Sunday, November 21, 2010

பெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் - நீலவேணி

பெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் - நீலவேணி

I wish become an IPS Officer - Neela Veni - Successful Stories of Women in Tamil
ஒன்றல்ல... இரண்டல்ல... ஏழு போட்டிகள் இணைந்த ஹெப்டத்லானில் தேசிய அளவில் பதக்கங்களை அள்ளி வருகிறார் நீலவேணி. 16 வயதுக்குள் தேசிய அளவில் சாதனையை நிகழ்த்தி வரும் இந்தியாவின் நாளைய நம்பிக்கை நட்சத்திரமான நீலவேணியிடம் பேசியபோது,
அறிமுகம்:
எங்களுடைய சொந்த ஊர் தஞ்சாவூர். வீட்டுக்கு ஒரே செல்லப்பிள்ளை நான். அப்பா சுப்பிரமணியம் 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அம்மா விஜயலட்சுமி சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். தஞ்சையில் பெரியம்மா வீட்டில் தங்கி, அங்கே பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பின்னர், விளையாட்டு மீது ஆர்வம் காரணமாக சென்னை, தி.நகரில் கர்நாடகப் பள்ளியில் பிளஸ்- 2 வரை படித்தேன். தற்போது சென்னையில் உள்ள கல்லூரியில் மேற்படிப்பு படித்து வருகிறேன்.
ஆர்வம்:
சின்ன வயதிலிருந்தே எனக்கு ஓடுவது என்றால் மிகவும் பிடித்தமான விஷயம். ஆறாம் வகுப்பு படிக்கும் போது, தஞ்சை செல்வராஜ் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சபாபதி, 'உயரமாக இருக்கிறாய், அதனால் உனக்கு அத்லெட்டிக் நன்றாக வரும்' என்று கூறி என்னை விளையாட்டுப் பிரிவில் சேர்த்துக் கொண்டார். அத்லெட்டிக் மட்டுமின்றி, வாலிபால் விளையாட்டிலும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கினேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது கரூரில் நடந்த அத்லெட்டிக் போட்டியில், 100மீட்டர், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய பிரிவுகளில் முதன் முதலாக பங்கேற்று பதக்கம் பெற்றேன்.
 
ஹெப்டத்லான் போட்டியில், எந்தப் பிரிவில் ரிஸ்க் அதிகம்?
800மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வதுதான் ரொம்ப கஷ்டம். ஏனென்றால் நீண்ட தூரம் ஓட வேண்டும், மேலும் ஹெப்டத்லான் பிரிவில் கடைசி போட்டி இதுதான் என்பதால், நமது உடம்பில் எனர்ஜி குறைவாக இருக்கும் என்பதால், 800 மீட்டர் தூரத்தை ஓடி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். மேலும் இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டால்தான் பதக்கம் பெற முடியும் என்பதால் மிகவும் கஷ்டப்பட்டு ஓடுவேன். மேலும் ஏழு பிரிவுகளிலும் பயிற்சி எடுக்கும்போது, தடை தாண்டும் ஓட்டத்தில் தவறும்போது காயங்களும் ஏற்படும்.
வெற்றிகள், பதக்கங்கள்:
சமீபத்தில் வாரங்கல்லில் நடந்த தேசிய அத்லெட்டிக் போட்டியில், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தடை தாண்டும் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் ஓட்டம் ஆகிய ஏழு பிரிவுகள் அடங்கிய ஹெப்டத்லான் பிரிவில் தங்கம் வென்றேன். கடந்த வருடம் சண்டிகரில் நடந்த தேசிய போட்டியில் ஹெப்டத்லான் பிரிவில் வெள்ளியும், மதுரையில் நடந்த இளைஞர் தேசியப் போட்டியில் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கமும் வென்றேன். தேசிய, மாநில, மாவட்டம் என அனைத்துப் போட்டிகளிலும் கிட்டத்தட்ட ஐம்பது பதக்கங்கள் பெற்றுள்ளேன். அதுமட்டுமின்றி, வாலிபால், எறிபந்து ஆகிய விளையாட்டுகளிலும் மாநில அளவில் பதக்கங்கள் பெற்றுள்ளேன்.
மறக்க முடியாத போட்டி:
எல்லாப் போட்டிகளும் மறக்க முடியாத போட்டிகள் என்றாலும், மதுரையில் நடந்த இளைஞர் தேசியப் போட்டியில் கலந்து கொண்டதை என்னால் மறக்க முடியாது. ஏனென்றால் அதுதான் நான் பங்கேற்ற முதல் தேசியப் போட்டி. அதில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றது வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள்!
  
எதிர்பாராத திருப்பம்:
கரூரில் நடந்த மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றதுதான். அங்கே என்னுடைய விளையாட்டுத் திறனைப் பார்த்து, செயின்ட்ஜோசப் விளையாட்டு பயிற்சி மையத்தின் தலைவர் கோச்சர் நாகராஜன் என்னை சென்னைக்கு வருமாறு அழைத்தது என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய திருப்பம். அப்படி அவர் அழைக்காமல் இருந்திருந்தால், நான் இன்னும் மாநில அளவிலேயே விளையாடிக் கொண்டிருப்பேன். அவருடைய பயிற்சியும், ஆலோசனையும் என்னை தேசிய அளவுக்கு அத்லெட்டிக் போட்டிகளில் பிரபலப்படுத்தியுள்ளன.
அடுத்தடுத்து ஏழு போட்டிகளிலும் பயிற்சி என்பது கஷ்டமாக இல்லையா?
கொஞ்சம் கஷ்டம்தான்... ஆனாலும் பதக்கம் வாங்கும்போது பட்ட கஷ்டமெல்லாம் மறைந்து விடும். மேலும் இந்த ஏழு பிரிவுகளும் ஒன்று மட்டும் அடிப்படையாக அமைந்தது ஓட்டம். நன்றாக ஓடிப் பயிற்சி எடுத்தால் பாதி கிணறு தாண்டிய மாதிரி! அப்புறம் உடற்பயிற்சி, விளையாட்டுக்குரிய சிறப்பு பயிற்சி ஆகியவற்றில் முழு கவனம் எடுத்து செய்தால் எளிதாக வெற்றி பெற முடியும்.
வீட்டில், பள்ளியில் உங்கள் செயல்பாடுகள் பற்றி...
வீட்டில் இருந்தால் டிவி பார்த்துக் கொண்டிருப்பேன். இல்லாவிட்டால் தூங்கிக் கொண்டிருப்பேன். பள்ளியில் எப்போதும் தோழிகளுடன் அரட்டைதான்!

பிடித்த விளையாட்டு, வீரர், வீராங்கனை:
நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், 200 மீட்டர், 800 மீட்டர் ஓட்டம் ஆகிய பிரிவுகளிலும், வாலிபால், எறிபந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்றாலும், எனக்கு மிகவும் பிடித்தது தடை தாண்டும் ஓட்டம்தான்! ஏனென்றால் ஹெப்டத்லான் பிரிவில் வெற்றிக்கு அதிகமான பாயிண்டுகளை ஏற்றிக் கொடுக்கும் விளையாட்டுப் பிரிவு இதுதான்.
பிடித்த விளையாட்டு வீரர் டோனி, பிடித்த வீராங்கனை அஞ்சு ஜார்ஜ்.
ஆசை:
ஐ.பி.எஸ். படித்து, பெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும். அத்லெட்டிக்கில் சர்வதேச அளவில் பங்கேற்று இந்தியாவுக்கு பதக்கம் வாங்கித் தர வேண்டும்.
பதக்கம் வாங்கும்போது...
எந்தப் போட்டி என்றாலும் பங்கேற்று வெற்றி பெற்றவுடன் மிகவும் மகிழ்ச்சியாகும் நான், பதக்கம் வாங்கும்போது மட்டும் நெகிழ்ச்சியாகி கண்கலங்கி விடுவேன். ஏனென்றால், சின்ன வயதில் என்னை பள்ளிக்கு அழைத்து செல்லும் அப்பா, ஆசிரியையிடம் எந்த விளையாட்டிலும் என்னைச் சேர்க்க வேண்டாம் என்றும், சரியாகப் படிக்காவிட்டாலும் அடிக்க வேண்டாம் என்றும் கூறுவார். ஒரே ஒரு பிள்ளை என்பதால், நான் ஒரு சின்ன கஷ்டம்கூட படக்கூடாது என்று நினைத்தார். ஆனால் நான் ஏழு பிரிவில் விளையாடி பதக்கம் வாங்கும்போது 'மறைந்த' அப்பாவின் ஞாபகம் வந்துவிடும். பதக்கம் கையில் வாங்கும்போது என்னையும் அறியாமல் கண்கள் குளமாகிவிடும்! என் வெற்றிகள் அனைத்தையும் என் தந்தைக்கே காணிக்கையாக்குகிறேன்.

No comments:

Post a Comment