Sunday, October 17, 2010

கிராமங்களை நோக்கி...

கிராமங்களை நோக்கி...
நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பு வகிக்கும் முதல் குடிமகன் முதல் நாட்டின் கடைக்கோடிப் பகுதியில் ஒரு மூலையில் உழலும் குப்பனும் சுப்பனும் உள்ளிட்ட அத்தனை குடிமக்களும் பல்வேறு நிலைகளில் நுகர்வோர்தான். அண்ணல் காந்தி நுகர்வோரைப் பற்றிச் சொல்லுகையில், ஒரு வாடிக்கையாளர் வணிகத்தலத்துக்கு அல்லது பணித்தளங்களுக்கு வரும் மிக முக்கியமான நபர் என்று குறிப்பிடுகிறார். இதையே இன்னும் அழுத்தமாக வாணிபம் என்னும் மாபெரும் சாம்ராஜ்யத்தில் நுகர்வோரே அரசன் என வர்ணிக்கிறார் விவேகானந்தர்.
நம் நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையோர் வாழ்வது கிராமப்புறங்களில், நாடு பெற்றுள்ள முன்னேற்றம் அல்லது வளர்ச்சிக்கு அளவுகோலாகத் திகழ்பவர்கள் கிராம மக்கள். நுகர்வோர் இயக்கம் இதுவரை அவர்களைத் தொடவில்லை. நாட்டின் ஒட்டுமொத்தமான மக்களுடைய உரிமைகளைக் காப்பதற்கும் அவர்களது நலவாழ்வுக்கும் மேம்பாட்டுக்கும், உறுதியும் உத்தரவாதமும் வழங்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பற்றியோ, அது வழங்கும் உரிமைகள் மற்றும் பாதுகாப்புப் பற்றியோ கிராமப்புற மக்கள் அறியவில்லை என்பதே உண்மை. நகர்ப்புறப் பகுதிகளிலும் படித்தவர்கள் மத்தியிலும் கூட நுகர்வோர் இயக்கம் குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லை.
கிராமப்புற மக்களைப் பொறுத்தவரையில், நுகர்வோர் இயக்கம் குறைந்தபட்சம் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடைகளின் மூலம் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய குடிமைப் பொருள்கள், அவற்றின் அளவு மற்றும் விலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் - அவற்றைக் குறிப்பிட்ட காலங்களில், குறிப்பிட்ட அளவுகளில், நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் பெறுவதற்கு அவர்களுக்கு உள்ள உரிமை குறித்து விழிப்புணர்வு ஊட்டினால் நல்ல பலன் விளையும். அவற்றைக் கேட்டுப் பெறுவதற்குப் போராடும் உரிமை, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற செய்தியை எடுத்துச் சொல்ல வேண்டும்.
மத்திய அரசு அண்மையில் பள்ளிகளில் அமல்படுத்தியுள்ள "மாணவர் நுகர்வோர் மன்றங்கள்" திட்டம் போல, நுகர்வோர் கல்வியும் விழிப்புணர்வும், கிராமப்புற மக்களிடம் பரவலாக்கப்படுவதற்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும். இதைச் செய்ய முன்வரும் நுகர்வோர் அமைப்புகளுக்கு அரசு ஊக்கமும் உதவியும் அளிக்கலாம். கிராமங்களிலுள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு நுகர்வோர் இயக்கம், நுகர்வோர் சட்டம், நுகர்வோர் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த பயிற்சி அளித்து அவர்கள் மூலம் அவர்கள் பணிபுரியும் கிராமங்களில் நுகர்வோர் குழுக்களைத் தோற்றுவிக்க அவர்களுக்கும் ஊக்கம் அளிக்கலாம். அவர்கள் அக்குழுக்களின் வழிகாட்டிகளாக விளங்கலாம். அறிவொளி இயக்கம் போன்று மற்றொரு நுகர்வோர் கல்வி இயக்கத் திட்டம் பரவலாகச் செயல்படுத்தப்படலாம். மத்திய அரசின் நுகர்வோர் நல நிதியில் குவிந்துள்ள பெருந்தொகையிலிருந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதற்குத் தேவையான நிதியை வழங்கலாம்.
தங்கள் புகார்களுக்குத் தீர்வு பெற மாவட்ட தலைநகருக்கு கிராமப்புற மக்கள் வர வேண்டும் என்ற கட்டாயத்தைத் தவிர்க்க வேண்டும். மாவட்டத் தலைநகரங்களில் மட்டும் தற்போது இயங்கி வரும் நுகர்வோர் குறைதீர் மன்றங்களை தாலுகா அளவில் பரவலாக்க வேண்டும். தற்போது பல மாவட்ட மன்றங்களில் புகார்கள் தேங்கி, விசாரணைகள் நடைபெறவும் தீர்ப்புகள் கூறவும் வருடக்கணக்கில் காலதாமதமாகிக் கொண்டிருக்கிறது.
இதற்கு மாற்று ஏற்பாடாக, மக்கள் - பாதிக்கப்பட்ட நுகர்வோர் - நலன் மற்றும் வசதி கருதி "தாலுகா நுகர்வோர் புகார் நீதிமன்றம்," என்ற அமைப்பை எல்லாத் தாலுகா தலைமையகங்களிலும் தோற்றுவிக்கலாம். ஊதியம் ஏதுமின்றி, இம்மன்றத் தலைவராகத் தன்னார்வத்துடன் சேவை புரிய முன்வரும் அர்ப்பணிப்பு உணர்வு படைத்த, அப்பழுக்கற்ற, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் அல்லது கட்சி சார்பற்ற, நல்லொழுக்கத்துக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற சமூக ஆர்வலர்களைத் தலைவர்களாக நியமிக்கலாம். அவ்வாறே, தலைவருக்கு உதவியாக இரு உறுப்பினர்கள் (ஒரு பெண் உள்பட) சமூக ஆர்வலர்களிலிருந்து நியமிக்கப்படலாம். தொகுப்பு ஊதியத்தில் ஓர் எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளரைக் கொண்டு இவ்வமைப்பை இயக்கலாம். ரூ.2,000 வரை இழப்பீடு கோரும் புகார்களை விசாரித்து தீர்ப்பு அளிக்கலாம். இவர்களது விசாரணையும், தீர்ப்பும் ஒரே தடவையில் முடிக்கப்பட வேண்டும். மேல் முறையீடு கிடையாது. இத்தாலுகா நுகர்வோர் பஞ்சாயத்துகள் மூலம், கிராமப்புற நுகர்வோர் செலவு மற்றும் அலைச்சல் இன்றி தங்கள் சிறு சிறு பாதிப்புகளுக்கு விரைவில் தீர்வு பெறலாம். நுகர்வோர் இயக்கம் கிராமப்புறங்களில் பரவலாகவும் இவ்வியக்கத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படவும் இது வழி செய்யும். இதன் மூலம் இச்சட்டத்தின் மூலநோக்கமும் நிறைவேறும்.

No comments:

Post a Comment