நேரத்தை மிச்சப்படுத்துவது எப்படி...
எந்தெந்த சமயங்களில் பெண்கள் டென்ஷனாகிறார்கள்?
காலை நேரத்துப் பரபரப்பு (குழந்தைகள், கணவரை பள்ளிக்கு, வேலைக்கு அனுப்பும் சமயத்தில் தலை கிறுகிறுத்துப் போகும்).
ஒர்க்கிங் வுமனாக இருந்தால் கணவர் குழந்தைகளை ஆஃபீசுக்கு அனுப்பிவிட்டு, தானும் ரெடியாகி அரக்கப் பரக்க பஸ் பிடிக்க ஓடும் சமயங்கள். இந்த இரண்டு பிரச்னைகளையும் அநேகமாக எல்லாப் பெண்களும் சந்தித்து வருகிறார்கள். சே... என்னடா வாழ்க்கை இது. என்று நாங்கள் சற்று வெறுத்துப்போய் பேசும் தருணங்களும் இதுதான் என்கிறார்கள் நம்மிடம் பேசிய சில இல்லத்தரசிகள்.
காலை நேரத்துப் பரபரப்பை எப்படி சமாளிப்பது?
திட்டமிடுங்கள்... அதுதான் உங்கள் டென்ஷனைக் குறைக்க முதல் வழி. யூ.கே.ஜி. படிக்கும் பையன், பிஸினஸ் செய்யும் கணவர் இருவரையும் காலை ஒன்பதரை மணிக்குள் கிளப்ப வேண்டும். டி.வி. பார்த்துக் கொண்டே மறுநாளைக்குத் தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்து விடுங்கள்.
சமைக்கும்போது குழப்பம் வரவே கூடாது. உருளைக்கிழங்கு பொரியல், சாம்பர் வைக்க வேண்டும் என்று முதல் நாள் முடிவு செய்து விட்டால் அதிலிருந்து மாறக் கூடாது. ஏனென்றால் காலை நேரப் பரபரப்பை குழப்பங்கள் ரொம்பவே அதிகப்படுத்திவிடும்.
அதேபோல் முதல் நாளே குக்கர் வைக்கத் தேவையான அரிசி, பருப்பைக்கூட தனித் தனியாக எடுத்து வைத்து விட்டால் சமையல் சுலபமாகிவிடும்.
வாணலியில் கடுகை வெடிக்க விட்டு விட்டு கறிவேப்பிலை எடுக்க, கொத்தமல்லி எடுக்க என்று ஒவ்வொன்றுக்காகவும் ஃப்ரிட்ஜை நோக்கி ஓடி வருவதைத் தவிர்த்து விடுங்கள். நேர விரயத்தோடு கால்வலியும் வரும். அதனால் சமைக்கத் தேவையான அத்தனை பொருட்களையும் தயாராய் எடுத்து வைத்துக் கொண்டு சமையுங்கள்.
வாட்டர் பாட்டில், ஷூ, சாக்ஸ், டிஃபன் பாக்ஸ், ஸ்நாக்ஸ் பாக்ஸ் முதலியவற்றை நீங்கள் எடுத்துக் கொடுக்காமல், தாங்களே எடுத்துக் கொள்ளும்படி உங்கள் குழந்தைகளைப் பழக்குங்கள். ஏனென்றால் இது மாதிரியான சின்னச் சின்ன வேலைகள் தான் காலை நேரத்து டென்ஷனை அதிகப்படுத்தும்.
நேரத்தை அதிகப்படுத்தும் விஷயங்கள்
வண்டிச் சாவி, பீரோ சாவி, பிரீமியம் கட்டச் சொல்லி வந்த கடிதம், செல்ஃபோன், நியூஸ் பேப்பர், மெடிக்கல் பிரிஸ்க்ரிப்ஷன்... போன்றவைகளில் ஏதாவது ஒன்றை தினமும் ஏதாவது ஒரு குடும்பத்தில் வைத்த இடம் தெரியாமல் தேடிக் கொண்டிருப்பார்கள்.
சே... இந்த வீட்ல அவசரத்துக்கு ஒரு பொருளாவது கிடைக்குதா? என்று தேடுபவர் டென்ஷனாகிக் கத்த, மற்றவர்களும் சேர்ந்து கத்த குடும்பமே தேடு தேடென்று தேடினால் பீரோ சாவி கட்டிலுக்கு அடியில் கிடக்கும். மெடிக்கல் பிரிஸ்க்ரிப்ஷன் பூஜை அறையில் விபூதிக்கு வாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கும். ஒரே ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்... அந்தந்தப் பொருளை அந்தந்த இடத்தில் வைக்காததன் விளைவுதானே இந்த நேர விரயம்?
ஒவ்வொரு பொருளும் அதற்குரிய இடத்தில் சரியாக வைக்கப்பட வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு முறை எடுத்துப் பயன்படுத்திய பிறகும் மீண்டும் எடுத்த இடத்தில் அந்தப் பொருளை வைக்க வேண்டும்.
இந்த சூட்சுமத்தை சரியாகக் கையாண்டால் இல்லத்தரசிகள் கையில் எக்கச்சக்கமான மணித் துளிகள் தவழும். (உங்கள் குடும்பத்தாருக்கும் எடுத்த இடத்தில் பொருளை வைக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுங்களேன்.)
No comments:
Post a Comment