கலைக்காக மருத்துவப் படிப்பை துறந்த ஐஸ்வர்யா!
பரவசப்படுத்தும் பரதநாட்டியம், மயக்கும் சங்கீதம், பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளில் பாண்டித்தியம், கூடைப்பந்து, ஷட்டில், ஓட்டப்பந்தயம், யோகா என்று பல அவதாரங்களில் ஜொலிக்கும் ஐஸ்வர்யாவுக்கு நடனம் என்றால் உயிர்.
23 வயதான ஐஸ்வர்யாவின் திறமைக்கு சான்று... இத்தனை வயதுக்குள் பல மேடைகளைக் கண்டவர், பல வெளிநாடுகளில் தனது கலையால் கைத்தட்டல்களைப் பெற்றவர்.
கலைக்காக மருத்துவப் படிப்பையே மறுத்தவர் என்று பெருமையாகக் குறிப்பிடுகின்றனர் இவரது தோழிகள்! பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த சொர்ணமுகி படத்தில் சின்ன வயது தேவயானியாக நடித்தவர். இனி அவரிடம் பேசுவோம்,
"அப்பா நாராயணசுவாமி சின்ன வயதிலிருந்து கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னுக்கு வந்தவர். தற்போது வியாபாரம் செய்து வருகிறார். அம்மா ராதா இல்லத்தரசி. எனக்கு ஒரே ஒரு தங்கை. எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் அனிதா குஹா என்ற பெரிய டான்ஸர் வசித்து வந்தார்.
எனக்கு நான்கு வயதாகும்போது நடனத்தின் மீது ஆர்வம் காரணமாக அவரிடம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். பின்னர் ஆர்வம் அதிகமாகி, தீவிரமாக கற்றுக்கொண்டு மேடை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பிளஸ் 2 வரை தி.நகரில் உள்ள ஸ்ரின் வேளாங்கண்ணி பள்ளியில் படிப்பை முடித்த ஐஸ்வர்யா, பின்னர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.எஸ்.சி., முடித்துவிட்டு, அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. முடித்துள்ளார். அவரிடம் பேசியபோது,
எப்படி பல துறைகளில் உங்களால் முத்திரை பதிக்க முடிகிறது?
"சின்ன வயது முதலே எனக்கு மேடைக்கூச்சம் இல்லை என்பதால் அபிநயம், பாவம், நடிப்பு என அனைத்தும் எளிதாக வரும். இதை அனைவரும் பாராட்டுவார்கள். பள்ளி, கல்லூரிகளில் விழாக்களில் வெஸ்டர்ன், பரதம், நாட்டுப்புற நடனம் என அனைத்து நடனங்களும் ஆடி பரிசுகள் வாங்கியுள்ளேன்.
அதேபோல் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கூடைப்பந்து, ஷட்டில் போன்ற விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளேன். எங்களுடைய பள்ளியில் நான் "சிறந்த விளையாட்டுப் பெண்" என்ற விருதையும் பெற்றுள்ளேன்.
படிப்பிலும் நான்தான் பள்ளியின் முதல் மாணவி. பிளஸ் 2வில் 98 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்!" கண்கள் விரிய சந்தோஷப்படுகிறார் ஐஸ்வர்யா.
தொடர்ந்து பேசுகையில், "எப்படி எல்லா விஷயத்தையும் உன்னால் கற்றுக் கொள்ள முடிந்தது என்று சிலர் என்னிடம் கேட்பார்கள். எதுவாக இருந்தாலும் பயிற்சி மற்றும் ஆர்வம் இருந்தால் போதும். கண்டிப்பாக அதில் வெற்றி பெறலாம். எதையும் எளிதாக கற்றுக் கொள்ளலாம்.
இதுவரை அமெரிக்கா, துபாய், இலங்கை, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலும் நிகழ்ச்சிகள் பண்ணியுள்ளேன். வெளிநாட்டு ரசிகர்கள் ரொம்ப ஊக்கம் கொடுப்பார்கள். சமீபத்தில் இலங்கை, கொழும்புவில் நடந்த சர்வதேச நடனப் போட்டியில் முதல் பரிசு வென்றேன். "நாட்டிய மயில்" என்ற பட்டம் அளித்தனர்.
அமெரிக்காவில் இதே போல் நடந்த நடனப் போட்டியிலும் பரிசு வென்றேன்" என்கிறார் பெருமிதத்துடன்...
அழகும், திறமையும் உடைய உங்களுக்கு சினிமா வாய்ப்புகள் வந்திருக்குமே?
"உண்மைதான். சின்ன வயதிலேயே "சொர்ணமுகி" என்ற படத்தில் நடித்துள்ளேன். தற்போது நிறைய வாய்ப்புகள் வந்தாலும், எனக்கு விருப்பமில்லை என்பதால் மறுத்து விடுகிறேன்" என்று கூறும் ஐஸ்வர்யாவை, பிரபல நடிகையும், எம்.பி.யுமான ஹேமமாலினி பாராட்டியதை மிகவும் பெருமையாக குறிப்பிடுகிறார்.
அதைப் பற்றி குறிப்பிடுகையில்,
"ஒருமுறை நாரத கான சபாவில் நடந்த எனது நடனத்தைப் பார்க்க ஹேமமாலினி வந்திருந்தார். என்னைப் பாராட்டிவிட்டு, அவர் நடத்தும் "ஜெய ஸ்மிர்தி" அமைப்பின் விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைத்தார். அங்கு அவர் என்னை பாராட்டியதை மறக்க முடியாது. அதேபோல் கவர்னர் மாளிகையில் நிகழ்ச்சி நடத்தியதையும் மறக்க முடியாது.
எனக்கு சின்ன வயது முதலே மேடைக் கூச்சம் என்பது இல்லை. எதிர்காலத்தில் நடனப்பள்ளி நடத்த வேண்டும் என்பது எனது ஆசை" என்று கூறும் ஐஸ்வர்யாவுக்கு டிவி பார்ப்பது, ஷாப்பிங் செல்வது மற்றும் இசை கேட்பது ஆகியவை பொழுதுபோக்கு.
ஒரு சின்ன விதைக்குள்தான் பெரிய விருட்சமே அடங்கியிருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார் ஐஸ்வர்யா.
No comments:
Post a Comment