பாதிக்கப்பட்டவர்கள் பலவீனமானவர்கள் என்பதால் நிராதரவாக விடப்பட்டிருக்கிறார்கள்!
தமிழக அரசியல் களத்தில் செல்வாக்குப் பெற்றவர்கள் பற்றிய கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டதற்காக மதுரைத் தினகரன் அலுவலகத்தின் மீது 2007 மே 9 அன்று தாக்குதல் நடத்தி, அதன் மூன்று அப்பாவி ஊழியர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை முதலில் மாநிலக் காவல்துறைக் குற்றப்பிரிவினரும் பின்னர் மத்தியப் புலனாய்வுத் துறையினரும் விசாரித்ததும் அது தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் விடுதலை செய்து 2009 டிசம்பர் 9 அன்று தீர்ப்பளித்ததும் அனைவரும் அறிந்த செய்தி. இது போன்ற முக்கியத்துவமுடைய வழக்குகளின் விசாரணை, நீதிமன்ற நடைமுறைகளின் மீது அக்கறை காட்டும் ஊடகங்கள் இம்முறை மௌனமாக இருந்தன. விசாரணை குறித்த விவரங்களையோ தீர்ப்பு குறித்த விமர்சனங்களையோ வெளியிடுவதில் தமிழ் அச்சு, தொலைக்காட்சி ஊடகங்கள் அநேகமாக எவ்வித அக்கறையையும் காட்டவில்லை. இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட, பட்டப்பகலில் தன் ஊழியர்களில் மூன்று பேரின் உயிர்களைப் பறிகொடுத்த தினகரன் நாளிதழுங்கூட விதிவிலக்காக இருக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சியூட்டக்கூடியது.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிப்பது தவிர வேறு வழியற்ற நிலைக்கு விசாரணை நீதிமன்றம் தள்ளப்பட்டது. அரசுத் தரப்பின் முக்கியச் சாட்சிகளில் பெரும்பாலானோர் விசாரணை அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலங்களை நீதிமன்ற விசாரணைகளின்போது மறுத்து, பிறழ்வு சாட்சிகளாக மாறி அரசுத் தரப்பைத் தோற்கடித்துக் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிக்க உதவியுள்ளனர். பிறழ்வு சாட்சிகளாக மாறியவர்களில் சப் இன்ஸ்பெக்டர் ஆலடியான், சரவணக்குமார், ராம் நாராயணன், இன்ஸ்பெக்டர் தெய்வீகப் பாண்டியன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரப் பாண்டியனும், தினகரன் ஊழியர்கள் முத்துப் பாண்டியன், ஆர்.எம்.ஆர்.ரமேஷ், ஸ்ரீனிவாசகன் போன்றோரும் அடங்குவர். இதைவிடக் கவலைக்கிடமான ஒரு விசயம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தன் கடமையைச் சரியாகச் செய்யத் தவறியதுதான். குறுக்குவிசாரணையின்போது அநேகமாக அவர் ஒன்றுமே செய்யவில்லை. எதற்காகவோ பயந்து சாட்சிகள் எல்லோரும் பொய் சொல்கிறார்கள் என அவர் தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டது போல்தான் இருந்தது. சாட்சிகளைப் பயம் கவ்வியிருந்தது. விசாரணை அதிகாரிகள், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் எல்லோரும் ஏதோவொரு சக்தியைக் கண்டு பயந்துபோயிருந்தார்கள் என்பது தெரிகிறது.
வேலியே பயிரை மேய்ந்த கதைக்குச் சிறந்த உதாரணம் இந்த வழக்கு. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளும் தன் சக ஊழியர்களைப் பறிகொடுத்திருந்த தினகரன் அலுவலக ஊழியர்களுங்கூட முதற்கட்ட விசாரணையில் தாம் காவல் துறையிடம் அளித்த வாக்குமூலங்களை சிபிஐ விசாரணையின்போது மறுத்திருக்கின்றனர். சிபிஐ விசாரணையின்போது அவர்கள் அளித்துள்ள வாக்குமூலங்கள் உண்மையானால் முதன்முதலில் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலம் பொய் என்றாகிவிடுகிறது. காவல் துறையினரிடம் முதலில் அளித்த வாக்குமூலம் உண்மையென்றால் சிபிஐ அதிகாரிகளிடம் பொய் சொல்லியிருக்கிறார்கள் என்றாகிவிடுகிறது. இந்த வழக்கையும் அது தொடர்பாகப் பல்வேறு கட்டங்களில் நடந்துவந்த விசாரணைகளையும் தொடர்ந்து கவனித்துவருபவர்களால்கூட உண்மை எது, பொய் எது என்பதைப் பகுத்தறிய முடியாத அளவுக்கு விசாரணை நடைமுறைகள் திட்டமிட்டுக் குழப்பப்பட்டன. உண்மையைக் கண்டறியும் எள்ளளவு முனைப்புங்கூட நீதிமன்றத்துக்கு இருந்ததாகத் தெரியவில்லை.
பிறழ்வு சாட்சிகளாக மாறியவர்கள் மிக எளிதாகத் தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமும்கூட இனிவரும் காலங்களில் சாட்சிகளுக்கு அதிகப் பாதுகாப்பளித்து அவர்கள் உண்மையைச் சொல்லும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்னும் மென்மையான கருத்தோடு தன் கடமையை முடித்துக்கொண்டது.
நீதிமன்றத்தின் கையறுநிலையை எப்படிப் புரிந்துகொள்வது? ஜெஸிகாலால், பிரியதர்சினி மட்டோ ஆகியோரது கொலை வழக்குகளில் குற்றப்பின்னணிகளை வெளிக்கொண்டு வந்ததிலும் உண்மையான குற்றவாளிகள் தண்டனை பெறத்தக்க வகையில் விவாதங்களை வளர்த்தெடுத்ததிலும் ஊடகங்கள் பெரும் பங்குவகித்தன. அவர்கள் பெண்களாகவும் அழகான தோற்ற முடையவர்களாகவும் இருந்ததால் தான் ஊடகங்கள் அவர்களுக்காகக் குரல் கொடுத்தனவா என்னும் கேள்வி எழுகிறது. ஏனெனில் தினகரன் ஊழியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் அவை கைகளைக் கட்டிக்கொண்டிருந்துவிட்டன. எந்தவொரு விசயமும் ஊடகக் கவனம்பெற ஏதாவது கவர்ச்சிகரமான அம்சம் இருக்க வேண்டுமென ஊடகங்கள் கருதுகின்றனவா? இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதை அரசு தன் தோல்வியாகக் கருதவேயில்லை. வழக்கின் தோல்விக்குக் காரணமானவர்களும் பிறழ்வு சாட்சிகளுமான தன் ஊழியர்கள்மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? குறைந்தபட்சம் அரசின் ஒரு துறையிடம் - காவல்துறை, சிபிஐ அல்லது நீதிமன்றம் - அவர்கள் பொய் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள்மீது நீதிமன்றத்தாலும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
ஒருபுறம் சத்யமேவ ஜயதே என முழங்கிக்கொண்டே மறுபுறம் பொய் சொல்வது நமக்கு இயல்பானதாகத் தென்படத் தொடங்கியிருக்கிறது. சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகள் கொண்டவர்கள் நம் தலைவர்களாக இருக்கிறார்கள். முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாம் திருமணம் செய்து கொள்வதென்பது சட்டப்படிக் குற்றம். ஆனால் நம் தலைவர்களும் கடவுளர்களும் இரண்டு மனைவிகளைக் கொண்டவர்களாக இருப்பது நமக்கு உறைப்பதே இல்லை. சட்டப்படி அது குற்றமாகத் தெரிவதுமில்லை. நீதிமன்றத்தில் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 191இன் படி பொய் சாட்சி சொல்பவர்களுக்கு ஏழு ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை வழங்க வழி இருக்கிறது. அப்படியிருக்கும்போது பொய் சாட்சி சொல்லி நீதிமன்றங்களை ஏமாற்றியவர்களுக்கெதிராகப் பெரிய அளவில் சட்டரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நேர்வுகள் சொற்பம். பெஸ்ட் பேக்கரி வழக்கிலும் ஜெஸிகா லால் கொலை வழக்கிலும் பொய் சாட்சியங்கள் மூலம் நீதிமன்றங்களை ஏமாற்றிக் குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ள உதவியவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க நீதிமன்றங்கள் பரிந்துரைத்த நல்ல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. பொய் சாட்சி சொல்பவர்கள் குற்றவாளிகளைத் தப்பவிடுவதன் மூலம் குற்றத்துக்குத் துணைபுரிபவர்கள். தினகரன் அலுவலக ஊழியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் பிறழ்வு சாட்சிகளாய் மாறியவர்கள்மீது நடவடிக்கை எடுக்காதவரை அரசுங்கூடக் குற்றத்துக்குத் துணைபுரிந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.என்.காரே, "குற்றமில்லாத நாடாக நம் நாடு உருவாக வேண்டுமானால் பொய் சாட்சியம் என்பது தீவிரமான குற்றமாகப் பார்க்கப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார். நாம் அநீதியான இந்தத் தீர்ப்புக்கெதிராக மிகப் பெரிய அளவில் போராடியாக வேண்டும். இது போன்ற வெளிப்படையான, கொடிய குற்றங்களைச் செய்தவர்களுக்கு நம்மால் தண்டனை பெற்றுத் தரமுடியவில்லையெனில் யார் வேண்டுமானாலும் எத்தகைய குற்றவழக்குகளிலிருந்தும் தப்பிவிடலாம் என்னும் தவறான நம்பிக்கை வேரூன்றப்பட்டுவிடும். இது தவறான, அபாயகரமான முன்னுதாரணமாகவும் அமைந்துவிடக்கூடும். இந்த வழக்கைப் பொறுத்தவரை நீதிமன்றமோ காவல் துறையோ நடுநிலையோடு நடந்துகொள்ளவில்லை. பொய் சாட்சியம் என்பது தீவிரமான குற்றமாகப் பார்க்கப்படாதவரை இது போன்ற தீர்ப்புகள் தொடர்கதையாக வந்துகொண்டேயிருக்கும். வெகுண்டெழுந்திருக்க வேண்டிய ஊடகங்கள் கண்களை மூடிக்கொண்டது துரதிர்ஷ்டவசமானது. குற்றம்சாட்டப்பட்ட பதினேழு பேரும் விடுவிக்கப்பட்டதைக் குறித்த அதிர்ச்சியைத் தினமணி தவிர மற்ற நாளிதழ்கள் வெளிப்படுத்தவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் அளவுக்கு வலிமைகொண்டவர்கள் அல்ல. ஆக பாதிப்புக்குள்ளானவர்கள் பலவீனமானவர்கள் என்பதால் நிராதரவானவர்களாக விடப்பட்டிருக்கிறார்கள். இதுபற்றிய குற்றவுணர்வோ வெட்கமோ இல்லாமல் நாம் நீதியை, ஜனநாயகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்.
இக்கொடிய குற்றத்துக்குத் தலைமை தாங்கியவர்கள், முன்னின்று நடத்தியவர்கள் திமுகவினர் என்பதால் மாநிலக் காவல் துறையால் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என்பதற்காகவே இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. மாநில அரசின் காவல் துறையிடமிருந்த இந்த வழக்கை அரசு சிபிஐயிடம் ஒப்படைத்ததைத் தவறாகப் பார்க்க முடியாதுதான். ஆனால் சிபிஐகூட இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது என்பதுதான் நமது மனத்தை உறுத்தும் விசயம். சிபிஐ ஒரு சுயேச்சையான புலனாய்வு அமைப்பு என்பதுதான் பொதுநம்பிக்கை. மாநிலக் காவல்துறை சொன்ன எல்லாவற்றையும் சிபிஐ அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. ஏற்கனவே மாநிலக் குற்றப் பிரிவு போலீசாரின் விசாரணைக்குள்ளானவர்களை சிபிஐயும் விசாரித்திருக்கும். அதன் பின்புதான் அவர்கள்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கவும் வேண்டும்.
பிறழ்வு சாட்சிகளில் ஒருவரான சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரப்பாண்டியன், காவல் துறையினர் நீட்டிய வெற்றுத்தாளில் கையெழுத்திட்டதாகச் சொல்லிக் காவல் துறையினரிடம் தான் அளித்த வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் மறுத்திருக்கிறார். பொறுப்புள்ள வருவாய்த் துறை ஊழியர் ஒருவர் வெற்றுத்தாளில் கையெழுத்திட்டதாகச் சொல்வது அதிர்ச்சியூட்டக்கூடிய விசயம் அல்லவா? அப்படியானால் நாம் நம் அரசின் அடிப்படையான அலகுகளை எப்படி நம்புவது? அந்தக் கிராம நிர்வாக அலுவலருக்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அவர்மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூட அரசு முயலாதது விநோதம். சரி, அவரிடம் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கியவர்கள் மீதாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டாமா? குற்றத்தை நேரில் பார்த்தவர்கள், நேரடியான நடவடிக்கைகளில் பங்குபெற்றவர்கள் தவிர மற்ற சாட்சிகள் பிறழவில்லை. அதனால் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எந்தச் சிக்கலும் எழவில்லை. ஆனால் சாட்சிகள் மிரட்டப்படவில்லை எனச் சொல்லிக்கொள்ள இது உதவும் அல்லவா?
தொழில்நுட்பரீதியில் மிகச் சாதுர்யமான முறையில் நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ள வழக்கு இது. குற்றம் நடந்ததற்கு ஆதாரமான எண்ணற்ற புகைப்படங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றைப் படமெடுத்ததாகச் சொல்லப்பட்ட புகைப்படக்காரர்கள் நீதிமன்றத்தில் அதை ஒப்புக்கொள்ளாததால் அவை அதிகாரபூர்வச் சான்றுகளாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒளிப்படக் காட்சிகள் எவையும் காட்டப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியச் சாட்சிகள் சட்டப்படி, நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்பட்ட சாட்சியங்கள், ஆவணங்கள், தடயங்கள் போன்றவை சட்டத்துக்குட்பட்டு நிரூபிக்கப்பட வேண்டும். நேரடியாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கும் ஒருவர் பிறகு பிறழ முடியாது. சாட்சிகள் பிறழ்வதற்கு வாய்ப்புள்ள எல்லா வழக்குகளிலும் சாட்சிகள் நேரடியாக நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவதும் நீதிபதியிடமே நேரடியாக வாக்குமூலம் அளிக்கச் செய்வதுதாம் நடைமுறை. பிரேமானந்தா வழக்கில் எல்லாச் சாட்சிகளுமே நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு வரியும் நீதிமன்றத்தின் முன் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டால் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். இந்த வழக்கு கையாளப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது இது மறுவிசாரணைக்குட்படுத்தப்பட வேண்டிய வழக்கு என்பதில் சந்தேகமில்லை. அதற்கான காரணங்கள் வெளிப்படையாக உள்ளன. மக்கள் கண்காணிப்பகம் போன்ற ஒருசில அமைப்புகளைத் தவிர மனித உரிமை அமைப்புகள்கூட இவ்வழக்கில் பெரிதாக ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தால் ஏதாவது உபயோகமாக இருக்கலாம். மதுரை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்திருக்கிறது. ஆனால் அது இன்னும் பதிவு செய்யப்படக்கூட இல்லை. தேசிய மனித உரிமை ஆணையம் தானே முன்வந்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வழக்கை மறுவிசாரணைக்குட்படுத்தக் கோரலாம். அதற்குச் சட்டத்தில் இடமிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள் என்பதால் இது நடக்குமா எனத் தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள் என்பதைவிடக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சக்திவாய்ந்தவர்கள் என்பது முக்கியமான விசயம் அல்லவா?
தமிழகத்தின் செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவர்கள் பற்றிய கருத்துக் கணிப்பொன்றை வெளியிட்டதற்காக மதுரைத் தினகரன் அலுவலகம் 2007, மே 9 அன்று தீயிட்டுக்கொளுத்தப்பட்டது. தாக்குதலில் தினகரன் ஊழியர்கள் மூவர் பலியாயினர். இவ் வழக்கின் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் 2009, டிசம்பர் 9 அன்று மத்தியப் புலனாய்வுத் துறையால் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் விடுதலைசெய்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு தொடர்பாக வழக்கறிஞரும் ஜனநாயக மாதர் சங்கத்தின் உறுப்பினருமான சுதா ராமலிங்கம் அவர்களுடன் நடத்திய உரையாடல் பதிவு இது. தீர்ப்பின் நகலைக் கொடுத்து உதவிய மதுரை மக்கள் கண்காணிப்பகத்துக்கு நன்றி.

No comments:
Post a Comment