மக்கள்தொகை: மாபெரும் பிரச்சினை
1950-ம் ஆண்டு சுமார் 35 கோடியாக இருந்த நமது மக்கள்தொகை, கிட்டத்தட்ட மும்மடங்கு பெருகி இன்று 110 கோடியைத் தாண்டிவிட்டது. 2050-ம் ஆண்டுவாக்கில் உலகிலேயே மிக அதிக ஜனத்தொகை உள்ள நாடாக இந்தியா மாறிவிடும் என அஞ்சப்படுகிறது. ஆண்டுதோறும் உலக மக்கள்தொகை ஏழரைக் கோடி அளவுக்கு அதிகரிக்கிறது. இதில் இந்தியாவின் பங்கு மட்டும் ஒன்றரை கோடிக்கு மேலாகும்.
சுதந்திர இந்தியாவில், பிறப்பு விகிதம் குறைந்து கொண்டு வந்திருக்கிறது என்பது உண்மையே. 1951-ம் ஆண்டு, ஆயிரம் பேருக்கு 41 ஆக இருந்த பிறப்பு விகிதம் இன்று 25 ஆகக் குறைந்திருக்கிறது. அதே சமயத்தில், 1951-ம் ஆண்டு ஆயிரம் பேருக்கு 25 ஆக இருந்த இறப்பு விகிதம் இன்று 8 ஆகக் குறைந்திருக்கிறது. இதனால், நிகர மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் ஏறத்தாழ 1951-ம் ஆண்டு இருந்த நிலையிலேயே, ஆயிரத்திற்கு 16 முதல் 17 ஆக இருந்து வருகிறது. நம்முடைய மக்கள்தொகைப் பெருக்கம் கட்டுக்குள் இருக்க வேண்டுமானால், இந்த நிகர வளர்ச்சி விகிதம் ஆயிரத்திற்குப் பத்தாகக் குறைய வேண்டும். அதற்கேற்ற ரீதியில் நாட்டில் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைய வேண்டும்.
கட்டுப்பாடற்ற மக்கள்தொகைப் பெருக்கம் பற்பல பிரச்சினைகளை நமக்கு உருவாக்குகிறது. கடந்த 55 ஆண்டுகளில் நமது தேசிய வருமானம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. ஆனால், அதற்கேற்றபடி தனிநபர் வருமானம் உயரவில்லை. தேசிய வருமானம் மும்மடங்கு அதிகரித்தால் தனிநபர் வருமானம் ஒரு மடங்குக்கும் குறைவாகவே கூடியிருக்கிறது. மக்கள் பெருக்கம் காரணமாக வளர்ச்சியின் முழுப்பயனையும் நாம் அடைய முடியவில்லை. சராசரி வருமானம், ஆயுள், அடிப்படை வசதிகள், கல்வி, மருத்துவக் கவனிப்பு போன்ற பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்படும் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டின்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ள 177 உலக நாடுகளில், இந்தியாவின் இடம் 134. கொரியா, தாய்லாந்து, மாலத்தீவு, சினா போன்ற நாடுகள் முதல் நூறு இடத்திற்குள் இருக்கின்றன. முதல் பத்து இடங்களில் இருக்கும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. சிங்கப்பூருக்கு 25-வது இடம். பாகிஸ்தான் 142-வது இடத்தில் இருக்கிறது என்பதை பார்த்துத்தான் நாம் சற்று ஆறுதல் அடையலாம். ஆனால், பல ஆசிய நாடுகள் முன்னிலையில் இருக்கையில், பாரதம் பின்தங்கியிருக்கலாமா என்பது பற்றி நாம் சிந்தனை செய்ய வேண்டும்.
அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாநில ஆளுநர் பர்னாலா, பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப நாட்டில் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். தற்போதைய கணிப்புகளின்படி, 2016-17-ம் ஆண்டுவாக்கில் நாட்டின் உணவு தானியத் தேவை 33 கோடி டன்னை எட்டும் எனத் தெரிகிறது. 2004-2005-ம் ஆண்டின் உற்பத்தி 21 கோடி டன்னுக்கும் குறைவு. அடுத்த பத்து ஆண்டுகளில் உணவு உற்பத்தி 60 சதவிகிதம் கூட வேண்டும். ஆண்டுக்கு குறைந்தபட்சம் 6 சதவிகித வளர்ச்சி கண்டாக வேண்டும். ஆனால், தற்போதைய வளர்ச்சி விகிதம் 1.1 சதவிகிதம்தான். நம்முன் உள்ள மிகப் பெரிய சவால் விளைபொருள் உற்பத்தியைக் கணிசமாக உயர்த்துவதுதான்.
வறுமை ஒழிப்பு பற்றி 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பேசி வருகிறோம். ஆனால் இன்றும்கூட நாட்டில் 26 கோடிக்கு மேல், அதாவது மொத்த ஜனத்தொகையில் 25 சதவிகிதத்தினருக்கு மேல், மக்கள் வறுமையில் உழன்று கொண்டு இருக்கிறார்கள்.
நாட்டில் கல்வி வசதி பெருகியிருக்கிறது. இருந்தாலும், மக்களில் சுமார் நாற்பது சதவிகிதம் பேர் இன்னமும் எழுத்தறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். சிறுவர், சிறுமியர் அனைவருக்கும் எட்டாவது வரையாவது கல்வி வசதி கிடைத்திட வகை செய்ய வேண்டுமென்ற இலக்கு இருக்கிறது. தக்க கல்வி வசதி நம் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டுமெனில் பள்ளிக்கூடங்கள் நன்கு பராமரிக்கப்பட வேண்டும். வகுப்பறைகள் இன்றி, ஆசிரியர்கள் இன்றி, கரும்பலகைகள் கூட இல்லாமல் நாட்டில் பல பள்ளிகள் இருக்கின்றன என்பது எவ்வளவு அவலமான நிலை!
மருத்துவ வசதிகள் தற்போது கூடியிருப்பது உண்மையே. இருந்தாலும், மக்களின் தேவைக்கு ஏற்ப, மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப, அவை பெருகவில்லை. கொரியா, சினா போன்ற நாடுகளில் நம் நாட்டை விட மருத்துவ வசதிகள் இருமடங்கு கூடுதலாகும். அந்நாடுகளில் உள்ள நிலைமையை எட்ட நமது நாட்டில் டாக்டர்களின் எண்ணிக்கை மும்மடங்குக்கு மேல் அதிகரிக்க வேண்டும். நர்ஸூகளின் எண்ணிக்கை பத்து மடங்கு உயர வேண்டும். ஆஸ்பத்திரி படுக்கைகளின் எண்ணிக்கை ஆறு மடங்காவது அதிகரிக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி ஒருபுறமிருக்க, சமுதாய வளர்ச்சியிலும், மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் நாம் மேலும் தீவிரக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
சுதந்திர இந்தியாவில், ஆரம்பத்திலிருந்தே இதற்குத் தகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தால் இன்று நாம் முன்னணி நாடுகளில் ஒன்றாக முன்னேறியிருப்போம். "குடும்பக் கட்டுப்பாடு" என்ற கொள்கையை முன்னிறுத்தி, ஆண், பெண் அறுவை சிகிச்சைக்கான இலக்குகளின் மேலேயே நாம் முதலில் அதிகக் கவனம் செலுத்தினோம். உள்ளூர் அமைப்புகளின் யோசனைகளையோ, ஒத்துழைப்பையோ நாடாமல் மேல் மட்டத்திலேயே எல்லா முடிவுகளும் செய்யப்பட்டதால், "குடும்பக்கட்டுப்பாடு" திட்டம் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. மேலும், 1975-77-ம் ஆண்டுகளில், நெருக்கடி நிலையின்போது, ஏற்பட்ட கெடுபிடிகளினால், இத்திட்டத்திற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சமீப ஆண்டுகளில், அதுவும் 5 ஆண்டுகளுக்கு முன் தேசிய மக்கள்தொகை கொள்கை அறிவிக்கப்பட்ட பிறகுதான், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். தாய் - சேய் நலப் பராமரிப்பு, கருத்தடை சாதனப் பிரச்சினைகள், ஆங்காங்கு உள்ள மக்கள் குழுக்களின் ஒத்துழைப்பு, பெண்கள் கல்வி, பெண்களின் அந்தஸ்தை உயர்த்தல் போன்ற பல்வேறு அம்சங்களை இணைத்தவாறு செயல்படத் தொடங்கியிருக்கிறோம். "குடும்பக்கட்டுப்பாடு" என்ற வாசகத்திற்குப் பதிலாக "குடும்ப நலம்" என்ற கருத்தை முன்வைத்து, திட்டங்கள் தீட்டி வருகிறோம். மக்கள்தொகைப் பெருக்கம் பற்றிய ஆக்கபூர்வமான சிந்தனைகள் பரவிட நாம் பெரிய எடுப்பில் செயல்பட்டாக வேண்டும். இந்தப் பிரச்சினை ஒரு தேசியப் பிரச்சினை. கட்சி வேற்றுமை இன்றி அனைத்துக் கட்சிகளும் இதில் முழு மனத்துடன் ஈடுபட வேண்டும். அரசு அமைப்புகள் மட்டுமன்றி, தொண்டு அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள், மகளிர் குழுக்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இதில் ஊக்கத்துடன் ஈடுபட வேண்டும்.
ஒருவருக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அவருக்கு அரசு சலுகைகள் மறுக்கப்படும்; அவர் தேர்தலில் வேட்பாளராக இருக்கக்கூடாது என்றெல்லாம் விதிகள் கொண்டு வருவது இந்தியா போன்ற ஜனநாயக நாட்டுக்குப் பொருத்தமாக இருக்காது. தானாகக் கனியாததைத் தடிகொண்டு கனிய வைக்க முயற்சிப்பதற்கு ஒப்பாகும் அது. கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் பெருகினால், வேலை வாய்ப்புகள் அதிகரித்தால், பெண்களின் சக்தி ஓங்கினால், வறுமை ஒழிந்தால் நம்முடைய ஜனத்தொகைப் பெருக்கம் நிச்சயம் கட்டுக்குள் வரும்.
ஏனெனில், மக்கள் சுயமாகச் சிந்தனை செய்து, தங்களுக்கு எது நல்லதோ அதை அவர்களே தெரிவு செய்யும்போது அவர்கள் முன்னேறுகிறார்கள். சமூகம் வளர்கிறது. நாடு வலுப்பெறுகிறது
No comments:
Post a Comment