Friday, November 12, 2010

கிட்னி பெயிலியருக்கு நிரந்தர தீர்வு

கிட்னி பெயிலியருக்கு நிரந்தர தீர்வு

Dr. ரவிச்சந்திரன். MD., DM.,Kidney failure... - Food Habits and Nutrition Guide in Tamil
இன்று "கிட்னி பெயிலியர்" அதிகரித்து வர காரணம் என்ன?
முன்பு உண்ணும் உணவும் இயற்கையாக இருந்தது, உணவுப் பொருள் உற்பத்தியும் இயற்கையாக இருந்தது. விதவிதமான குளிர் பானங்கள், பீசா, மேரி பிரவுன் என்று அயல்நாட்டு துரித உணவு வகைகள், செயற்கை உரம் போட்டு விளைந்த உணவுப் பொருட்கள், சுத்தமற்ற குடிநீர் எல்லாமும் இன்று மனிதனின் இரத்தத்தில் அதிக அழுக்கை (ரசாயனம்) சேர்க்கின்றன. எனவே சிறுநீரகம் அழுக்கான இரத்தத்தை சுத்தப்படுத்த திணறுகிறது. ஆக இரத்த சுத்திகரிப்பு கடினமான நிலையில் சிறுநீரகம் மெல்ல, மெல்ல பாதிப்படைய ஆரம்பித்து விடும்.

சிறுநீரகத்தின் பணி - இரத்தத்தை சுத்தப்படுத்தும் வேலையாகும். உணவுப் பொருளின் மூலம் இரத்தத்தில் சேரும் அழுக்கு மட்டும் "கிட்னி பெயிலியருக்கு" காரணம் என்றாலும் கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தம், தீவிர சர்க்கரை நோய் போன்றவை காரணமாகவும் கிட்னி செயல் இழக்கலாம்.

உணவில் உப்பு அதிகம் சேருவதும்... சிறுநீரக செயல் இழக்க காரணமாகுமா?
பொதுவாக உப்பில் 4 வகை உள்ளன. அவை சோடியம் (சாப்பாட்டு உப்பு), பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் ஆகும். இதில் நமது உடம்பிற்கு ஒரு நாளைக்கு 1.5 கிராம் உப்பு, (சோடியம்) போதுமானது. ஆனால் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியத்தைவிட விலை மலிவு, எளிதில் கிடைக்கும். மற்றும் சுவை சம்பந்தப்பட்ட காரணங்களால் சோடியம் உப்பையே நாம் அதிகம் பயன் படுத்துகிறோம். தினமும் 1.5 கிராமிற்கு அதிகமாகவே உணவின் மூலம் நம் உடம்பில் உப்பு சேருகிறது. முன்பெல்லாம் வியர்வை, சிறுநீர் வழியாக தானாகவே இந்த உப்பு (சோடியம்) உடம்பிலிருந்து வெளியேறி விடும். இன்று வியர்வைக்கு வழியே இல்லை. எனவே மிதமிஞ்சிய உப்பு இரத்தத்தில் சேர்ந்து விடுகிறது. எனவே உப்பை அதிகம் அளவில் உண்பதும் சிறுநீரக பாதிப்பிற்கு காரணமாகிறது. குறிப்பாக கல் உப்பைவிட ரீபைண்ட் உப்பில் சோடியத்தின் அளவு அதிகம் உள்ளது என்பது பலருக்குத் தெரிவதே இல்லை.

சிறுநீரக பாதிப்பை மருந்து மாத்திரையினால் மட்டும் குணப்படுத்த முடியாதா?
கிட்னி பாதிப்பின் ஆரம்ப நிலையில் மருந்து மாத்திரையிலேயே குணப்படுத்தி விடலாம். ஆனால் சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக "எந்த வலியும், உபத்திரவமும்" நோயாளிக்குத் தெரியாததினால் ஆரம்ப நிலையில் இதனை எவரும் கவனிப்பதில்லை. இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் என்று மருத்துவரிடம் சென்றால் அந்த மருத்துவர்களும் "சிறுநீரக பரிசோதனையை" வலியுறுத்துவதில்லை. எனவேதான் முழுதுமாக கிட்னி பெயிலியரான பின்னரே நெப்ராலஜி (சிறுநீரக நிபுணர்) டாக்டரிடம் வருகிறார்கள்.

உறவினர் மட்டும்தான் சிறுநீரகத்தை தானமாகத் தர முடியுமா?
இன்றைய நாளில் யார் வேண்டுமானாலும் சிறுநீரகத்தை தானமாகத் தரலாம். உறவினர் - உறவினரல்லாதவர் எவரும் கொடுக்கலாம். முன்பு கிட்னி தானம் தருபவருக்கும், கிட்னி பெயிலியர் நோயாளிக்கும் இரத்தப் பொருத்தம், திசுப் பொருத்தம் இருந்தால்தான் கிட்னியை தானமாகத் தரமுடியும். ஆனால் இன்று எந்த இரத்த வகை, எந்த திசு வகையினரும் யாருக்கும் சிறு நீரகத்தை தானமாகத் தரலாம். ஆனால் பணத்திற்காகவோ, கட்டாயப்படுத்தியோ கிட்னியை தானமாகப் பெறக்கூடாது.

டயாலிஸிஸ் என்பது என்ன?
சிறுநீரகம் ஒரு வடிகட்டியை போல செயல்பட்டு இரத்தத்தை தொடர்ந்து சுத்தப்படுத்துகிறது. கிட்னி செயல் இழக்கும்போது இரத்தத்தில் அழுக்கு சேர ஆரம்பிக்கும். இந்த அழுக்கை செயற்கை முறையில் எந்திரம் மூலம் இரத்தத்திலிருந்து அகற்றுவதற்கு பெயர்தான் டயாலிஸிஸ் எனப்படும்.
இப்போது புழக்கத்தில் ஹுமோ டயாலிஸிஸ் எனும் மெஷின் மூலம் இரத்தத்தை சுத்திகரிக்கும் முறையும், பெரிடோனியல் டயாலிஸிஸ் எனும் வயிற்றில் இருக்கும் ஜவ்வுப் பகுதியை தண்ணீர் செலுத்தி சுத்தப்படுத்தும் முறையும் உள்ளது.

டயாலிஸிஸ் எத்தனை நாளைக்கு ஒரு தடவை தேவை?
சரியாகச் சொல்ல வேண்டுமெனில் கிட்னி பெயிலியர் ஆனவர் தினமும் டயாலிஸிஸ் செய்துகொள்வது தான் சரியானது. ஆனால் செலவு அதிகமாகும். இருப்பினும் அவசியம் வாரம் 3 தடவை டயாலிஸிஸ் உயிர் வாழத் தேவைப்படும்.

கிட்னி பெயிலியருக்கு நிரந்தர தீர்வு என்ன?
கிட்னியை தானமாகப் பெற்று கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதுதான் நிரந்தரமான தீர்வாகும். எதிர் காலத்தில் ஜுனோ டிரான்ஸ் பிளாண்ட் எனும் விலங்குகளிலிருந்து உறுப்பை எடுத்து பொருத்துதல், செயல் இழந்த உறுப்பை மறுசீரமைப்பு செய்யும் ரீ-ஜெனரேட்டிவ் மெடிசன் போன்ற நவீன மருத்துவ வசதிகள் வரலாம்.

ஹார்ட் அட்டாக், சர்க்கரை நோய், காச நோய்... போல கிட்னி பெயிலியர் குறித்த விழிப்புணர்வின்மைக்கு என்ன காரணம்?
காச நோய், எய்ட்ஸ், கேன்சர்... போன்றவை உயிர்கொல்லி நோய் பட்டியலில் கொண்டு வரப்பட்டு உலக அளவில் நிதியுதவி கிடைக்கப் பெறுகிறது. கிட்னி பெயிலியர் உயிர் கொல்லி நோய் பிரிவில் வந்தால் தான் கிட்னி செயல் இழக்காமல் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான (பிரிவென்ஷன்) நிதி உதவி கிடைக்கும்.

சர்க்கரை நோயாளிக்கு சிறுநீரில் உப்பு அதிகம் போகிறதா? சிறுநீரகத்தை கவனியுங்கள்!
கர்ப்ப காலத்தில் சிறு நீரில் உப்பு வெளியேறுகிறதா? சிறுநீரகத்தை பரிசோதியுங்கள்!

கண்ணில் ரெடினோபதியா? சிறு நீரகத்தையும் டெஸ்ட் பண்ணுங்கள்...

என்று பிரச்சாரம் செய்யலாம். இதன் மூலம் விழிப்புணர்ச்சி உருவாகும்.

கிட்னியை திருட முடியுமா? இது போன்ற சர்ச்சைகள் வருவதற்கு காரணம் என்ன?

கிட்னி பெயிலியர் ஆன நோயாளி, கிட்னி தானம் செய்பவர், டாக்டர், மருத்துவமனை நான்கு பேரின் ஒத்துழைப்புடன்தான் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும். இதில் அதிகம் நன்மை அடைபவர் நோயாளியே.

பின்னாட்களில் கிட்னி தானத்தில் சிக்கல் ஏற்பட்டால் நோயாளி, தானம் தந்தவர் இருவரையும் விட்டு விட்டு மருத்துவரை மட்டும் குற்றம் சுமத்தும் சூழல்தான் இங்கு உள்ளது. அதனால்தான் இது போன்ற சர்ச்சைகள் எழுகின்றன. உண்மையில் ஒருவரின் சம்மதம் இல்லாமல் மருத்துவர்கள் சிறுநீரகத்தை தானமாக பெற முயற்சிக்கவே மாட்டார்கள். அது எவ்வளவு சட்டச் சிக்கலுக்குரியது என்று அவர்களுக்கும் தெரியும். சம்மதத்துடன் கிட்னியை தானம் தந்தவரே பின்னாட்களில் மாற்றி பேசுகிற நிலைமையில்தான் "கிட்னி திருட்டு" என்கின்ற செய்தி பரபரப்பாகிறது. கூர்ந்து பார்த்தால் அதில் உண்மையிருக்காது.

அதிக செக்ஸ் ஈடுபாடு, சுய இன்பம் போன்றவற்றால் கிட்னி பாதிப்படையுமா?
நமது உடம்பின் நோக்கமே சாப்பாடும் இன்னொரு உயிரை உருவாக்கலும்தான். நாம் சாப்பிடும் சாப்பாடோ ரசாயன கலப்பாகிவிட்டது. பொதுவாக செக்ஸில் ஈடுபடும்போது உடம்பில் எதிர்ப்பு சக்தி குறையும். அப்போது வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவி கிட்னி பாதிப்படையலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக, காம களியாட்டங்களில் ஈடுபடுவோருக்குத்தான் இந்நிலைமை ஏற்படும். சுய இன்பத்தால் சிறுநீரகம் பாதிக்கும் என்பது போலி மருத்துவர்கள் எழுப்பிய கட்டுக் கதை நம்பாதீர்கள்.

சிறுநீரக பாதிப்பு வராமல் இருக்க என்ன ஆலோசனை?

உடம்பின் நிலை, அதன் செயல்பாட்டை புரிந்து கொள்ளும் அறிவு வேண்டும்.
ஜங்க் ஃபுட், பீசா போன்ற துரித உணவுகளை தவிர்க்கவும். உப்பை குறைவாக பயன்படுத்த வேண்டும். வியர்வை வெளியேற உடற்பயிற்சி அவசியம். தானியங்களை ஊற வைத்து அந்த தண்ணீரை குடிக்கலாம்.

No comments:

Post a Comment