மீன்பிடித் தொழிலில் புழங்குபொருள் பண்பாடு (
இந்தியாவின் நிலப்பரப்பில் மூன்று பக்கங்கள் கடலால் சூழப்பட்டவை. இக்கடல் பகுதிகளில் நீர் மட்டுமல்லாது பல்வேறு வகையான இயற்கைச் செல்வங்களும் பொதிந்து காணப்படுகின்றன. அவ் இயற்கைச் செல்வங்களில் பெரும்பான்மையாகக் கிடைப்பது மீன் இனங்களே ஆகும். கடலில் உள்ள மீன்களை வெளிக்கொணர்ந்து பலருக்கும் உணவாக வழங்குவோர், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களாவார். அத்தொழிலில் ஈடுபட்டுவரும் இம்மக்கள் மீன்பிடித்தொழிலின்போது பல்வேறு புழங்குபொருள்களைப் புழங்கி வருகின்றனர். இப்புழங்கு பொருட்களில் நவீனமயமாதலால் பலவிதமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பழமையான புழங்குபொருள்களைப் பதிவுசெய்யும் நோக்கில் இராமநாதபுர மாவட்டம், மண்டபம் பகுதியில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் கடலின் உள்ளே செல்வதற்குப் பயன்படுத்தி வரும் புழங்குபொருட்கள் பற்றியும் அவற்றின் அமைப்பு, பயன்பாடுகள் பற்றியும் ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
புழங்குபொருள் பண்பாடு - விளக்கம்:-
நமது மனித சமுதாயம் தனது வாழ்க்கையின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து வாழ்கையைச் செவ்வனே நடத்திச் செல்லப் பயன்படுத்தும் அனைத்து வகையான பொருள்களும் புழங்குபொருட்களே ஆகும். "இயற்கை வளங்களைப் பண்பாட்டுப் படைப்புகளாகவும், கலைப்படைப்புகளாகவும் மாற்றிக் கொள்வதையே (artifacts) புழங்குபொருள் பண்பாடு (Material culture) என்கிறோம்" என்று கே. லூர்து குறிப்பிடுகிறார். நமக்குத் தேவையான புழங்குபொருட்களை வடிவமைக்கும் பொழுது பின்பற்றப்படும் தொழில்நுட்பம் மற்றும் அமைப்பு முறை, அதன் வளர்ச்சி நிலைகள், அப்பொருளின் சமூகச் செயல்பாடு ஆகியவற்றை அறிவதும் புழங்கு பொருள் பண்பாடேயாகும். இதில் "இயந்திரங்கள், கருவிகள், மரச்சாமான்கள், வீட்டுப்பொருள்கள், உடைகள், அணிகலன்கள், கட்டிடங்கள், போக்குவரத்துச் சாதனங்கள், சாலைகள், வேளாண்நிலங்கள், எழுதுகோல்கள், அழகுப்பொருட்கள், போர்க்கருவிகள் போன்ற எண்ணற்ற பொருள்கள் பண்பாட்டைச் சேர்ந்தவை". இதனைப் புழங்குபொருள் பண்பாடு என்றும் அழைத்து வருகின்றனர். இவ்வடிப்படையில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் பயன்படுத்திவரும் புழங்குபொருட்களான மரம், கட்டுமரம், பாய்மரம், வத்தை, வல்லம், விசைப்படகு ஆகியவை குறித்துக் கீழே விவரிக்கப்படுகிறது.
மரம்:-
கடலின் உள்ளே செல்வதற்கு ஒரு நீளமான, மிதக்கக் கூடிய மரத்தைத் தொடக்க காலத்தில் மனிதன் பயன்படுத்தி, பின்னர் இம்மரங்களில் இரண்டு முதல் நான்கு மரங்களை ஒன்றாகச் சேர்த்துக்கட்டிப் பயன்படுத்தத் தொடங்கினான். இதுவே கட்டுமரம் எனப்படுகிறது. இதற்கு "முருக்கு, சில்லை" ஆகிய மரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனைத் துடுப்பு கொண்டு இயக்கிக் கடல் உள்ளே சென்று மீன் பிடிப்பதற்கு எடுத்துக் கொண்ட ஒரு சிறு முயற்சியாகவே கொள்ளலாம். பனை ஓலைகளைக் கூரை போன்று வேய்ந்து அதனைக் கொண்டு இக்கட்டுமரத்தை வெய்யில் மற்றும் மழை இவற்றிலிருந்து பாதுகாத்தனர். இவ்வாறு வேயப்பட்ட கூரையினை பன்னா என அழைக்கின்றனர். தற்பொழுது மேற்கூறிய மரம், கட்டுமரம் ஆகியவை இப்பகுதியில் மீன்பிடித்தொழிலில் பயன்படுத்தப்படுவதில்லை.
வத்தை:-
கட்டுமரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது வத்தை. கட்டுமரத்தின் வளர்ச்சி நிலை என்று கூட கூறலாம். இது மரப்பலகையிலிருந்து உருவாக்கப்படுவதாகும். இவற்றைக் கொண்டு கடலில் அதிகதூரம் செல்ல இயலாது. தொடக்க காலத்தில் இதனையே மீன்பிடிக்கப் புழங்கினாலும் தற்காலத்தில் விசைபடகு போன்ற பெரிய படகுகளில் பிடித்துவரப்படும் மீன்களை கடலோரப்பகுதிகளிலிருந்து தரைக்குக் கொண்டு வரப்படுவதற்கும் பயன்படுத்துகின்றனர். இவ்வத்தையே பாய்மரக்கப்பல், வல்லம், விசைப்படகு போன்றவற்றின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
பாய்மரம் (பாய் மரக்கப்பல்):-
பாய்மரம் என்பது வத்தை போன்ற அமைப்புடையதே ஆகும். இது காற்றுவீசும் திசையை நோக்கியே செலுத்தப்படும். காற்றினைத் தடுத்து, அந்தக் காற்றின் உந்துதலில் செல்லுவதற்கு ஏதுவாகப் பெரிய கடினமான துணியினை இந்தப் பாய்மரக்கப்பலில் கட்டுகின்றனர். இத்துணி தயார் செய்யப்படும் முறை பின்வருமாறு விளக்கப்படுகிறது. "கெட்டியான வெள்ளைத் துணியை நீள் முக்கோண வடிவில் வெட்டி அதைப் புளிய விதையிலிருந்து எடுக்கப்பட்ட ஆடையுடன் சேர்த்து வேக வைக்கின்றனர். இப்படிச் செய்வதால் துணி காவி நிறமுடையதாக மாறுகிறது. இவ்வாறு பாய் தயாரிப்பது "ஈடுபாய்தல்" எனப்படுகிறது. இதனை உலர வைத்துப் பின் தொழிலுக்குப் பயன்படுத்துகின்றனர். இது நீண்ட நாள் உழைக்கக்கூடியதாகவும் கடல் நீர், காற்று இவற்றால் பழுதடையாமலும் இருக்கிறது" அத்துணி "தர்பார்" என்றும் கூறப்படுகிறது. தற்போது அத்துணிக்குப் பதிலாக சிமெண்டு மற்றும் உரச்சாக்கினைப் பிரித்துத் தைத்துப் பயன்படுத்தி வருகின்றனர். காற்றைத் தடுப்பதற்குக் கட்டக்கூடிய துணி மற்றும் சாக்கினைப் "பாய்" என்றே குறிப்பிடுகின்றனர். தொடக்க காலத்தில் துணிக்குப் பதிலாக எளிதாகக் கிடைக்கும் ஓலையால் முடையப்பட்ட பாய் பயன்படுத்தப்பட்டு பின்னர் அதுவே துணியாக மாற்றப்பட்டுள்ளது என்பதை இன்றளவும் புழக்கத்தில் இருக்கும் பாய் என்ற சொல்லாட்சியின் வழி அறியலாம்.
பாய் கட்டப்படும் முறை:-
தோணியின் நடுப்பகுதியில் பாய் கட்டுவதற்கென ஒரு சவுக்குக் கம்பு ஊன்றப்படுகிறது. அந்தக் கம்பு "பாய்மரக்கம்பு" என அழைக்கப்படுகிறது. அந்தக் கம்பு ஊன்றக்கூடிய இடம் "கூச்சவாரி" எனப்படுகிறது. தோணியின் நடுப்பகுதியில் உள்ள பாய்மரக்கம்பில் பாய் கயிற்றால் இணைக்கப்படுகிறது. பாயினை இழுத்துத் தோணியின் முன்பக்கம் உள்ள அணியத்தில் கட்டப்படுகிறது. இக்கயிறு "மூராகயிறு" என்றும், பாயை இழுக்கும் கயிறு "ஆஞ்சான்கயிறு" என்றும், பாயை இழுத்து ஓடக்கூடிய கயிறு "தாமான்கயிறு" என்றும் அழைக்கப்படுகின்றன. பாய்மரத்தோணியில் பாய்க்கு அடுத்தபடியாக அந்தப் பாயினைக் கட்டக்கூடிய கயிறுகள் முக்கிய இடம் பெறுகின்றன. காற்று இல்லாத நேரங்களில் பாய்கள் சுருக்கிக் கட்டிவைக்கப்பட்டு துடுப்பு மூலமாகப் பாய்மரம் ஓட்டி வரப்படுகிறது.
வல்லம்:-
வல்லம் அமைப்பு நிலையில் வத்தை போன்றே இருக்கும். வல்லத்தில் பாய்மரத்திற்குப் பதிலாக இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும். கடலினுள் சென்று கொண்டு இருக்கும்போது திடீரென இயந்திரம் பழுதடைந்துவிட்டால் கரைக்கு வருவதற்குப் பாய்மரத்தையும் பயன்படுத்துகின்றனர். ஒரு சில நேரங்களில் மிக வேகமாய்ச் செல்வதற்குப் பாய்மரத்தையும் கட்டி இயந்திரத்தையும் இயக்குகின்றனர். இவற்றைப் பயன்படுத்திக் கடலில் ஓரளவு அதிகத் தூரத்திற்குச் செல்ல முடியும்.
விசைப்படகு:-
கடலில் அதிகதூரம் சென்று மீன்பிடிப்பதற்கு விசைப்படகு பயன்படுத்தப்படுகின்றது. தற்போது கடலில் மீன்பிடிக்க பெரும்பாலானோர் இதனையே பயன்படுத்தி வருகின்றனர். கடலோரப் பகுதியில் அதிகம் மீன்கள் கிடைக்காமல் இருப்பதால் அதிக தூரம் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இது வத்தை, வல்லம் ஆகியவற்றை விட மிகப்பெரியதாகும். இதன் நீளம் 45 அடி முதல் 50 அடிகளாகவும், அகலம் 12 அடி முதல் 15 அடிகளாகவும் உயரம் 16 அடி முதல் 19 அடிகளாகவும் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பலகையின் கனம் ஒன்றரை அங்குலமாகவும் பலகையின் அகலம் ஓரடியாகவும் உள்ளது. இவ்விசைப் படகில் பெரிய இயந்திரம் (ஆறு சிலிண்டர் கொண்ட இயந்திரம்) பொருத்தப்படுகிறது. வத்தை, வல்லம் ஆகியவற்றில் மேற்புறம் திறந்த நிலையில் இருக்கும். விசைப்படகின் மேற்புறம் பலகையால் மூடப்பட்டிருக்கும். அதற்கு மேலாக சிறிய அறை ஒன்றும் அமைக்கப்பட்டு இருக்கும். இவ்வறையிலே மீன்பிடிக்கச் செல்வோர் தங்கிக்கொள்கின்றனர். இந்த அறையில் அமர்ந்துதான் ஓட்டுனர் விசைப்படகினை இயக்கிச் செல்வர். இயந்திரத்தில் ஏதேனும் குறை ஏற்படின் அதனைச் சரிசெய்வதற்கு மேலே இருந்து அடியில் இறங்கிச் செல்வதற்குத் தனி வழி அமைக்கப்பட்டிருக்கும். இதனைக் "குத்தல்" என்று அழைக்கின்றனர். தேவையில்லாத நேரம் அது முடப்பட்டிருக்கும். அவ்வாறு மூடிவைக்கப் பயன்படும் பலகையைக் "காரியாபலகை" என்கின்றனர். இந்த விசைப்படகினை கைக்கம்பா, கேண்டிரியா என இரண்டு வகையாகப் பிரிப்பர். இவை இரண்டிலும் பெரிய மாற்றங்கள் ஒன்றுமில்லை.
"கைக்கம்பா" என்பதில் விசைப்படகின் மேற்புறத்தில் பின் பக்கமாக இரண்டு பெரிய இரும்புக் குழாய்கள் இணைக்கப்பட்டிருக்கும். கடலுக்குள் வலையை இறக்குவதையும் பின்னர் மேலே சுருட்டிக் கொள்வதையும் மனிதர்களே செய்ய வேண்டும்.
"கேண்டிரியா" என்பதில் விசைப்படகில் கைகம்பாவின் மேலே முக்காலிட்ட இரும்புக் குழாய்கள் இணைக்கப்பட்டிருக்கும். இக்கேண்டிரியாவில் வலையைக் கடலுக்குள் இறக்குவதையும் பின்னர் மேலே சுருட்டிக் கொண்டு வருவதையும் இயந்திரமே செய்கின்றது. கைக்கம்பாவின் வளர்ச்சியாக மனிதனுடைய உழைப்பை குறைக்கும் வகையில் கேண்டிரியா வடிவமைக்கப்பட்டுள்ளது எனலாம்.
படகுகளின் அடிப்படை அமைப்பு முறை:-
வத்தை, பாய்மரம், வல்லம், விசைப்படகு ஆகிய நான்கு படகுகளுமே இன்று மீன்பிடித்தொழிலில் கடலுக்குள் செல்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் அடிப்படையில் ஒரே அமைப்பைக் கொண்டே விளங்குகின்றன. நீளம், அகலம், உயரம், பலகையின் கனம் இவற்றிலேயே வேறுபடுகின்றன. "இப்படகுகள் அனைத்தும் தொடக்க காலத்தில் அயினிமரம், கருமருது, வேங்கை, பிள்ளமருது போன்ற மரங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது வாகை, புளி, கருவேலமரம், பூசறை, சவுக்கு, மூங்கில் போன்ற மரங்களிலும் தயார் செய்யப்படுகின்றன.
படகுகளின் முக்கியப் பகுதி தண்ணீரில் மிதப்பதற்குப் பயன்படும் அடிப்பகுதியே ஆகும். இவ்வடிப்பகுதி கத்தி போன்ற அமைப்பினைக் கொண்டுள்ளது. இது "எரா" எனப்படுகிறது. படகினைச் செய்யத் தொடங்கும்போது அடிப்பகுதியாகிய எராவே முதலில் செய்யப்படுகிறது. இதனைச் செய்து முடித்தவுடன் அதற்கு மாலை அணிவித்து மஞ்சள் கலந்த தண்ணீரைத் தெளித்துத் தேங்காய், பழம் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இந்நிகழ்வு "மஞ்சள் நீராட்டுதல்" எனப்படுகிறது. ஏனென்றால் படகிற்கு அச்சாணி போன்றது இந்த எரா. இது நன்றாக அமைந்துவிட்டால் மற்ற குறைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு என நம்பி இதற்கு வழிபாடு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. அமைக்கப்படும் படகு மங்களகரமான முறையில் அமைந்து பயன்தரவேண்டும் என்பதற்காக மங்களத்தின் குறியீடுகளான மஞ்சள், மாலை ஆகியவை சூட்டப்படுகின்றன. பின்னர் இரண்டு ஓரப்பகுதிகளிலும் பலகைகள் இணைக்கப்படுகின்றன. செங்குத்து மரக்கட்டை "வங்கு" என்றும் குறுக்காக இணைக்கப்படும் மரக்கட்டைக்கு "வாரி" என்றும் குறிப்பிடப்படுகிறது. இதன் முன்பகுதி "அணியம்" என்றும், பின்பகுதி "அட்டி" என்றும் வழங்கப்படுகிறது. மேற்பகுதியின் ஓரங்களில் பிடிப்பதற்கு ஏதுவாக சிறு மரச்சக்கை இணைக்கப்பட்டுள்ளது. இது "சிந்து" எனப்படுகிறது. படகுகளை விரும்பும் பகுதியில் இயக்கிக் கொள்ள பின்பகுதியில் செவ்வக வடிவில் மரத்தாலான அல்லது இரும்பாலான பலகை இணைக்கப்பட்டுள்ளது. இது "சுக்கான்" என்றும் அந்த சுக்கானைப் பிடித்துத் திருப்புவதற்குப் பயன்படும் இரும்பாலான கம்பிக் "கானாக்கம்பு" என்றும் அழைக்கப்படுகிறது. இப்படகுகள் நன்கு பயிற்சி பெற்ற தச்சு ஆசாரிகளைக் கொண்டே வடிவமைக்கப்படுகிறது. இவற்றின் பாகங்கள் அனைத்தும் மரத்தால் உருவாக்கப்படுவதால் அவற்றை வேறுபடுத்தவே ஒவ்வொரு பாகத்திற்கும் தனித்தனியான கலைச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிய முடிகிறது.
கலப்பத்து அடித்தல்:-
படகுகள் மரத்தால் இணைத்து உருவாக்கப்பட்ட பிறகு மரப்பலகையின் இடையே தண்ணீர் உள்ளே சென்று விடாமல் இருப்பதற்கு அதன் மேற்பகுதியில் பல கலவைகள் பூசப்பட்டுப் பின்னர் அலுமினியத் தகட்டை அதன்மேல் இணைக்கின்றனர். முதலில் பருத்திப் பஞ்சினை வேப்பெண்ணெயில் துவட்டிப் பலகையின் இடைவெளியில் வைத்து அடிக்கின்றனர். அதை எவ்வளவு தூரம் நாம் அடிக்கிறோமோ அந்தளவிற்கு உள்ளே தண்ணீர் வருவதைத் தடுக்க முடியும். பஞ்சினை வைத்து அடித்த பின், வேப்பெண்ணெய் மற்றும் மரத்தூள் கலந்த கலவையைத் தீயில் காய்ச்சிப் பூசுகின்றனர். இக்கலவை "கொப்பரைக்கம்பு" எனக் குறிப்பிடுகின்றனர். இதன் மேற்புறமாகக் கொங்குழியும் வேப்பெண்ணெய் மற்றும் டீசல் கலந்த "லெப்பம்" ஆகிய கலவை பூசப்படுகிறது. இதன் மேல்புறம் வேப்பெண்ணெய் மற்றும் சாக்பிஸ் பவுடர் (சுண்ணாம்பு) + கொங்குழியும் கலந்த "சோபர்" ஆகிய கலவை பூசப்படுகிறது. இதற்கடுத்தபடியாக இதன் மேற்புறத்தில் அலுமினியத் தகடு இணைக்கப்படுகின்றது. "இதனைக் கலப்பத்து அடித்தல்" எனக் குறிப்பிடுகின்றனர். இம்முறை தற்போது முற்றிலும் மறைந்து விட்டது. வேப்பெண்ணெய் என்பது கசப்புத் தன்மை கொண்டது. இது மரப்பலகையில் வண்டு, பூச்சி போன்றவை உருவாகாமல் தடுக்கிறது. மரத்தூள் கலந்த கொங்குழியும் பலகை உளுத்துவிடாமல் தடுத்து அதிகநாள் பயன்தரக்கூடிய சக்தியைத் தருகிறது. எனவே இக்கலவைகளைப் பூசுகின்றனர். இம்முறை இன்று முற்றிலும் கேட்லிங் கலந்து பூசப்படுகிறது. இதனைப் பைபர் மோல்டர் செய்தல் என்று குறிப்பிடுகின்றனர்.
தச்சுக்கழித்தல்:-
படகுகள் அனைத்தும் வடிவமைக்கப்பட்டுக் கடலினுள் இறக்குவதற்கு முன்பாகக் படகிற்கு மஞ்சள் கலந்த தண்ணீர் தெளிக்கப்பட்டுச் சேவல் அறுத்து இரத்தபலியும் காண்பிக்கப்படுகிறது. இந்நிகழ்வைத் "தச்சுக்கழித்தல்" என்றும் "மஞ்சள் நீராட்டுதல்" என்றும் குறிப்பிடுகின்றனர். பல்வேறு காடுகளில் இருந்து மரங்கள் கொண்டுவரப்பட்டு படகு உருவாக்கப்படுவதால் அம்மரங்களில் கெட்ட ஆவிகள் தங்கி இருக்குமென்ற நம்பிக்கையிலே கெட்ட ஆவிகளை விரட்டும் நோக்கில் இரத்தபலி காண்பிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. "புதிய மரத்தால் செய்யப்பட்ட பொருட்களில் வாழும் காட்டுத் தெய்வங்களையும் மற்றும் பேய்களையும், ஆவிகளையும் விரட்டுவதே தச்சுக் கழித்தலின் மையக்கருத்தாகும்." இரத்தம் என்பது அழிவின் குறியீடாக இங்குச் செயல்படுகிறது. தச்சுக்கழித்தல் சடங்கில் அவரவர் மதத்திற்கேற்றவாறு வழிபாடு நடத்தப்படுகிறது. ஆனால் அனைவருமே இரத்தப்பலி கொடுத்தலைத் தவறாமல் பின்பற்றுகின்றனர். இதன் வாயிலாக மரத்தில் கெட்ட ஆவிகள் உள்ளன என்பதை அனைத்து மக்களும் நம்பி வருவதை அறிய முடிகிறது.
தொகுப்புரை:-
தொடக்க காலத்தில் மீன்பிடித்தொழிலுக்குக் கடலுக்குள் செல்வதற்கு மரம், கட்டுமரம் ஆகிய புழங்குபொருட்களைப் புழங்கி வந்துள்ளனர் என்பதும் பின்னர் ஏற்பட்ட தொழிற் புரட்சியாலும் மனிதனது உடலுழைப்பை எளிமைப்படுத்தும் நோக்கிலும் வத்தை, பாய்மரம், வல்லம், விசைப்படகு ஆகியன புழக்கத்திற்கு வந்தன.
சமூகத்தில் புதிய புழங்குபொருட்கள் தோன்றும்போது பழைய புழங்குபொருட்களின் பயன்பாடு குறைந்து சிறிது சிறிதாக முற்றிலும் மறைந்து விடுகிறது. அந்த வகையில் இப்பகுதியில் வத்தை, பாய்மரம், வல்லம், விசைப்படகு ஆகியவற்றின் தோற்றத்தால் மரம், கட்டுமரம் புழக்கத்திலிருந்து மறைந்துவிட்டன. பழைய புழங்குபொருள் மறைந்து நவீன தொழில்நுட்பத்தில் புதிய புழங்குபொருள் தோன்றினாலும் இவற்றிற்கு அடிப்படை பழைய புழங்குபொருட்களே என்பதை அறிய முடிகிறது.
இதே போன்று நமது நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மீன்பிடித்தொழிலில் புழங்கிவரும் புழங்கு பொருட்களை இனங்கண்டு ஒப்புநோக்கி அவற்றில் மரபுவழியாகப் பின்பற்றிவரும் தொழில்நுட்பம், அமைப்புமுறை, வளர்ச்சிநிலை, பயன்படுத்தும் கலைச்சொற்கள் ஆகியவற்றைக் கண்டறிய வேண்டும்.
உலகமயமாதல் என்ற போர்வையில் நம்முடைய மரபான புழங்குபொருள் பன்னாட்டுச் சக்தியினால் கைப்பற்றப்பட்டு அவர்களின் பன்னாட்டு மூலதனத்தால் செய்யப்பட்டு நமது புழங்குபொருள் பண்பாட்டை அந்நியப்படுத்தும் சூழல் உருவாகிக் கொண்டு வருகிறது. எனவே நமது புழங்குபொருள் பண்பாட்டைப் பதிவு செய்வது காலத்தின் கட்டாயமாகும்.

No comments:
Post a Comment