Tuesday, September 28, 2010

சரியும் தவறும் (தந்தை மகனுக்கு

சரியோ, தவறோ
எல்லோரும் போகும் வழியே
எனது வழி
என்று இருந்து விடாதே.காலத்தின் தாளத்திற்கு - உன்
கால்கள் ஆடி ஆடியே
காலம் கழிக்காதே!
காலத்திற்கு சலங்கை கட்டு - உன்
கானத்திற்கு அதை ஆட்டு.
துயர் வென்றவன் தான்
பெயர் பெறுவான் - வீணில்
துவண்டு நின்றால் - காலம்
துப்பிவிடும் முகத்தில் . . .
காற்று கூட
கால்த்தடம் பதிக்கிறது
புயலாக வரும் பொழுது
கானல்நீர் ஒருபோதும்
கால்த்தடம் பதிப்பதில்லை.
நீ
கானல் நீராய்
பொய்த் தோற்றம்
கொள்ளாதே!
காலச் சல்லடை
உன்னைக்
கழித்துவிடக் கூடாது.வரலாறு என்பது
ஏதோ சில சேதியும்
எவரோ பிறந்த தேதியும்
எழுதி வைப்பதன்று?
அது கடந்த காலம் தந்த கையிருப்பு.
வாய் நிறையச் சோறும்
வளர்ந்த மர நிழலும்
பாய் படுக்கை மெத்தையும்
போய்ச் சேரும் காலம்வரை
கிடைக்கப் பெறுதல்
வரலாறல்ல!
எதையேனும் தின்று
சதை வளர்த்து
கதை கேட்டு
கட்டிலில் படுத்துறங்கி
கதை முடிக்க வாங்கிய வரமல்ல
வாழ்க்கை.
வரலாறு
தவம் கிடக்கிறது
மகனே! உன் பெயரை
வரமாகக் கேட்டு.
வாழ்ந்து செத்தோரின்
வரிசை மிக நீண்டது
செத்தும் வாழ்வோர் வரிசை
சொற்பமே
எண்ணிக்கையில் . . . உனது வரிசையை
நீயே முடிவு செய்.
ஐம்பூதமும் மகிழ வேண்டும் - உன்
ஆறாம் அறிவு கண்டு!
அறுபதோ எண்பதோ
எப்படியும் ஒருநாள்
வாழ்க்கை முடியும்;
எரிப்பதோ புதைப்பதோ
இரண்டில் ஒன்று;எப்படியும் ஆட்கொள்ளும்
எல்லோரையும்!ஒரு நாள் - அது
உன்னையும் . . . அதற்கு முன்
நீ
ஒன்றை முடிவு செய்!
உனக்குப் பிறகு
உன் புகைப்படம்
மாட்டப்படும் - அது
உன் வீட்டில் மட்டுமா?உலகிற்குப் பொதுவாகவா?

No comments:

Post a Comment