Friday, October 15, 2010

அரசியல் கருவியாகும் புராணக் கதையின் நாயகன்

அரசியல் கருவியாகும் புராணக் கதையின் நாயகன்

1992, டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதைவிடவும் ஒரு வருத்தம் தரும் நிகழ்வு கடந்த வாரம் நடந்திருக்கிறது. கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு என பரவலாக விவரிக்கப்படும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, நமது கிராமத்தின் மேல்சாதி ஆதிக்க நாட்டாண்மைகளின் தீர்ப்பைப் போலவே சட்டத்திலிருந்தும் அரசியல் சாசனத்திலிருந்தும் பெரிதும் விலகியிருக்கிறது. கண் முன்னால் 500 வருடங்களாக நின்றுகொண்டிருந்த ஒரு மசூதி, அந்த நீதிபதிகளின் கண்ணுக்குத் தெரியவில்லை. அதே சமயத்தில், 3,500 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்திருக்கக்கூடும் என கருதப்படும் ராமரின் பிறப்பு எங்கே, எந்த இடத்தில் நிகழ்ந்தது என்பது அந்த நீதிபதிகளின் கண்களுக்கு சந்தேகமறத் தெரிந்திருக்கிறது.
மசூதியின் மைய அரங்கம் இருந்த இடமே ராமர் பிறந்த இடம் என்ற இந்து அமைப்புக்களின் கோரிக்கையை நீதிபதிகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அந்த இடத்தை இந்துக்களுக்கும் அதைச் சுற்றியிருக்கும் காலி இடத்தை இரண்டு பங்காகப் பிரித்து அதில் ஒன்றை முஸ்லிம்களுக்கும் மற்றொரு பகுதியை இந்து மதத்தைச் சேர்ந்த மடம் ஒன்றுக்கும் ஒதுக்கியிருக்கிறது அலகாபாத் உயர் நீதிமன்றம். இந்திய அரசியல் சாசனத்தையும் அதன்கீழ் உருவான சட்டத்தையும் தங்கள் எல்லையாகக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கில் தங்களுக்கு இதுவரை பரிச்சயமில்லாத பிரதேசத்தில் பிரவேசித்திருக்கிறார்கள். நம்பிக்கை, உணர்வுகளின் அடிப்படையில் அவர்கள் தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள். ராமர் கோவிலின் சிதிலங்களின் மீதுதான் 1528ல் மசூதி கட்டப்பட்டது என்பதால் அந்தச் சொத்து இந்துக்களுக்கே உரியது என தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறது. 1949ல் எந்த இடத்தில் ராமர் சிலை வைக்கப்பட்டதோ, அதுதான் ராமர் பிறந்த இடம் எனவும் கூறியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதற்கு பயன்படுத்தியிருக்கும் ஆதாரங்களில் ஒன்று பி.ஜே.பி.யின் ஆட்சியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி இது. நம்பகத்தன்மை அற்றது என்று கூறப்படுகிறது. அத்தகைய ஒரு அகழ்வாராய்ச்சியின் அடிப்படையில் அது ராமர் பிறந்த இடம் என்றோ, அங்கு ராமர் கோவில் இருந்தது என்றோ முடிவுக்கு வர முடியாது என்று மிகவும் மதிக்கப்படும் வரலாற்றாய்வாளர்களே கூறுகிறார்கள்.
கடந்த கால தவறுகளை சரி செய்யக் கிளம்பினால் இந்த உலகில் ஒரு மனித ஜீவராசிகூட மிஞ்சாது. ஆனால் அந்தப் பாதையில் செல்வதையே இந்தத் தீர்ப்பு பரிந்துரைக்கிறது. தலித்துகள் தங்களின் பல்லாயிரம் ஆண்டு இழிவிற்கும், உயிர்ப் பலிக்கும் பரிகாரம் கேட்கலாம். புத்த மடங்கள் இடிக்கப்பட்டு, அங்கு உயர்ந்து நிற்கும் இந்துக் கோவில்களைத் தரைமட்டமாக்கிவிட்டு அங்கு மீண்டும் பௌத்த விகாரங்களைக் கட்டித் தருமாறு கோரப்படலாம். உலகெங்கும் வஞ்சிக்கப்பட்ட ஜிப்சிக்கள் தங்களிடம் பறிக்கப்பட்டது அத்தனையையும் திரும்பக் கேட்கலாம். யூதர்கள் தாங்கள் பலி கொடுத்த உயிர்களுக்கு இணையாக உயிர் பலி கேட்கலாம். தாங்கள் காலி செய்துவிட்டுப் போன பிறகு இடைப்பட்ட காலத்தில் தங்கள் பிரதேசத்தில் குடியமர்ந்த பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலில் எந்த உரிமையும் இல்லை என்று அலகாபாத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி எடுத்துரைக்கலாம்.
பல்லாயிரம் பேரைப் பலிகொண்ட, மனித வரலாற்றின் கருப்புச் சரித்திரமான சிலுவைப் போர்களின் இந்திய வடிவத்தை உருவாக்குவதில் யார் உதவக்கூடாதோ அவர்களெல்லாம் அதற்கு உதவுகிறார்கள். இத்தனைக்கும் 2,000 வருடங்கள் முன்பு நிகழ்ந்த இயேசுவின் பிறப்பும் இறப்புமே இன்னும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை. அவர் பெத்லகேமில் பிறந்ததாகக் கூறுவதே தவறு என ஒரு சில வரலாற்றாய்வாளர்கள் கூறுகிறார்கள். ராமரின் பிறப்பு-இறப்பு அதைவிட பல மடங்கு குழப்பத்திற்கு ஆளான ஒன்று. கி.மு 1,500 வாக்கில் முதல் ராமாயணம் எழுதப்பட்டிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. அதற்கு எத்தனை ஆண்டுகள் முன்பு, துல்லியமாக எங்கு பிறந்தார் என்பதற்கு வரலாற்றுரீதியான ஆவணங்கள் இல்லை. ஏனென்றால் இந்தியர்களுக்கே வரலாற்று உணர்வு இருந்ததில்லை. அவர்களிடம் இருந்தது oral traditionம் புராணங்களும் மட்டுமே. பரம்பரை பரம்பரையாக இவ்வாறு மாற்றி விடப்படும் oral தகவல்களிலும் இடைச்செருகல்கள் நிறைந்த புராணங்களிலும் எந்த அளவுக்கு உண்மைச் சம்பவங்கள் உருமாறாமலிருக்கும் என சொல்ல முடியாது. ராவணனுடனான போர் உண்மையில் நடந்திருந்தால் அந்த இடம் தற்போதைய ஒரிசாவாகத்தான் இருந்திருக்க முடியும், எல்லோரும் நினைப்பது போல இலங்கையில் அது நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்று வரலாற்றாய்வாளர்கள் எழுப்பும் குழப்பத்திற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. வரலாற்றுரீதியான பார்வை கொண்ட மேற்கத்தியர்கள் நடுவிலேயே இயேசுவின் வரலாறு குறித்த ஏராளமான முரண்பாடுகள் இருப்பதாக நவீன வரலாற்று ஆராய்ச்சிகளில் தெரிய வந்திருக்கிறது. கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளின் புதிய ஏற்பாட்டில் உள்ள 15 சதவீத உள்ளடக்கம் மட்டுமே இயேசுவின் வார்த்தைகள் என்று குந்தர் பொர்க்கேமம் என்ற அறிஞர் கூறுகிறார்.
காரல் மார்க்ஸ் ஒரு முறை தீர்க்கதரிசியைப் போல் கூறினார்: "கடந்த காலத்தின் ஆவிகளை தட்டி எழுப்புவது" புரட்சி படைக்க நினைப்பவர்களுக்கு அதிகம் பயன்படும் யுக்தி. "கடந்த காலத்தின் பெயர்களையும் போர் பிரகடனங்களையும் கடன் வாங்கி உலக வரலாற்றில் புதிய காட்சியைப் படைக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்." ராம ஜென்மபூமி என்ற கடந்த காலத்தை வைத்து பி.ஜே.பி. நிகழ்காலத்தில் செய்ய நினைப்பதும் இதுதான். ராமர் கோவில் எழுப்புவது வெறும் இந்துக்களின் உணர்வு சார்ந்த பிரச்சினை என்று அவர்கள் கஷ்டப்பட்டு பொய் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் நடத்துவதும் நடத்த நினைப்பதும் முஸ்லிம்களுக்கு எதிரான போர். இந்தியர்களைப் பெரிதும் கவர்ந்த புராணமாக மட்டுமே இருந்த ராம காவியம் அரசியல் கருவியாக மாறத் தொடங்கியதும் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பு தொடங்கிய 12 ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தில்தான் என்று சொல்கிறார் சமஸ்கிருத-இந்திய வரலாற்று அறிஞரான ஷெல்டன் பொல்லாக். தீய சக்தியாக சித்தரிக்கப்பட்ட ராவணனை ராமன் தோற்கடிப்பதையும் முஸ்லிம் மன்னர்களுடனான தங்கள் போரை ஒப்புமைப்படுத்தியதன் மூலம் வெளிநாட்டிலிருந்து படையெடுத்து வந்தவர்களுக்கு எதிராக மக்கள் மத்தியிலிருந்து போர் படையைத் திரட்ட முயன்றார்கள் அன்றைய இந்து மன்னர்கள். நியாயமற்ற ஆட்சிகள் அதிகம் நடந்து வந்த அந்த மத்திய காலத்தில் அவ்வாறு மதரீதியான உணர்வுகளைத் தூண்டிவிடுவதன் மூலம்தான் தங்கள் சாம்ராஜ்ஜியங்களைக் காப்பாற்றும் போரில் மக்களை ஈடுபடுத்த முடியும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இந்திய தேசத்திலும் கலாச்சாரத்திலும் முஸ்லிம்கள் இரண்டற சங்கமித்துவிட்ட 21ஆம் நூற்றாண்டிலும் இவ்வாறு மதரீதியான உணர்வுகளைத் தூண்டிவிட்டு முஸ்லிம்களை கருவருக்கும் செயல்திட்டத்தை அமல்படுத்த நினைக்கின்றன பி.ஜே.பி. உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகள்.
ஒரு மோசமான தோல்விக்குப் பிறகு வெளிப்படும் உடனடி கோபத்தைவிட, ஒரு ஆழமான மௌனம் மிகவும் ஆபத்தானது.
 

No comments:

Post a Comment