சிறந்த ராணுவ அதிகாரி பயிற்சிக்கான விருது பெற்ற முதல் பெண்!
இதுவரை ஆண்களே பெற்று வந்த சிறந்த ராணுவ அதிகாரி பயிற்சிக்கான விருதை இளம் பெண் ஒருவர் தட்டிச் சென்றுள்ளார். அவரைப்பற்றி கீழே பார்ப்போம்.
சென்னை பரங்கிமலையில் ராணுவ அதிகாரி பயிற்சி மையம் (ஓ.டி.ஏ.) பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான ராணுவ அதிகாரிகள், இங்கு பயிற்சி பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள். ராணுவத்துக்குள் நுழைவதற்கு முன்பு பல்வேறு கடினமான பயிற்சிகளை கடந்து செல்ல வேண்டும். ஓடும் குதிரையில் தாவி ஏறுவது, துப்பாக்கியை தூக்கி ஓடியபடி சுடுவது உள்பட பல பயிற்சிகள் ஓ.டி.ஏ.யில் சொல்லித் தரப்படுகின்றன.
1992-ம் ஆண்டில் இருந்து பெண் அதிகாரிகளுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பயிற்சியிலும் சிறப்பாக செயல்படுகிறவர்களுக்கு ராணுவ உயர் அதிகாரி, 'ஸ்வோர்ட் ஆப் ஹானர்' (கவுரவ வாள்) என்ற உயரிய விருதை பயிற்சி நிறைவு விழாவில் அளிப்பார். இதுவரை பல ஆயிரக்கணக்கில் ஆண், பெண் அதிகாரிகள் பயிற்சி பெற்றிருந்தாலும், ஆண்களே இந்த விருதைத் தொடர்ந்து பெற்று வந்தனர். இதற்கு இளம் பெண் ஒருவர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
ஆண்களிடம் இருந்து அந்த பெருமைக்குரிய விருதை தட்டிப் பறித்தவர், சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த அஜித்குமார்-பீனா தம்பதியின் இளையமகள் திவ்யா (வயது 21). இவர் ஓ.டி.ஏ.யில் கடந்த 11 மாதங்களாக பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்தப் பயிற்சி முகாமில் பல்வேறு மாநிலத்தில் இருந்து 157 ஆண்களும், 70 பெண்களும் பங்கு பெற்றுள்ளனர். ஆண்களுக்கு இணையாக பயிற்சி பெற்றது மட்டுமல்ல, அனைத்துப் பயிற்சிகளிலும் உடலளவிலும், மனதளவிலும் ஆண்களைவிட சிறப்பாக செயல்பட்டதால்தான் திவ்யாவை, 'பெஸ்ட் கேடட்' என்ற பெருமை தேடி வந்துள்ளது.
இவரது தந்தை அஜித்குமார் சொந்தத் தொழில் செய்து வருகிறார். குட் ஷெப்பர்டு பள்ளியில் படித்த திவ்யா பிளஸ்-2வில் 94 சதவீத மதிப்பெண் பெற்றார். பின்னர் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பி.காம். படிப்பை 72 சதவீத மார்க் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
இளம் வயதில் இப்படி ஒரு சாதனையை செய்தது பற்றி கேட்ட போது திவ்யா கூறியதாவது:-
எனக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற ஆசைதான் சிறுவயதில் இருந்தது. படிக்கும் காலத்தில் என்.சி.சி. முகாம்களுக்கு செல்வேன். அங்குவரும் ராணுவ உயர் அதிகாரிகள், அவர்களின் வீரதீர செயல்களைப் பற்றி பேசுவார்கள். அது எனக்குள் ஒரு பொறியைத் தட்டிவிட்டது.
அப்படிப்பட்ட முகாமில்தான் ராணுவ அதிகாரியாக முடிவு செய்து, ஐ.ஏ.எஸ். ஆசையை மூட்டை கட்டி தூர வீசினேன். அதனடிப்படையிலேயே திட்டம் வகுத்து செயல்பட்டேன். எனது நீண்ட அழகிய கூந்தலைக்கூட ராணுவ பாணியில் வெட்டுவதற்கு நான் தயங்கவில்லை. எதைச் செய்கிறோமோ அதை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்பதுதான் வெற்றியின் மந்திரம்.
துப்பாக்கி பிடிக்கும் திவ்யாவின் கைகள், சிறுவயதில் பரதநாட்டியத்தையும் அபிநயம் பிடித்துள்ளன. கூடைப்பந்து, உடற்பயிற்சி போட்டிகளிலும் இவர் பங்கு பெற்று தங்கம், வெள்ளிப் பதக்கங்களை பெற்றுள்ளார். 2008-ம் ஆண்டு டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் திவ்யா பங்கேற்றுள்ளார். என்.சி.சி. மாணவர் அணியில் சிறப்பாக அணிவகுத்துச் சென்றவர் மற்றும் அகில இந்திய 'பெஸ்ட் கேடட்' ஆகிய இரட்டிப்பு பெருமையையும் ஒருங்கே பெற்றது, அவரது புகழுக்கு மேலும் புகழ் சேர்த்துள்ளது.
அடுத்த சாதனையை படைத்து, செப். 18ம் தேதி நடந்த பயிற்சி நிறைவு விழாவில் ராணுவ உயர் அதிகாரி வி.கே.சிங்கிடம் இருந்து 'ஸ்வோர்ட் ஆப் ஹானர்' விருதையும் திவ்யா பெற்றிருக்கிறார். இலக்கை நிர்ணயித்து முழு ஈடுபாட்டுடன் செய்யும் காரியங்களும், அதை செய்பவரும் என்றும் தோற்றதேயில்லை என்பதற்கு திவ்யா உதாரணமாக இருக்கிறார்.
No comments:
Post a Comment