நீங்களும் தொழில் அதிபர்தான்
இப்போதெல்லாம் அழகு சாதனப்பொருட்களின் விலை தாறுமாறாக எகிறி உள்ளன. அதிலும் சிலவற்றுள் ரசாயணம் கலக்கப்படுவதால் முக அழகு சிதைந்து விடுகிறது.
அதனால் அழகு சாதன பொருட்களை நீங்கள் வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்யலாம். இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவற்றை தயாரிக்க கூடுதலான முதலீடு தேவை இல்லை. நல்ல லாபகரமான தொழில்!
இத்தொழிலில் உள்ள பெண்கள் பலர் இன்று தொழில் அதிபர்களாக மாறி உள்ளனர்.
வீட்டில் இருந்தபடியே முயற்சி செய்தால் இனி நீங்களும் தொழில் அதிபர்தான்! முயன்றால் வெற்றி நிச்சயம்.
அழகு சாதனப்பொருட்களை தயாரிக்கும் முறைகள்:-
பொடுகு நீக்கும் எண்ணை:-
தேவை:
சுத்தமான தேங்காய் எண்ணை (தேவைக்கேற்ப) கொட்டை முத்து இலை, மருதாணி இலை.
செய்முறை:-
எண்ணெய்யில் இந்த இலைகளை போட்டு கொதிக்க விடுங்கள் ஆறியதும், வடிகட்டி வைத்துக் கொண்டு தினமும் தலைக்கு தடவி வரவும். கூந்தல் பொடுகு தொல்லையின்றி முடி கருகருவென அடர்த்தியாக வளரும்.
சிகப்பழகு கிரீம்:-
தேவை:
வெண்ணை 1 தேக்கரண்டி, வைட்டமின் ஈ கேப்சூல்.
செய்முறை:
வெண்ணையுடன் கேப்சூலில் உள்ள எண்ணையை கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவிக் கொள்ளவும். 10 நிமிடங்கள் ஊறியதும் கடலை மாவு அல்லது பயத்தம் மாவு கொண்டு தேய்த்து கழுவவும். சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளும், கருந்திட்டுகளும் மறைந்து இயற்கையாக சிகப்பழகு கிடைக்கும்.
உதடுகளுக்கான கிரீம்:-
தேவை:
வாசலின் 1 தேக்கரண்டி, தேன் 1/2 தேக்கரண்டி, ஆரஞ்சு சாறு சில துளிகள், இவை மூன்றையும் கலந்து உதடுகளில் தடவி வரவும். தொடர்ந்து இதை செய்து வந்தால் லிப்ஸ்டிக் உதவியின்றி உதடுகள் சிவப்பாக மென்மையாக மாறும்.
நரையை விரட்டும் எண்ணை:-
தேவை:
நல்லெண்ணை 1 லிட்டர், கறிவேப்பிலை பொடி, நெல்லிக்காய் பொடி, செம்பருத்திப்பொடி, தலா 25 கிராம். வல்லாரைக்கீரை பொடி 20 கிராம், அதில் சந்தனபொடி 10 கிராம், எண்ணையை காய வைத்து அதில் மேற்கண்ட அனைத்து பொடிகளையும் போடவும்.
எண்ணை புகையக் கூடாது. உடனே வடிகட்டாமல் அப்படியே அந்த எண்ணையை வெயிலில் 4 நாட்கள் வைத்திருக்கவும். பிறகு மென்மையான மஸ்லின் துணியில் வடிகட்டி பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ளவும். இந்த எண்ணையை தலைக்கு தடவி மசாஜ் செய்து குளித்து வந்தால் இளநரை மறைந்து கூந்தல் கருமையாக அடர்த்தியாக வளரும்.
சரும சுருக்கம் நீக்கும் பொடி:-
தேவை:
கற்றாழைப்பொடி, ஆரஞ்சு பழத்தோல் பொடி, ரோஜாப்பூ பொடி, சந்தனபொடி சமஅளவு.
சில பெண்களுக்கு 50வயதிற்கு முன்பே முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு விடுகிறது. இப்படிப்பட்டவர்கள் இந்த பொடியை பால் அல்லது பாலாடையுடன் முகத்தில் தடவி வரலாம்.
பிளீச்:-
தேவை:
உருளைக்கிழங்கு பவுடர் 2 தேக்கரண்டி, பப்பாளி பவுடர் 2 தேக்கரண்டி, கயோலின் பவுடர் 2 தேக்கரண்டி, சந்தனபவுடர் 1 தேக்கரண்டி.
செய்முறை:
மேற்கண்ட அத்தனை பொடிகளையும் ஒன்றாகக்கலந்து கொள்ளவும். வறண்ட மற்றும் மென்மையான சருமம் என்றால் இந்த பொடியில் 4 தேக்கரண்டி இளநீரும், எண்ணை பசையான சருமம் என்றால் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தண்ணீரும் கலந்து முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊறிய பின் துடைத்து எடுக்கலாம். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் நல்ல நிறம் கிடைக்கும்.
இந்த முறைகளை பின்பற்றி நல்ல தரமான அழகு சாதனப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கலாம். நீங்களும் முயற்சி செய்யலாமே!
No comments:
Post a Comment