ஏன் இந்த வேகம்?
மனத்திற்கு நம்மை ஐந்து வகையில் நிர்வகிக்கும் ஆற்றல்கள் உண்டு. அவை
எதையும் சரியான கோணத்தில் பார்த்தல்; Right Focussing.
தவறான கோணத்தில் பார்த்தல்; Wrong focussing.
நினைவில் வைத்து வெளிப்படுத்துதல்; Memory focussing.
கற்பனை செய்தல்; Imagination
தூங்க வைத்தல்; Sleep
ஆக, நினைவாற்றல் என்பது, மனம் நிர்வகிக்கும் ஐந்து பணிகளில் ஒன்றே தவிர, அது மட்டுமே மனத்தின் பணியல்ல.
மனத்தை முழுதும் தன் வயப்படுத்தியோர்க்கு, இந்த ஐந்து வகை நிர்வாகமும் சொந்தக் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.
ஒவ்வொன்றையும் நம் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர முடியும்; முயல வேண்டும்.
என்ன முயற்சி?
ஒவ்வொன்றிற்கும் உரிய நேரத்தை ஒதுக்க வேண்டும்; உரிய நேரத்தை மட்டுமே ஒதுக்க வேண்டும்.
* ஒரேயடியாய்த் தூங்குபவன் உருப்பட்டதில்லை.
* அளவுக்கதிகமாய்க் கற்பனையில் மிதப்பவன் செயல்படுவதில்லை.
* தன் மூளை ஆற்றலை வியந்து, ஒரேயடியாய் அதற்கு வேலைப்பளு கொடுத்தவன், கடைசிவரை அதைக் கொண்டு செலுத்தியதில்லை.
* தவறான கோணத்தில் மட்டுமே பார்க்கத் தெரிந்தவன், புகழுடனும் பெருமையுடனும் வாழ்ந்ததில்லை.
* சரியான கோணத்தில் மட்டுமே பார்க்கத் தெரிந்தவன், சிலுவைக்கும், துப்பாக்கிக்கும், நஞ்சுக்கும் தப்பி, முழு ஆயுளுடன் உலகில் வாழ்ந்ததில்லை.
எனவேதான் திருவள்ளுவர்கூட, "அறிவாளிகளிடம் அறிவாளியாய் இரு; முட்டாள்களிடம் முட்டாள்போல் இரு!" என்பார்.
எனவே, இவை ஒவ்வொன்றிற்கும் நேரம் ஒதுக்குவதில் மிகுந்த கவனம் வேண்டும். எந்த ஒன்றும் அளவு தாண்டி, நம் மனத்தை அழுத்த நாம அனுமதிக்கக்கூடாது.
ஏனெனில், நம் வாழ்க்கையே அளவை அடிப்படையாய்க் கொண்டது.
மனம், எதையும் உடனே முழுமையாக்கத் துடிக்கும்.
பார்ப்பது எதுவானாலும், அதன் அத்தனை பரிமாணங்களையும் அழகாக, அனுபவித்துப் பார்க்கப் பழகுங்கள்.
கேட்பதை, முழு ஈடுபாட்டுடன் கேட்கத் தொடங்குங்கள்.
தொடுவதை, உணர்வுடன் தொடுங்கள்.
சுவைப்பதை, நிதானமாகச் சுவைக்க ஆரம்பியுங்கள்.
நாளடைவில் மனம், தானாய் அடங்கி நிகழ்காலத்தில் நிற்கும். தொடங்கும் போதே முடிவுக்குச் செல்லத் துடிக்க மாட்டோம்.
வெற்றியும் இன்பமும் தாமே வெளிப்படும். இன்பம் என்பது வெளியிலிருந்து வருவதல்ல; அது ஏற்கெனவே நம்முள் இருக்கிறது.
பயிற்சி கொடுத்து எந்த ஆற்றலையும் உடலுக்குள் திணிக்க முடியாது. ஏற்கெனவே எல்லா ஆற்றல்களும் நமக்குள் இருக்கின்றன. அவற்றை வெளியே வர விடாமல் தடுக்கும் தடைகளை மட்டும் நீக்கினால் போதும்: ஆற்றல் வெளிப்படத் தொடங்கிவிடும்.
No comments:
Post a Comment