Wednesday, September 29, 2010

கருங்காலி

'பூமணி', 'பூந்தோட்டம்', 'கிழக்கும் மேற்கும்', 'மிட்டாமிராசு' ஆகிய படங்களை இயக்கிய மு.களஞ்சியம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'கருங்காலி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இவருக்கு இந்த வாய்ப்பை அளித்திருப்பவர் 'பூமணி' படத்தைத் தயாரித்த ஜி.விவேகானந்தன்தான். அவர் தனது 'ஸ்ரீகுரு ஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார். 'கருங்காலி'யில் அஞ்சலி, சுனிதா வர்மா, அஸ்மிதா என மூன்று பேர் கதாநாயகிகளாக நடிக்க, கதாநாயகனாக சீனிவாசன் நடிக்கிறார். "இந்தப் படம் வெளிவந்த பிறகு என்னை அமுதநிலா என்றுதான் அனைவரும் அழைப்பார்கள்" என்கிறார் அஞ்சலி. படத்தில் இவரது கேரக்டர் பெயர் அமுதநிலாவாம்! சுனிதா வர்மா மருத்துவராக நடிக்க, அஸ்மிதா குப்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணாக நடிக்கிறார். படம் குறித்து இயக்குநர் மு.களஞ்சியம் கூறும்போது, "மூன்று விதமான, அதே நேரத்தில் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய ஒரு கதை என்பதால் அந்த மூன்று கதையையும் இணைக்கும் பாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். எனது கதாபாத்திரத்தின் பெயர் 'பொட்டலம் ரவி'. குப்பத்து கதை என்பதால் பல லட்சம் செலவு செய்து செயற்கையாக ஒரு குப்பத்தையே அமைத்தோம். மேலும் சில நிஜ குப்பங்களிலும் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். அதே போல கட்டத்தொட்டி, சத்தியவாணி முத்து நகர், தாலங்குப்பம், காசிமேடு ஆகிய பகுதிகளில் இருந்து முப்பது பேரைத் தேர்வு செய்து 'தியேட்டர் லேப்' ஜெயராவ் என்பவர் மூலம் அவர்களுக்கு நடிப்புப் பயிற்சி அளித்து இந்தப் படத்தில் நடிக்க வைத்துள்ளோம். அலெக்ஸ், 'பையா' படத்தில் வில்லனாக நடித்த பொன்முடி ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்தின் கதைப்படி 'பொட்டலம் ரவி' என்ற இளைஞன் கஞ்சா வியாபாரம் செய்பவன். முரட்டுத்தனமானவன். 'கருங்காலி' என்ற பெயர் இந்த கதாபாத்திரத்தைக் குறிக்கும். படிக்காத அப்பாவி கிராமத்துப் பெண்ணாக அஞ்சலி நடிக்கிறார். சாஃ ப்ட்வேர் என்ஜினீயரை திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு வரும் அவர், நகர வாழ்க்கையோடு ஒட்ட முடியாமல் தவிக்கிறார். சுனிதா வர்மா மேட்டுக்குடியைச் சேர்ந்த டாக்டராக வருகிறார். அஸ்மிதா குப்பத்தில் பிறந்து வளர்ந்த பெண். இந்த மூன்று பெண்களும் இணைகிற மையப்புள்ளிதான் 'கருங்காலி'. எல்லா வகையிலும் மாறுபட்ட இந்த நால்வரைச் சுற்றி நிகழும் கதைதான் படம். படித்து விட்டு பெரிய வேலையில் இருக்கும் இளம் தம்பதிகள் மத்தியில் இன்றைக்கு செக்ஸ் சம்பந்தப்பட்ட பிரச்சினை முக்கியமாக இருக்கிறது. அதனாலேயே நிறைய விவாகரத்துகளும் ஏற்படுகின்றன. இதைப் பற்றி உளவியல் ரீதியாக பேசுகிற படம் மட்டுமல்லாமல், இது நான் நடிக்கும் முதல் படமும் கூட! எனவே நான் அதிகபட்ச உழைப்போடு இந்தப் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். என் கேரியரில் மட்டுமல்லாமல், சமீபகாலத்தில் வந்த படங்களில் இது ஒரு மிகச் சிறந்த படமாகவும் இருக்கும்" என்றார். இப்படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, பாடல்களை இளைய கம்பன், குகை மா.புகழேந்தி, ஈரோடு இறைவன் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். ஜி..சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்ய, சிவயாதவ் கலையைக் கவனிக்க, ராபர்ட், பாலகுமார், ரேவதி, ரமேஷ் ரெட்டி ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர். ராஜசேகர் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார்.

No comments:

Post a Comment