எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் சார்பில் துவார் ஜி.சந்திரசேகரன், 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' என்ற படத்தை தயாரித்து வருகிறார். இது, ஒரு கிராமத்து காதல் கதை. கிராமத்தில் நடைபெறும் 'வள்ளி திருமணம்' நாடகத்தின்போது கதாநாயகன்-கதாநாயகி இருவரின் காதல் அரங்கேறுவது போல் படத்தில் ஒரு காட்சி அமைகிறது. இதற்காக, மதுரை அருகே நடுமுதலைக்குளம் கிராமத்தில், புகழ்பெற்ற நாடக குழுவினரை வரவழைத்து, 'வள்ளி திருமணம்' நாடகத்தை நடத்தினார்கள். அதில், "வாங்க வாங்க உட்காருங்க...வந்த காலில் நிக்காதீங்க" என்ற பாடலுக்கு ஏற்ப சுஜிபாலா கவர்ச்சி நடனம் ஆடினார். இந்த படத்தில் புதுமுகங்கள் தேஜ்-நட்சத்திரா ஜோடியாக நடிக்கின்றனர். கதாநாயகனுக்கு அப்பா, அம்மாவாக 'பசங்க' படத்தில் நடித்த சிவகுமாரும், செந்தியாவும் நடிக்கிறார்கள். கதாநாயகியின் அம்மாவாக தீபா சங்கர் நடிச்சிருக்காங்க. மனோபாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தோட இணைத் தயாரிப்பாளர் எம்.ரவிச்சந்திரன் நாயகனின் சித்தப்பாவாகவும், இயக்குநர் ஏகாதசி எதிர்மறை பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். வில்லனாக ராசு மதுரவன் நடிக்கிறார். 'திருடிய இதயத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு காதலா...' என்ற பாடல் மூலம் உலகமெங்குமுள்ள தமிழ் ரசிகர்களின் செவிகளைத் தாக்கி, இதயத்தைத் திருடிக்கொண்டவர் இசையமைப்பாளர் பரணி. எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'வெளுத்துக்கட்டு' பரணிக்கு 25வது படம். சரியான பாதையைக் கண்டுபிடித்து, இசைப்பயணத்தை தொடரும் பரணியின் இசையில் உருவாகும் இன்னொரு படம் தான் இந்த 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை'. வார்த்தைகளை அடுக்கி கவிஞராக வெற்றியைத் தொட்ட ஏகாதசி, காட்சிகளை அடுக்கி இயக்குநராக களமிறங்கியுள்ள படம் இது. "பவதாரிணியின் குரலில் மயிலின் அகவல் இருப்பதை பத்தாண்டுகளுக்கு முன்பே பரிச்சயப்பட்டுக் கொண்டவன் நான். 'ஞாபகம் வருதே...', 'அவரவர் வாழ்க்கையில்...' பாடல்களில் தாய்மையான குரலை பரத்வாஜிடம் கேட்டிருக்கிறேன். இந்த இரண்டு பேரையும் நான் இயக்கும் முதல் படத்திலேயே பாட வைத்தது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது" என்கிறார் ஏகாதசி. 'யாரடிச்சு அழுகிறதோ உன்னுடைய வாழ்க்கை.... பாடலை பரத்வாஜும் 'உசுரத் திருடி போறான் ஒருத்தன்...' பாடலை ஸ்ரீராம் பார்த்தசாரதியுடன் இணைந்து பவதாரிணி பாடியுள்ளார். "கதை, திரைக்கதை, வசனத்தோடு எல்லாப் பாடல்களையும் இயக்குநர் ஏகாதசியே எழுதியிருக்கிறார். அவருக்குள் உருவான கதை என்பதால், அதற்கேற்ற பாடல்களும் இயல்பாக வந்திருக்கின்றன. கதையை விட்டு விலகாத கவிதைக்கு இசையமைத்தது இனிய அனுபவம்" என்கிறார் பரணி. இந்தப் படத்தில் அழகான ஆழமான காதல் கதையை யதார்த்தமாக சொல்லியிருக்கிறாராம் இயக்குநர். தலைப்பு போலவே இந்தப்படமும் மனதுக்கு மகிழ்ச்சி தரக்கூடியளவுக்கு ரம்மியமாக இருக்கும். முழுக் கதையும் மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமத்தில் படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மதுரையை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் வெளிவந்தாலும், இந்தப்படம் அதிலிருந்து மாறுபட்டிருக்கும். இசையில் பெரிய மாற்றத்தைக் காட்டியிருக்கும் என்கிறார் இயக்குநர் ஏகாதசி. சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மூன் சேதுராமன், எம்.ரவிச்சந்திரன் ஆகிய இருவரின் இணைத்தயாரிப்பில் படம் வேகமாக வளர்ந்து வருகிறது. கொளுத்தும் வெயில், கொட்டும் மழை என்றால் பயப்படலாம். இது 'கொஞ்சம் வெயில், கொஞ்சம் மழை' எனவே சுகப்படலாம் என்று நம்பலாம்.
No comments:
Post a Comment