வெற்றி சிந்தனைகள்
காலத்தைக் கவனமாகக் கையாளுவோம்!
காலத்தின் பெருமையையும், எதையும் உரிய காலத்தில் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் நீங்கள் உணர வேண்டும்.
"எனக்கு நேரமே சரியில்லை!" என்று புலம்புகின்ற மனிதர்கள் சிலர். "என்றைக்கு நல்ல காலம் பிறக்குமோ!" என்று பெருமூச்சுவிடுபவர் சிலர்.
"நேரமும் காலமும் வந்து ஒண்ணா சேர்ந்திடுச்சிண்ணா நடக்கிறதெல்லாம் நல்லபடியாக நடந்திடும்" என்று நல்ல நேரத்துக்காக சோதிடர்களிடம் நாள் நட்சத்திரம் பார்க்கச் செல்லுபவர்கள் சிலர்.
இப்படி, நாம் அடிக்கடி பயன்படுத்தும் சொல்தான் "நேரம் - காலம் - Time"
இவ்வாறு காலத்தின் பெருமை பற்றிப் பல கருத்துகள் கூறப்பட்டாலும் நம்மில் பலர் காலத்துக்கு உரிய மதிப்பளிக்காமைக்குக் காரணம் காலத்தின் மதிப்பு அவர்களுக்குத் தெரியாமைதான்.
"என்ன செய்வதென்றே தெரியவில்லை"
"சே! ரொம்ப சலிப்பாக இருக்கிறது"
"இப்ப போனா போகட்டும்; பிறகு பார்த்துக்கலாம்!"
"என்றைக்காவது ஒருநாள் வராமலா போய்விடும்!"
இப்படியெல்லாம் பேசி, காலத்தை வீணடிப்பவர்களும் உண்டு. நாமும் அவர்களை போல் இல்லாமல் காலம் பொன்போன்றது என்று நினைத்து காலத்தை கவனமாக கையாளுவோம். அவ்வாறு காலத்தைக் கவனமாகக் கையாள வேண்டுமானால் அதற்கான 10 கட்டளைகள்.
1. வெட்டிப் பேச்சு பேசுவதை விட்டொழியுங்கள்.
2. சோம்பேறிகள், சுகவாசிகள், வேறு வேலையில்லாதவர்களோடு பழகாதீர்கள்.
3. வாழ்க்கைக்குப் பயன்தராத புத்தகங்களைப் படிக்காதீர்கள்.
4. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்களைப் பொறுத்தவரையில் மிகவும் சிறந்த நிகழ்ச்சிகளை மட்டும் கேளுங்கள் - பாருங்கள்.
5. இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள் - நாளைய வேலையைக்கூட முடிந்தால் இன்றே செய்யுங்கள்; ஆனால், இன்று செய்ய வேண்டிய வேலையை, நாளைக்கு என்று ஒருபோதும் ஒத்திப் போடாதீர்கள்.
6. செய்யக்கூடிய வேலையை முக்கியமானவை, அவசரமானவை, வழக்கமானவை, ஒன்றுக்கும் உதவாதவை எனத் தரம் பிரித்து, கிடைக்கும் நேரத்தில் வரிசைப்படி செய்து முடியுங்கள்.
7. எந்த வேலையையும் இதற்குள் முடிப்பேன் என்று ஒரு காலக்கெடு வைத்து அதற்குள் முடிக்க முயற்சியுங்கள்.
8. நாளைக்கு என்ன வேலை செய்ய வேண்டும்? யாரைச் சந்திக்க வேண்டும்? என்ன பேச வேண்டும்? என்பதை இன்றைக்கே குறித்து வையுங்கள்.
9. உடற்பயிற்சி செய்து, உடலை ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக வைத்திருங்கள்.
10. நல்ல ஓய்வு எடுங்கள். போதிய உறக்கம் தேவை. தியானம் செய்யுங்கள்
No comments:
Post a Comment