ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கித் தருவதே லட்சியம் - திவ்யா
பாரதி கண்ட புதுமைப் பெண்களில் ஒருவராகத் திகழ்ந்து பளுதூக்கும் போட்டியில் சாதனைப் படைத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி திவ்யா. இவர் தற்போது படிப்பது கோவையில். சமீபத்தில் மங்கோலியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 21-வது ஆசியன் பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை வென்று வந்துள்ளார். திவ்யாவை மதுரையில் அவரது பெற்றோர் வீட்டில் சந்தித்தபோது,
உங்கள் குடும்பத்தைப் பற்றி...?
எனது தந்தை தேவதாஸ், தற்போது மதுரையில் சார்பு நீதிபதியாக இருக்கிறார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள குல்லாங்குடிதான் அப்பாவுக்குச் சொந்த ஊர். அம்மா முத்துலட்சுமி. அண்ணன் சுரேஷ்குமார் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.
விளையாட்டில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?
முதல் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சொந்த ஊரில் படித்தேன். 6-வது வகுப்பிலிருந்து தேவகோட்டை செயின்ட் மேரீஸ் பள்ளியில் படித்தேன். அப்போது விளையாட்டுத் துறையில் ஆர்வம் உள்ள மாணவியரைத் தேர்வு செய்தனர். அதில் என் பெயரும் சேர்க்கப்பட்டது.
நான் நல்ல திடகாத்திரமாகவும் இருந்ததால், குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்றேன். 2 மாதமே பள்ளியில் பயிற்சி அளித்தனர். அதன் பின் பள்ளிகளுக்கு இடையேயான கோட்ட அளவிலான போட்டியில் பங்கேற்று, முதல் பரிசான தங்கப் பதக்கம் வென்றேன்.
இதுதான் விளையாட்டில் நான் வாங்கிய முதல் பதக்கம். குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நான், ஆர்வம் மிகுதியால் அடுத்து வட்டு எறிதல் போட்டியிலும் பங்கேற்றேன். அதிலும் பல பரிசுகளை வென்றேன்.
மாவட்ட அளவிலான போட்டியில் பெற்ற பரிசுகளைப் பற்றி...?
பள்ளிகள் அளவிலான போட்டியில் மட்டுமல்லாது மாவட்ட அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றுள்ளேன். மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் என மாவட்டங்கள் அடங்கிய மண்டலப் போட்டிகளிலும் குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளேன்.
உங்கள் தந்தைக்கு அடிக்கடி ஊர் மாற்றம் வருமே. அப்போது என்ன செய்தீர்கள்?
என் தந்தைக்கு பணி நிமித்தம் காரணமாக அடிக்கடி இடமாற்றம் வரும். அந்த சமயங்களில் எந்த ஊருக்குச் செல்கிறோமோ அந்த ஊர் பள்ளியில் படிக்கும் நிலை ஏற்படும்.
இதுபோன்ற சமயங்களில் தொடர்ந்து முறையாகப் பயிற்சிப்பெற முடியாத நிலை ஏற்படும். ஆனாலும் நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்தி வந்து குண்டு எறிதல், வட்டு எறிதலில் பரிசுகளைப் பெற்றுவந்தேன். மாநில அளவில் ஈரோட்டில் நடந்த போட்டியிலும் பரிசு பெற்றேன்.
திருச்செங்கோட்டில் 9 ஆம் வகுப்பு படித்தபோது தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வானேன். ஆனால் தேர்வு வந்துவிட்டதால் என்னால் அதில் பங்கேற்க இயலவில்லை.
கோவையில் பிளஸ் 1 படித்த போது சென்னையில் நடந்த மாநில அளவிலான போட்டியிலும், அரியலூரில் நடந்த மாநில அளவிலான போட்டியிலும் பங்கேற்று பரிசுகள் வென்றேன். பின்னர் கோவை நிர்மலா கல்லூரியில் கணினி பாடப் பிரிவில் முதலாண்டு மாணவியாகச் சேர்ந்தேன்.
பளுதூக்கும் போட்டியில் பங்கேற்றது எப்படி?
கல்லூரி உடற்கல்வி ஆசிரியை மரியசாந்தி, பளுதூக்கும் போட்டியில் பங்கேற்குமாறு ஆலோசனை கூறினார். அதன்படி பயிற்சியாளர்கள் முரளி, நாகராஜ் ஆகியோர் உதவியுடன் பளுதூக்கும் பயிற்சி எடுத்தேன். முதலில் வெயிட் 75 கிலோ பிளஸ் பிரிவிலும், 90 கிலோ பிளஸ் பிரிவிலும் பயிற்சி எடுத்து, கல்லூரி அளவில் முதல் பரிசு வென்றேன். பாரதியார் பல்கலைக்கழகம் நடத்திய அனைத்துக் கல்லூரி அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் குண்டு எறிதல், பவர் லிப்டிங் ஆகியவற்றில் பதக்கங்களைப் பெற்றேன். அதன் பின் கோவை காருண்யா பல்கலைக்கழகம் சார்பில் நடந்த போட்டிகளிலும் பல பரிசுகளைப் பெற்றேன்.
அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெற்ற தேசிய அளவிலான பவர் லிப்ட் போட்டியில் 4-வது பரிசைப் பெற்றேன். பின்னர் கோவையில் நடந்த மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றேன்.
சர்வதேசப் போட்டியில் பங்கேற்றது குறித்து..?
கடந்த மே முதல் தேதி தொடங்கி 6 ஆம் தேதி வரை மங்கோலியாவில் ஆசியன் பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. அதற்காக பெண்கள் பிரிவில் தமிழகத்திலிருந்து நான் மட்டும் தேர்வு செய்யப்பட்டிருந்தேன்.
இந்திய அளவில் பத்து பெண்கள் இதில் பங்கேற்றனர். அதில் பவர் லிப்ட் சப்ஜூனியர் பிரிவில் 90 கிலோ பிரிவில் ஸ்குவாட், பெஞ்ச்பிரஸ், டெட்லிப்ட் ஆகியப் பிரிவுகளில் தங்கப் பதக்கம் பெற்றேன். மேலும் இப்பிரிவுகளின் ஒட்டுமொத்த சாம்பியன் பதக்கமும் பெற்றேன்.
சர்வதேச அளவிலான போட்டியில் இந்தியா சார்பில் ஒரே போட்டியில் 4 பதக்கம் வென்றது நான் ஒருத்தியாகத்தான் இருக்கும்.
இதுவரை நீங்கள் பெற்ற பதக்கங்கள் எத்தனை?
பள்ளிக் காலத்திலிருந்து இதுவரை குண்டு எறிதல், வட்டு எறிதல், கபடி மற்றும் பளுதூக்கும் போட்டிகளில் 12 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளேன். இது தவிர பல வெற்றிக் கோப்பைகளையும் குவித்துள்ளேன்.
உங்களின் அடுத்த லட்சியம்..?
நான் எனது தந்தையைப் போல சிறந்த நீதிபதியாகி ஏழைகளுக்கு உதவவேண்டும் என விரும்புகிறேன். ஆனாலும், விளையாட்டுத் துறையில் இந்தியாவுக்கு என்னால் ஆன பெருமையைச் சேர்க்கவேண்டும் என நினைக்கிறேன்.
எனது முயற்சிக்குப் பெற்றோரும், கல்லூரி முதல்வர் சவரியம்மாள், டீன் டோனா, ஹாஸ்டல் வார்டன் லொயோலா உள்ளிட்டோரும் உதவிவருகின்றனர்.
சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டி வரும் நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. அதற்காக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வாங்கித் தருவதே எனது லட்சியம்.
No comments:
Post a Comment