சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான்.
இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது. அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள். நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார்.அவனும் ஒப்புக் கொண்டான்.
சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான்.பிடி தவறிய அவன் சிங்கத்தின் கூண்டருகே விழுந்தான். சிங்கம் அவனை நெருங்கியது.பயந்து போன அவன், ஐயோ! சிங்கம்! என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறினான்.
உடனே அந்தச் சிங்கம், முட்டாளே! வாயை மூடு. இப்படி நீ அலறினால் நாம் எல்லோரும் வேலையை இழக்க வேண்டி இருக்கும் என்று மெல்லிய குரலில் சொன்னது.
No comments:
Post a Comment