மனோதத்துவ டாக்டரிடம் வந்த ஒருவர், டாக்டர் நீங்கள் தான் என்னை எப்படியாவது குணப்படுத்த வேண்டும். என்றார்.
உங்களுக்கு என்ன நோய்? விளக்கமாகச் சொல்லுங்கள்? என்று கேட்டார் டாக்டர்.
இரவில் நான் கட்டிலின் மேல் படுத்தவுடன் கட்டிலின் கீழ் யாரோ இருப்பதைப் போலத் தோன்றுகிறது.
கட்டிலை விட்டுக் கீழே இறங்கிப் பார்க்கிறேன். அங்கு யாருமே இல்லை. பயம் போவதற்காக நான் கட்டிலின் கீழேயே படுத்துக் கொள்கிறேன். இப்பொழுது கட்டிலின் மேல் யாரோ படுத்துக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது. இப்படியே இரவு முழுவதும் கட்டிலின் மேலும் கீழும் மாறிப் மாறிப் படுத்துக் கொண்டே இருக்கிறேன். இதனால் எனக்குப் பைத்தியமே பிடித்து விடும் போல இருக்கிறது, என்றான்.
உங்களைக் குணப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். வாரந்தோறும் இரண்டு முறை தவறாமல் என்னை இரண்டாண்டுகள் பார்க்க வேண்டும். என்னை ஒவ்வொரு முறை சந்திப்பதற்கும் ரூ. 100 கட்டணம் தர வேண்டும். என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார் டாக்டர்.
நிறைய செலவாகும் போல இருக்கிறதே? என்னால் இவ்வளவு தொகையைப் புரட்ட முடியுமா என்று தெரியவில்லை. எதற்கும் என் மனைவியைக் கேட்டு அடுத்த வாரம் சொல்கிறேன், என்று சொல்லி விட்டுப் புறப்பட்டார் அவர்.
ஒரு வாரம் கழித்து டாக்டருக்குப் போன் வந்தது. அதில் அவர், டாக்டர் என் மனைவி என் நோயைக் குணப்படுத்தி விட்டாள், என்றார்.
டாக்டரால் இதை நம்ப முடியவில்லை, எப்படி? என்று கேட்டார்.
நான் படுக்கும் கட்டிலின் கால்களை என் மனைவி வெட்டி விட்டாள், என்று பதில் வந்தது.
No comments:
Post a Comment