Tuesday, October 26, 2010

மரணத்தை வென்ற கலைஞர்கள்

மரணத்தை வென்ற கலைஞர்கள் ( Ingmar Bergman - Tamil Katturaikal - General Articles
சினிமா என்ற கலை துவங்கி இப்போது 112 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதில் பெரும்பான்மையான காலத்தில், அதாவது 60 ஆண்டுகளாக இத்துறையில் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு கலைஞனை என்றென்றும் சினிமா உலகம் மறக்க முடியாது. 1956-ல் வெளிவந்த இவரது "செவன்த் சில்" ( The Seventh Seal ) என்ற படத்தில் மரணத்துடன் ஒரு விளையாட்டு விளையாடி இருப்பார். மனிதன் பிறந்தது முதல் மரணம் அவனைத் துரத்துகிறது. அது எப்போது வேண்டுமானாலும் நம்மை வென்றுவிடலாம். அல்லது முடிந்தவரை அதன் வெற்றியை நாம் தள்ளிப்போடலாம். நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மருத்துவமனைகளில் பிரசவ நேரங்களில் சில சமயங்களில் குழந்தை இறந்தே பிறந்தது அல்லது பிறந்தவுடன் இறந்துவிட்டது என்று கூறுவார்கள். மரணத்தின் வேலையே இதுதான். நம்மை பிறப்பிலிருந்தே துரத்துவது. மரணத்தின் வெற்றியை அதிக காலம் நாம் தடுத்தாலே நாம் வெற்றிபெற்றதாகக் கருதலாம். இதில் நிச்சயமாக பெர்க்மன் வெற்றிபெற்றுவிட்டார் என்று கூறலாம்.
தான் இறப்பதற்கு 5 ஆண்டுகள் முன்புவரை படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது மிகப் பெரிய சாதனை. 1930-களில் அவர் நாடகத்துறையில் காலடி வைத்ததுமே அவரது சிந்தனைகள் விரிந்து பரந்தன. இவர் கிறித்துவ பாதிரியின் மகனாகப் பிறந்ததாலேயே கடவுள் நம்பிக்கை பற்றிய கேள்வி இவருக்கு இறக்கும்வரை இருந்தது. மனித உறவுகள், உளவியல், குடும்ப உறவுகள் பற்றிய இவரது ஆழ்ந்த சிந்தனைகளை இவரது படைப்புகளான "த்ரூ எ கிளாஸ் டார்க்லி", ( Through a Glass Darkly ), ஸோ குளோஸ் டு லைஃப் ( So, close to life ), சைலன்ஸ் ( Silence ) போன்ற படங்களைப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். இவரது தந்தைக்கும் இவருக்கும் ஏராளமான முரண்பாடுகள் இருந்துகொண்டே இருந்தது. இவர் உருவாக்கிய திரைக்கதையை மையமாக வைத்து இவரது நண்பர் பில்லி ஆகஸ்ட் ( Billie August ) இயக்கிய "தி பெஸ்ட் இண்டென்ஷன்ஸ்" ( The Best Intentions ) என்ற படத்தில் இவரது தந்தையைப் பற்றிய முழுமையான இவரது கருத்தை அறியலாம். பொதுவாக ஒருவனுக்கு ஒருத்தி, உண்மையான காதல் என்றெல்லாம் நம் சமூகத்தில் கருத்து நிலவுகிறது. இதுகுறித்து இவர் மாற்றுக்கருத்து வைத்திருந்தார்.
இவருக்கு பல மனைவிகள், குறிப்பாக இவரது படத்தில் நடித்த சில நடிகைகளை இவர் மணந்துகொண்டார். கணவன்- மனைவி பிரச்னைகளை மையமாக வைத்து இவர் இயக்கிய "சின்ஸ் ஃபிரம் எ மேரேஜ்" ( Scenes from a Marriage ) என்ற படம் இவரது மண வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இருந்தது. இந்தியாவின் சிறந்த நாவலாசிரியர் சரத் சந்திரர் தன் படைப்புகளில் பெண்களை பிரதான பாத்திரங்களாக வைத்து அவர்களது பிரச்னைகள், சிந்தனைகள் உளவியல் சார்ந்த பார்வைகள், குடும்ப உறவுகள் பற்றி தன் பெரும்பாலான நாவல்களில் எழுதியிருந்தார். அதுபோலவே, திரைத்துறையில் பெர்க்மன் தன் படைப்புகளில் பெண்களை மையப்படுத்தி பல படங்களை எடுத்திருந்தார். உதாரணமாக "பெர்சோனா" ( Persona ), "விண்டர் லைட்" ( winter light ), "கிரைஸ் அன்ட் விஸ்பர்ஸ்" ( cries and whispers ) "ஆட்டம் சொனாடா" ( Autum sonata ) போன்ற படங்களைக் கூறலாம். அவர் இயக்கி 1982-ல் வெளிவந்த "ஃபேன்னி அன்ட் அலெக்ஸாண்டர்" ( Fanny and Alexander ) என்ற படமே தனது கடைசி படம் என்றும் இனி மீண்டும் தான் நாடகத்துறைக்கே செல்ல விரும்புவதாகவும் கூறினார். ஆனால் மனித வாழ்க்கையில் எதுவும் நம்மிடமில்லை என்பது போல அவர் இயக்கிய "ஆஃப்டர் த ரிகர்ஸல்" ( After the Regarcel ) என்ற படம் 1984-ல் வெளிவந்தது. பின்னர் 2003-ல் வெளிவந்த "சாரா பாண்ட்" ( Sara Bond ) என்ற படமே அவரது இறுதிப்படமாக அமைந்தது.
மைக்கலேஞ்சலோ அந்தோனியானி
இத்தாலிய நவீன இயக்குநரான அந்தோனியானி 1912 ஆம் வருடம் செப்டம்பர் 12 ஆம் நாள் பெராரா என்ற ஊரில் பிறந்தார். போலாக்னா யுனிவர்சிட்டியில் பட்டப் படிப்பை முடித்த இவர், 1935ல் திரைப்பட விமர்சகராக பத்திரிகைப் பணியில் சேர்ந்தார். பின் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ரோம் நகருக்குச் சென்றார். அங்கேதான் அவருடைய திரைப்பட வாழ்க்கை துவங்கியது. அங்கு ஒரு பாசிச பத்திரிகையில் சினிமா பகுதியைக் கவனித்து வந்தார். பின்னர் அவர் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து முறையாக சினிமா பயின்றார். இவர் இத்தாலிய பிரபல இயக்குநர்களான ஃபெலினி, ரோசலினி மற்றும் பல இயக்குநர்களுடன் பணிபுரிந்தார். திரைக்கதை இலாகாவிலும், உதவி இயக்குநராகவும் இருந்தார். இதற்கிடையில், திரைப்பட விமர்சகராகவும் பத்திரிகையில் பணி செய்தார். இவர் முதலில் 1943 இல் ஒரு குறும்படம் எடுத்தார். பின் 1949 வரை பல குறும்படங்களை இயக்கினார். இவர் முதலில் இயக்கிய Cronaca di un Amiore என்ற முழு நீள திரைப்படம் 1950இல் வெளியானது.
இப்படம் நியோ ரியலிஸ பாணியில் மத்தியதர சமூகத்தைப் பற்றிய படம். பின்னர் 10 ஆண்டுகள் வரை பல சமூகப் படங்களை இயக்கினார். இவரது முதல் சர்வதேச வெற்றிப்படம் "லா வெஞ்சுரா" ( La Ventura ) 1960 இல் வெளியானது. இதைத் தொடர்ந்து 1961 இல் "லா நோட்டே" ( La Notte ) மற்றும் 1962 இல் "லா எக்ளிப்ஸ்" ( La Eclipse ) வெளியிடப்பட்டன. இந்த மூன்று படங்களுமே நவீன உலகில் மனிதர்களின் போக்கைப் பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த படங்களாகும். இந்த வரிசையில் இவர் எடுத்த 4வது படம் "ரெட் டெஸர்ட்" ( Red Desert ) 1964 இல் வெளியானது. இவர் தனது படங்களில் லேண்ட் ஸ்கேப்பை மிகவும் பிரமாதமாக உபயோகப்படுத்தினார். தனி மனித ஒழுக்கநெறிகளைப் பற்றிய கருத்துகளை தனது படங்களில் பிரதானமாக எடுத்துக் காட்டினார்.
சுவீடன் இயக்குநரான பெர்க்மன் இவரது படங்களில் "ப்ளோ அப்" ( Blowup ) மற்றும் "லா நோட்டே" ( La Notte ) ஆகிய இரண்டு படங்களை இவரின் மிகச்சிறந்த படங்களாகக் குறிப்பிடுகின்றார். பின் இவர் தயாரிப்பாளர் கார்லோ போன்ட்டி ( Carlo Ponti )யுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி இங்கிலாந்தை கதைக்களமாகக் கொண்டு "ப்ளோ அப்" (Blow up) என்ற ஆங்கிலப்படத்தை எடுத்தார். இப்படத்தை MGM நிறுவனம் உலகெங்கும் வெளியிட்டது. இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தில் சர்வதேச நட்சத்திரங்களான டேவிட் ஹெம்மிங்ஸ் மற்றும் வானெஸா ரெட்கிரேவ் நடித்தனர். இதைத் தொடர்ந்து "ஜெப்ரஸ்கி பாயின்ங்" ( Zebraski Poing ), "தி பேஸஞ்சர்" ( The Passenger ) என்ற இரண்டு ஆங்கிலப் படங்களை இயக்கினார். சினாவில் கலாச்சார புரட்சிக்குப் பின் மக்கள் சின அரசால் இவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். 1977இல் இவர் சினத்தைப் பற்றிய ஒரு ஆவணப்படம் ( Chung Kuo kina ) தயாரித்தார். இந்தப் படம் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் ஓடக்கூடியது. ஆனால் இந்தப்படம் எடுக்கப்பட்ட பின் சின அரசு அதிகாரிகளாலும், நிர்வாகிகளாலும் இப்படம் சினாவுக்கு எதிரானது, கம்யூனிஸ்ட்களுக்கு எதிரானது என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த ஆவணப்படம் நீண்ட காலங்களுக்குப் பிறகு, 2004ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் நாள் பெய்ஜிங் ஃபிலிம் அகாதமி நடத்திய திரைப்பட விழாவில் முதன்முதலாக சினாவில் திரையிடப்பட்டது. இயக்குநரும் கவுரவிக்கப்பட்டார். ஆனால் இப்படம் 1994இல் கல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 1982 வரை பல படங்களை இவர் இயக்கினார். 1985இல் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நடக்க முடியாமலும், வாய் பேச முடியாமலும் போய்விட்டது. நீண்ட கால ஓய்வுக்குப் பின் 1994இல் கல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொன்டார். இவரது பெரும்பாலான படங்கள் அங்கு திரையிடப்பட்டன. அப்போதும் அவரால் நடக்க, பேச முடியவில்லை. சக்கர நாற்காலியோடுதான் காணப்பட்டார்.
அப்போது பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அவர் உடல் நிலை காரணமாக பத்திரிகையாளர்கள் தங்கள் கேள்விகளை எழுதிக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். பின் அவற்றிற்கு பதில் வழங்கப்பட்டது. கல்கத்தாவில் திரைப்பட விழாவில் தனது இரண்டாவது மனைவியுடன் பல நிகழ்ச்சிகளில் இவர் கலந்துகொண்டார். இவர் நோய்வாய்ப்பட்டபோது இவரது தயாரிப்பில் இருந்த "பியாண்ட் த க்ளவுட்ஸ்" ( Beyond the Clouds ) என்ற படம் ஜெர்மன் இயக்குநர் வின் வெண்டர்ஸ்ஸால் ( win wenders ) முடிக்கப்பட்டு 1995இல் வெளியிடப்பட்டது. ஆனால் ஒரு பேட்டியில் வின் வெண்டர்ஸ் குறிப்பிடும்போது இந்தப் படத்திற்காக தான் எடுத்த காட்சிகள் பெரும்பாலும் படத்தொகுப்பின்போது இயக்குநர் அந்தோனியானி நீக்கிவிட்டதாகவும், சில கோர்வைகளையே உபயோகப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார். இந்தப் படம் 1995-ல் நடைபெற்ற வெனிஸ் திரைப்பட விழாவில் சர்வதேச பத்திரிகையாளர் விருதை ( Press preize ) வியட்நாம் படமான "Cyclo" வுடன் பகிர்ந்து கொண்டது. பின் இவரின் இறுதிப்படமான "Eros" 2004இல் வெளிவந்தது. இது 3 குறும்படங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு. ஒரு படம் இவருடையது, மற்ற இரண்டு படங்களை சின இயக்குநர் வாங்கர் வய், ( wonger woi ) மற்றும் பிரிட்டிட் இயக்குநர் ஸ்டீபன் சோடன்பர்க் ( Stephen sodenberg ) இயக்கினர். ஆனால் இந்தப்படம் வெற்றிப்படமாக அமையவில்லை. 94 வயது வரை வாழ்ந்த இவர், இத்தாலிய சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமா வரலாற்றிலும் குறிப்பிடத்தக்கவர். ஒன்று சொல்வார்கள்... மேதைகள் ஒரே மாதிரியாக சிந்திப்பதுண்டு என்று. ஆனால் இரண்டு மேதைகள் "பெர்க்மன், அந்தோனியானி" ஒரே நாளில் ( ஜூலை 30 2007 ) இந்த உலகத்தை விட்டு மறைந்தனர்.
மோ. இராசேந்திரன், செயலர், தமிழ்நாடு திரைப்பட இயக்கம்.

No comments:

Post a Comment