நாடாளுமன்றத்தில் காலித்தனம் செய்ய மாதச்சம்பளம் ரூ. 1,40,000
நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்களுக்கும் தலா மாதச்சம்பளம் ரூ50,000. அத்துடன் தொகுதிப் படிப்பணம் மாதம் 45,000 ரூபாய். சொந்த அலுவலகச் செலவுக்கு மாதம் 45 ஆயிரம் ரூபாய். ஆக மொத்தம் 1,40,000 ரூபாய் சுளையாக மாதச் சம்பளம்.
வானூர்திப் போக்குவரத்து, தொடர் வண்டிப் போக்குவரத்து, தொலைபேசி போன்ற இலவசங்கள் ஏராளம், ஏராளம்! (உறுப்பினர் மனைவி - கணவன் வானூர்தியில் முதல் வகுப்பில் எத்தனை தடவை வேண்டுமானாலும் போய்வரலாம்.)
இவர்களுக்கு ஏற்கெனவே மாதச் சம்பளம் ரூ16,000, தொகுதிப் படிப்பணம் ரூ20,000, சொந்த அலுவலகப் படிப்பணம் ரூ20,000. இப்பொழுது மாதச் சம்பளம் மும்மடங்காக உயர்த்தப்பட்டு ரூ50,000 ஆக்கப்பட்டுள்ளது. தொகுதிப் படிப்பணம் உயர்த்தப்பட்டு ரூ 45,000 ஆக்கப்பட்டுள்ளது. சொந்த அலுவலகச் செலவுக்கான மாதத் தொகை 45 ஆயிரம் ரூபாய் ஆக்கப்பட்டுள்ளது.
80,001 ரூபாய் ஆக மாதச் சம்பளத்தை உயர்த்த வேண்டுமென்று மக்களவையில் உறுப்பினர்கள் "போராடி" அவைக்கூட்டம் இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. அப்போராட்டத்திற்கு லாலுவும் முலாயமும் தலைமை தாங்கினார்கள். மற்றும் ஐக்கிய சனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சி, அகாலிதளம், சிவசேனை ஆகிய கட்சிகள் பற்கேற்றன.
அத்தோடு நிற்காமல் அவைக்குள் போட்டி மக்களவைக் கூட்டமும் நடத்தினர். இந்தப் போட்டி நாடாளுமன்றக் கூட்டத்தில் லாலுபிரசாத் பிரதமராகவும், கோபிநாத் முண்டே (பா.ஜ.க.) அவைத் தலைவராகவும் செயல்பட்டனர். (பா.ஜ.க. தலைமை பின்னர் போட்டி அவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தன் கட்சி உறுப்பினர்களைக் கண்டித்தது.)
நடுவண் அரசின் செயலாளர்களுக்கு மாதச் சம்பளம் 80,000 ரூபாயாக இருப்பதால், ஒரு ரூபாய் கூடுதலாக்கி ரூ80,001 ஆக தங்களுக்குச் சம்பளம் தரவேண்டுமென்று கேட்டனர் மக்களவை உறுப்பினர்கள்.
நடுவண் அரசின் செயலாளர், உயர் நீதிமன்ற, உச்சநீதி மன்ற நீதிபதிகள் உள்ளிட்டோருக்கு உயர்த்தப்பட்டுள்ள சம்பள உயர்வு அநீதியிலும் அநீதி.
எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.இ., பி.எச்.டி., எம்.ஏ., எம்.எஸ்.சி., போன்ற படிப்புகள் படித்துத் தேறியவர்கள் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் உள்ள வேலை கிடைத்தால் போதுமென்று ஆலாய்ப் பறக்கின்றனர்.
தொழிற்சாலைகளில் திறன் பெற்ற தொழிலாளர்கள் ஒப்பந்தக் கூலிகளாக மாதம் 4 ஆயிரம் சம்பளத்திற்கு அல்லாடுகின்றனர். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், இளநிலை பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் என பயிற்சிகள் முடித்த இளைஞர்கள் வேலையின்றி அலைகிறார்கள்.
ஆண்டிற்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் நாளொன்றுக்கு நூறு ரூபாய்க்கு மண் சுமக்கும் கிராமத்துப் பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் பல கோடிப் பேர்.
இந்த நாட்டில் செயலாளர் பதவி வகிக்கும் ஒருவர்க்கு ஒரு நாள் சம்பளம் ரூ3076.92. அவருக்கு மகிழுந்து இலவசம். ஊழியர்கள் பலர் அரசுச் சம்பளத்தில்! சட்டப் படியான இதர வரவுகள் ஏராளம்.
இரு அவை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாத வருமானம் தலா ரூ1,40,000 எனில், ஒரு நாள் ஊதியம் ரூ 5,384.62. (வேலை நாள் 26 என்று கணக்கிட்டால்) இதுவன்றி இவர்கள் அவைக் கூட்டத்தில் கலந்து கொண்டால் ஏற்கெனவே ஒரு நாளைக்கு ரூ1,000 படிப்பணம் என்றிருந்தது இப்போது இரட்டிப்பாக்கப்பட்டு ரூ2,000 ஆக உயர்ந்துவிட்டது. அவ்வாறான நாள்களில் - ஒரு நாள் ஊதியம் 5,384.62 + 2,000.00 = ரூ7,384.62.
வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு விட்டு, அவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளா விட்டாலும் ஒரு நாளைக்கு ரூ2,000 படி உண்டு.
ஒரு நாள் கூலியாக 65 ரூபாய் பெறுவதற்கு, விடிவதற்குள் வேனில் ஏறி இரவு வீடுவந்து சேரும் சிவகாசி தீப்பெட்டித் தொழிற்சாலைப் பெண்களின் வாக்குகளைப் பெற்றுச் சென்றவர்கள் ஒரு நாள் ஊதியமாக ரூ7,384.62 பெறுகிறார்கள்.
இந்த வருமானங்கள் மட்டுமா? தொகுதி மேம்பாட்டு நிதி என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது. இவ்வேலையை தமக்கு வேண்டிய ஒப்பந்தக்காரர்களிடம் கொடுத்து தமக்கு வேண்டிய தொகையை வெட்டிக் கொள்கிறார்கள். இன்னும் வெளியே தெரியாத வெவ்வேறு கமுக்க பேரங்களில் பலர் அடிக்கும் கொள்ளைகள் ஏராளம்.
மக்கள் வரிப்பணத்தில் இந்த அளவு கொள்ளையடிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக் கூட்டங்களில் முழுமையாகக் கலந்து கொள்கிறார்களா? அதுவும் இல்லை. தொலைக்காட்சியில் பார்க்கும் போது அவைக் கூடம் காலியாகக் கிடக்கின்றது. கொஞ்சம் பேர் அங்கும் இங்குமாக அமர்ந்திருக்கிறார்கள். மற்றவர்கள் ஊர்மேயப் போயிருப்பார்களோ?
அவையில் கலந்து கொண்டாலும் அங்கு விவாதம் நடக்கிறதா? நாட்டு மக்களின் வாட்டம் போக்கிட நல்ல கருத்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்களா? கலந்தாய்வு செய்கிறார்களா? இல்லை. கலாட்டா செய்கிறார்கள். அவைக் கூட்டம் நடக்கக் கூடாது. ஒத்திவைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வருகிறார்கள். அதே எதிர்பார்ப்புடன் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அவைக்கு வருகிறார்கள்.
ஒலிவாங்கியைப் பிடுங்கி எறிவது, ஊளையிடுவது, கொச்சைச் சொற்களால் குதறிக் கொள்வது, கூச்சல் போடுவது என வகை வகையாய் காலித்தனங்களை அரங்கேற்றுகிறார்கள். இந்தக் காலித் தனத்தில் ஈடுபடுவதற்காக ஒரு நாள் சம்பளம் ரூ7,384.62.
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்படி எந்த நிர்வாகப் பொறுப்பும் இல்லை. அவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு "ஆம்" - "இல்லை" என்று அறிவித்தால் போதும். கோயில் மாடுகளை விடவும் பொறுப்பற்ற கூட்டமாக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வைக்கப்பட்டுள்ளார்கள்.
மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி நடக்கிறது என்று காட்டுவதற்கான சோளக் கொல்லை பொம்மைகள்தான் இவ்வுறுப்பினர்கள்.
இவர்களின் வருமானத்தை இந்த அளவு வீங்கிப் பெருக்கச் செய்வது ஏன்? பிரெஞ்சுப் புரட்சி போல், பாரீஸ் கம்யூன் புரட்சி போல், ரஷ்யப் புரட்சி போல் மறுபடியும் பல்வேறு நாடுகளில் மக்கள் கலகம் செய்து, உள்நாட்டு முதலாளிகளையும் பன்நாட்டு முதலாளிகளையும் வீழ்த்தி, புரட்சியில் ஈடுபடாமல் தடுத்திட, மக்களின் ஆட்சி நடப்பது போன்ற மாயத் தோற்றமே இந்த சனநாயக நாடகம். இந்த நாடகத்தின் கதாபாத்திரங்களே நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள்.
சர்க்கஸ் கோமாளிகள் போன்ற இவர்களுக்கு அவையில் வாக்களிக்கும் உரிமையும் ஆட்சியைத் தீர்மானிக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. சனநாயக நாடகத்தில் உள்ள உண்மைக் காட்சி அது மட்டுமே. எனவே, இவர்களில் பலரை உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளும் அரசியல் கட்சித் தலைமைகளும் வலைவீசிப் பிடிக்கின்றனர். விலைபேசி முடிக்கின்றனர்.
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் விலையை பன் மடங்கு உயர்த்திவிட்டது உலகமயம். மக்கள் வரிப்பணத்திலிருந்தே அந்த விலையை ஆளும் வர்க்கம் கொடுக்கிறது. ஆளும் வர்க்கம் மக்கள் வரிப்பணத்தில் அடிக்கும் கொள்ளையோடு இந்த சம்பள உயர்வை ஒப்பிட்டால் இது ஒரு பிச்சைக் காசுதான். கடந்த ஆண்டில் இந்தியப் பெருமுதலாளிகளுக்கு இந்திய அரசு செய்த வரித்தள்ளுபடி மட்டும் ரூ2.25 இலட்சம் கோடி.
முதலாளிகளுக்கு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும், அவ் உறுப்பினர்களுக்கு முதலாளிகளும் என்று ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கின்றனர். விலை போவதில் ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி, வலதுசாரி, இடதுசாரி என்ற வேறுபாடில்லை. அவர்களுக்குள் விதிவிலக்காக சில அன்னப்பறவைகள் உண்டு. அவை மிகமிகக் குறைவு.
சுவிட்சர்லாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சம்பளம் தருவதில்லை. கூட்டத்தில் கலந்து கொண்டால் படிப்பணம் மட்டுமே வழங்குகிறார்கள். அங்கு அவர்கள் பகுதி நேரப் பணியாளர்களே. சொந்தமாகத் தொழில் செய்ய உரிமை உண்டு. இதே முறை இங்கும் வரவேண்டும்.
வானூர்திப் பயணம், வசந்த மாளிகைக் குடியிருப்பு, பன்னாட்டு முதலாளிகளின் பகட்டு விருந்துகள், அயல்நாட்டுத் தூதுவரின் அரவணைப்பு, ஆட்சியாளர்கள் அமைக்கும் குழுவில் உறுப்பு வகிக்கும் பொறுப்பு என இத்தனையும் போதாதென்று மக்களின் வரிப்பணத்தையும் சூறையாட வேண்டுமா நாடாளுமன்ற உறுப்பினர்கள்?
மன்னர் மானியம் ஒழிக்கப்பட்டுவிட்டது. சனநாயக மன்னர்களின் மானியம் பன்மடங்கு உயர்ந்துவிட்டது.
No comments:
Post a Comment