தீயணைப்புத் துறையில் சாதனை படைத்து வரும் மீனாட்சி விஜயகுமார்!
'சாதிக்க நினைப்பவர்களுக்கு எதுவுமே தடையில்லை' என்று கூறும் மீனாட்சி விஜயகுமார் தமிழ்நாட்டில் முதலில் தீயணைப்பு படை அதிகாரியாகத் தேர்தெடுக்கப்பட்ட இருவரில் ஒருவர். கக்கனின் பேத்தியுமான இவர், தீயணைப்புத் துறையில் மட்டுமன்றி, விளையாட்டிலும் ஆர்வம் காட்டுபவர். சவால் நிறைந்த பதவியில் அமர்ந்து சாதித்து வரும் அவரைச் சந்தித்துப் பேசினோம்:
உங்கள் சொந்த ஊர், குடும்பம் பற்றி?
மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள தும்பப்பட்டி என் சொந்த ஊர். கக்கனின் முதல் மகன் பி.கே.பத்மநாதனின் மூத்த மகள் நான். பிறந்தது மட்டும்தான் அங்கு, படித்தது சென்னையில். எத்திராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலை பயின்றேன். படித்து முடித்த பின்பு செல்லம்மாள் கல்லூரியில் ஓராண்டு விரிவுரையாளராகப் பணியாற்றினேன். அதன் பின்பு திருமணம் நடந்தது. என் கணவர் விஜயகுமார் ஏர் இந்தியா நிறுவனத்தில் தலைமை சீஃப் பர்சனல் மேனேஜராகப் பணியாற்றுகிறார். மகன் ஷித்திஜ் பொறியியல் முதலாமாண்டு மாணவர்.
தீயணைப்புப் படையில் சேர்ந்தது எப்படி?
திருமணமாகி கணவருடன் வட நாட்டில் இருந்து வந்த சமயம் அது. என் மனதுக்குள் எப்படியாவது சீருடை அணிய வேண்டும் என்ற தீ எரிந்து கொண்டே இருந்தது. என் மகன் பிறந்து பள்ளிக்குச் செல்லும் வயது வரை அவனைக் கவனித்து வந்தேன். அதன்பின்பு என் கணவரின் ஆதரவோடு, குரூப்-1 தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றேன்.
முதல் தீயணைப்புப் படை அதிகாரியாக சேர்ந்தபோது ஏற்பட்ட அனுபவம்?
வட சென்னை மண்டல தீயணைப்பு அதிகாரியாக முதலில் பொறுப்பேற்றேன். சென்னையில் உள்ள அபாயகரமான பகுதி அது. ஏனென்றால் மணலி, அத்திப்பட்டு மின் உற்பத்தி மையம், அதிக குடிசைப் பகுதிகள் எனச் சவாலான பகுதிகள் நிறைந்தது அது. சுமார் 200 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, வெற்றி கண்டுள்ளேன். சுனாமி தாக்குதல் நடந்தபோதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.
24 மணி நேரம் விழிப்புடன் இருக்க வேண்டிய துறையில் இருந்து கொண்டு குடும்பத்தை எப்படிக் கவனிக்கிறீர்கள்?
இரவில் கூட அழைப்புகள் வரும். எத்தனையோ தரம் என் மகன் உறங்கிக் கொண்டிக்கும்போது நள்ளிரவில் சென்றுள்ளேன். சுனாமி மீட்புப் பணிக்குச் செல்லும்போதுகூட அண்டை வீட்டில் உள்ளவர்களிடம் என் செல்போன் எண்ணைக் கொடுத்து, ஏதாவது அவசரம் என்றால் அழைக்கச் சொல்லிச் சென்றிருக்கிறேன்.
ஆண்கள் நிறைந்துள்ள துறையில் உங்களால் எவ்வாறு நிலை நிறுத்திக் கொள்ள முடிந்தது?
ஆணுக்கு நிகராக ஒரு பெண்ணால் 24 மணி நேரமும் உழைக்க முடியாது என்று கருதியவர்களிடம் பேச்சால் அல்ல, செயலால் அந்த எண்ணத்தை உடைத்துக்காட்டினேன். உழைப்பில் 100 சதவீதம் அல்ல; 200 சதவீதத்தைக் கொடுத்தேன். ஓர் அழைப்பு வந்தால், அனைவருக்கும் முன்பாக அந்த இடத்துக்குச் சென்றுவிடுவேன்.
காலில் அறுவை சிகிச்சை, கர்ப்பப்பை அகற்றுதல் எனப் பல்வேறு மாற்றங்கள் உடல் ரீதியாக நிகழ்ந்தன. அவற்றால் எல்லாம் எந்த வகையிலும் என் வேலை முடங்கிப் போகாமல் பார்த்துக் கொண்டேன்.
அண்மையில் தென்கொரியாவில் நடைபெற்ற சர்வதேச தீயணைப்பு படைவீரர்களுக்கான போட்டியில் தங்கம் வென்றது குறித்து?
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தப் போட்டியில், குண்டு ஏறிதலில் தங்கம் வென்ற முதல் இந்தியப்பெண் நான். நாட்டின் பெயரை நிலைநாட்டியதைப் பெருமையாகக் கருதுகிறேன். பள்ளியில் தடகளப் போட்டியில் 7 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளேன். கல்லூரியில் ஹாக்கி டீமில் பல்கலைக்கழகத்துக்காக விளையாடி உள்ளேன்.
தாத்தாவைப் பற்றிய உங்கள் நினைவுகள்?
என்னைப் பார்க்க வரும்போதெல்லாம், அன்பாகப் பேசி, என்னை மகிழ்விக்க சிறிய எண்ணிக்கையிலான காசுகளைத் தருவார். அந்த நினைவுதான் ஆழமாக இருக்கிறது. அதேசமயம் அவரின் கொள்கைகளின்படிதான் நாங்கள் வளர்க்கப்பட்டோம். அதனால்தான் லஞ்சம் போன்ற தீய பழக்கங்களில் இருந்து எங்களை தற்காத்துக் கொள்ள முடிகிறது.
No comments:
Post a Comment