Monday, October 18, 2010

பெண்களுக்கு பொருளாதாரப் பங்கீடு

பெண்களுக்கு பொருளாதாரப் பங்கீடு

ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்புகளிலும் பெண்களின் பங்கு பற்றி கவனம் செலுத்தப்படுவது மிக சமீப காலங்களில் அதிகம் காணப்படுகிறது. பணம் ஈட்டுவதைக் காட்டிலும், பணம் ஈட்டுவதற்கு ஈடான, பல மறைமுகப் பங்களிப்பைப் பெண்கள் அளித்து வந்துள்ளனர். குடும்பத்தை - அதன் உடைமைகளைப் பேணுவது, ஈடுசெய்ய இயலாத தாய்மை, மனைவி மற்றும் மகள் எனும் உறவுகளின் வழி தம்மை அர்ப்பணித்துக் கொள்வதன் மூலம் மிகப் பெரிய அளவில் பங்களித்து வந்திருக்கின்றனர். இவை கணக்கிடப்படாததால் அவர்களது நிலை சமூகத்தில் இன்னமும் முறையான அங்கீகாரம் அளிக்கப்படாததாக அமைந்துள்ளது. இப்போது, வீட்டை விட்டு வெளியில் பணிக்குச் சென்று பொருள் ஈட்டி, தங்களின் ஈடுபாட்டையும் குடும்பம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கு கொள்வதையும் பெண்கள் உறுதிப்படுத்தி வருகின்றனர்.
அதிகாரத்திலும், ஆட்சியிலும் மகளிர்க்கு இட ஒதுக்கீடு என்பது வெறும் அரசியல் சார்ந்த, ஓட்டு சேகரிக்கும் உத்தியாக இல்லாமல், உண்மையான பொருளாதாரப் பங்களிப்பிற்கு, ஆட்சியையும், அதிகாரத்தையும் அவர்கள் பயன்படுத்தும்படியாக வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
வளர்ச்சிக்கான நேரடி முயற்சிகளில் பெண்கள் அதிக அளவில் பங்கெடுக்கும் பொழுது, பயனும் அதிகம் இருக்குமென நம்பலாம். சுய உதவிக் குழுக்களின் அபரிமித வெற்றிகள் இதற்குச் சான்று! இவர்களுக்கு வாய்ப்புகளைப் பரவலாக்குவதன் மூலம் மிகச் சிறப்பான வளர்ச்சியின் பயன்களை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல இயலும்.
மகளிர்க்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகளில் - சொத்தில் பங்கு, வாழ்வுரிமைக்கான குடும்பப் பொருளாதாரப் பயன்களில் பங்கு என்பவை மகளிர்க்கு முழுமையாகச் சென்றடையாமல் உள்ளன. உதாரணமாக, ஆழிப்பேரலையில் சிக்கி ஒரு குடும்பமே பலி கொள்ளப்பட்டது. குடும்பத்தலைவர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரது அலுவலகத்திலிருந்தும் அளிக்கப்பட்ட பணி ஈட்டுத்தொகை மற்றும் காப்பீட்டுத் தொகைகளை, அந்தக் குடும்பத் தலைவரது விதவைத் தாயாரிடம் அளிக்க சட்டம் இருந்தாலும், அந்த 80 வயதான தாயாருக்கு, அதனை முழு உரிமை கொள்ள இயலவில்லை. நமது சமூகங்களில் இயற்கையாகவே பெண்களுக்கு மறுக்கப்படும் பொருளாதார உரிமைகளில் இதுவும் ஒன்று. அவர் தனது விருப்பத்தின்படி தன்னுடைய மற்ற பிள்ளைகள் / பெண்களுக்குப் பகிர்ந்தளிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மறைந்த பெண்ணின் அலுவலகத்திலிருந்து அளிக்கப்பட்ட பணி ஈட்டுத்தொகை மற்றும் காப்பீட்டுத் தொகையைக் கணவரின் குடும்பத்தினரே பெற்று அனுபவித்தனர். பெண்களுக்கு, அரசியல் வழி அதிகாரம் மற்றும் ஆட்சி ஆகிய இவையிரண்டும் மட்டும் போதுமானதல்ல. பொருளாதாரப் பங்களிப்பிற்கும், பொருளாதார வளர்ச்சியின் பயனைப் பெறுவதில் பங்கு பெறவும் ஏற்ற உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
பஞ்சாயத்தில் தொடங்கி, நாடாளுமன்றம் வரை மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு என பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதுடன், பொருளாதாரப் பங்கீடுகளிலும் மகளிர்க்கு உரிய, வளர்ச்சிக்குத் தேவையான பங்கு அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். கைப்பாவைகளாகப் பெண்கள் அமர்த்தப்படுவதும் அவர்களின் பெயரில் சமூகப் பொருளாதாரப் பலன்களை வேறு யாரோ பெறுவதும் நாம் காணும் காட்சிகளே. ஆயினும், அந்தப் பயன் ஓரளவேனும் உரியவருக்குச் சென்றடையும் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. இது தொடர்ந்து சில ஆண்டுகள் பெறப்படும் பொழுதுதான் நாம் எதிர்பார்க்கும் பெண்களின் சுயசார்பு, சமூகப் பொருளாதாரப் பங்களிப்பு, பயன்களில் உரிமை மற்றும் பங்கு ஆகியவை குறிப்பிடும்படி அமையும்.
அரசின் மகளிர்க்கான திட்டங்களின் ஒதுக்கீடுகள் மகளிர் மேம்பாட்டிற்கும் குடும்ப நலத் திட்டங்களுக்கும் முறையாகவும் தேவையான அளவிலும் செய்யப்படுவதை உறுதி செய்து கொள்ள பெண் உறுப்பினர்கள் முயல்வது இயல்பு. இத்தகைய முயற்சிகளில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஈடுபடும்போது திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு கிடைக்கும்.
ஜனநாயகமும், அடிப்படை மனித உரிமைகளைக் காக்கும் கண்ணியமும் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டுமெனில், பொருளாதார வளர்ச்சிக்குத் தம் பங்கினை ஆற்றும் நம் பெண்களுக்கு, அவற்றின் பயன்களைப் பெறுவதிலும் தகுந்த பங்கும் உரிமையும் கிடைத்திட உறுதி செய்ய வேண்டும்

No comments:

Post a Comment