான். நிலத்தடி நீரைக் கிணறுகள் மூலமாகப் பாய்ச்சும் பொழுது பாசனத்திறன் 60 - 70 சதவீதம் வரை இருக்கிறது. இம்முறையில் நீரைச் சிக்கனப்படுத்தி அதிக மகசூலை எடுக்க கீழ்க்காணும் முறைகளைக் கையாளலாம்.
நிலத்தைச் சமன்படுத்தல்; நீரைக் கொண்டு செல்லும் பொழுது ஏற்படும் விரயத்தைக் குறைத்தல்; பாசனம் எப்பொழுது? எவ்வளவு எனக் கணக்கிட்டுப் பாசனம் செய்தல்; பயிர்களுக்கு ஏற்ப பாசனம் செய்தல்; பயிரின் நீர்த் தேவைக்கான காலத்தை அறிந்து பாசனம் செய்தல்.
முக்கியப் பயிர்களுக்குச் சிக்கனப் பாசனமுறையைக் கையாண்டு அதிக மகசூல், வருமானம் பெறுவதற்கான ஆராய்ச்சி முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.
அ) நெற்பயிருக்கு நிலத்தில் எப்பொழுதும் தண்ணீரைத் தேக்கி வைக்கத் தேவையில்லை. சுமார் 3 முதல் 5 செ.மீ. நீரைப் பாய்ச்சி, அந்த நீரைப் பயிர் எடுத்து, நீர் குறைந்தபிறகு (3 அல்லது 4 நாள்களுக்குப் பிறகு) மறுபடியும் 3 - 5 செ.மீ நீர்பாய்ச்சினால் போதுமானது. இந்த முறையைப் பின்பற்றினால் நீரில் 30 சதவீதம் மிச்சப்படுத்தி, மகசூலில் 10 - 15 சதவீதம் அதிகம் எடுக்கலாம்.
ஆ) பருத்தி, கரும்பு மற்றும் வரிசையாக நடும் பயிர்களுக்கு சால் பாசன முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் நீர்த் தேவையைக் குறைக்க ஒரு சால் விட்டு மறுசாலில் பாசனம் செய்யும் முறைகளைப் பயன்படுத்தலாம். இந்த இரு முறைகளில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் மகசூலில் எந்தக் குறைவுமின்றி, 30 - 35 சதவீதம் நீரை மிச்சப்படுத்த முடியும் என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
இ) தென்னை மற்றும் பழப்பயிர்களுக்கு, பாத்திகள் போட்டு எல்லா நிலப்பரப்பிற்கும் நீர் பாய்ச்சப்படுகிறது. தற்போதைய ஆராய்ச்சி முடிவுகளின் படி, நீரை எல்லாப் பரப்பிலும் கொடுக்கத் தேவையில்லை. பாத்தியின் அளவைக் கணிசமாகக் குறைத்து மகசூலில் குறைவின்றி நீர்த் தேவையை 50 சதவீதம் குறைக்க முடியும்.
இதுபோன்று எல்லா பயிர்களுக்கும் பாசன ஆராய்ச்சி முடிவுகள் உள்ளன. நீரின் தேவை, உரத்தின் அளவு முதலியவற்றைப் பற்றியும், அவற்றை எப்படிப் பயன்படுத்தினால் குறைந்த நீர் மற்றும் உரத்தில் அதிக மகசூல் எடுக்கலாம் என்பதைப் பற்றியும் ஆராய்ச்சி முடிவுகள் உள்ளன. இவற்றைக் கடைப்பிடித்து, நீரையும் உரத்தையும் கணிசமான அளவு மிச்சப்படுத்தி, நல்ல லாபம் பெற முடியும். மேலே விவரிக்கப்பட்ட மேற்பரப்புப் பாசன முறையைத் தவிர, முற்போக்குப் பாசன முறைகளான தெளிநீர்ப் பாசனம் மற்றும் சொட்டுநீர்ப் பாசன முறைகளைப் பயன்படுத்தி அதிகமான நீரை மிச்சப்படுத்துவதோடு மகசூலைக் கணிசமான அளவு அதிகரிக்கலாம்.
தெளிநீர்ப் பாசனம் : நெருக்கமாக நடும் எல்லா பயிர்களுக்கும் இந்தப் பாசனமுறையைப் பயன்படுத்தலாம். நெல் பயிருக்கும் தெளிநீர்ப் பாசனம் செய்து, மகசூலில் குறைவின்றி, 50 சதவீதம் நீரை மிச்சப்படுத்த முடியும் என்பதை அமெரிக்காவில் உள்ள அர்கன்ஸாஸ் மாநில ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இந்த முறையை ஏரி மற்றும் கால்வாய்ப் பாசனத்தில் பயன்படுத்தினால், 30 முதல் 40 சதவீதம் வரை நீரை மிச்சப்படுத்தி, மகசூலையும் அதிகம் எடுக்க முடியும். இந்தப் பாசன முறைக்கு ஆகும் செலவு ஏக்கருக்கு ரூ. 6000 - 7000 வரைதான். தமிழ்நாட்டில் இப்பாசன முறை, மலைப் பகுதியில் மட்டும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஹரியாணா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் முதலிய மாநிலங்களில் கால்வாய்ப் பாசனப் பகுதிகளில் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அந்த அரசுகளும் இதை ஊக்குவிக்கின்றன.
சொட்டுநீர்ப் பாசனம் : தமிழ்நாட்டில் 45 - 50 சதவீதப் பாசனம், நிலத்தடி நீரால் பாசனம் செய்யப்படுகின்றது. நிலத்தடி நீர்மட்டம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து போய், சில மாவட்டங்களில் நீர்மட்டம் 1000 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. மேலும் சுமார் ஒன்றரை இலட்சம் கிணறுகள் தண்ணீர் இன்றி, பயனில்லாமல் போய்விட்டன. இப் பிரச்சினையைச் சமாளிக்கவும், பயிர்களின் மகசூலை அதிகரிக்கவும் சொட்டுநீர்ப் பாசன முறை மிகவும் உகந்தது. அதிக இடைவெளிவிட்டு நடும் எல்லா பயிர்களுக்கும், குறிப்பாக தோட்டப் பயிர்கள், காய்கறிகள், கரும்பு, பருத்தி மற்றும் வரிசையில் நடும் எல்லா பயிர்களுக்கும் இது மிகவும் சிறந்தது. இம்முறையில் இடைவெளி அதிகமாகவுள்ள தென்னை, மா, சப்போட்டா, ஆரஞ்சு முதலிய பயிருக்கு ரூ. 7,000 - 8,000, குறுகிய இடைவெளி வரிசையில் நடும் பயிர்களான காய்கறி, பருத்தி, கரும்பு, முதலியவற்றுக்கு ஏக்கருக்கு ரூ. 18,000 - 22,000 வரை செலவு ஆகலாம்.
இம்முறையைப் பயன்படுத்தினால், ஆராய்ச்சி முடிவின் படி, மகசூலில் 20 முதல் 100 சதவீதம் வரை அதிகமாக எடுத்து நீர்த் தேவையைப் பாதி அளவுக்குக் குறைக்க முடியும். நிலத்தடி நீர்மட்டம் கீழே செல்லாமல் ஒரே சிராக இருக்கவும் விவசாயிகள் அதிக வருமானம் எடுக்கவும் இந்த முறை மிகவும் ஏற்றது.
வரும் ஆண்டுகளில் நீர்த் தேவையைச் சமாளிக்க கீழ்க்கண்ட உத்திகளைக் கையாளலாம்.
எந்தச் சமயத்திலும் தண்ணீரை மண் வாய்க்காலில் எடுத்து செல்லக்கூடாது.
பயிரின் தேவைக்கேற்ப, பாசனம் கொடுக்க வேண்டும்.
நீர் பாய்ச்சுவதற்கும், அதை கட்டுக்குள் வைக்கவும், எவ்வளவு நீர் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறியவும், தகுந்த கருவிகளை அமைத்திட வேண்டும்.
எல்லா ஒன்றியங்களிலும் குடியானவர்களுக்கு ஆலோசனை கூறவும், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூலை எடுக்கவும் நீர் மேலாண்மை விரிவாக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அத்துடன் விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் நீர் மேலாண்மை பற்றி தீவிரப் பயிற்சி அளித்திட வேண்டும்.

No comments:

Post a Comment